திங்கள், 17 டிசம்பர், 2012

இடையில் நுழையாதே! (சிறுகதை)




                                -பாகவியார்

அப்ஷர் உடைய அன்னை சுல்தானா தன்னுடைய மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தாள். சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன்னுடைய அண்ணன் ஆஸிப் வீட்டுப் படியேறி அவருடைய மகள் ருகையாவைத் தன்னுடைய மகனுக்குப் பெண் கேட்டாள்.

தங்கைக்கும் அண்ணனுக்கும் நீண்டகால இடைவெளி இருந்தது. ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீண்ட காலம் இருவரும் பேசாமலே இருந்துவிட்டார்கள். இருந்தாலும் தன் மகனின் திருமணத்தின் மூலம் அப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவு மலர வேண்டுமென நினைத்தாள் சுல்தானா. அதனால்தான் தன் அண்ணன் மகளைப் பெண் கேட்ட அவர் வீட்டுப் படியேறினாள்.

நீண்ட காலம் பார்க்காத தங்கையை இன்று பார்த்த மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றித் திகைத்துப்போய் நின்றான் ஆஸிப். சுல்தானா, தான் வந்த விசயத்தை அண்ணனிடம் கூறியதும், என் மகளை உன் மகனுக்குத் திருமணம் செய்துதரச் சம்மதித்தான். பின்னர் ஒரு நாள் உறவினர்கள் அனைவரின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஆனால் இந்தச் சம்பந்தம் ஆஸிபின் மனைவி ஸைத்தூனுக்குப் பிடிக்கவில்லை. நீண்ட காலம் இவர்களை அண்டவிடாமல் வைத்திருந்தேன். இப்போது திருமணம் என்ற பெயரில் அண்ணனும் தங்கையும் ஒன்று சேர்ந்துவிட்டார்களே. இதை எப்படியாவது முறியடிக்க வேண்டுமே என்று பொருமிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து நீங்க உங்களோட மகனுக்கு என்னோட மகளைப் பெண் கேட்டு வாங்க அண்ணே. இன்னைக்கே வந்தீங்கன்னா நான் என்னோட கணவரிடம் சொல்லி  அவரை வீட்லயே இருக்கச் சொல்வேன். என்ன சொல்றீங்க? என்று கேட்டாள் ஸைத்தூன்.

சரி தங்கச்சி. நான் இன்னைக்கே வாறேன் எனச் சொல்லிவிட்டு அவளுடைய அண்ணன் போனை வைத்தான். ஐம்பது பவுனும் ஒரு இலட்சம் பணமும் கொடுக்குறதாச் சொல்லியிருக்கார் கணவர். அது தன்னோட அண்ணனுக்குத்தான் போய்ச் சேரணும். அவரோட தங்கச்சிக்குப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாதுன்னு நினைத்தாள் ஸைத்தூன்.

இந்த விசயத்தைத் தன்னோட கணவர் ஆஸிபிடம் சொன்னாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் ஓர் அப்பாவி. மனைவி சொன்ன பேச்சுக்குத் தலையாட்டுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவன். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். ஏற்கெனவே என்னோட தங்கச்சிக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இப்ப நீ திடீர்னு எங்க அண்ணனெ வரச் சொல்றேன்னு சொல்லுறியே? இத நான் எப்படி அவளிடம் சொல்வது? என்றான்.

ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. இத்தன வருஷமா பேசாம இருந்த ஒங்க தங்கச்சி இப்ப எதுக்காகப் பொண்ணு கேட்டு வாரா தெரியுமா? உங்க மேல உள்ள பாசத்தால வரல. நாம நம்ம பொண்ணுக்குக் கொடுக்கப் போற பணத்தையும் நகையையும் பார்த்து வந்திருக்கா. அதனால நம்ம பொண்ணுக்குத் தகுந்த ஜோடி எங்க அண்ணெ மகன்தான். படிப்புக் குறைவா இருந்தாலும் நல்ல வேலையில இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். அவனுக்கு என்ன கொறை? அதனால ரொம்ப யோசிக்காம எங்க அண்ணன வரவேற்கத் தயாராகுங்க என்று படபடவெனப் பேசி முடித்தாள் ஸைத்தூன்.

மறுநாள், ஆஸிப் தன்னோட தங்கச்சிக்கு போன் செய்தான். சுல்தானா, கோவிச்சுக்காதேம்மா. என்னோட மனைவியின் பிடிவாதத்தால, என் மகளெ அவளோட அண்ணெ மகனுக்குக் கட்டிக் கொடுக்குறதா சொல்லிட்டேன். அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கோம். நீ கண்டிப்பா வரணும்- என்று சொல்லிவிட்டு, ஆளை விட்டால் போதும்னு போனை வைத்துவிட்டான்.

அடுத்த நாள் சுல்தானாவைப் பார்க்க அவளுடைய தங்கை ஷபானா வந்தாள். என்னக்கா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? என்றாள்.

ஆமா, உண்மைதான் ஷபானா! என்று ஒற்றை வரியில் பதிலளித்தாள் சுல்தானா.

உன்னோட மகன் அப்ஷருக்கு ஆஸிப் அண்ணனிடம் பெண் கேட்டு நிச்சயதார்த்தம் முடிஞ்சுருச்சு. பிறகு எப்படிக்கா, அண்ணியோட அண்ணன் மகனுக்குத்  திருமணம் செய்துகொடுக்க நம்ம அண்ணனுக்கு மனசு வந்துச்சு? பேசுறது ஒண்ணு, செய்யுறது ஒண்ணா? ஏன் நம்ம அண்ணெ இப்படி இருக்காங்க? என்று தன் மனவேதனையை வெளிப்படுத்தினாள்  ஷபானா.

நம்ம அண்ணனெச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை ஷபானா. நம்ம அண்ணிதான் எல்லாத்துக்கும் காரணம். ஆரம்பத்திலேர்ந்து நம்மளையும் நம்ம குடும்பத்தையும் ஒட்டவிடாம பண்ணிட்டாங்க. கூட்டுக் குடும்பமா இருந்த நம்ம குடும்பத்திலிருந்து முதன் முதலாப் பிரிஞ்சு போனது அவங்கதானே? அன்றிலிருந்து இன்று வரை நம்ம குடும்பத்த தூரமா வச்சுத்தானே பாக்குறாங்க? நாம என்ன செய்யிறது? எல்லாம் இறைவன் போட்ட விதி என்று மனம் நொந்து கூறினாள் சுல்தானா.

ஏக்கா, நிச்சயதார்த்தம் தானே முடிஞ்சிருக்கு. கல்யாணம் இன்னும் முடியலையே. வாக்கா, நாம போயி அந்த நிச்சயத்தை முறிச்சுட்டு நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணெக் கேப்போம்  என்று ஆதரவாகக் கூறினாள்.

அப்படி நாம் ஒருபோதும் செய்யக் கூடாது ஷபானா. ஒனக்கு ஒரு ஹதீஸ் தெரியாதா? ஒரு வியாபார ஒப்பந்தம் நடந்துட்டு இருக்கும்போது இடையில் மற்றொருவர் குறுக்கிட்டு அந்தப் பொருளை வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்காங்க. திருமணமும் ஒரு ஒப்பந்தம்தான். அத, ஞாபகத்தில் வைத்துக்கொண்டுதான் நான் பொறுமையா இருக்கேன். நம்ம அண்ணி ஹதீஸெல்லாம் படிச்சிருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டாங்க. ஆனா, நான் இந்த ஹதீஸை ஞாபகத்தில் வச்சுக்கிட்டுத்தான் பொறுமையா இருக்குறேன். அதனால, நாம் அவங்களோட ஒப்பந்தத்தை முறிச்சு, அதச் செய்த பாவியாக ஆக வேண்டாம். விதிப்படி எல்லாம் நன்றாக நடக்கும் என்று உறுதியாகச் சொன்னாள் சுல்தானா.

அக்காவின் நல்ல மனசு யாருக்கு வரும் என்று தன் மனதில் நினைத்தவளாய் ஷபானா புறப்பட்டாள்.