சனி, 16 மார்ச், 2024

போதும்... போதும்...!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கட்டுரைச் சுருக்கம்:

 

ஸகாத் பெறத் தகுதி இல்லாதவர்கள், எனக்கு வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டால், தகுதியானவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள்.

 

தகுதி இல்லாதவர்கள் ஏழைகள் என்ற போர்வையில் ஸகாத் பணத்தைப் பெறுவது ஒருவகை ஏமாற்றமும் மோசடியும் ஆகும்.

 

செல்வர்கள் தம் செல்வத்துக்குரிய ஸகாத்தை முறைப்படி கணக்கிட்டு வழங்கினால் ஏழைகள் பயன்பெறுவார்கள்.

 

பணத்தை யார் நீட்டினாலும், உடனடியாக அதை வாங்கிக்கொள்ளாமல், இது ஸகாத்தா, அன்பளிப்பா என்று கேட்டு, நான் ஸகாத்தைப் பெறுவதில்லை என்று சொல்ல, இறைநம்பிக்கை மிகுந்தவர்களால் மட்டுமே முடியும்.

---------------------------

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவை (டிமாண்ட்) இருந்துகொண்டே இருக்கிறது. நீர், உணவு, உடை, இருப்பிடம், பணம் என அவரவர் தேவைக்கேற்பப் பட்டியல் மாறுபடும்.  நம்முள் பெரும்பாலோர் தம் தேவையைத் தம் உழைப்பின்மூலம் நிவர்த்திசெய்துகொள்கிறார்கள். வேறு சிலரோ தம் ஏழ்மையின் காரணமாகப் பிறர் வழங்குகிற உதவிமூலமே தம் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றார்கள்.

 

நம்முள் ஒரு வகையினர் தம் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் எனப் பலர் வழங்குகிற உதவித்தொகையால் தம் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். அவர்கள் அந்த உதவியைப் பெற்று வாழ்வதில் தவறில்லை. ஆனால் காலம் முழுவதும் அவ்வாறே வாழ்ந்து முடித்துவிடலாம் என்று அவர்கள் எண்ணுவதுதான் தவறு. குறுகிய எண்ணத்திலேயே காலம் கடத்துவது அல்லது தம்மால் உழைக்க முடியும் என்றிருந்தும் அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல், பிறர் கொடுப்பதை வைத்தே வாழ்ந்துவிடலாம் என்று எண்ணுவது அவர்களின் நீடித்த சோம்பலுக்கு அடையாளமாகத் திகழ்கிறது.

 

அவர்களுள் யாரும் ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. தாங்கள் இதுவரை எனக்குச் செய்துவந்த உதவிக்கு நன்றி; அல்லாஹ் உங்களுக்கு அதற்கான நற்கூலியை இம்மையிலும் மறுமையிலும் கொடுப்பானாக. எனக்கு இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும். இனியும் நீங்கள் எனக்குப் பணஉதவி வழங்க வேண்டாம் என்று கூறும் துணிவு எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது? இனி நான் யாரிடமும் உதவி பெறப்போவதில்லை என்று முடிவெடுக்கின்ற மனத்திட்பம் எத்தனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது

 

இதுவரை நீங்கள் செய்துவந்த உதவி போதும் என்று சொல்லும் துணிவும் மனஉறுதியும் அவ்வளவு சீக்கிரம் எந்த மனிதனுக்கும் வந்துவிடாது. அவன் தன் நிலையைக் குறித்து, தானே சிந்திக்க வேண்டும்; ‘ஏற்பது இகழ்ச்சி என்ற முதுமொழியை மீண்டும் மீண்டும் தன் மனத்துக்குள் அசைபோட்டுப் பார்க்க வேண்டும்; தன் நிலையைக் கண்டு தானே அசிங்கமாகக் கருத வேண்டும்; சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அவ்வாறு முடிவெடுக்கத் தோன்றும்.

 

இந்நாள் வரை பிறரின் தயவோடுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; இனியேனும் யாருடைய  உதவியையும் பெறாமல் இறைவனின் உதவியோடு ஏன் வாழக்கூடாது என்ற சிந்தனை உள்ளத்தில் தோன்றினால் மட்டுமே ஒருவன் தன் நிலையை மாற்றிக்கொள்ள முடியும். இல்லையில்லை; அவன் தன்  வாழ்க்கை நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியும். இது நாள் வரை அவன் எனக்காகச் செலவழித்தான்; இனி நான் அவனுக்காகச் செலவு செய்யாவிட்டாலும், எனக்கேனும் நான் செலவு செய்துகொள்ள  என்னால் இயன்றதை உழைத்துச் சம்பாதிப்பேன்; இனி அவனுடைய உதவியை நான் அறவே பெறமாட்டேன் என்று உறுதியாக முடிவெடுக்க வேண்டும்.

 

நாம் சிறுவராக இருக்கிறபோது ஒவ்வோர் எழுத்தாகக் கற்றுத் தருகிற ஆசிரியர், காலப் போக்கில்  வார்த்தைகளாகக் கற்றுத் தருகிறார்; பின்னர் அதையும் விட்டுவிட்டுச் சரளமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு நிலையைக் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆக, காலம் செல்லச் செல்ல கற்பிக்கும் நிலை மாறுகிறதல்லவா? அதுபோலவே நம் வாழ்க்கை நிலையும் மாற வேண்டுமல்லவா? கடந்த காலங்களில் பெற்றுக்கொண்டே இருந்தேன்; இனி பெறுவதை நிறுத்திவிடுவேன்; இன்னும் சில ஆண்டுகள் கழித்து, கொடுக்கும் நிலைக்கு உயர்வேன் என்று எண்ணுவதும் அதனை நோக்கி நகர்வதும்தானே வாழ்க்கையில் நாம் அடையும் முன்னேற்றம்?

 

ஆனால் சிலர் ஆண்டுதோறும் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கிறார்கள். அதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் நிலைக்கு மனதளவில்கூட வருவதே இல்லை. கொடுக்கும் நிலைக்கு வராவிட்டாலும், தன்னைத்தானே  காத்துக்கொள்ளும் தற்சார்பு நிலைக்குக்கூட வருவதில்லை. பிறர் கையை எதிர்பார்க்கும் இந்த நிலையை எப்போதுதான் அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்?

 

அஸ்ஸலாமு அலைக்கும் பாய், போன வருஷம் வந்திருந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்ன பாய் மறந்துட்டீங்களா? நான்தான் காதர்பாய் வந்திருக்கேன். போன வருஷம் மாதிரி, இந்த வருஷமும் உங்களுடைய உதவியை நாடித்தான் வந்திருக்கேன் என்று ஒவ்வோர் ஆண்டும் சொல்லும் பலர் நம்முள் உள்ளனர். அவர்கள் அவ்வாறு சொல்வதையும் பெறுவதையும் இழிவாகக் கருதுவதில்லை. இப்ப நேற்றா நான் வாறேன்; ஒங்க வாப்பா காலத்திலிருந்தே வந்துகிட்டு இருக்கேன் என்று சிலர் தம்முடைய இகழ்ச்சியின் காலநீட்சியைப் பறைசாற்றுவர். 

 

தன்மீதே ரோஷம்கொண்டு, பிறரிடம் பெறுவதை இழிவெனக் கருதி, இறைவன்மீது அளவிலா நம்பிக்கைகொள்ளும்போதுதான், “இதுவரை பெற்றது போதும்; இனி நான் யாரிடமும் எந்த உதவியும் பெறப் போவதில்லை; அல்லாஹ்வையன்றி வேறு யாரிடமும் கையேந்தப்போவதில்லை என்று முடிவெடுக்கத் தூண்டும். அத்தகைய உறுதி மனத்தினுள் தோன்றும்போது அவன் பின்வருமாறு பிரார்த்தனை செய்வான்: அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக. வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக். பொருள்: அல்லாஹ்வே! நீ விலக்கியதை விட்டுவிலகி, நீ ஆகுமாக்கியதைக் கொண்டு எனக்குப் போதும் என்ற நிலையை உருவாக்குவாயாக! மேலும் உனது கருணையால் உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னைத் தேவையற்றவனாக ஆக்குவாயாக. (நூல்: திர்மிதீ: 3563)

 

மேலும் இறைவன் கூறுவதை மனத்தில் பதித்துக்கொண்டவருக்கே அத்தகைய முடிவெடுக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். யார் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ, அவருக்கு ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு வேண்டிய வாழ்வாதார வசதிகளை அளிப்பான். யார் அல்லாஹ்வைச் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதும்(65:2-3).

 

பிறரிடம் கேட்கக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக, அவர்கள்தம் அன்புத்தோழர்கள் கீழே விழுந்த சாட்டையைக்கூட, ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கித் தாமே எடுத்துக்கொள்வார்களே தவிர, பிறரிடம் அதை நீ என்னிடம் எடுத்துக்கொடு என்று கேட்கமாட்டார்கள். அந்த அளவிற்குச் சுயமரியாதைகொண்டவர்களாக இருந்தார்கள். கேட்டுப் பெறுவதை இழிவாகக் கருதிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஏற்பது இகழ்ச்சி என்ற மூலமந்திரத்தைத் தம் தோழர்களுக்குப் போதித்தார்கள். நபியவர்களின் வாக்குகளை அப்படியே தம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி, சுயமரியாதைமிக்க சமுதாயமாக வாழ்ந்தார்கள்.

 

சுயமரியாதையைப் போதித்த நபியவர்களின் சமுதாயம்தான் ரமளான் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் பிறரின் உதவிதேடி அலைந்துகொண்டிருக்கிறது. அவர்களுள் பலர் தம் அடிப்படைத் தேவைக்காக அல்லாமல், கையேந்திப் பிழைப்பதையே தொழிலாகச் செய்துவருவோரும் உண்டு. எந்த நாளிலும் போதும் என்ற நிலைக்கு அவர்கள் வருவதே இல்லை.

 

இத்தகையோரைப் பார்த்தே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ஆதமுடைய மகனுக்கு (மனிதனுக்கு) இரண்டு ஓடைகள் (நிறையத்) தங்கம் இருந்தாலும் தனக்கு மூன்றாவதாக ஓர் ஓடை இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை (அடக்கத்தலத்தின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது... (திர்மிதீ: 2259)

 

அதாவது அவன் இறந்து மண்ணுக்குள் புதையுண்டு போகின்ற வரை, ‘கையேந்தும் தொழிலைவிட்டுவிடமாட்டான்; ஏந்திய கைகளை மடக்கவும் மாட்டான்; இறுதி வரை ஏந்திக்கொண்டே இருந்து, கடைசியில் ஏந்திய நிலையிலேயே மரணிப்பான். அல்லாஹ்வை மறந்து, பிறரிடம் கையேந்தியோருக்கு அவன் கொடுக்கும் தண்டனைதான் இது. 

 

போதும் என்ற உணர்வு ஒரு கட்டத்தில் பெரும் செல்வருக்கு ஏற்படும். தொடர்ந்து சம்பாதித்துச் சேர்த்துக்கொண்டே இருந்தால், அதற்கு முடிவுதான் என்ன? அந்தப் பணத்தையெல்லாம் என்னதான் செய்வது, ஏன் சம்பாதிக்கிறோம், ஏன் சேர்க்கிறோம், யாருக்காகச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம் என்ற வினாக்கள் தோன்றி, அவருடைய மனத்தைப் புரட்டிப்போடும். இதுவரை சேர்த்தது போதும்இனியேனும் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் செலவழிப்போம் என்ற உந்துதல் ஏற்படும். அதன்பின் அவர் தாம் சேர்த்து வைத்த பணத்தைச் செலவழிக்கத் தொடங்கிவிடுவார். பின்னர் அவரை யாரும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. கேரளாவைச் சார்ந்த தொழிலதிபர் யூசுப் அலீ, அஜீம் பிரேம்ஜி, லெட்சுமி மிட்டல் போன்றோரை இதற்குச் சான்றாகக் காட்டலாம்.

 

அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: இரண்டு பேர்மீது தவிர வேறெவர்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது. (அவர்களுள் ஒருவர்) ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்கிறார்... (புகாரீ: 73) 

 

இவ்வாறு வாழ்வாங்கு வாழும் வசதிபடைத்தோர் உரிய முறையில் செலவு செய்யத் தொடங்கிவிட்டால் காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து ஏழ்மை விடைபெற்றுக்கொள்ளும். அத்தகைய நிலையைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அல்லாஹ் அதற்காகவே ஸகாத்தைக் கடமையாக்கினான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைச் செயல்படுத்தினார்கள்; நபித்தோழர்கள் பின்பற்றினார்கள்; நாமும் அதையே பின்பற்றிவருகிறோம்.

 

ஆகவே நம்முள் இதுவரை கையேந்திப் பழக்கப்பட்டவர்கள் அப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்; அல்லாஹ்வின் மீதே நம்பிக்கைகொண்டு தம் வாழ்க்கையைத் தொடர முயல வேண்டும்.  நம்முள் வசதிபடைத்தோர் தம் ஸகாத்தை உரிய முறையில் உரியவர்களுக்குச் செலவு செய்ய முன்வர வேண்டும். இந்த இரண்டும் தொடர்ந்தால் காலப்போக்கில் நம் சமுதாயம் மேம்பட்டுவிடும்; சுயமரியாதைமிக்க சமுதாயமாக மாறும். அத்தகைய நிலை உருவாக வல்லோன் அல்லாஹ் மனித மனங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவானாக.

0======================0








கருத்துகள் இல்லை: