--------------------------------------------
‘இந்தியா கூட்டணி’ ஒரு பக்கம் பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, நீதிக்கெதிரான ஆட்சியை அகற்றுவதற்காகத் தன்னால் இயன்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
அதேநேரத்தில் மறுபக்கம் ஆளும் பிஜேபி அரசு தனக்குச் சாதகமாக மின்னணு வாக்கு
இயந்திரங்களை வைத்துக்கொண்டு, அதிகாரத்தோரணையோடு தேர்தல் பரப்புரைகளைச் செய்துவருவது மிகுந்த கவலையளிக்கிறது.
மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கெதிரான
அரசியல் கட்சிகளின் போராட்டமெல்லாம் மிதமான போக்கில்தான் இருந்தன. எனவே அவையெல்லாம்
தற்போது, கடலில் கரைத்த கற்பூரமாகக் காணாமல்
போய்விட்டன.
மின்னணு வாக்கு இயந்திரங்களை யாரும்
தவறாகப் பயன்படுத்த முடியாது; யாரும் அதை ஹேக் (Hack) செய்ய முடியாது; முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று தேர்தல் ஆணையம் அறைகூவல்
விடுத்து, ஹேக் செய்ய முடியாத இயந்திரத்தை முன்வைத்தது.
அந்த நேரத்தில், “நீங்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துகிற அத்துணை இயந்திரங்களையும்
எங்கள்முன் வையுங்கள்; அவற்றிலிருந்து நாங்கள் விரும்பிய பத்து இயந்திரங்களை எடுத்து ஹேக் செய்து காட்டுகிறோம்” என்று நம் பொறியாளர்களுக்குச் சவால்விடத் தெரியவில்லை. அப்படி ஒருவேளை கேட்டிருந்தால்
அதை நிரூபித்துக் காட்டியிருக்கலாம். அந்தோ பரிதாபம்! அவ்வாறு யாருக்கும் கேள்வி கேட்கத்
தெரியவில்லை.
அத்தகைய மின்னணு வாக்கு இயந்திரங்களை
வைத்துத் தேர்தல் நடத்திக்கொண்டு, இங்கு மக்களாட்சி நடக்கிறது என்றும் இது மக்களாட்சியை நிலைநிறுத்தும் 18ஆவது ஜனநாயகத் தேர்தல் என்றும் விளம்புவது ஏமாற்று வேலை
என்றே பலரும் கூறுகின்றார்கள்.
உண்மையில் இது ஜனநாயக நாடு என்றால், மக்களின் ஐயத்திற்குள்ளான ஓர் இயந்திரத்தை வைத்துத் தேர்தல்
நடத்தாமல், நாட்டில் பெரும்பாலோர் விரும்புகிற, எல்லோரும் முற்றிலும் நம்புகிற, எல்லோருக்கும் எளிதான வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை
நடத்திக் காட்ட வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள்மூலம் தேர்தல்
நடத்தப்பட்டு, அதன்மூலம் பிஜேபி மீண்டும் வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்ததற்குச்
சமமாகும். அதன்பிறகு அரசியல் கட்சிகள் போராடிப் பயனில்லை. அதை அகற்ற முனையாமல் தேர்தலை
எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் பரப்புரை விழலுக்கு இறைத்த நீர் போன்றதாகும்.
ஒருக்கால் இதையும் தாண்டி அதிசயம் நடந்தால்
இந்திய மக்கள்மீது இறைவன் கருணைகாட்டியுள்ளான் என்று கருதலாம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
18 03 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக