துணைப்பக்கங்கள்
Tuesday, May 8, 2012
தாயகம் திரும்புங்க!
-பாகவியார்
அன்வர் வெளிநாடு சென்று ஏறக்குறைய பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. ஈராண்டுகளுக்கு ஒரு தடவை நாற்பது நாள் விடுமுறையில் தாயகம் வருவது வழக்கம். இதன்படி அவன் தன் மனைவியோடு வாழ்ந்த காலம் 200 நாள்கள் மட்டுமே. திருமணம் முடித்த பத்தே நாள்களில் வெளிநாடு சென்றவன் இன்றைக்கு அவன்தன் இளமையில் பாதியை சவூதியிலேயே கழித்துவிட்டான் என்பதைவிடத் தொலைத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு வரை படித்த அவன் படித்துக்கொண்டிருந்தபோதே சவூதி செல்ல வேண்டும் என்ற ஆசை எப்படியோ தொற்றிக்கொண்டதால் அதற்குமேல் படிப்பில் அவனுக்கு ஆர்வம் இல்லை.
அதன்பிறகு பாஸ்போர்ட் எடுப்பதிலும் உறவினர்களிடம் விசாவை அனுப்பச் சொல்வதிலுமே சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு வழியாக தன் அக்காவின் கணவர் மூலம் ஒரு விசா வந்தடைந்ததும் அவனுக்கோ அளவிலா மகிழ்ச்சி. முதல் தடவை சென்று ஈராண்டுகள் கழித்துத் தாயகம் வந்ததும் அவனுடைய மதிப்பே உயர்ந்துவிட்டது.
அவன் சவூதி செல்வதற்குமுன் ஊர்சுத்தி அன்வர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டவன் இன்று சவூதி மாப்பிள்ளை என்று மற்றவர்களெல்லாம் அழைத்ததும் அவனுக்கு இதயமே குளிர்ந்துவிட்டது. உறவுக்காரப் பெண்ணையே அவனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். திருமணம் முடிந்து தன் மனைவியோடு மகிழ்ச்சியாகக் கழித்துக்கொண்டிருந்தபோதே விடுமுறை நாள்கள் முடிவுக்கு வந்தன. புதுமனைவியோடு முழுமையாக வாழ முடியாமல் ஏக்கத்தோடே மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.
அன்று தொடங்கிய பயணம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு தடவையும் ஈராண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வருவதும் மீண்டும் சவூதி செல்வதும் அவன் வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருந்தன. வெண்பாலைவன வெயிலில் நாள்தோறும் படும் சிரமமும் தொல்லைகளும் அவனை நிம்மதியிழக்கச் செய்தன.
அன்றொரு நாள், வேலை பார்த்துக் களைத்துப் போயிருந்த அன்வருக்குக் கண்கள் சொக்கின. படுக்கத் தயாரானபோது அவனுடைய அன்பு மனைவி மொபைலில் அழைத்தாள். அன்போடு எடுத்துப் பேசியதும் அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவளுக்கும்தான்.
அவள் பேச்சைத் தொடர்ந்தாள். என்னங்க, நான் இன்னைக்கி வெள்ளிக்கிழமை பயான் கேட்க பள்ளிவாசலுக்குப் போயிருந்தேன். ஹஜ்ரத் உடைய பயானைக் கேட்டதும் எனக்கே இனம்புரியாத ஒரு மாற்றம் வந்துருச்சுங்க. ஏழையாகவோ, நடுத்தரமாகவோ, பணக்காரியாகவோ எப்டி வாழ்ந்தாலும் ஒரே வாழ்க்கைதானேங்க. ஒரு சாண் வயித்துக்கு எதைச் சாப்பிட்டா என்னங்க. நம்மைவிட ஏழையாக இருந்தும் எத்தனையோ பேர் சந்தோஷமாத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் வெளிநாட்டுல சிரமப்படணும்?
சாப்புடுவது இருபது ரூபா அரிசியா இருந்தாலும் நாம் இருவரும் ஒன்னா இருந்து சாப்பிட்டாத்தான் சந்தோஷமா இருக்கும். நமக்கு மூணு பொம்பளப் புள்ளைங்க இருந்தாலும் இப்ப அதப் பத்தி கவலையே இல்லீங்க. ஏன்னா, நம்ம ஊர்ல யாரும் வரதட்சணை வாங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டுட்டாங்க. போன வாரம்கூட எங்க அக்கா மகளுக்குக் கல்யாணம் நடந்துச்சு. மாப்பிள்ளை நல்லா படிச்சவரு. வரதட்சணை எதுவுமே வாங்கலை. எங்க அக்காவா பாத்து தன்னால முடிஞ்சதப் போட்டாங்க. அவ்வளவுதான். இனி பொம்பளைப் புள்ளையப் பெத்தாக்க நம்ம ஊர்ல எந்தக் கவலையும் இல்லீங்க. அதனால நீங்க இவ்வளவு காலம் சிரமப்பட்டது போதுமுங்க. கூடிய சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துருங்க. இங்கேயே ஏதாவது நீங்க வேலையப் பாத்துக்குட்டு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என்று சொல்லி முடித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்க அன்வரின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. தாயகம் திரும்பப்போற மகிழ்ச்சியில் அன்றிரவு நிம்மதியாக உறங்கினான். ---
Wednesday, April 18, 2012
Monday, April 16, 2012
உற்சாகம்! (சிறுகதை)
-பாகவியார்
அடியே ஆயிஷா, என்னடி வேலயப் பாக்காம இப்டி வந்து உக்காந்துட்டே? ஒன்னோட புருஷன் சாப்பாட்டுக்கு வந்துருவான்.
சீக்கிரம் போயிச் சோறாக்குடி-மைமூனா தன் மருமகளை ஏவினாள்.
இப்பத்தானே மாமி வீடெல்லாம் கூட்டிக் கழுவுனேன். சற்றுப் பொறுங்க மாமி. உடம்பெல்லாம்
அலுப்பா இருக்கு. கொஞ்ச நேரம் இளைப்பாறிட்டு செய்யிறேன் என்று மறுமொழி கூறினாள்.
என்னடி நீ ஊர் ஒலகத்துல செய்யாத வேலையச் செய்துட்டே. ஒரே அலுப்பா இருக்குதோ?
வீட்டைக் கூட்டிக் கழுவிவிடுறது
ஒரு பெரிய வேலையா? நானும்தான் காலையிலிருந்து வேலை செய்யிறேன். களைச்சா போயிட்டேன்? நீ என்னடான்னா ஒன்னு ரெண்டு
வேலையச் செய்ததும் களைச்சுப் போறியே? என்று கடினமொழி கூறினாள் மைமூனா.
அதைக் கேட்டு யோசித்துக்கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து, என்னடி ஆழ்ந்த யோசனை?
எதிர்வீட்டு ஃபாத்திமாவைப்
பாரு. அவளுக்கும் ஒன்னோட ஒத்த வயசுதான். என்னென்ன
வேலை பாக்குறா. காலைல எழுந்ததுலேர்ந்து ராத்திரி படுக்குற வரைக்கும் வேலை பாத்துக்கிட்டுதான்
இருக்கா. அவ என்னைக்காவது இப்படிக் களைப்பா உக்காந்து இருப்பாளா?-மாமி கேட்டாள்.
இச்செய்தி ஆயிஷாவுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதை ஆயிஷாவே நேரடியாகப் பார்த்திருக்கிறாள்.
ஃபாத்திமா தொடர்ந்து வேலை செய்துகொண்டுதான் இருக்கிறாள். ஆனால் ஒரு நாள்கூட களைப்பாக
உக்கார்ந்ததில்லை. இதைப் பற்றி ஆயிஷாவிடமே கேட்டுவிட வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டாள்.
மாலைப் பொழுதில் அஸ்ர் தொழுதுவிட்டு, எதிர்வீட்டு ஃபாத்திமாவைச் சந்திக்கச்
சென்றாள் ஆயிஷா. வா, ஆயிஷா! தொழுதுட்டியா? இன்னைக்கி என்ன சோறு? என்ன சால்னா? என்று அடுக்கடுக்காய் கேள்விகளை
அள்ளி வீசினாள் ஃபாத்திமா.
எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டு, ஏக்கா! நான் ஒங்களிடம் ஒன்னு கேக்கலாமா?
என்று பூடகமாகத் தொடங்கினாள்.
ஒன்னு என்ன, ஒன்பது கேளு. நான் பதில் சொல்றேன் என்று தாராளமாகக் கேட்க அனுமதித்தாள் ஃபாத்திமா.
நாங்களெல்லாம் ஒன்னு, ரெண்டு வேலையச் செய்தாலே களைப்படஞ்சி போறோம். ஆனா,
நீங்க மட்டும் நாள்
பூரா வேலை செய்தாலும் களைப்பே அடையறதில்லையே? அது எப்படிக்கா ஒங்களால மட்டும் முடியுது?
அதன் இரகசியம் என்னன்னு
சொன்னா நானும் அதைத் தெரிஞ்சுக்குவேன் இல்லையா? என்று பட படவெனக் கேட்டாள்.
ஆயிஷா, ஒனக்கு விசயமே தெரியாதா? ஒரு தடவை ஃபாத்திமா நாயகி தம்மோட தந்தையான முஹம்மது நபியிடம்
போனாங்க. அப்ப, நபிகளாரிடம் போரில் கிடைத்த அடிமைகள் இருந்தாங்க. அதுல ஒரு அடிமைய வாங்கிட்டு
வரலாம்னு போனாங்க. அந்த நேரம் பாத்து வீட்ல முஹம்மது நபி இல்லை. வந்த விசயத்த ஆயிஷா
நாயகியிடம் சொல்லிட்டு, வீட்டுக்குத் திரும்பி வந்துட்டாங்க.
நபிகளார் வீட்டுக்கு வந்தபோது, அவங்களோட மகள் ஃபாத்திமா வந்துட்டுப் போன விசயத்தச்
சொன்னாங்க. உடனே ரசூலுல்லாஹ் தம்மோட மகள் வீட்டுக்குப் போனாங்க. அந்த நேரம் பாத்து,
ஃபாத்திமா நாயகியும்
அலீயாரும் தூங்குறதுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாங்க. அந்த நேரத்துல அவங்க ரெண்டு
பேருக்கும் இடையிலே நபிகள் நாயகம் உக்காந்துகிட்டாங்க.
மகளே! நான் ஒரு விசயத்தச் சொல்றேன். அதை நீ ஓதிக்கொண்டால் அது ஓர் அடிமையைவிடச்
சிறந்தது என்று சொன்னாங்க. அது என்ன அல்லாஹ்வின்
தூதரே! என்று ஆவலாக் கேட்டாங்க. நீ தூங்குமுன் 33 தடவை சுப்ஹானல்லாஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹு அக்பர் ஓதிக்கொள் என்று
சொன்னாங்க.
அன்று முதல் அந்த திக்ரை ஃபாத்திமா நாயகி தவறாம ஓதி வந்தாங்க. அதைத்தான் நானும்
கடைப்பிடிக்கிறேன்.
அது மட்டுமில்ல ஆயிஷா, நான் வேலை செய்யும் போதே சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்,
அல்லாஹு அக்பர் போன்ற
திக்ருகளை செய்துகொண்டே என்னோட வேலைகளச் செய்யறதால எனக்கு எந்த அலுப்பும் தெரியிறதில்ல.
களைப்பும் ஏற்படுறதில்ல என்று சொல்லி முடித்தாள் ஃபாத்திமா.
அட, ரொம்ப
எளிதாவும் சுருக்கமாவும் இருக்கே. இத ஓத எனக்கென்ன சிரமம்? இனி நானும் உங்க வழிய, இல்ல இல்ல, அன்னை ஃபாத்திமா நாயகி வழியக்
கடைப்புடிக்கிறேன் என்று உற்சாகத்துடன் புறப்பட்டாள் ஆயிஷா.
Labels:
அல்லாஹு அக்பர்,
ஆயிஷா,
உற்சாகம்
Wednesday, March 28, 2012
நிழற்படத்தின் சட்டமென்ன?
அரபி மூலம்: ரவாயிஉல் பயான்- முஹம்மது அலீ அஸ்ஸாபூனீ (ரஹ்)
தமிழாக்கம்: நூ.அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.
நிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது. கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகின்ற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத் தடைசெய்வதைக் குறிக்காது. ஏனென்றால் இதில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குதல் என்ற நிலை இல்லை. இதனுடைய சட்டம் ஆடையில் பதியவைத்து வரைகின்ற ஓவியத்தின் சட்டத்தைப் போன்றதாகும் என்று பிற்கால மார்க்க அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்.
அஷ்ஷைக் அஸ்ஸாயிஸ் (ரஹ்) கூறியுள்ளதாவது: நிழற்படத்தின் சட்டமென்ன என்பதைத் தெரிந்துகொள்ள நீ விரும்பலாம். அதன் சட்டம் ஆடையில் பதித்து வரையப்படுகின்ற சட்டத்தைப் போன்றதாகும். அதற்கு விதிவிலக்கு உண்டு என்பதை நான் அறிவேன். அது ஓர் ஓவியம் இல்லை. மாறாக, அது உருவத்தைப் பதியவைப்பதாகும். ஒரு கண்ணாடியில் தெரிகின்ற ஓர் உருவத்தைப் போன்றதுதான் இதுவும் என்று கூறலாம். கண்ணாடியில் தெரிகின்ற ஓர் உருவத்தைப் பார்த்து, யாரோ ஒருவன் வரைந்துள்ள ஓவியம்தான் அது என்று கூறமுடியாது. நிழற்படக் கருவி பிடித்துத் தருகின்ற உருவப்படமும் கண்ணாடியில் தெரிகின்ற பிம்பத்தைப் போன்றதுதான். ஆக, நிழற்படக் கருவியிலுள்ள கண்ணாடியோ அதில் விழுகின்ற பிம்பத்தை (நிழலை)ப் பிடித்துத் தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியோ அதன் பிம்பத்தை (நிழலை)த் தக்கவைத்துக்கொள்வதில்லை. இதுதான் இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசமாகும். பின்னர் அந்தப் பிம்பம் குறிப்பிட்ட ஒரு வேதிப்பொருளில் கழுவப்பட்டு, அதி-ருந்து பலப்பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் இது கையால் வரையப்படுகின்ற ஓவியத்திற்கு ஒப்பானதில்லை. இருக்கின்ற உருவங்களை ஒருமுகப்படுத்திக் காட்டுகின்ற ஒரு வடிவமாகும். அந்தப் பிம்பம் நீங்காமல் இருக்குமாறு தேக்கிவைத்துள்ளது. அவ்வளவுதான்.
அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர்: எல்லாப் பொருள்களுக்கும் உருவங்கள் (பிம்பங்கள்) இருக்கவே செய்கின்றன. எனினும் அவை சூரிய வெளிச்சத்தில் இடப்பெயர்ச்சி செய்யத்தக்கவையாக உள்ளன. அந்த இடப்பெயர்ச்சியை தடுக்கக்கூடிய ஏதேனும் தடை இல்லாத வரை அவை தங்குதடையின்றி இடம்பெயர்கின்றன. அந்தத் தடைதான் அந்த வேதிப்பொருள். ஆடையில் பதித்து வரையப்படுவதைப்போல் இதற்கு ஷரீஅத்தில் இடம் இருக்கும்வரை இது ஹராம் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. குறிப்பாகத் தற்காலத்தில் மக்களுக்கு இதன் தேவை மிகுதியாக உள்ளது.
முஹம்மது அலீ அஸ்ஸாபூனீ (ரஹ்) கூறுகிறார்: நிழற்படம் ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை. நிழற்படக் கருவியிலிருந்து எடுக்கப்படுகின்ற படத்துக்கு நிழற்படம் என்றும் இதைத் தொழிலாகச் செய்பவருக்கு வழக்கத்தில் நிழற்படம் எடுப்பவர் (முஸவ்விர்) என்றும் கூறப்படுகிறது. இதைத் தெளிவான ஆதாரத்தின் மூலம் சொல்ல முடியாவிட்டாலும் அவர் முஸவ்விர்தான். எனினும் அவர் அதைக் கையால் வரையவில்லை. அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக்குகின்ற எதுவும் அதில் இல்லை. எனினும் அது ஓவியத்தின் ஒரு வகை என்பதற்கு அப்பாற்பட்டதில்லை. ஆகவே அதைத் தேவைக்கேற்ப குறைத்துக்கொள்வது அவசியமாகும். அதில் ஒரு வகையில் நன்மை இருந்தாலும் மற்றொரு புறம் அதில் மிகப்பெரும் கேடும் உள்ளது என்பதை மறந்துவிடலாகாது. இன்றைய பத்திரிகைகளே அதற்கான ஆதாரமாகும்.
Labels:
ஓவியம்,
நிழற்படம்,
வேதிப்பொருள்.
Monday, March 19, 2012
Tuesday, February 21, 2012
Monday, February 20, 2012
அன்பைப் போதித்த அண்ணலார்
‘அகிலத்தில் ஆற்றல்மிகு வார்த்தை அன்பேயாகும்’- Love
is the most powerful word in the world, ‘அன்பே கடவுள்’- Love is
God போன்ற முதுமொழிகள் அன்பின் மதிப்பையும்
உயர்வையும் விளக்குகின்றன. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்று தமிழ்மறை கூறுகிறது.
அன்பைப் போதிக்காத சமயங்கள் இல்லை என்றே கூறலாம். அன்புதான் அனைத்து நற்செயல்களுக்கும்
அடிப்படைக் காரணமாகும். “சிறுவர்கள் மீது அன்பு காட்டுங்கள்; பெரியவர்களுக்கு மரியாதை செய்யுங்கள்”
என்பது அண்ணலாரின் அன்புக்
கட்டளை.
அன்பு எனும் வேர்ச்சொல்லுக்குப் பல கிளைகள் உள்ளன. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகள்மீது
காட்டும் அன்பு, ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு, ஏழைகள் மீது காட்டும் அன்பு,
இறைவன் மீது கொள்ளும்
அன்பு என எல்லாமே அன்புதான். எனினும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பதத்தைத் தருகிறது
தேனினுமினிய தமிழ்மொழி.
1. ஓர் அன்னை தன் செல்லக் குழந்தைகளிடம் காட்டும் அன்பும், குழந்தைகள் தம் அன்னையிடம் காட்டும்
அன்பும் பாசம் (Affection) ஆகும். இதே அன்பை அரபியில் ஷஃபகத்
என்று கூறப்படுகிறது.
2. ஒருவன் அல்லது ஒருத்தி தன் வயதொத்தவனிடம் அன்புகொண்டு தோழமையோடு பழகுதல் நட்பு
(Friendship) ஆகும். இதே அன்பை அரபியில்
ஸதாகத் என்று கூறப்படுகிறது.
3. நாம் ஏழைகளிடம் காட்டும் அன்பு இரக்கம் (Pity) ஆகும்.
4. ஒரு தொழிலாளி தன் முதலாளியிடம் காட்டும் அன்பு விசுவாசம் ஆகும்.
5. ஓர் இளைஞன் தன் வயதொத்த ஓர் இளைஞியிடம் காட்டும் அன்பு காதல் (Lust) ஆகும். இதே அன்பை அரபியில் இஷ்க் என்று கூறப்படுகிறது. கணவன்-மனைவிக்கிடையே உள்ள
அன்பு காதலாகும்.
6. உறவினர்களிடம் காட்டும் அன்பு பந்தம் (Relationship) ஆகும். இதை அரபியில் ஸிலத்துர்
ரஹ்ம் என்று கூறுகின்றனர்.
7. உயிரினங்களிடம் காட்டும் அன்பு ஜீவகாருண்யம் ஆகும்.
8. நாம் இறைவனிடம் காட்டும் அன்பு பக்தி (Piety) ஆகும். இதை அரபியில் தக்வா
என்று கூறுகின்றனர். இதனால்தான் இறைபக்தி என்று கூறுகிறோம்.
9. இறைவன் தன் அடியார்களிடம் காட்டும் அன்பே கருணை (Mercy) ஆகும். இதை அரபியில் ரஹ்மத் என்று கூறுகின்றனர். அதனால்தான் திருக்குர்ஆனில் அல்லாஹ்
தன்னை ரஹீம்-கருணையாளன் என்று கூறுகின்றான்.
10. பொருள்களின் மீது நாம் கொள்ளும் வேட்கையே ஆசை (Like) ஆகும். இதனால்தான் மண்ணாசை,
பொன்னாசை என்று கூறுகிறோம்.
11. தாய் நாட்டின் மீதும் தாய்மொழியின்மீதும் நாம் கொள்ளும் அன்பு பற்று (Patriotism) ஆகும். இதை அரபியில் ஹுப்புல் வத்தன் என்று கூறுகின்றனர். இதனால்தான்
நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று அழைக்கிறோம்.
12. பொதுவாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் காட்டும் அன்பு சகோதரத்துவம் (Brotherhood) ஆகும். இதை அரபியில் உக்வத் என்று கூறுகின்றனர்.
ஆக, மேற்கண்ட
பதங்கள் யாவும் அன்பு எனும் கட்டத்தைத் தாண்டியபிறகுதான் பிறக்கின்றன. மேற்கண்ட அனைத்துப்
பதங்களுக்குள்ளும் அன்பு எனும் வேர் உள்ளது. ஒரு பொருளையோ மனிதனையோ நாம் பார்க்கும்போது
நம் உள்ளத்தில் ஏற்படும் இயல்பான உணர்வுதான் அன்பு. அந்த அன்பு எப்பொருளை அல்லது எவ்விடத்தைச்
சார்ந்து நிற்கிறதோ அதை வைத்துத்தான் அதற்குரிய பெயர் மாறுபடுகின்றது. ஆக,
அன்பு என்பது ஒன்றுதான்.
அதன் கிளைகள்தாம் பற்பல.
தமிழில் உள்ள அன்பு எனும் பதத்திற்கு இணையாக அரபியில் ஹுப்பு எனும் பதம் உள்ளது.
இந்த ஹுப்பு உடைய கிளைகள்தாம் மஹப்பத், ஷஃபகத், இஷ்க், சதாகத், உக்வத், உத்து, சிலத்து ரஹ்ம், ஹுப்புல் வத்தன், ரஹ்மத் ஆகும். மேற்காணும்
பதங்கள் யாவற்றுக்கும் ஹுப்பு எனும் அன்புதான் அடிப்படை. எனவே அந்த அன்பு எங்கு பொருந்துகிறதோ
அதை வைத்தே அதற்குரிய பெயர் சொல்லப்படும்.
மேற்கண்ட அனைத்து வகையான அன்பையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதோடு,
அதன்படி வாழ்ந்தும்
இருக்கின்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே அன்புமிக்கவர்களாக இருந்தார்கள்.
அவர்களின் நற்குணங்களும் அன்பான பேச்சும் இனிய நடைமுறைகளும்தாம் பிறரைக் கவர்ந்தன.
பிறருடன் பழகும்போதும் தம் குடும்பத்தாருடன் பேசும்போதும் தம் துணைவியருடன் உரையாடும்போதும்
இனிய வார்த்தைகளையே பேசினார்கள்; அன்பாகவே நடந்துகொண்டார்கள். அவர்களின் அன்பான பேச்சும் புன்னகை
தவழும் முகமும் காண்போரைக் கவரும்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பு உடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அது அற்றோர் உயிர் இருந்தும்
உயிரற்றோரே ஆவர் என்று வள்ளுவர் கூறுகிறார். அவரின் வாய்மொழிக்கேற்ப அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் மிகுந்த அன்புகொண்டவர்களாக வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் வரலாற்றின்
மூலம் அறிகிறோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில், “இவ்வுலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவே-அன்பாளராகவே நாம் உம்மை
அனுப்பியுள்ளோம்” என்று கூறுகின்றான். அல்லாஹ்வின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்தான் அண்ணலார் அனைவரிடமும்
அன்பாகவே நடந்துகொண்டார்கள். நாளுக்கு நாள்
பற்பல துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டியபோதும் தம் இனிய பண்பாலும்
சகிப்புத்தன்மையாலும் அவற்றைப் பொறுத்துக்கொண்டார்கள்.
தாயிஃப் நகர மக்கள் கல்லால் அடித்து அவர்களின் மேனியைக் காயப்படுத்தி, கடுஞ்சொற்களால் வதைத்து,
அவர்கள்தம் நெஞ்சைப்
புண்ணாக்கியபோதும் அவர்களைப் பழிவாங்க எண்ணவில்லை. கடின உளம் கொண்ட கல்நெஞ்சக்காரர்களிடமும்
அண்ணலாரின் அன்பே மிகைத்து நின்றது. அம்மக்களின் நல்வழிக்காக இறைவனிடம் பிரார்த்தனை
செய்தார்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ், தன்னுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம்
எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புகழ்ந்து கூறுகின்றான். அல்லாஹ்வின் கருணையால்
அவர்களிடம் நீங்கள் மிகவும் நளினமாக நடந்துகொண்டீர்கள். நீங்கள் மட்டும் சற்றுக் கடினமானவராகவும்
கல்நெஞ்சினராகவும் இருந்திருப்பின் அம்மக்கள் உம்மைவிட்டு வெருண்டோடியிருப்பார்கள்.
(3: 159)
அதாவது நீங்கள் மிகவும் அன்பானவர்; நளினமானவர். நீங்கள் அம்மக்களிடம் அன்பாக நடந்துகொண்டதால்தான்
அவர்கள் உங்களின் இனிய பேச்சைச் செவியுற முற்பட்டனர்; பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்
என்று விரித்துரைக்கின்றான். அவ்வளவு அன்புமிக்கவராக
அண்ணல் நபியவர்கள் திகழ்ந்தார்கள். இதனால்தான் அவர்களுடன் சேர்ந்தே இருந்த ஆருயிர்த்
தோழர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றான்.
முஹம்மது (இவர்) அல்லாஹ்வின் தூதர். அவரோடு இருப்பவர்கள் நிராகரிப்போரிடம் கடினமானவர்களாகவும்
தங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அன்புமிக்கோராகவும் இருக்கின்றார்கள். (48:
29) அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அன்பைப் போதித்ததால்தான் அவர்களின் அன்புத் தோழர்கள் தங்களுக்கு மத்தியில்
எவ்விதப் பிணக்குகளுமின்றி அன்பாகவும் சகோதரத்துவ உணர்வோடும் திகழ்ந்தார்கள்.
“உன் உறவைத் துண்டித்தவரோடு சேர்ந்து வாழ்; உனக்கு அநீதி செய்தவரை மன்னித்துவிடு;
உனக்குத் தீங்கிழைத்தவருக்கு
நன்மைசெய்” என்று கூறி மற்றோர்மீது அன்புடையோராக வாழ வழிகாட்டியுள்ளார்கள்.
பாசம்
நாம் நம்முடைய குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்கிறோம். எவ்வாறு பேணி வளர்க்கிறோம்
என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அண்ணல் நபியின் சமுதாயத்தினர் என நாம் சொல்-க் கொள்ளவே
வெட்கப்படவேண்டும். இன்றைய அவசர யுகத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்கு அன்பு முத்தம்
கொடுப்பதற்கோ குழந்தை தன் அன்னைக்குப் பாசமுத்தம் கொடுப்பதற்கோ நேரமில்லை. வேகமாகப்
புறப்படும் வேளையில், குழந்தை தன் வாயில் கைவைத்து முத்தமிட்டு, அதைத் தன் அன்னையிடம் காட்டுகிறது.
அவளும் அதை (Plain Kiss) அன்புடன் ஏற்றுக்கொள்கிறாள். இந்த
வேகத்தில் இன்றைய சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது.
அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பேரர்களைக்
கொஞ்சி, முத்தமிட்டு
விளையாடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில், கிராமப் புறத்தி-ருந்து நபித்தோழர் ஒருவர் வந்தார். அண்ணலாரின்
இச்செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டு, நீங்கள் இவ்வாறு செய்கின்றீர்களா? எனக்குப் பத்துக் குழந்தைகள் உள்ளனர்.
நான் ஒரு நாளும் என் குழந்தைகளை முத்தமிட்டதில்லை என்று கூறினார். இதைக்கேட்ட அண்ணலார்,
அல்லாஹ் உன் உள்ளத்தி-ருந்து
அன்பை எடுத்துவிட்டால் நானா பொறுப்பு? என்று மறுவினாத்தொடுத்தார்கள். (நூல்கள்: புகாரீ,
முஸ்லிம்)
ஆக, பெற்றோர்
தம் குழந்தைகளை முத்தமிட்டுக் கொஞ்சுவதும் நபிவழியேயாகும். அப்போதுதான் பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும் மத்தியிலுள்ள பாசம் அதிகமாகும்.
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைமொழி கேளா தவர்.
யார் தம் செல்லக்குழந்தைகளின் மழலைமொழிகேட்டு
இரசிக்கவில்லையோ அவர்கள்தாம் குழலோசையையும் யாழிசையையும் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பர்
என்றுரைக்கிறார் வள்ளுவர். ஆம், மழலைமொழி கேட்டு இரசிப்பதுதான் பேரின்பம். தற்காலத்திலும் தம்
பிள்ளைகளிடம் கொஞ்சிப்பேசி அவர்களின் மழலைமொழி கேட்டு இரசிக்கும் அன்னைகளும் இருக்கத்தான்
செய்கின்றார்கள்.
பந்தம்
ஒருவர் தம்முடைய உறவினர்களிடம் கொள்ளும் அன்புதான் பந்தம் ஆகும். உறவு என்பது
நம் வாழ்வின் முக்கிய அங்கம். உறவைப் பிரிந்து நாம் வாழ இயலாது. உறவோடு நாம் சேர்ந்து
வாழும்போதுதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நமக்குப் பக்கபலமும் மனதிடமும்
உண்டாகின்றன. உறவை வெறுத்தொதுக்கினால் அவன் தனிமனிதனாக வாழும் நிலை ஏற்படும். அதனால் அவனை அவனுடைய எதிரிகள் எளிதில் வீழ்த்துவர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் உறவினர்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கின்றார்கள்.
பிறருக்கும் அதையே ஏவியிருக்கின்றார்கள். உங்களைத் துண்டிப்போருடன் சேர்ந்து வாழுங்கள்
என்று கூறியுள்ளார்கள்.
உறவைத் துண்டித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான் என்று அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள்: புகாரீ, முஸ்லிம்)
உறவைச் சேர்ந்து வாழ்வதால் என்ன நன்மை என்பதை திருக்குர்ஆன் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.
நபி ஷுஐப் (அலை) அவர்கள்தம் சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின்
அழைப்பைக் கேட்டுக் கொதிப்படைந்த மக்கள், ஷுஐபே! நீர் சொல்வதில் எதுவுமே எங்களுக்குப் புரியவில்லை.
உம்மை எங்களுள் பலவீனராகக் காண்கிறோம். உம் குடும்பம் மட்டும் இல்லையெனில் உம்மைக்
கல்லால் அடித்தே கொன்றிருப்போம் (11:
91) என்று கூறினர்.
ஆக, நபி ஷுஐப்
(அலை) அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது அவர்களின் குடும்பமும், அவர்களின் உறவினர்களும்தாம்.
அதேபோல், அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது, அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர்
அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் ஆவார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.
உயிர்பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் கொடுமையானது என்று கூறுவர். ஏனெனில்
உயிர் பிரிவதால் ஓர் உயிர் மட்டுமே பிரிகிறது. உறவு பிரிவதால் எத்தனையோ உறவினர்கள்
நம்மைவிட்டுப் பிரிகின்றனர். எத்தனையோ சொந்தங்களும் பந்தங்களும் நம்மைவிட்டுப் பிரிகின்றன.
எனவே உறவைப் பேணி வாழ்வது இன்றியமையாதது. ஙப்போல் வளை என்று ஆத்திச்சூடிப் பாடல் ஒன்று
உண்டு. ங எனும் எழுத்தைப்போல் உறவினர்களை இணைந்து வாழவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
அதற்கு மேலாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைப் பாருங்கள். “உறவினர்கள் ஒன்றாக இருக்கும்போது
சேர்ந்து வாழ்பவன் உறவை இணைப்பவன் அல்லன். ஒருவனுடைய உறவு அறுந்துவிட்ட நிலையில்,
தானாக முன்வந்து அவர்களிடம்
சென்று சேர்ந்துகொள்பவனே உறவை இணைப்பவன் ஆவான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக
இப்னு உமர் (ரளி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)
ஜீவகாருண்யம்
உயிரினங்களிடம் அன்பு காட்டுவதே ஜீவகாருண்யம் ஆகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியிருக்கின்றார்கள். அவற்றிற்குரிய உரிமைகளை நிறைவேற்றியிருக்கின்றார்கள்;
நிறைவேற்ற ஏவியிருக்கின்றார்கள். அண்ணல் நபியவர்கள் எந்த ஓர் உயிருக்கும் தீங்கிழைக்கவோ,
வதை செய்யவோ அனுமதிக்கவில்லை.
அண்ணல் நபியவர்களின் வாழ்வில் நடந்த எத்தனையோ நிகழ்வுகள் இதற்குச் சான்றளிக்கின்றன.
நபித்தோழர்களுள் ஒருவர், ஒரு குருவிக்கூட்டி-ருந்து ஒரு குருவிக்குஞ்சைப் பிடித்துக்கொண்டு,
நபி (ஸல்) அவர்களிடம்
வந்துகொண்டிருந்தபோது, அக்குஞ்சின் தாய்ப்பறவை அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைச்
சிறிதும் பொருட்படுத்தாத அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அமர்ந்துவிட்டார். இதைக்
கண்ட நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கையிலுள்ள குஞ்சைப் பெற்றிடத் தாய்ப்பறவையின் ஏக்கத்தைப்
பாருங்கள். நீங்கள் விளையாட அந்தக் குருவிக்குஞ்சுதான் கிடைத்ததா? அதை விட்டுவிடுங்கள். எவ்வுயிர்க்கும்
நோவினை கொடுக்காதீர்கள்” என்று கூறினார்கள்.
ஒரு குருவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டு அதன்மீது இரக்கம் காட்டிய அண்ணல் நபியின்
ஜீவகாருண்யத்தை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ள ஒரு தோட்டத்திற்குள்
சென்றார்கள். வெகுநேரமாகியும் திரும்பவில்லை. நபித்தோழர்கள் சிலர் அத்தோட்டத்திற்குள்
சென்றபோது, ஓர் ஒட்டகம் அண்ணல் நபியவர்களிடம் அழுதுகொண்டு,
என் முதலாளி என்மீது
அதிகச் சுமையை ஏற்றுகிறான்; எனக்குச் சரியாகத் தீனி தருவதில்லை; என்னை அடித்துத் துன்புறுத்துகிறான்
என்று முறையிட்டது. இதைக் கேட்ட நபியவர்கள், இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்?
என வினவ, நான்தான் அல்லாஹ்வின் தூதரே!
என ஒருவர் நபியவர்கள்முன் வந்து நின்றார். அவரை நோக்கி, இனிமேல் நீ இதை அடிக்கக்கூடாது. அதிகச்
சுமைகளை ஏற்றக்கூடாது. இதற்குத் தீனி போட்ட பின்னரே நீ உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
உயிர் வதையை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. மாறாக, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்ட
வேண்டுமென்றே அண்ணல் நபியவர்கள் போதித்துள்ளார்கள். இதையே நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
நட்பு
தன்னுடைய இரகசியங்களைப் பரிமாறிக்கொள்ளவும், தனக்கென ஓர் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும்
ஒருவரைத் தேர்ந்தெடுத்து அன்புடன் பழகுவதே நட்பாகும். இதைத் தோழமை, நேசம், நட்பு என்ற பெயர்களில் கூறலாம்.
அதிகமானோரை நண்பர்களாகப் பெருக்கிக்கொள்வதைவிட, ஒரு நண்பனாக இருப்பினும் சிறந்த நண்பனாக,
உற்ற தோழனாக,
சோகத்தில் ஆறுதல் கூறுபவனாக,
தம் வெற்றியைப் பாராட்டுபவனாக,
வழிதவறினால் சீர்படுத்துபவனாகத்
தேர்ந்தெடுப்பது அவசியம்.
நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது எளிது
உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.
உன் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருத வேண்டும். உன் இன்பத்தைத் தன் இன்பமாகக் கருதவேண்டும். உன் வேலைகளில் அவனும் பங்குகொள்ள வேண்டும். உனக்காக
எதையும் தியாகம் செய்யக் காத்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான நட்பு.
இத்தகைய நட்பே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கும்
இடையே இருந்தது. அண்ணல் நபியின் வார்த்தைகளுக்காக ஈராண்டுகள் அபூபக்ர் ஸித்தீக் (ரளி)
அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மக்காவி-ருந்து மதீனாவுக்குப் புலம்பெயர அல்லாஹ்வின்
கட்டளை வந்தபோது, நேராக அபூபக்ர் (ரளி) அவர்களின் இல்லம் வந்தார்கள். அவர்களோ அண்ணல் நபியின் வருகைக்காக
விளக்கேற்றி வைத்துக்கொண்டு காத்திருந்தார்கள். இதுவே உண்மையான நட்புக்கு அடையாளம்.
அதேபோல் அண்ணல் நபியவர்களும் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களும் குகைக்குள் இருந்தபோது
இறைநிராகரிப்பாளர்கள் இருவரையும் தேடிக்கொண்டு குகையின் வாயில் வரை வந்துவிட்டார்கள்.
அந்நேரத்தில் மிகவும் அஞ்சிய தம்முடைய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களுக்கு
அண்ணல் நபியவர்கள் ஆறுதல் கூறினார்கள். அதைத் திருக்குர்ஆன் கூறுகிறது:
குகையில் இருந்த இருவருள் ஒருவராக அவர் இருந்த(போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட)
சமயத்தில் தம்முடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி, நீங்கள் கவலைப்படாதீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய
மனநிம்மதியை அளித்தான். (9: 40)
ஆக, அண்ணல்
நபியவர்கள் எல்லாவித அன்பையும் கற்றுத்தந்துள்ளதோடு, வாழ்ந்தும் காட்டியிருக்கின்றார்கள்.
எனவே அன்பிற்கு எத்தனையெத்தனை வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் வழிமுறையை நாம் கடைப்பிடித்தால், வீண்கோபம், மன இறுக்கம், படபடப்பு, பதற்றம் இவற்றிலிருந்து விடுபட்டு,
சாந்தமான உள்ளத்துடனும்
மனநிம்மதியுடனும் இனிய வாழ்வு வாழலாம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
Labels:
அண்ணலார்,
அன்புக் கட்டளை,
வேர்ச்சொல்
Saturday, February 4, 2012
மொபைல் பயான்!
அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா.
எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
ஏன்டி ஆமினா, அஸர் தொழுதுட்டியா?
ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.
இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா? நம்ம வீட்டுப் பெண் பிள்ளைங்க சிலபேர் வேறு சாதிப் பசங்களோட காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம். இது மாதிரி நம்ம பெண் பிள்ளைங்க கெட்டுப் போறதுக்குக் காரணம் அவங்களோட வறுமையும், தகாத பழக்க வழக்கமும்தானாம்.
வேறு என்ன சொன்னாங்க ஃபாத்திமாக்கா?
இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் பலரும் சொல்றாங்களாம். ஆனா, அதையெல்லாம் விட பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.
எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?
அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.
அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.
ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க? பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?
அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு அழைப்பாரு. நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்.
இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே.அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன்.
இந்தச் சிறுகதை இந்நேரம் டாட் காமிலும் இடம்பெற்றுள்ளது.
எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
ஏன்டி ஆமினா, அஸர் தொழுதுட்டியா?
ஆமாக்கா, இப்பத்தான் தொழுதுட்டு வெளியே வாறேன்.
இன்னைக்கு நம்ம ஊர் அசரத்து சொன்ன பயான கேட்டியா? நம்ம வீட்டுப் பெண் பிள்ளைங்க சிலபேர் வேறு சாதிப் பசங்களோட காதல் வலையில சிக்கி, அவங்களோட வார்த்தையில மயங்கி அவங்களோடவே ஓடிப்போறாங்களாம். இது மாதிரி நம்ம பெண் பிள்ளைங்க கெட்டுப் போறதுக்குக் காரணம் அவங்களோட வறுமையும், தகாத பழக்க வழக்கமும்தானாம்.
வேறு என்ன சொன்னாங்க ஃபாத்திமாக்கா?
இத ஒழிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகளைப் பலரும் சொல்றாங்களாம். ஆனா, அதையெல்லாம் விட பெற்றோருடைய கவுன்சிலிங் மூலமாத்தான் இத நம்ம பெண் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க முடியும்னு சொல்றாங்க.
எப்படிக்கா கவுன்சிலிங் செய்யுறது?
அதுக்கு நாமதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கணும். இரவு சாப்புடும்போது, ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளோட ஒண்ணா உட்கார்ந்து சாப்புடுற பழக்கத்த ஏற்படுத்திக்கணும். அந்த நேரத்துல ஒவ்வொருவரும் காலை முதல் மாலை வரை நடந்த விசயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கணும். இப்படிப் பேசினா, ஒவ்வொருவருக்கும் என்ன பிரச்சனை இருக்கு என்பதை மற்றவர் புரிந்துகொள்வதோட தாய்-தந்தை அதற்குத் தீர்வையும் சொல்லலாம்.
அந்த நேரத்துல, ஒரு தந்தை அன்பா பேசுற பேச்சும், அவர் ஊட்டுற இஸ்லாமிய விசயங்களும் நம்ம பெண்பிள்ளைங்க மனசுல ஆழமாப் பதிஞ்சிடும். அதன் பிறகு பொறுக்கிப் பசங்க என்னதான் காதல் வார்த்தயப் பேசுனாலும் அவங்கள வழிகெடுக்கவே முடியாது. இத ஒவ்வொரு பெற்றோரும் பின்பற்றணும்னு நம்ம அசரத்து பயான முடிச்சாங்க.
ஏக்கா, நீங்க ஜும்ஆ தொழுகை, வீட்லதானே தொழுதீங்க? பிறகெப்படி அசரத்து பயான கேட்டீங்க?
அதுவா, என்னோட வீட்டுக்காரர் பள்ளிக்குப் போயி, அசரத்து பயான் பேச ஆரம்பிச்சதும் என்னோட மொபைலுக்கு அழைப்பாரு. நான் அத எடுத்து, ஆன் செய்துட்டு சப்தமா (லவ்டு ஸ்பீக்கர்) வச்சிடுவேன். அவ்வளவுதான். எங்க வீட்ல உள்ள எல்லோரும் அசரத்து பயான லைவா கேட்டுக்குவோம்.
இந்த விசயம் எனக்குத் தெரியாமப் போச்சே.அடுத்த வாரமே நானும் என் வீட்டுக்காரரிடம் சொல்லி, பயான் கேக்க ஆரம்பிச்சுடுறேன்.
இந்தச் சிறுகதை இந்நேரம் டாட் காமிலும் இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Posts (Atom)


