---------------------------
முன்குறிப்பு: பெறத் தகுதியுடையோருக்கு
இந்தக் கட்டுரை பொருந்தாது.
“தர்மப் பொருள் (ஸகாத்) முஹம்மதின் குடும்பத்தாருக்குத்
தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
(முஸ்லிம்: 1945)
பாக்கியாத்தில் நாங்கள் பயின்ற காலத்தில், ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று எங்களின் ஆசிரியர்கள் பலர் எங்களுக்குப் போதித்திருந்தாலும் மேற்கண்ட இந்த
நபிமொழியை, அப்துல் ஹமீது ஹஜ்ரத் (பாக்கியாத்தின்
தற்போதைய முதல்வர்) அவர்களின் வாயிலிருந்துதான் முதன்முதலாகக் கேட்டோம். ‘ஸகாத் என்பது ஓர் அழுக்கு’என்பதும் ‘கை நீட்டுவது இகழ்ச்சி’என்பதும் எங்கள் மனங்களில் பதிந்துவிட்டது.
‘மக்களின் அழுக்குகள்’என்பதுதான் நான் அழுத்தமாகச் சொல்ல வேண்டிய செய்தி. ஸகாத் கடமையாகியும் அதை வழங்காமல் கஞ்சத்தனம் செய்தவர்கள், மறுபக்கம் அதையெல்லாம் மருத்துவமனையின் ‘பில்’-லுக்காகச் செலுத்துவதைப் பார்த்தபின்னர்தான் அந்த நபிமொழியின்
பொருள் புரிந்தேன்;
அந்த அழுக்குகளெல்லாம் தோல்நோயாக, சொறியாக, சிரங்காக இன்னும் பற்பல நோய்களாக வெளிப்பட்டதைப் பார்த்தபோதுதான் உண்மை தெளிந்தேன்.
அதுபோலவே கடமையான ஸகாத்தை உரிய முறையில்
வழங்காத செல்வர்களையும் பார்த்தேன். அவர்கள் தாம் சேர்த்துவைத்த சொத்துகள் அனைத்தையும்
இறுதியில் மருத்துவமனையில் அள்ளிக்கொடுத்துவிட்டுத்தான் மரணமடைந்தார்கள். அத்தோடு
அங்கு நீண்ட காலமாகத் துன்பத்திற்குள்ளானார்கள். அத்தகையோரிடம் அல்லாஹ் தன் கணக்கை
முடிக்காமல் மரணிக்க விட்டுவிடுவதில்லை என்பதையும் அறிந்துகொண்டேன்.
ஒருவரின் செல்வம் அழுக்குகளிலிருந்து
தூய்மைப்படுத்தப்படுவதால்தான் அதை ‘ஸகாத்’ என்கிறோம். அந்த அழுக்குகள் யாருக்குச் சேர வேண்டும்? தகுதியுடையோருக்குச் சேர வேண்டும். தகுதியில்லாதோர்
பெற்றால் அவர் அழுக்குகளை உண்கிறார் என்று பொருள். அழுக்குகளைச் சாப்பிடுவோருக்கு
நோய் வரவே செய்யும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு அது வாழ்வாதாரம் ஆகும். அதாவது குளத்தில்
குளிக்கிறபோது நம் கால்களில் உள்ள அழுக்குகளை மீன்கள் உண்ணும்; அது மீன்களுக்கு உணவு; நமக்கோ அழுக்கு. அதுபோலவே ஸகாத் என்பது செல்வர்களுக்கும்
தகுதியற்றோருக்கும் அழுக்கு; அது அவர்களுக்குத் தகாது; ஏழைகளுக்கோ அது வாழ்வாதாரம் ஆகும்.
செல்வர்கள் தம் செல்வத்திற்குரிய ஸகாத்தை-அழுக்கை
உரிய முறையில் வழங்காமல் தாமே உண்பதாலும் தகுதியற்றோர் அந்த அழுக்குகளைப் பெறுவதைத்
தவிர்த்துக் கொள்ளாமல் அதைப் பெற்று உண்பதாலும் இருசாராரும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதைப்
பார்த்து, அதிலிருந்து பாடம் படித்து, அந்தப் பாடத்தை என் இனிய சகோதரர்களுக்குத் தெரிவிக்க
வேண்டும் என்ற நன்னோக்கத்தில் எழுதப்பட்டதே இந்த ஆக்கம்; இறைச்சினம் என்மீது ஏற்படாதிருக்கவே இந்த அறச்சினம்.
அழுக்குகளை உண்பதைத் தவிர்த்துவிட்டு, தூய்மையானவற்றை மட்டுமே உண்டு, அதன்மூலம் தோன்றுகிற தூய சிந்தனைகளைப் பிறருக்கு வழங்குவோம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
20 03 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக