புதன், 14 பிப்ரவரி, 2024

கருவூலம் உருவாக்குவோம்!

  

கருவூலம் உருவாக்குவோம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

ஒவ்வோர் ஊரிலும் மகளிர் சுய உதவிக்குழு இயங்கி வருகிறது என்பதை நம்முள் பலர் அறிவோம்.  அரசு தரும் நிதியுதவி வங்கி வழங்கும் நிதியுதவி இரண்டு சேர்ந்தாற்போல் பத்து முதல் இருபது வரையுள்ள ஒரு மகளிர் குழுவிற்கு வழங்கப்பட்டுவருகிறது. அவர்கள் அந்த நிதியைப் பெற்றுக் கூட்டாகவோ தனித்தனியாகவோ தொழில் செய்வார்கள். அக்குழுவில் பெரும்பாலோர் பயனடைந்து வருகின்றார்கள். தொழில் செய்து இலாபம் ஈட்டுகின்றார்கள்.

 

இலாபம் ஈட்டுவோர் சரியாகப் பணத்தைத் திரும்பச் செலுத்திவிடுகின்றார்கள். தொழிலில் இலாபம் ஈட்ட இயலாதோர் அல்லது அந்த நிதியைப் பெற்று, பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடக் கட்டணம் செலுத்தியோர் குறிப்பிட்ட தவணைக் காலத்தில் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த இயலாமல் தடுமாறுகின்றார்கள். அப்போது வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகின்றார்கள். அவர்களுள் முஸ்லிம் பெண்களும் அடங்குவர்.

 

சுய உதவிக்குழுவினருக்கு வங்கி வழங்கும் நிதியுதவியைவிடத் தனியார் வழங்கும் நிதியுதவியே அதிகம் எனலாம். தனியார் வங்கிகள் கிராமம் கிராமமாகக் குறி வைத்து, பெண்களுக்குக் கடனுதவி வழங்கி வருகின்றார்கள். அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகின்றபோது வட்டிக்கு மேல் வட்டியை வசூலிக்கின்றனர். வட்டி கட்ட இயலாத பெண்கள், அவர்கள் திட்டும் திட்டுக்களையும் பேச்சுகளையும் செவியேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

 

வட்டி ஹராம்-தடைசெய்யப்பட்டது என்று சொல்லிவிடுகின்றோம். ஆனால் அதற்கான மாற்றுப் பொருளாதார வழியை நாம் உருவாக்காமலேயே இருந்துவருகிறோம். இஸ்லாமிய மார்க்கமோ அதற்கான மாற்று வழியைத் தெளிவாகவே காட்டியுள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்தாமல் சமுதாயப் பொறுப்பாளர்களும் ஆலிம்களும் கடந்து சென்றுகொண்டே இருக்கின்றனர். அதைச் செயல்படுத்தத் தயங்குகின்றனர். எனினும் சமுதாயத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களுமே இதற்கான தீர்வைச் சொல்ல வேண்டும்; செயல்படுத்த வேண்டும். அது அவர்களின் தார்மிகக் கடமையாகும்.

 

கன்ஸுல் மால் அல்லது இம்தாதுல் முஸ்லிமீன் எனும் பெயரில் ஒவ்வொரு மஹல்லாவிலும் பொருளாதாரக் கருவூலம் உருவாக்கி, அதன்மூலம் அந்தந்த மஹல்லாவில் உள்ள ஏழைகளுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவற்ற முதியோருக்கும் மாதந்தோறும் பொருளாதார உதவி வழங்க வேண்டும். தொழில் தொடங்க விருப்பமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருளாதார உதவி செய்ய வேண்டும். இதனால் நம் சமுதாய மக்களை வட்டியிலிருந்து காக்க இயலும்; ஏழைகள் பயன்பெறுவார்கள்.

 

தம்முடைய பணத்தைச் சேமித்து வைக்க எண்ணும் முஸ்லிம்கள் பலர் வங்கியையே நாடுகின்றனர்.

அதேநேரத்தில் வங்கியில் வழங்கப்படும் வட்டியை அவர்கள் பெறுவதில்லை. அல்லது அதை எடுத்து  ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றனர். அதனால் வங்கி மூலம் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதனை மாற்றியமைக்கும் விதத்தில், முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சிக்குச் சமுதாயப் பொறுப்பாளர்களால் உதவ முடியும். குறிப்பிட்ட மஹல்லாக்களில் இஸ்லாமியக் கூட்டுறவு வங்கியைத் தொடங்கி, அதில் முஸ்லிம்கள் சேர்த்து வைக்கின்ற சிறுசேமிப்பைத் தொழிலில் முதலீடு செய்து, அதில் வருகின்ற இலாபத்தைச் சிறுசேமிப்பாளர்களுக்குப் பங்கிட்டு வழங்கலாம். முளாரபா, முராபஹா என்ற கூட்டு வியாபாரத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது. அந்த வகையான தொழில்களில் முதலீடு செய்து, அதில் கிடைக்கின்ற இலாபத்தைப் பங்கிட்டு வழங்கலாம்.

 

 

 

இதனால் நம் சகோதர, சகோதரிகளின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, வட்டியில்லாமல் ஹலாலான-ஆகுமான முறையில் வளர்ச்சியும் அடையும். இது எவ்வளவு பெரிய பொருளாதார மாற்றம்! சிறுசேமிப்பாளர்களின் பணத்தைப் பெருநிறுவனங்களில் முதலீடு செய்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என அனைத்திற்கும் நாம் முன்னோடியாகத் திகழலாம். எல்லாவற்றிற்கும் அரசையே எதிர்பார்க்காமல் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவருவதோடு மிகச் சிறந்த முன்னேற்றத்தையும் காணலாம்.

 

கன்ஸுல் மால் திட்டத்தின்மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் பணக்கார முஸ்லிம்கள் வழங்குகின்ற கட்டாயத் தர்மத்தை (ஸகாத்தை) உரிய முறையில் வசூல் செய்து, அந்தந்த மஹல்லாவில் வாழ்கின்ற ஏழைகள், விளிம்புநிலை மக்கள், கைம்பெண்கள், ஆதரவற்றோர் முதலானோருக்கு வழங்கலாம். அந்த மஹல்லாவில், அதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி யாருக்கும் இல்லையெனில், அதை அடுத்த மஹல்லா மக்களுக்கு வழங்கலாம்.

 

நபியவர்களின் ஆட்சியில் நமக்கு ஏராளமான படிப்பினைகளும் வழிகாட்டல்களும் உள்ளன. ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம். கலீஃபாக்களின் ஆட்சிமுறையைக் கூர்ந்து கவனித்தால் பல்வேறு வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று பொருளாதாரச் சிக்கலுக்கான வழிகாட்டல் ஆகும். அதாவது  முஸ்லிம்கள் ஹராமைவிட்டுத் தவிர்ந்துகொண்டு, ஹலாலான- ஆகுமான முறையில் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான வழிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றினால் முஸ்லிம்கள் செழிப்பாக வாழலாம் என்பதில் ஐயமில்லை.

 

பணக்கார முஸ்லிம்கள் வழங்குகின்ற கட்டாயத் தர்மத்தை-ஸகாத்தை முறையாக வசூல்செய்து அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. அதன்மூலமே  மக்களுக்குத் தேவையான திட்டங்களை அரசு செய்தது. அதன்மூலமே ஏழைகளின் துயர்துடைக்கப்பட்டது; மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டன. அதே முறைப்படி நாம் செயல்பட்டால் நிச்சயமாக நம் மக்கள் வட்டியிலிருந்து விடுபடலாம். அதற்கான வரலாற்றுச் சான்றைப் பாருங்கள்.

 

இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு காலத்திலும் (13-22ஹி) உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் காலத்திலும் (99-101ஹி) ஸகாத் வறுமையைக் குறைப்பதற்கு அல்லது முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு வெற்றிகரமான கருவியாக இருந்தது. உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ்  அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் செழிப்பாக இருந்ததால் ஸகாத் பெறத் தகுதியானவர்கள் இல்லை. ஆகவே ஸகாத் சரியாக நிர்வகிக்கப்பட்டால், அது வறுமையைப் போக்க உதவும் என்பது வரலாற்றிலிருந்து நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

 

ஒருமுறை எகிப்து ஆளுநர் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ்  அவர்களிடம் ஸகாத் பெறத் தகுதியான நபரைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த நிதியை எவ்வாறு செலவு செய்வது எனக் கேட்டார். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ், “அடிமைகளை வாங்கி விடுதலை செய்யுங்கள்; பயணிகள் ஓய்வெடுக்கத் தங்குமிடம் கட்டுங்கள்; இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவித்தொகை வழங்குங்கள் என்று பதிலளித்தார்கள்.

 

ஸகாத் தொகையை வசூலித்து, இஸ்லாமியக் கருவூலத்தில் சேர்த்து அதன்மூலம் ஏழைகளுக்கு உதவிசெய்வதோடு இஸ்லாமிய வங்கியையும் ஏற்படுத்தலாம். இஸ்லாமிய வங்கி முறை எப்படி இயங்குகிறது என்றால் பொதுமக்கள் சிறுசேமிப்பாக வழங்குகிற அனைத்தும் முதலீடு என்ற அடிப்படையில் பெறப்படுகிறது. கூட்டாண்மை வணிகம் என்ற நிபந்தனையின்பேரில், வங்கி ஈடுபடுகின்ற வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தொகை பொதுமக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்படுகிறது. எனவே இது வட்டியாகாமல் இலாபத்தில் கிடைக்கின்ற பங்காகக் கருதப்படுகிறது. இந்தப் பங்கின் அளவு குறிப்பிட்ட அளவாக இருக்காது. வங்கிக்கு இலாபம் எவ்வளவு கிடைக்கிறதோ அதைப் பொருத்து முதலீட்டாளர்களுடைய பங்கின் அளவு கூடலாம், குறையலாம் என்ற நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருப்பதால் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஓராண்டு குறைவாகக் கிடைக்கின்ற இலாபத் தொகை அடுத்த ஆண்டு அதைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம். ஆக இஸ்லாமிய வங்கி முறை நம்மை வட்டியிலிருந்து காப்பதோடு பயனையும் நல்குகிறது. அப்படியிருக்கும்போது நாம் ஏன் அதை இன்னும் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கின்றோம்?

 

இஸ்லாமிய வங்கிக்கு இந்திய நாட்டில் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்றாலும் இஸ்லாமியச் சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சியின் பயனாக, இஸ்லாமியக் கூட்டுறவு வங்கி தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் இந்தக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் திருவல்லிக்கேணியில் ஒரு கிளை இயங்கிவருகிறது.  அதுபோல் குறிப்பிட்ட மஹல்லாக்களில் நாமே புதிதாக வங்கியைத் தொடங்கலாம்.

 

இந்த இஸ்லாமிய வங்கி முறை ஃபிக்ஹ் சட்ட முறைப்படி எந்த வகையைச் சார்ந்தது என்று ஆய்வு மேற்கொள்ளும்போது, இது முளாரபா எனும் ஒரு வகை வியாபாரத்தின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியலாம். ஆம்! இதில் முதலாளி ஒருவர் தம் பணத்தை ஒப்பந்த அடிப்படையில் முதலீடு செய்வார். ஆனால் அவர் அந்த வியாபாரத்தில் ஈடுபடமாட்டார். பணத்தை வாங்கியவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட தொழிலில் அதை முதலீடு செய்து வியாபாரம் செய்து சம்பாதிப்பார். உழைப்பதற்கான ஊதியத்தை எடுத்துக்கொண்டு, இலாபத் தொகையை ஒப்பந்த அடிப்படையில் பங்கு பிரித்து, முதலாளிக்கும் கொடுத்துவிட்டு, தாமும் வைத்துக்கொள்வார். இதுவே முளாரபா ஆகும்.

 

முதலீடு செய்பவர் தனிமனிதராக இருப்பது ஒரு வகை. பலரும் முதலீடு செய்து சிலர் வியாபாரம் செய்து பொருளீட்டுவது மற்றொரு வகை. அந்த வகையில்தான் இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. அதாவது வங்கியில் பணம் செலுத்துவோர் அனைவரும் முதலீட்டாளர்களே. அவர்கள்  செலுத்தும் தொகை அனைத்தும் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கின்ற இலாபத் தொகை, ஆண்டுக்கொரு முறை, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. எனவே வணிகத்தில் கிடைக்கின்ற இலாபத் தொகைதான் வங்கிக் கணக்காளர்களுக்கு-சிறுசேமிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறதே தவிர வட்டி கிடையாது. ஏனென்றால் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான்.” (2: 275) இந்த முளாரபாவில் இலாபம் என்பது குறிப்பிட்ட தொகையாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை செல்லாது. இலாபம் கூடலாம், குறையலாம் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்தான் இந்த ஒப்பந்தமே செல்லும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 

ஆக வட்டியிலிருந்து விலகி, நன்மையும் இலாபமும் கிடைக்கின்ற மாற்றுப் பொருளாதார வழியை நோக்கி நாம் ஏன் இன்னும் செல்லாமல் இருக்கிறோம்? இனிவரும் காலங்களிலாவது நம் சமுதாயப் பொறுப்பாளர்களும் தலைவர்களும் ஆலிம்களும் இணைந்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு, முஸ்லிம் சமுதாய மக்களைத் தீய வட்டியிலிருந்து முற்றிலும் விலக்கி, வட்டியில்லாப் பொருளாதாரத்தை அடைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சமுதாயப் பொறுப்பாளர்கள் முயல்வார்களா?

============








கருத்துகள் இல்லை: