புதன், 16 ஜனவரி, 2013

தாய்ப்பால் வங்கி


                                               
தென்னிந்தியாவில் முதல் முதலாகக் கோவையில் தாய்ப்பால் வங்கி (15.12.2012) தொடங்கப்பட்டுள்ளது.  ஒரு கிலோ எடைக்குக் குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்ப்பால் இல்லாத பெண்களின்  நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வங்கியில் இருந்து பால் கொடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர் ஹலீமா அஸ்ஸஅதிய்யா (ரளி) எனும் செவிலித்தாய்தான். செவிலித்தாயர் மூலம் குழந்தைகளுக்குப் பாலூட்டும் பழக்கம் அன்றைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை இருந்துவருகிறது. ஆனால் அக்காலச் செயல்பாடுகளுக்கும் இக்காலச் செயல்பாடுகளுக்கும் இடையே அறிவியல் வளர்ச்சிதான் வித்தியாசத்தைக் காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குருதி குத்தி எடுத்தல் எனும் மருத்துவ முறையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதாவது குருதியைக் குத்தி எடுப்பவர், அதைக் குத்தி எடுத்துக் கீழே துப்பிவிடுவார். அல்லது ஒன்றாகச் சேர்த்து ஓரிடத்தில் புதைத்துவிடுவார். அது அறிவியல் வளர்ச்சி இல்லாத காலம். ஆனால் இன்றைக்கு அதேசெயல் குருதிக்கொடை எனும் பெயரில் வழங்கப்படுகிறது. தாமாக முன்வந்து குருதியைத் தானம் செய்வோரிடமிருந்து குருதியைப் பெற்று, அந்தக் குருதி முறைப்படி சேமிக்கப்பட்டு, அறிவியல் முறைப்படி பாதுகாக்கப்படுகிறது. தேவைப்படும்போது அது பிற மனிதர்களின் உயிர்களைக் காக்க உதவுகிறது.  

இவ்வாறு அன்றைய செயல்பாடுகளுக்கும் இன்றைய செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாறிவரும் மனிதர்களின் செயல்பாடுகளை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து மக்களுக்குத் தெளிவைக் கொடுப்பது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். அந்த வகையில் தற்காலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதுதான் தாய்ப்பால் வங்கி. அவசர யுகத்தில் செவிலித்தாயர்களைத் தேடி அலைவதும் அவர்களிடம் தம் குழந்தைக்கு அமுதூட்டுமாறு கேட்பதும் சிரமம். அதனால் தாய்ப்பால் மிகுந்த பெண்களிடமிருந்து உபரியான தாய்ப்பாலைப் பெற்று அதை முறையாகப் பதப்படுத்தி வைத்து, தாய்ப்பால் தேவைப்படும் பிற குழந்தைகளுக்கு ஊட்டுவது எனும் புதுமுயற்சிதான் தாய்ப்பால் வங்கியாகும்.
இத்தகைய தருணத்தில் ஒரு முஸ்லிம் பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாக்குறை காரணமாக இந்தத் தாய்ப்பால் வங்கியை அணுகி அங்கிருந்து பாலூட்ட முற்பட்டால் அவள் கவனிக்க வேண்டிய இஸ்லாமியச் சட்ட நுணுக்கங்கள் சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பவே அவள் தன் குழந்தைக்கு அங்கிருந்து தாய்ப்பாலூட்ட முடிவு செய்ய வேண்டும்.

1. அந்தத் தாய்ப்பால் ஒரு முஸ்லிம் பெண்மணி உடையதா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் ஒருவனின் இறைநம்பிக்கை தாய்ப்பாலிலிருந்துதான் தொடங்குகிறது. தாய்ப்பால் ஊட்டும்போதே அதனுள் இறைநம்பிக்கையும் இணைத்தே ஊட்டப்படுகிறது.

2. அந்தப் பால் எந்தப் பெண்மணி உடையது என்று தெரிந்துகொள்வது முற்றிலும் அவசியம். ஏனெனில் அக்குழந்தைக்கு எந்தப் பெண்ணுடைய பால் ஊட்டப்படுகிறதோ அந்தப் பெண் அக்குழந்தையின் செவிலித்தாய் ஆவாள். அந்தத் தாயின் பிள்ளைகள் அக்குழந்தையின் சகோதர சகோதரிகள் ஆவர். மேலும் அப்பெண்மணியின் இரத்த உறவுகள் அக்குழந்தையின் உறவினர்கள் ஆவர். எனவே அக்குழந்தை வளர்ந்து பெரியவனாக அல்லது பெரியவளாக ஆகிவிட்டால் அவர்களோடு திருமண உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.

அது தவிர தன் சொந்த உறவினரோடு என்னென்ன சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமோ அவை அனைத்தும் இந்தக் குழந்தைக்கும் அந்தக் குடும்பத்தினருக்கும் இடையே பேணப்பட வேண்டும்.
அடுத்து, ஒரு செவிலித்தாய்க்கு இஸ்லாம் என்னென்ன சட்டம் சொல்கிறதோ அதுவே தாய்ப்பால் வங்கிக்குத் தன் உபரியான தாய்ப்பாலைத் வழங்குகின்ற ஒரு முஸ்லிம் பெண்மணிக்கும் பொருந்தும்.  ஒரு செவிலித்தாய் தான் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கு அமுதூட்டியபின்னரே மற்றொருத்தி பெற்றெடுத்த பிள்ளைக்கு அமுதூட்ட வேண்டும். அதேபோல் தற்காலத்தில், தன் பிள்ளைக்கு ஊட்டியதுபோக உபரியாக ஊறிவருகின்ற பாலைப் பீய்ச்சிக் கீழே ஊற்றாமல் பிற குழந்தைகளுக்குப் பயன்படட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதைத் தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவது குற்றமாகாது.

குருதிக்கொடை வழங்கும்போது யாரும் அதற்காகப் பணம் பெறுவதில்லை. அதனால்தான் அது குருதிக்கொடை என்று வழங்கப்பெறுகிறது. அதேபோன்ற விதியே தாய்ப்பால் வழங்குவதிலும் பின்பற்றப்பட வேண்டும். அமுதக்கொடையாக வழங்கப்பட வேண்டுமேயன்றி அதை விற்பனை செய்யக்கூடாது.

தற்காலத்தில் அலுவலகப் பணிகளுக்குச் செல்கின்ற பெண்கள் தம் அலுவலக நேரத்திலிருந்து மாலை வரை தாம் ஈன்ற சிசுக்களுக்குத் தாய்ப்பால் ஊட்ட முடிவதில்லை. அந்த நேரத்தில் ஊறுகின்ற தாய்ப்பாலைச் சேகரித்து மாலையில் வீடு திரும்பியதும் தம் சிசுக்களுக்கு ஊட்டுகின்ற விதத்தில் சேமித்து வைக்கத்தக்க சாதனங்கள் இன்று விற்பனையில் உள்ளன. அவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படி, அறிவியல் வளர்ச்சிக்கேற்ப மாற்றமடைந்து வருகின்ற செயல்பாடுகளில் இஸ்லாமியச் சட்டங்களை எவ்வாறு பின்பற்றுவது என்றும் அதற்கான இஸ்லாமிய நடைமுறை என்ன என்றும்  மார்க்க அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மக்கள் தம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லா நவீனச் செயல்பாடுகளுக்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் தீர்வு உள்ளது.






இனிய திசைகள் ஜனவரி 2013

இனிய திசைகள் ஜனவரி 2013 

திங்கள், 17 டிசம்பர், 2012

இடையில் நுழையாதே! (சிறுகதை)




                                -பாகவியார்

அப்ஷர் உடைய அன்னை சுல்தானா தன்னுடைய மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தாள். சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன்னுடைய அண்ணன் ஆஸிப் வீட்டுப் படியேறி அவருடைய மகள் ருகையாவைத் தன்னுடைய மகனுக்குப் பெண் கேட்டாள்.

தங்கைக்கும் அண்ணனுக்கும் நீண்டகால இடைவெளி இருந்தது. ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீண்ட காலம் இருவரும் பேசாமலே இருந்துவிட்டார்கள். இருந்தாலும் தன் மகனின் திருமணத்தின் மூலம் அப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவு மலர வேண்டுமென நினைத்தாள் சுல்தானா. அதனால்தான் தன் அண்ணன் மகளைப் பெண் கேட்ட அவர் வீட்டுப் படியேறினாள்.

நீண்ட காலம் பார்க்காத தங்கையை இன்று பார்த்த மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றித் திகைத்துப்போய் நின்றான் ஆஸிப். சுல்தானா, தான் வந்த விசயத்தை அண்ணனிடம் கூறியதும், என் மகளை உன் மகனுக்குத் திருமணம் செய்துதரச் சம்மதித்தான். பின்னர் ஒரு நாள் உறவினர்கள் அனைவரின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் இந்தச் சம்பந்தம் ஆஸிபின் மனைவி ஸைத்தூனுக்குப் பிடிக்கவில்லை. நீண்ட காலம் இவர்களை அண்டவிடாமல் வைத்திருந்தேன். இப்போது திருமணம் என்ற பெயரில் அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்துவிட்டார்களே. இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமே என்று பொருமிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து நீங்க உங்களோட மகனுக்கு என்னோட மகளைப் பெண் கேட்டு வாங்க அண்ணே. இன்னைக்கே வந்தீங்கன்னா நான் என்னோட கணவரிடம் சொல்லி  அவரை வீட்லயே இருக்கச் சொல்வேன். என்ன சொல்றீங்க? என்று கேட்டாள் ஸைத்தூன்.

சரி தங்கச்சி. நான் இன்னைக்கே வாறேன் எனச் சொல்லிவிட்டு அவளுடைய அண்ணன் போனை வைத்தான். ஐம்பது பவுனும் ஒரு இலட்சம் பணமும் கொடுக்குறதாச் சொல்லியிருக்கார் கணவர். அது தன்னோட அண்ணனுக்குத்தான் போய்ச் சேரணும். அவரோட தங்கச்சிக்குப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதுன்னு நினைத்தாள் ஸைத்தூன்.

இந்த விசயத்தைத் தன்னோட கணவர் ஆஸிபிடம் சொன்னாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் ஓர் அப்பாவி. மனைவி சொன்ன பேச்சுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவன். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். ஏற்கெனவே என்னோட தங்கச்சிக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இப்ப நீ திடீர்னு எங்க அண்ணனெ வரச் சொல்றேன்னு சொல்லுறியே? இத நான் எப்படி அவளிடம் சொல்வது? என்றான்.

ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இத்தன வருஷமா பேசாம இருந்த ஒங்க தங்கச்சி இப்ப எதுக்காகப் பொண்ணு கேட்டு வாரா தெரியுமா? உங்க மேல உள்ள பாசத்தால வரல. நாம நம்ம பொண்ணுக்குக் கொடுக்கப் போற பணத்தையும் நகையையும் பார்த்து வந்திருக்கா. அதனால நம்ம பொண்ணுக்குத் தகுந்த ஜோடி எங்க அண்ணெ மகன்தான். படிப்புக் குறைவா இருந்தாலும் நல்ல வேலையில இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். அவனுக்கு என்ன கொறை? அதனால ரொம்ப யோசிக்காம எங்க அண்ணன வரவேற்கத் தயாராகுங்க என்று படபடவெனப் பேசி முடித்தாள் ஸைத்தூன்.

மறுநாள், ஆஸிப் தன்னோட தங்கச்சிக்கு போன் செய்தான். சுல்தானா, கோவிச்சுக்காதேம்மா. என்னோட மனைவியின் பிடிவாதத்தால, என் மகளெ அவளோட அண்ணெ மகனுக்குக் கட்டிக் கொடுக்குறதா சொல்லிட்டேன். அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கோம். நீ கண்டிப்பா வரணும்- என்று சொல்லிவிட்டு, ஆளை விட்டால் போதும்னு போனை வைத்துவிட்டான்.

அடுத்த நாள் சுல்தானாவைப் பார்க்க அவளுடைய தங்கை ஷபானா வந்தாள். என்னக்கா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? என்றாள்.

ஆமா, உண்மைதான் ஷபானா! என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள் சுல்தானா.

உன்னோட மகன் அப்ஷருக்கு ஆஸிப் அண்ணனிடம் பெண் கேட்டு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சு. பிறகு எப்படிக்கா, அண்ணியோட அண்ணன் மகனுக்குத்  திருமணம் செய்துகொடுக்க நம்ம அண்ணனுக்கு மனசு வந்துச்சு? பேசுறது ஒண்ணு, செய்யுறது ஒண்ணா? ஏன் நம்ம அண்ணெ இப்படி இருக்காங்க? என்று தன் மனவேதனையை வெளிப்படுத்தினாள்  ஷபானா.

நம்ம அண்ணனெச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை ஷபானா. நம்ம அண்ணிதான் எல்லாத்துக்கும் காரணம். ஆரம்பத்திலேர்ந்து நம்மளையும் நம்ம குடும்பத்தையும் ஒட்டவிடாம பண்ணிட்டாங்க. கூட்டுக் குடும்பமா இருந்த நம்ம குடும்பத்திலிருந்து முதன் முதலாப் பிரிஞ்சு போனது அவங்கதானே? அன்றிலிருந்து இன்று வரை நம்ம குடும்பத்த தூரமா வச்சுத்தானே பாக்குறாங்க? நாம என்ன செய்யிறது? எல்லாம் இறைவன் போட்ட விதி என்று மனம் நொந்து கூறினாள் சுல்தானா.

ஏக்கா, நிச்சயதார்த்தம் தானே முடிஞ்சிருக்கு. கல்யாணம் இன்னும் முடியலையே. வாக்கா, நாம போயி அந்த நிச்சயத்தை முறிச்சுட்டு நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணெக் கேப்போம்  என்று ஆதரவாகக் கூறினாள்.

அப்படி நாம் ஒருபோதும் செய்யக் கூடாது ஷபானா. ஒனக்கு ஒரு ஹதீஸ் தெரியாதா? ஒரு வியாபார ஒப்பந்தம் நடந்துட்டு இருக்கும்போது இடையில் மற்றொருவர் குறுக்கிட்டு அந்தப் பொருளை வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்காங்க. திருமணமும் ஒரு ஒப்பந்தம்தான். அத, ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் நான் பொறுமையா இருக்கேன். நம்ம அண்ணி ஹதீஸெல்லாம் படிச்சிருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டாங்க. ஆனா, நான் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வச்சுக்கிட்டுத்தான் பொறுமையா இருக்குறேன். அதனால, நாம் அவங்களோட ஒப்பந்தத்தை முறிச்சு, அதச் செய்த பாவியாக ஆக வேண்டாம். விதிப்படி எல்லாம் நன்றாக நடக்கும் என்று உறுதியாகச் சொன்னாள் சுல்தானா.

அக்காவின் நல்ல மனசு யாருக்கு வரும் என்று தன் மனதில் நினைத்தவளாய் ஷபானா புறப்பட்டாள்.






இனிய திசைகள் டிசம்பர் இதழ்

புதன், 21 நவம்பர், 2012

இனிய திசைகள் நவம்பர் இதழ்

வலியை உணர்ந்தேன் (சிறுகதை)



திருக்குர்ஆனும் திருக்குறளும்


 மனிதன் இறைவழியை விட்டுத் திசைமாறிச் சென்றபோதெல்லாம் அவனைச் சரியான வழியில் செலுத்த அவ்வப்போது இறைத்தூதர்கள் இத்தரைக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஒவ்வோர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பிவைத்தான். அந்த இறைத்தூதர்கள் அந்தந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாகவும் அவர்களின் மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்துள்ளனர். அவரவர்களுக்கெனத் தனிப்பட்ட வேதங்களையும், ஆகமங்களையும் இறைவன் வழங்கியே வந்துள்ளான்.

அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தன் தூதர்கள் மூலம் அனுப்பிய செய்தி, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதேயாகும். கொள்கையளவில் அனைத்துச் சமுதாயத்தாருக்கும் ஒரே செய்திதான். ஆனால் சட்டதிட்டங்களோ ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒவ்வொருவிதமாகவே இருந்தன. ஒரு சமுதாயத்துக்குத் தடைசெய்யப்பட்டவை மற்றொரு சமுதாயத்திற்கு ஆகுமாக்கப்பட்டன. ஒரு சமுதாயத்திற்கு ஆகாதவை வேறொரு சமுதாயத்திற்கு ஆகுமானவையாக இருந்தன. குறிப்பாக, வணக்க வழிபாட்டு முறைகளிலும், புனித நாள் என்பதிலும் மாற்றங்கள் இருந்தன.
ஒவ்வொரு மொழி பேசுபவருக்கும் அவர்தம் மொழியைப் பேசக்கூடிய தூதரை நாம் அனுப்பிவைத்தோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த அடிப்படையில், தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் இறைத்தூதர் வந்திருக்கலாம்தானே? அவருக்கென ஒரு வேதம் வழங்கப்பட்டிருக்கலாம்தானே? அந்த இறைத்தூதர் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புண்டா? அந்த மறை திருக்குறளாக இருக்கலாமா? இது பற்றிய ஆராய்ச்சியை அறிஞர்கள் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தூதர் எந்தக் காலத்தில் வந்திருப்பார்? இந்த மறையை யார் எழுதியிருப்பார்? திருக்குறளைப் பொறுத்தவரை இஸ்லாமியக் கொள்கைக்கு முரணான கருத்துகள் என்று எதையும் குறிப்பிட்டுக் கூற இயலாது. அதேநேரத்தில் இறைமறையின் மூலமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமும் கூறப்பட்டுள்ள கருத்துகள் சிலவற்றிற்கு முரணாக இருந்தாலும் பல்வேறு கருத்துகள் முஹம்மது (ஸல்) அவர்களின் கருத்துகளுக்கு ஏற்பவே இருப்பதைக் காணமுடிகின்றது.
இது ஓர் இறைவேதம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை. 1. சுருங்கக் கூறி நிறைந்த பொருளைத் தருவது 2. சிந்தனைக்கேற்ற பொருள்கொள்ளத்தக்க முறையில் விரிந்துகொடுத்தல், 3. ஈராயிரம் ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருதல், 4. இலக்கிய நயமான முறையில் அமைந்திருத்தல்-இவை போன்ற காரணங்களால் திருக்குறள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்குவதில் வியப்பில்லை.

அது மட்டுமின்றி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி முந்தைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம். கல்கி புராணம், தவ்ராத், இஞ்சீல் போன்ற வேதங்களிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த வரிசையில் திருக்குறளும் இடம்பெறுகிறது. இதிலும் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளார் வள்ளுவர்.
தோன்றின் புகழொடு தோன்றுக -அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று. (பொருள்: இவ்வுலகில் பிறந்தால் முஹம்மது நபியின் சமுதாயத்தில் தோன்றுக. அவ்வாறில்லையெனில் இவ்வுலகில் தோன்றாமல் இருப்பதே மேல்). இதிலுள்ள புகழ் எனும் பதம் புகழுக்குரியவர் எனும் பொருள்கொண்ட முஹம்மது நபியைக் குறிக்கிறது என்று கூறலாம்.

நான் நபியாக இருப்பதைவிட முஹம்மது நபியின் சமுதாயத்தில் ஒருவராக இருப்பதையே விரும்புகிறேன் என்று மூசா (அலை) கூறினார்கள். முஹம்மது நபியின் சமுதாயம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை மூசா நபியின் வார்த்தையின் மூலம் நாமறிவதைப் போலவே திருவள்ளுவர் மூலமும் நாம் தெரிந்துகொள்ளலாம். ஆக, இவையெல்லாம் இது ஓர் இறைவேதமாக இருக்கலாம் என்ற கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
இறைநம்பிக்கையின் அடிப்படைகள் ஏழுக்குள், “அவனுடைய வேதங்களையும் நான் நம்பிக்கை கொள்கிறேன்என்பதும் அடங்கும். அந்த அடிப்படையில், இதைத் தனியாகக் குறிப்பிட்டு, இந்த இறைவேதத்தை நம்புகிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் அவனுடைய வேதங்களை நம்புகிறேன் என்ற சொற்றொடருக்குள்-இது இறைவேதமாக இருந்தால்-இதுவும் அடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
இதை வலுப்படுத்தும்விதமாக புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பில் 7542ஆம் எண்ணில் ஒரு நபிமொழி காணப்படுகிறது.  வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம். (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் சந்ததியருக்கும் அருளப்பட்டதையும், மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்டதையும் மற்றும் நபிமார்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் என்று கூறுங்கள்எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன்: 2: 136)

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்குமுன் உயர்ந்தோன் அல்லாஹ் உலக மக்கள் யாவருக்கும் பொதுவான இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய வேதமாகும். இது முப்பது பகுதிகளையும், 114 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. இதில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 6666 இறைவசனங்கள் உள்ளன. எங்கெல்லாம் முஸ்லிம்கள் உள்ளனரோ அங்கெல்லாம் திருக்குர்ஆன் பிரதி கண்டிப்பாக இருக்கும். இது முஸ்லிம்கள் நாள்தோறும் தொழுகின்ற ஐங்காலத் தொழுகையில் ஓதப்படுவதோடு, பிற நேரங்களிலும் இது ஓதப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

திருக்குறள்

திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது 23 நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட நூலாகும். இது உலகப் பொதுமறை என்று தமிழர்களால் அழைக்கப்படுகிறது. இது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று அத்தியாயங்களைக் கொண்டது. 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்திலும் 10 குறள்கள் வீதம் 1330 குறள்களைக் கொண்டதாகும். இதில் சிறிது பெரிது என்ற வித்தியாசமின்றி அனைத்துமே ஈரடிகளைக் கொண்டதாகும்.

குர்ஆனும்-குறளும்

இஸ்லாத்தின் அடிப்படையே ஏகத்துவம்தான். அல்குர்ஆனுக்கு முன்னர் வழங்கப்பட்ட வேதங்களிலும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏகத்துவப் பரப்புரை செய்த இறைத்தூதர்கள் வலியுறுத்தியதும் ஏகத்துவம்தான். அதுபோல் திருக்குறளில் உள்ள முதல் குறளும் ஏகத்துவம் பற்றியதுதான். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி-பகவன் முதற்றே உலகு (1) (பொருள்: எல்லா மொழி எழுத்துகளும் அ எனும் ஓசையுடைய எழுத்தையே முதலாகக் கொண்டுள்ளது. அதுபோல் இவ்வுலகத்தின் தொடக்கம் இறைவன் ஆவான்.)

இக்குறளைப் படிக்கின்றபோது, அல்இக்லாஸ் அத்தியாயத்தின் பொருளாகிய, அல்லாஹ்  ஒருவன்; அவன் தேவையற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவுமில்லை; அவனை (யாரும்) பெறவுமில்லை; அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்று நபியே நீர் கூறுவீராக!-என்பதுதான் ஞாபகம் வருகிறது.

ஏகத்துவத்தில் தொடங்கி, படிப்படியாக மனித வாழ்க்கைக்குத் தேவையான நெறிமுறைகளும் ஒழுக்கங்களும், பண்புகளும் போதிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பொய்யாமை, புறங்கூறாமை, களவாமை, சினங்கொள்ளாமை, பொறுமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை போன்ற எண்ணற்ற நற்பண்புகள் திருக்குறளிலும் போதிக்கப்படுகின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்-நிலமிசை நீடுவாழ் வார் (2) (பொருள்: அடியாரின் உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவார்.) இக்குறளைப் படிக்கின்றபோதுஅல்லாஹ்வின் நினைவைக்கொண்டே உள்ளங்கள் அமைதியடைகின்றன (13: 28) எனும் திருக்குர்ஆன் வசனம் ஞாபகம் வருகிறது.

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்-மெய்ப்பொருள் காண்ப தறிவு (423) (பொருள்: எச்செய்தியை எவரிடமிருந்து கேட்டாலும் அது உண்மையா, பொய்யா என ஆராய்ந்தறிவதுதான் அறிவுடைமையாகும்.) அறிவுடைமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது (49: 06)    இறைநம்பிக்கைகொண்டோரே! தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாமல் இருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதைத் தீர விசாரித்துத்) தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் (49: 06) எனும் திருக்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்துகிறது. 

இடுக்கண் வருங்கால் நகுக அதனை-அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621) (பொருள்: துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் புன்முறுவல் செய்துவிடு; ஏனென்றால் அதனை அடுத்து வருவது இன்பமே ஆகும்.) இடுக்கணழியாமை எனும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது,    திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே. திண்ணமாகத் துன்பத்திற்குப்பின் இன்பமே (94: 5-6) எனும் திருக்குர்ஆன் வசனங்களை ஞாபகப்படுத்துகிறது.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்-அறங்கூறும் ஆக்கம் தரும். (183) (பொருள்: பிறரைப் பற்றிப் புறங்கூறி, பொய்சொல்- வாழ்வதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோவது மேல்) இதன்மூலம் புறங்கூறுவதின் கடுமையை நாம் விளங்கிக்கொள்ளலாம். புறங்கூறாமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது,   உங்களுள் ஒருவர் மற்றொருவரைப் புறம்பேச வேண்டாம். உங்களுள் ஒருவர் தம் சகோதரரின் இறைச்சியை, அவர் இறந்துபோன நிலையில் (அதிலிருந்து பிய்த்து) உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்கள் (49: 12) என்ற இறைவசனமே நினைவில் வந்து நிழலாடுகிறது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்-உள்ளத் தனைய துயர்வு (595). (பொருள்: நீர்ப்பூக்களின் தண்டுகள் நீரின் ஆழத்தைப் பொறுத்து நீளும். அதுபோல் மக்களின் ஊக்கத்தைப் பொறுத்ததே அவர்களின் உயர்ச்சி). ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது,   ஒவ்வொருவரும் தத்தம் எண்ணப்படியே செயல்படுகிறார்கள் என்று நபியே நீர் கூறுவீர் (17: 84) எனும் இறைவசனம்  நினைவுக்கு வருகிறது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து-நோக்கக் குழையும் விருந்து (90). (பொருள்:  மிகவும் மெல்லிய அனிச்சம்பூ மோந்து பார்த்தாலே வாடிவிடும். அதுபோல் விருந்தினரோ முகம் மாறிப் பார்த்தாலே வாடிவிடுவர்.) விருந்தோம்பல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, அல்அஹ்ஸாப் அத்தியாயத்திலுள்ள 53ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.

இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டு, அதற்கு அனுமதிக்கப்பட்டாலே தவிர, அது தயாராவதை எதிர்பார்க்காமல் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளுக்குள் நுழையாதீர்கள். எனினும் நீங்கள் அழைக்கப்பட்டால், அப்போது நுழையுங்கள். பின்னர் நீங்கள் உணவை உண்டுவிட்டால், (அங்கிருந்துகொண்டே) பேசுவதில் விருப்பம் கொண்டவர்களாக ஆகிவிடாமல் கலைந்து சென்று விடுங்கள். திண்ணமாக இது நபிக்குத் தொந்தரவு கொடுப்பதாக உள்ளது. ஆகவே (அதை) அவர் உங்களிடம் கூற வெட்கப்படுகிறார். உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (33: 53)

தம் இல்லத்துக்கு விருந்துண்ண வந்தவர்களை, “நீங்கள் உணவுண்டுவிட்டால் செல்ல வேண்டியதுதானே?” என்று முகத்தில் அறைந்தாற்போல் எப்படிக் கூறுவது என்ற கையறு நிலையில் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்த இறைவன் விடுத்த கட்டளையே இந்த வசனம். நபியின் அழகிய விருந்தோம்பல் பண்பு இதிலிருந்து வெளிப்படுகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு-என்புதோல் போர்த்த உடம்பு (80). (பொருள்: அன்புடையோரே உயிர் உடையோராகக் கருதப்படுவர். அஃது அற்றோர் உயிர் இருந்தும் உயிரற்றோரே ஆவார்.) அன்புடைமை அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, ஆலுஇம்ரான் அத்தியாயத்திலுள்ள 159ஆம் இறைவசனம் ஞாபகம் வருகிறது.
(நபியே) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (அன்புள்ளவராக) நடந்துகொள்கிறீர். (3: 159) மேலும், “நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அன்பாளராகவே அனுப்பியுள்ளோம்என்ற இறைவசனத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மக்கள்மீது மிக்க அன்பாளராக இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்-சொல்லிய வண்ணம் செயல் (664). வினைத்திட்பம் எனும் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோதெல்லாம், அஸ்ஸஃப் எனும் அத்தியாயத்தில் உள்ள இறைவசனமே ஞாபகம் வருகிறது: இறைநம்பிக்கைகொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கின்றீர்கள்? (61: 2) 

ஆக, திருக்குறளில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துகள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவி உள்ளன என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

பொய்யாநபியின் பொய்யாமொழிகள்

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொய்யாமொழிகளும் அதன் கருத்துகளும் திருக்குறளின் கருத்துகளோடு இயைந்து அமைந்துள்ளதை நாம் காணமுடிகிறது.
இனிய உளவாக இன்னாத கூறல்- கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100). (பொருள்: இனிய சொற்கள் இருக்க, அவற்றை விடுத்துக் கடும் சொற்களைக் கூறுவது பழம் இருக்கின்றபோது காயைக் கடிப்பதைப் போன்றதாகும்). இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே ஞாபகம் வருகிறது.

யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டுள்ளாரோ அவர் பேசினால் நல்லதைப்  பேசட்டும். அல்லது மௌனமாக இருக்கட்டும். (நூல்: புகாரீ-6138)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த-நன்மை பயக்கும் எனின் (292). (பொருள்: பிறருக்கு நன்மை பயப்பதாக இருந்தால் பொய்யும் பேசலாம். அதுவும் வாய்மையே.) வாய்மை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பின்வரும் கூற்றே நெஞ்சில் நிழலாடுகிறது.

மூன்றில் தவிர பொய் ஆகுமானதில்லை. 1. ஒருவன் (தன்) மனைவியிடம், அவளைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். 2. போரில் பொய் சொல்லுதல், 3. மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகப் பொய்சொல்லுதல். (நூல்: திர்மிதீ-1862)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு-மாடல்ல மற்றவை யவை (400). (பொருள்: என்றும் அழியாத செல்வம் கல்வியே. மற்றவை எல்லாம் உண்மையான செல்வம் ஆகா.) கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குறளைப் படிக்கின்றபோது, “கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமைஎன்று அண்ணல் நபியவர்கள் கூறிய வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன.  (இப்னுமாஜா-224)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண-நன்னயம் செய்து விடல் (314). (பொருள்: தனக்குத் தீமை செய்தவர்களுக்கும் அவர்கள் வெட்கப்படுமாறு நன்மை செய்வதே அவர்களுக்குரிய தண்டனையாகும்). இக்குறளைப் படிக்கின்றபோது தீமை செய்தவருக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறோம். 

அதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம்  நபி (ஸல்) அவர்கள், உம் உறவைத் துண்டித்தவரோடு நீ சேர்ந்து வாழ்; உனக்கு(க் கொடுக்காமல்) தடுத்துக்கொண்டவருக்கு நீ கொடு; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னித்துவிடு. (நூல்: அஹ்மத்-16810)

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே-நாவினால் சுட்ட வடு (129). (பொருள்: ஒருவரைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும். ஆனால் அவனது நாவால் சுட்ட சுடுசொல் என்றும் மாறாமல் அவனை வேதனைப்படுத்திக்கொண்டே இருக்கும்). அடக்கமுடைமை எனும் அதிகாரத்தில் உள்ள இக்குறளைப் படிக்கின்றபோது, நாவினால் ஏற்படும் தீமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இக்கருத்தை ஒட்டி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் காணும்போது நாவின் உச்சக்கட்ட விபரீதத்தைப் புரிந்துகொள்ளலாம்.  அல்லாஹ்வின் தூதரே! என்னில் தாங்கள் மிகவும் அஞ்சக்கூடிய உறுப்பு எது? என்று நான் வினவினேன். அதற்கவர்கள், தம் நாவைப் பிடித்துக்கொண்டு, இது என்று கூறினார்கள் என சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ)

ஆக, திருக்குறளைப் படிக்கின்றபோது திருக்குர்ஆனின் கூற்றுகளையும், திருத்தூதரின் பொய்யாமொழிகளையும் சார்ந்த எண்ணற்ற கருத்துகளை நாம் தெரிந்துகொள்ளலாம். நல்ல கருத்துகள் எங்கிருந்தாலும் நாம் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஞானம் நிறைந்த சொல்  ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல் போன சொத்து. அது எங்கு கிடைக்கப்பெறினும் அதை எடுத்துக்கொள்ள அவர் முற்றிலும் தகுதியுடையவர்” (திர்மிதீ-2611) என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய கூற்றை நினைவில்கொண்டு அறிவைத் தேடுவோம். வெற்றியடைவோம்!









திங்கள், 22 அக்டோபர், 2012

என் கட்டுரைக்கு மறுப்புக் கட்டுரை



ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ்  செய்யலாமா? - இனிய திசைகள் மாத இதழில் நான் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக சமஉரிமை மாத இதழில் வெளியான கட்டுரை இது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்க.














வியாழன், 18 அக்டோபர், 2012

அகிம்சையைப் போதித்த அண்ணலார்



அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இவ்வுலகில் தோன்றியது முதல் தம் தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றி மரணித்தது வரை இவ்வுலக மக்கள் அவர்களை ஓர் அகிம்சாவாதியாகவே கண்டிருக்கிறது. எவ்வளவு பெரிய குழப்பம் நேர்ந்த போதிலும் அதை அமைதியாகவும் எளிமையாகவும் முடித்துவைத்துச் சேதங்கள் ஏற்படா வண்ணம் மக்களைக் காத்து வந்தார்கள் என்பதை உலகமே அறியும். அத்தகைய நபியைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் இடம்தரலாகாது.

அவர்கள் தம் உணர்வுகளுக்கும் உத்வேகங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தால் அதனால் பாதிக்கப்படுவது நம் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அக்குழப்பத்தைக் காரணமாக வைத்துக்கொண்டு அந்நியர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு நம்மையே அழிக்க முனைவது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலம் முதல் இன்று வரை யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதும் அவர்களைத் தாக்குவதும் அவர்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்க நம்மால் இயன்ற அறிவுப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாகாது. ஏனெனில் அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதில் நாம் அடைகின்ற பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் கண்டு அந்தரங்கத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதே உண்மை. இதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்துவருகிறார்கள்.

அதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. நன்றாகச் சென்று கொண்டிருந்த நபிகளாரின் இல்வாழ்க்கையில் களங்கம் கற்பிக்க நாடிய யூதன் அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள்மீது அவதூறு பரப்பினான். அதனால் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் தம் மனைவிமீது சந்தேகம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் அவர் தூய்மையானவர். அவரின் கற்பு தூய்மையானது என்று அல்லாஹ் இறைவசனங்களை அருளினான். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் காணக்கிடைக்கின்றன.

யூதர்கள் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களைக் கேலி செய்வதும் வார்த்தைகளைத் திரித்துப் பேசி அதன்மூலம் நபியவர்களுக்கு இடும்பை ஏற்படுத்துவதும் அவர்களின் அன்றாட வாடிக்கை. இதற்குச் சான்றாகப் பின்வரும் நபிமொழி திகழ்கிறது.

ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: யூதர்களுள் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர்.‘‘வ அலைக்கு முஸ்ஸாமு வல் லஅனா' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘‘ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். உடனே நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டேன் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ‘நான் (‘அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து)‘‘வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று பதிலளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.  (நூல்கள்: புகாரீ-6256, முஸ்லிம்-4027)

இதேபோல் அவர்கள் வார்த்தைகளைத் திரித்து, அல்லது இருபொருள் தருகின்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் கேலி செய்வதைத் தடுக்கும் வண்ணம் அல்லாஹ் பின்வரும் இறைவசனத்தில்  இவ்வாறு கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “‘ராஇனா” எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக “‘எங்களைப் பாருங்கள்!” என்ற பொருளைத் தரும்) “‘உன்ழுர்னா”’ எனக் கூறுங்கள். (அவர் கூறுவதை முழுமையாகச்) செவியுறுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. (2-அல்பகரா: 104)

இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் முக்கியமானவை. ராஇனா என்ற அரபி வார்த்தைக்கு “எங்களைப் பாருங்கள் என்ற பொருள் இருந்தாலும், “எங்களின் இடையன்” என்ற பொருளும், “எங்களின் பேதை” என்ற பொருளும் அதற்கு உண்டு. அதைத்தான் அந்த யூதர்கள் நாடினர். அதைக் கூறி நபியவர்களைக் கேலி செய்தனர். இது தெரியாமல் நபித்தோழர்களும் அவ்வாறு கூறலாயினர். எனவேதான் அதைத் தடுக்கும்வண்ணம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அவ்வாறு கட்டளையிட்டுள்ளான்.

இதே கருத்துள்ள மற்றொரு வசனம் வருமாறு: வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றவர்களும் யூதர்களுள் உள்ளனர். மேலும், “செவியுற்றோம்; மாறுசெய்தோம்” என்றும், (வெளிப்படையாக) “நீர் கேட்பீராக!” என்றும் (மனதுக்குள்) “நீர் கேட்காமல் (செவிடாகப்) போய்விடுவீராக!” என்றும் ‘ராஇனா’ என்றும் கூறுகின்றனர். தங்களின் நாவுகளைக் கோணலாக்கியும் சன்மார்க்கத்தைப் பழித்தும் (இவ்வாறு கூறுகின்றனர்). (4: 46)

ஆக, முஸ்லிம்களுக்கெதிரான இந்த யூதர்களுடைய சூழ்ச்சியும் வன்மமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அந்நேரத்தில் நபியவர்கள் கையாண்ட அகிம்சை வழியைத்தான் நாம் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர உள்ளுணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. எப்படியாயினும் நம் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் அழிப்பதையும் இஸ்லாமிய மார்க்கத்தை இல்லாதொழிக்கவுமே விரும்புகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கலாகாது.

அதை நிரூபிக்கும் வண்ணம் கடந்த மாதம் முழுவதும் உலகெங்கும் முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டங்களும் அவற்றில் அவர்கள் அடைந்த காயங்களும், உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அடங்கும். அது மட்டுமின்றி, அத்திரைப்படத்திற்கு இலவச விளம்பரமும் நாமே செய்துகொடுத்துவிட்டோம். நபிகளாரைக் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக உலகம் முமுவதும் உள்ள முஸ்லிம்கள் தம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ஒன்றரை ஆண்டுக்குள் மீண்டும் இதுபோன்ற திரைப்படம் வெளியிடப்படுகின்றது என்றால், அவர்கள் வேண்டுமென்றே நம்மைச் சீண்டி, வம்புக்கு இழுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: குழப்பங்கள் மிகுந்த அக்காலத்தில் அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடச் சிறந்தவன் ஆவான். அதை அடைகிறவனை அது வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது, புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகிறவர் அதைக் கொண்டு பாதுகாப்புப் பெறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி), நூல்கள்: புகாரீ-3601, முஸ்லிம்-5136)

எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் அந்தக் குழப்பத்தில் நம் உள்ளுணர்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்துவிடாமல் அகிம்சா வழியையும் அமைதி வழியையும் கடைப்பிடிக்க வேண்டுமென அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதை மனதில் பதிய வைக்க வேண்டும்.

இன்னும் இதைவிடக் கொடுமையான காட்சியை முஸ்லிம்கள் காண உள்ளனர். அந்தக் காலத்தில் நம்மை இறைவன் வாழாதிருக்கச் செய்வானாக! நாம் கிப்லா என நாள்தோறும் ஐவேளை முன்னோக்கித் தொழுகின்ற கண்ணியமான கஅபத்துல்லாஹ்-இறையாலயம் இடிக்கப்படும். அதுவும் அழிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும். ஆம், அது பற்றி இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றுள்ளதைப் பாருங்கள்: “அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த இரண்டு கால்களுள்ள (பலவீனமான) மனிதன் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவான்'' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரளி),  நூல்கள்: புகாரீ-1596, முஸ்லிம்-5179)

ஆக, முஸ்லிம்கள் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுவிட்டார்கள். இந்தச் சமுதாயத்தின்மீது அளவிலாப் பாசமும் அன்பும் மிகுந்த அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) எந்தெந்தக் காலங்களில் எப்படியெப்படி வாழ வேண்டுமென்ற வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள். வெறுமனே சென்றுவிடவில்லை. எப்போதும் அமைதியுடன் வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளதால் அவற்றை நாம் கடைப்பிடித்து, அவர்களின் மதிப்பையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வோம்! எதிரிகளின் சூழ்ச்சி வலையிலிருந்து விலகி வாழ்வோம்!