சனி, 9 செப்டம்பர், 2023

கமுக்கம் காப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
-------------------------------------------

இரகசியத்தைத்தான் கமுக்கம் என்ற மற்றொரு வார்த்தையில் கூறுகின்றனர். அது நிறையப் பேருக்குத் தெரியாமலேயே கமுக்கமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் இரகசியங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளலாம்; அவற்றுள் பலவற்றைக் கமுக்கமாகவே வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவை நம்மையே ஒரு நாள் அசிங்கப்படுத்திவிடலாம். தாய்-தந்தைக்கிடையே உள்ள இரகசியங்கள்; கணவன்-மனைவிக்கிடையே உள்ள இரகசியங்கள்; நண்பர்களுக்கிடையே உள்ள இரகசியங்கள்; தாய்க்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள்; தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள். இப்படி இரகசியங்கள் பற்பல பரிமாணங்கள் கொண்டவை.


“ஆம்பளையிடம் வருமானத்தைக் கேட்காதே; பொம்பளையிடம் வயதைக் கேட்காதே” என்று மூத்தோர் சொல்வதுண்டு. கணவனின் சம்பளமோ வருமானமோ மனைவிக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டால், அதற்கேற்பச் செலவுகளை ஏற்படுத்திவிடுவாள்; அல்லது நீதான் இவ்வளவு சம்பாதிக்கிறாயே, எனக்கு அதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று சண்டையிடுவாள். அல்லது அதை வாங்கிக் கொடு; இதை வாங்கிக்கொடு என்று நச்சரிப்பாள். அதேநேரத்தில் கணவனின் வருமானம் இரகசியமாக இருக்கும்போது, அவன் தன் குடும்பத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, எதிர்கால நலனை நாடிச் சிறிதளவு சேமிப்பான்; தாய்-தந்தைக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்குச் செலவு செய்வான். அதனால் கணவன்-மனைவிக்கிடையே உள்ள இல்வாழ்வில் இடர்ப்பாடு ஏதும் ஏற்படாமல் சீராகச் செல்லும்.


“இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று கூறி, ஏதேனும் இரகசியத்தை ஒருவரிடம் சொன்னால் அது இரகசியமில்லை. ஏனெனில் அது எப்படியும் பிறருக்குப் பரவிவிடும். நமக்குள் இருக்கின்ற வரைதான் அது இரகசியம். நம்மைவிட்டு அடுத்தவருக்குச் சென்றுவிட்டால் அது இரகசியமே கிடையாது. இரகசியத்தைத் தெரிந்துகொள்வதிலும் பரப்புவதிலும் பெண்கள் மிகுந்த ஆர்வமுடையவர்கள். எனவே ஒரு விஷயத்தை மனைவியிடம் சொல்லி, “இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று சொன்னால் அது எல்லோரிடமும் பரவிவிடும் என்பது திண்ணம். அதற்கான வரலாற்றுச் சான்று ஒன்றை நாம் காணலாம்.


நபியவர்களின் இரகசியத்தைப் பரப்பிய மனைவி: அல்லாஹ்வின் தூதர் சத்தியம் செய்துவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்று கூறியதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் தெரிவித்துவிட்டதால், அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள செய்தி புகாரீ நூலில் கீழ்க்கண்டவாறு விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலில் வருவார்களோ அவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூற வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1ஆம் இறைவசனம் அருளப்பெற்றது.) (புகாரீ: 4912)


இருப்பினும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அந்த இரகசியத்தைப் பாதுகாக்கவில்லை. மாறாக, அதை ஹஃப்ஸாவிடம் சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு "இறைத்தூது' அறிவித்தான். எனவே, தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக நபியவர்கள் ஆயிஷாவைக் கடிந்து கொண்டார்கள்.


(நம்முடைய) நபி தம் மனைவிகளுள் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிவிட்டான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்துவிட்டார். (இவ்வாறு) நபி தம் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி “இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர், “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார். (66: 3, நூல்: புகாரீ)


இரகசியம் பரவும் இடங்கள்: வீட்டில் ஏதேனும் விசேஷம், திருமண விழாக்கள், சந்திப்புகள் -இவற்றின்போதுதான் இரகசியங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். ஒருவரின் இரகசியங்கள் வெளிப்படுகின்றபோது பல்வேறு தீமைகள் விளையும் என்பது உறுதி. அரிதாக எப்போதேனும் ஏதாவது நன்மை ஏற்படலாம். கமுக்கம் என்பது எல்லா இடங்களிலும் உண்டு. அலுவலகத்தில் இருக்கலாம்; குடும்பத்தில் இருக்கலாம்; உறவினர்களுக்கு மத்தியில் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைக் காப்பது நமது கடமை. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிடக் கூடாது. ஒருவர் குறித்து நமக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களைப் பிறருக்குப் பரப்பக்கூடாது. அது அவர்மீது மற்றவர்கள் வைத்துள்ள மரியாதையைக் குறைத்துவிடும்.

 
நபியவர்கள் மேற்கொண்ட இரகசியங்கள்: இரகசியம் குறித்தும் அதன் ஒழுங்குகள் குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறையப் பேசியுள்ளார்கள். அத்தோடு நபியவர்களும் தம் அன்றாட வாழ்க்கையில் பற்பல கமுக்கங்களை மேற்கொண்டுள்ளார்கள். சிலநேரங்களில் போருக்குப் புறப்படுமாறு அறிவிப்புச் செய்வார்கள்; அதனைக் கேட்டு, நபித்தோழர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள்; ஆயுதங்களை ஆயத்தநிலையில் வைப்பார்கள்; நிதியைச் சேகரிப்பார்கள்; எல்லாம் நடைபெறும்; தூரமான பயணம் என்றும் நபியவர்கள் சொல்வார்கள்; ஆனால் எங்கு செல்கிறோம் என்பதை இரகசியமாக வைப்பார்கள். இது அவர்கள் மேற்கொண்ட போர்த்தந்திரம் ஆகும். இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்திருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.


இன்றும் ஒவ்வொரு நாடும் இராணுவ இரகசியங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு நாட்டின் இராணுவத் தகவல்களும் இரகசியமாகவே இருக்கும். ஒரு நாட்டின் இராணுவத்தில் எத்தனை வீரர்கள் பணியாற்றுகின்றார்கள், எத்தனை ஆயுதங்கள் உள்ளன, எத்தனை பீரங்கிகள், தோட்டாக்கள் உள்ளன, அணு ஆயுதங்கள், திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் கமுக்கமானவை. அவற்றைப் பிற நாட்டுக்குப் பரப்புவோர் தேசத் துரோகிகள் என வர்ணிக்கப்படுவார்கள்.


இரகசியத்தைப் பாதுகாத்த நபித்தோழர்கள்: பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியங்கள், நிரந்தரமான இரகசியங்கள் என இருவகை உண்டு. நபியவர்கள் சொன்ன இரகசியத்தை அவர்களின் தோழர்கள் மிகச் சிறப்பாகப் பேணிக் காத்துள்ளார்கள். அந்தச் செய்தியை மக்கள் தெரிந்துகொள்வது அவர்களுக்கு நலம் பயக்கும் என்ற எண்ணத்திலும், தமக்குத் தெரிந்த கல்வியை மறைக்கக்கூடாது என்ற நபிமொழியின் காரணத்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியம்தான் என்பதை உணர்ந்ததாலும் சிலவற்றை நபியவர்களின் மரணத்திற்குப்பின் சிலர் தெரிவித்தார்கள். அதேநேரத்தில் சிலர் நபியவர்களின் மரணத்திற்குப் பின்னரும் அதைக் காத்தார்கள். அவ்வாறு நபியவர்களின் இரகசியத்தை இறுதிவரை பாதுகாத்த தோழர் ஒருவரின் செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரகசியம் ஒன்றைச் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. (புகாரீ: 6289) இதுதான் இரகசியத்தைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறை.


நபியவர்களின் இரகசியத்தைப் பாதுகாத்த அவர்களின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு. அவர்கள் குறித்த ஒரு செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள். அது குறித்து) உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
நான் உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர்கள், “(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு அவர்கள் என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விட அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன்; சில நாள்கள் பொறுத்திருந்தேன்.


பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு என்னைச் சந்தித்து, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், “ஆம்'' என்று சொன்னேன்.


(அதற்கு) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, “நீங்கள் கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். (புகாரீ: 5122)


தம்பதியரிடையே இரகசியங்கள்: கணவன்-மனைவிக்கிடையே ஆயிரமாயிரம் இரகசியங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவன் பற்றி மனைவிக்கும் மனைவி குறித்துக் கணவனுக்கும் நன்றாகத் தெரியும். அவ்விருவருள் ஒவ்வொருவரின் குறைகளும் பலவீனங்களும் மற்றவருக்குத் தெரியும். அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவனின் குறையை மனைவியும் மனைவியின் குறையைக் கணவனும் மறைக்க வேண்டும். இல்லையேல் அது அவ்விருவரின் இல்வாழ்வில் மிகப்பெரும் சிக்கலை உண்டுபண்ணிவிடும். பொதுவாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி: யார் ஒரு முஸ்லிமை (அவருடைய பாவத்தை அல்லது குறையை) மறைத்தாரோ அவரை (அவர்தம் பாவத்தை அல்லது குறையை) அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைக்கின்றான். (இப்னுமாஜா: 2534)

அதேபோல் கணவன்-மனைவிக்கிடையே நடைபெறுகிற தாம்பத்திய உறவு குறித்தும் அதன் நிறை-குறைகள் குறித்தும் கணவன் தன் நண்பர்களிடமோ, மனைவி தன் தோழிகளிடமோ பகிர்ந்துகொள்ளக்கூடாது. அது மிகப்பெரும் குற்றமாகும். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது:

மறுமைநாளில் அல்லாஹ்விடம் (தண்டனையால்) மிகக் கடுமையான நிலையில் உள்ள மனிதன் யாரென்றால், அவன் தன் மனைவியுடன் உடலுறவுகொண்டபின் அவன் அவளுடைய இரகசியங்களைப் பரப்புகிறானே அவனாவான். (நூல்: முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் ஆண்களின் பக்கம் திரும்பி அவர்களிடம் கேட்டார்கள்:

“உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவுக்காக) வருகிறார்; கதவைச் சாத்திக் கொள்கிறார்; அல்லாஹ்வின் திரையால் தம்மை மறைத்துக் கொள்கிறார். அதன் பிறகு (தம் நண்பர்களுடன்) அமர்ந்து கொண்டு நான் இவ்வாறு செய்தேன்; நான் இவ்வாறு செய்தேன் என்று சொல்லக்கூடியவர் யாரேனும் உள்ளாரா?” அங்கிருந்த ஆண்களெல்லாம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்கள் பெண்களை நோக்கி, “உங்களுள் யாரேனும் தம்முடைய தாம்பத்திய இரகசியங்களை வெளியிடுபவர் உள்ளாரா?'' என்று கேட்டார்கள். அவர்களும் அமைதியாகவே இருந்தார்கள்.

பிறகு, ஓர் இளமங்கை, நபியவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக ஒற்றைக் காலில் நின்று கொண்டு மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஆண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்; பெண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்'' என்று சொன்னாள்.
பிறகு நபியவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்கு அதனுடைய உதாரணம் தெரியுமா? அதற்கு உதாரணம், ஒரு பெண்ஷைத்தானைப் போலவாகும். அந்தப் பெண்ஷைத்தான் ஓர் ஆண்ஷைத்தானை வழியில் கண்டது. (அங்கேயே) அந்த ஆண்ஷைத்தான் மக்களெல்லாம் பார்க்கின்ற நிலையில் தன் தேவையை முடித்துக் கொண்டது..... (நூல்கள்: அபூதாவூத்: 2174, முஸ்னது அஹ்மது: 27583)


தாம்பத்திய உறவில் கணவன்-மனைவிக்கிடையே உள்ள குறை-நிறைகளை மூன்றாம் மனிதரோடு பகிர்ந்துகொள்வது வெட்கக்கேடான செயலாகும். குறைபாட்டைக் களையுமுகமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காகக் கூறுவது தவறில்லை. மாறாகப் பிரச்சனையை ஏற்படுத்துமுகமாகவோ மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்காகவோ தன் இணையின் இரகசியத்தைப் பிறரிடம் தெரிவிக்கக் கூடாது.

செல்வமும் இரகசியமே: ஒருவர் தாம் சேமித்து வைத்துள்ள செல்வம் குறித்துப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது கூடாது. ஒருவரிடம் உள்ள செல்வம் அவருக்கான இரகசியமாகும். என்னிடம் இவ்வளவு இருக்கின்றது; நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று தம்பட்டம் அடிப்பது கூடாது. இதையே “உடையது விளம்பேல்” எனத் தமிழ் மூதாட்டி ஔவை கூறியுள்ளார். அவ்வாறு ஒருவர் தம்மிடம் உள்ள செல்வத்தைப் பிறரிடம் சொல்லும்போது, அது இல்லாதவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்; அதை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் சிலருக்கு ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்ப்பதற்கே அத்தகைய அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைக்காதே: அண்டை வீட்டிலுள்ள ஒருவரைச் சந்திக்கின்றபோது, சாப்பிட்டீங்களா? என்று நாம் கேட்பதுண்டு. அவர் அதற்கான பதிலைச் சொல்வார். அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமானது. அவர் ஆம் என்றதும், என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்பது அநாகரிமானது. அவ்வாறு நாம் ஒருபோதும் கேட்கக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவரின் குடும்ப நிலைமை என்னவென்று நமக்குத் தெரியாது. அவர் சாதாரணமான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். அல்லது மிக உயர்வான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். நமக்காகப் பொய் சொல்ல வேண்டியது ஏற்படலாம். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மைக்கு மாறாகப் பேசலாம். எனவே அத்தகைய கேள்வியே தேவையற்றது. என்ன சாப்பிட்டார் என்பது இரகசியமானது; பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைப்பது கூடாது.
 
ஆனால் இன்று முகநூல், புலனம் (வாட்ஸ்அப்), இன்ஸ்டாகிராம், கீச்சகம் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெட்கமின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கின்றார்கள். அவர்களுக்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. இத்தகையோரைப் பார்க்கும்போது, எனக்கு இந்த நபிமொழிதான் நினைவுக்கு வருகிறது: “உனக்கு வெட்கம் இல்லையென்றால் நீ விரும்பியதைச் செய்துகொள்.” (புகாரீ: 3483)


ஆக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓராயிரம் இரகசியங்கள் நிறைந்தது. அவற்றுள் எதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும்; எதைப் பிறருக்குச் சொல்லக் கூடாது; எதை மூடிமறைக்க வேண்டும்; எதை இலைமறை காயாகச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து, புரிந்து செயல்பட வேண்டும். அதுதான் இறைநம்பிக்கைகொண்ட ஆண்-பெண்ணுக்கான பண்பாகும். எனவே இரகசியம் காப்போம்; பிறரின் இரகசியத்திற்குள் தலையிடாதிருப்போம்.
=========================












ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பாலர் வகுப்பை நவீனப்படுத்துவோம்

 -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினப்பாக்கம், சென்னை-28

 

தடம் புரண்டு செல்லப் பல்வேறு வழிகள் பரவலாக இருந்தும் நம் இஸ்லாமியச் சமுதாய இளைஞர்கள் தடம்புரண்டுவிடாமல் இறைநம்பிக்கையில் உறுதியோடு இருக்க மிக முக்கியக் காரணங்களுள் ஒன்று அவர்கள் தத்தம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் பயின்ற பாலர் (மக்தப்) வகுப்புப் பாடங்கள்தாம். பள்ளிவாசலில் பாலர் வகுப்பில் பயின்ற இஸ்லாமியக் கொள்கைகள், பண்பாடுகள், ஒழுக்கங்கள், இஸ்லாமியச் சட்டங்கள் முதலானவையே அவர்களை இஸ்லாமிய மார்க்கமான ஒரே மரத்தின்கீழ் ஒருங்கிணைத்து வைத்துள்ளன. நிம்மதியான இம்மர நிழலைவிட்டு அவர்கள் ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள். பள்ளிவாசலில் பாலர் வகுப்பில் பாலபாடத்தைப் பயிலாத சிலரே தடுமாறுகின்றனர்; தடம் மாறுகின்றனர்.

 

இதனால்தான் இஸ்லாமிய மார்க்கத்தைச் சிதைக்க நினைக்கும் குயுக்தி உடையோரும் குறுமதியாளர்களும் பாலர் வகுப்பைப் பாழ்படுத்த முனைந்தார்கள். ஆகவே பள்ளிக்கூட நேரத்தை மாற்றியமைத்தார்கள். பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிள்ளைகள் காலையில் வந்து பாலர் வகுப்பில் குர்ஆனை ஓதிவிட்டுப் பள்ளிக்கூடம் செல்லத் தாமதமாகிவிடுவதால் அவர்கள் காலை வகுப்பில் கலந்துகொள்வதில்லை. சரி, மாலை வகுப்பில் கலந்துகொள்ளலாமே என நாம் கேட்டால், மாலை வேளையில் பள்ளிக்கூடப் பாடச் சிறப்பு வகுப்பில் (டியூஷன்) கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் அப்போதும் வருகைதர முடிவதில்லை. இதையெல்லாம் தாண்டித்தான் இன்றைய பிள்ளைகள் பாலர் வகுப்பில் பங்குகொண்டு திருக்குர்ஆனைக் கற்றுவருகின்றார்கள். எனவே நம் பிள்ளைகளுக்குப் பாலர் வகுப்புப் பாடங்களை எவ்வகையிலேனும் கற்பிக்க மறக்கக் கூடாது. அதுதான் இறுதிவரை  இறைநம்பிக்கையில் (ஈமான்) நீடித்து நிலைத்திருக்க நாம் அவர்களுக்கு அமைத்துக்கொடுக்கின்ற அடித்தளம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

பெற்றோரைப் பேணல், பெரியோரை மதித்தல், உறவினர்களை அரவணைத்து வாழ்தல், அண்டைவீட்டாரோடு இணங்கி வாழ்தல், பிறருக்கு உதவி செய்தல், பிறருக்குத் தொல்லை கொடுக்காதிருத்தல், எல்லோரிடமும் அன்பாக நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அறநெறிகளும் நீதிபோதனைகளும் அங்கே கற்பிக்கப்படுகின்றன. அங்கே கற்றவர்கள்தாம் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றார்கள்; மூத்தோரை மதிக்கின்றார்கள்; உறவினர்களை அரவணைத்து வாழ்கின்றார்கள்; அண்டை வீட்டாரோடு இணங்கி வாழ்கின்றார்கள்; பிறருக்கு உதவி செய்கின்றார்கள்.

 

அங்கு மனனம் செய்த திருக்குர்ஆன் அத்தியாயங்களும் அன்றாட துஆக்களும்தாம் அவர்களை நாள்தோறும் வழிநடத்துகின்றன. அதனால்தான் அவர்கள் நாள்தோறும் ஐவேளை தொழுவதற்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்குரிய துஆவை ஓதுவதற்கும் இயலுகிறது. இதையெல்லாம் நாம் அடுத்த தலைமுறை வரை கொண்டு செல்ல வேண்டுமென்றால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்காலப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கேற்பக் கற்பித்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வார்கள்.

 

கணினித்திரை: இன்றைய அறிவியல் யுகத்தில் காட்சி ஊடகம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. செய்திகளைத் தெரிந்துகொள்ள, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள, கற்க, கற்பிக்க என அனைத்து வகைகளிலும் இந்தக் காட்சி ஊடகம் பயன்பட்டு வருகிறது. எனவே நாமும் அதைப் பயன்படுத்தி நம் சிறுவர், சிறுமியர்க்குக் கற்பித்தால் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பது திண்ணம். காட்சி ஊடகத்தின் வழியாகத்தான் நம் பிள்ளைகள் பெரிதும் ஈர்க்கப்படுகின்றார்கள். ஒரு விஷயத்தைச் சொல்லி விளக்குவதைவிட, காட்சியாகக் காட்டி விளக்கிக் கூறினால் எளிதில் அது அவர்களின் மனதில் பதிந்துவிடும். இது எவரையும் கவரும் ஈர்ப்புத்தன்மை உடையது. சிறுவர் சிறுமியரைப் பொருத்த வரை இது மிகுந்த ஈர்ப்புத்தன்மை உடையது. ஆகவே சொல்லித்தரும் பாடங்களைக் கணினியில் தயாரித்து, அதைத் திரையில் காட்டும்போது எழுத்து வடிவங்களை அவர்கள் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

 

இத்தகைய அடுத்த கட்ட நகர்வை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் நம் பிள்ளைகளைப் பாலர் வகுப்பிற்குப் பெருமளவில் ஈர்க்க முடியும். ஏனெனில் நம்முள் பெரும்பாலான பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் கிளாஸ் எனும் பெயரில் கணினித் திரையில்தான் பயின்று வருகின்றார்கள் என்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.

 

மாலைநேரச் சிறப்பு வகுப்பு: நம் பிள்ளைகள் டியூஷன் எனும் பெயரில் மாலைநேரச் சிறப்பு வகுப்பிற்குச் சென்றுவிடுவதால் அவர்கள் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பிற்கு வர இயலாமல் போய்விடுகிறது. எனவே இப்பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை மனத்தில்கொண்டு, தமிழகத்தின் சில பள்ளிவாசல்களில் டியூஷனுக்கான ஏற்பாடும் உள்ளது. எனவே அவர்கள் அதற்காக வெளியே செல்ல வேண்டியதில்லை. இது பரவலாக்கப்பட்டால் எல்லாப் பிள்ளைகளும் திருக்குர்ஆனைக் கற்றுக்கொள்ள ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்திய நன்மை அந்தந்த நிர்வாகத்தினரைச் சாரும்.

 

முதலில் அவர்கள் குர்ஆன் வகுப்பில் கலந்துகொண்டு, அதனைக் கற்றுக்கொண்டபின் அங்கேயே அவர்கள் தம் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கலாம். அதற்கென அந்தந்தத் துறை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம். பள்ளி நிர்வாகத்தினர் முயற்சி செய்தால் இது ஒன்றும் இயலாத செயல்பாடு அல்ல. பள்ளிப் பாடங்களை நடத்த முஸ்லிம் ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் முஸ்லிமல்லாத ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  அல்லது பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவியரைப் பயன்படுத்தி ஐந்து முதல் ஒன்பதாம்  வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகளுக்குக் கற்பிக்கச் செய்யலாம்.

 

ஆக இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்துவிடுவதால் பெற்றோரும் மிகுந்த ஆர்வத்துடன் தம் பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவார்கள். வெளியில் டியூஷன் படித்தால் எவ்வளவு கட்டணமோ அதையே பெற்றுக்கொண்டு நிர்வாகத்தினரால் நியமிக்கப்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கலாம். மேலும் மாணவ, மாணவியர் மாலை முதல் இரவு எட்டு மணி வரை பள்ளிவாசலிலேயே இருக்க நேரிடுவதால் அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் அங்கேயே நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. இதனால் பிள்ளைகள் இருவகைக் கல்விகளையும் பெற்றுக்கொள்வதோடு ஒழுக்கமானவர்களாக உருவாகவும் வழியமைத்துக் கொடுக்கப்படுகிறது.

 

ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமித்தல்: சில பகுதிகளில் (மஹல்லா) முஸ்லிம்கள் மிகுதியாக வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோன்ற பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களுக்குப் பிள்ளைகள் பெருமளவில் வருகை தருகின்றார்கள். அதைக் கவனத்தில் கொள்ளாத நிர்வாகம் அப்பள்ளியில் உள்ள இமாம் ஒருவரே அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கட்டாயச் சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அவர் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே இது போன்ற பகுதிகளில் இருபது பிள்ளைகளுக்கு ஓர் ஆசிரியர் எனும் விகிதத்தில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாப் பிள்ளைகளுக்கும் உரிய முறையில் கற்பிக்க முடியும் என்பதை நிர்வாகத்தினர் நினைவில் கொள்ள வேண்டும்.

 

சேர்க்கையை முறைப்படுத்துதல்: எப்போது வேண்டுமானாலும் சேரலாம்; எந்த வயதினரும் சேரலாம் என்ற வரைமுறையில்லாத நிலையே எங்கும் நீடித்து வருகிறது. ஒழுங்கற்ற இந்நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். ஐந்து வயது பூர்த்தியான சிறுவர், சிறுமியராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில்தான் சேர்க்கை நடைபெறும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.  பிள்ளைகளை மூவகையினராகப் பிரித்துக்கொள்ள வேண்டும். 1. அடிப்படைப் பாடங்களைக் கற்போர். இதில் யஸ்ஸர்னல் குர்ஆன் எனும் நூலில் அடங்கியுள்ள அடிப்படைப் பாடங்களைக் கற்கும் சிறுவர் சிறுமியர் இருப்பார்கள். 2. திருக்குர்ஆனின் 30ஆம் பகுதியான அம்ம எனும் இறுதிப் பகுதியிலுள்ள சின்னச் சின்ன அத்தியாயங்களைக் கற்போர். 3. திருக்குர்ஆனைத் தொடக்கத்திலிருந்து ஓதத் தொடங்கியுள்ள மாணவ, மாணவிகள்.

 

கற்பிக்கும் முறை: அடிப்படைப் பாடங்களைக் கற்பிப்பதிலேயே ஓராண்டு அல்லது ஈராண்டுகள் ஓடிவிடுகின்றன.  இது கால விரயம் ஆகும். அடிப்படைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள பல பாடநூல்கள் வழக்கத்தில் உள்ளன.  ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதமான நூலைக் கொண்டுவருவது வழக்கம். இது முற்றிலும் மாற்றப்பட வேண்டும். அடிப்படைக் கல்வியைக் கற்கின்ற எல்லோருக்கும் ஒரேவிதமான நூலை வாங்கிக்கொடுக்க வேண்டும். சான்றாக, நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள யஸ்ஸர்னல் குர்ஆன் எனும் அடிப்படை நூல். அல்லது இதைப்போன்ற எளிதான நூல். இதை ஒரு மாணவரோ மாணவியோ படித்து முடிக்க அதிகபட்சமாக ஆறு மாதங்கள் போதும்.

 

ஆனால் நடைமுறை என்னவென்றால், ஈராண்டுகள் வரை பிள்ளைகள் அதையே ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். என்னைப் பொருத்த வரை அடிப்படைப் பாடங்களைப் படிக்க அதிகபட்சமாக மூன்று மாதங்களே போதும். அத்தகைய எளிய முறையிலான 15 பாடங்களை உருவாக்கியுள்ளேன். அரபியில் உள்ள அகரக்குறி, இகரக்குறி, உகரக்குறி அடிப்படையில் பதினைந்தே பாடங்களில் அரபு எழுத்துகளைச் சேர்த்து வாசிக்கப் பழக்கிவிடலாம். அதைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொடுப்பதோடு எழுத்துப் பயிற்சியும் கொடுத்தால் பிள்ளைகளின் மனதில் எழுத்துகளின் வடிவங்கள் எளிதாகப் பதிவாகிவிடும். அதன்பின் அம்ம எனும் திருக்குர்ஆனின் இறுதிப் பகுதியை அவர்கள் ஓதத் தொடங்கிவிடுவார்கள்.

 

அம்ம எனும் திருக்குர்ஆனின் இறுதிப் பகுதியை ஓராண்டு வரை ஓதிக்கொண்டிருக்கின்றார்கள். இதுவும் கால விரயமே ஆகும். இதில் அல்ஃபாத்திஹா அத்தியாயமும் சிறிதும் பெரிதுமாக 37 அத்தியாயங்களும் உள்ளன. இதை அதிகபட்சமாக மூன்று முதல் நான்கு மாதங்களில் ஓதி முடித்து விடலாம். அத்தோடு மனனமும் செய்ய வைக்கலாம். ஏனென்றால் இதிலுள்ள அத்தியாயங்களைத்தான் தொழுகையில் நாம் மிகுதியாக ஓதி வருகிறோம். இதனை முடித்த பின், திருக்குர்ஆனைத் தொடக்கத்திலிருந்து ஓதத் தொடங்குவார்கள். இதனைக் கற்பிக்கும்போது  வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளார்களோ அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு பக்கத்தை ஆசிரியர் ஓதிக் காட்ட, அதையே மாணவர்கள் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் சொல்லிக்கொடுத்தபின் மாணவர்களுள் ஒருவர் ஓத மற்றவர்கள் கவனிக்க வேண்டும். அதன்பின் அடுத்த மாணவர் எனத் தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆசிரியரின் கற்பிக்கும் நேரம் குறையும். மேலும் ஒவ்வொரு மாணவரும் வேறு வேறு பாடத்தை ஓதும் தற்போதைய நடைமுறை களையப்பட வேண்டும்.

 

மாணவர்களை வகைப்படுத்துதல்: மேற்கண்ட முறைப்படி மூன்று பிரிவினராக மாணவ, மாணவியரைப் பிரித்துக்கொண்டு பாடம் நடத்தலாம். ஒரே வகுப்பில் அதிகமான மாணவர்கள் இருந்தால் அவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மாணவரும் வேறு வேறு பக்கங்களை ஓதிக்கொண்டிருக்கும் பழைய நடைமுறையை மாற்றி, எல்லோரும் ஒரே பக்கத்தைப் படிக்குமாறு செய்யலாம். பத்தாம் பக்கம் என்றால் அவ்வகுப்பில் உள்ள எல்லோரும் பத்தாம் பக்கத்தைத்தான் அன்றைய நாள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆசிரியரின் சுமை குறைகிறது. அப்பக்கத்திலுள்ள எழுத்துகளை மூன்று தடவை உச்சரித்துக் காட்டி, அதேபோல் பிள்ளைகளைச் சொல்லச் செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் ஆசிரியரிடம் அதை ஓதிக் காட்ட வேண்டும்.  இந்த நடைமுறை மிகவும் எளிதானது.

 

பாடம் ஓதி முடித்ததும் அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களைக் கற்பிக்கலாம். சின்னப் பிள்ளைகளுக்குச் சின்னச் சின்ன துஆக்களையும் பெரிய பிள்ளைகளுக்குச் சற்று பெரிய துஆக்களையும் கற்றுக்கொடுக்கலாம். வாரந்தோறும் புதிய புதிய துஆக்களை அறிமுகப்படுத்த வேண்டும். தொடர்ந்து இப்படிச் செய்வதால் மூன்றாண்டுகளில் நூறு துஆக்களை மனனம் செய்வதற்கான வாய்ப்பு உண்டு. அத்தோடு அம்ம எனும் இறுதிப் பகுதியிலுள்ள 37 அத்தியாயங்களையும் மாணவ மாணவிகள் மனனம் செய்யுமாறு தூண்டலாம். வாரத்தில் ஆறு நாள்கள் வேலை நாள்கள். அவற்றுள் இரண்டு நாள்கள் அன்றாட துஆக்கள்; இரண்டு நாள்கள் மார்க்கச் சட்டங்கள்; இரண்டு நாள்கள் இஸ்லாமிய வரலாறு எனப் பிரித்துக்கொள்ளலாம்.

 

ஆண்டுவிழா: மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்துமுகமாக ஆண்டுதோறும் சிறுவர் சிறுமியர்க்கான விழா ஒன்றை ஏற்பாடு செய்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றை மேடையில் அரங்கேற்றம் செய்து, ஊக்கப் பரிசுகளை வழங்கலாம். இதைக் காணும் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள். அத்தோடு அக்கம் பக்கத்துப் பள்ளிவாசல்களின் பிள்ளைகளையும் இணைத்து, பெருவிழாவாக ஏற்பாடு செய்து வெற்றிபெறும் குறிப்பிட்ட மஹல்லாப் பிள்ளைகளுக்கு முதல் பரிசு என அறிவித்து, நடைமுறைப்படுத்தலாம். இப்படி எத்தனையோ வழிகள் தற்காலத்தில் உள்ளன. எனவே நம் பிள்ளைகள் அனைவரும் பள்ளிவாசலில் நடைபெறும் பாலர் வகுப்பில் கலந்துகொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதுதான் எதிர்காலத் தலைமுறை இறைநம்பிக்கையில் நீடித்திருக்க நாம் செய்யும் மிகச் சிறந்த உதவியாகும். இது நமது பொறுப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர்வோம்.

 

நம் பிள்ளைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள அருட்கொடை; அவர்களே எதிர்காலச் சமுதாயத் தலைவர்கள். எனவே அவர்களை நல்ல முறையில் வார்த்தெடுப்பது நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மேற்கண்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்திட விரைவில் முனைவோம். உயர்ந்தோன் அல்லாஹ் நல்லருள்புரிவானாக.  

===============








வெறுப்பை விதைக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்புப் பிரச்சாரம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் பரப்பப்பட்டு வருகிறது. அதன் விளைவாக இந்திய நாட்டின் வடமாநிலங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்த இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன; பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

 

அதனைத் தொடர்ந்து தற்போது ஹரியானா மாநிலத்தில் நூஹ் மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் கலவரத்தில் ஈடுபட்டு ஷாஹி ஸஅத் என்ற 19 வயது இமாமைக் கொடூரமாகக் கொன்று பள்ளிவாசலை எரித்திருக்கின்றார்கள். மேலும் சிலரைக் கொலை செய்திருக்கின்றார்கள். ஆக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடெங்கும் வன்முறையையும் கலவரத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எங்கெங்கும் சிறுபான்மை மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.  குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தைத்  தொடர்கின்றார்கள்.

 

31.07.2023 அன்று ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பெற்றிருந்த இரயில்வே பாதுகாப்புப் படை RPF காவலர் சேத்தன் சிங் என்பவர் அந்தத் தொடர்வண்டியில் பயணித்த முஸ்லிம்கள் மூவரையும் மலைவாழ் இனத்தைச் சார்ந்த தம் மேலதிகாரி ஒருவரையும் துப்பாக்கியால் வெறித்தனமாகச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

 

உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த அந்தக் காவலர் கொலையுண்டவர்களின் பிரேதங்கள் மீது காலை வைத்துக்கொண்டு  பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைத்தான் நான் கொன்றேன்; இந்தியாவில் வாழவிரும்புவோர் மோடி, யோகி ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டல்  விட்டுக் கத்தியிருக்கிறார். இது குறித்த விசாரணை தொடங்குமுன்னரே கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஊடகங்களில் செய்திகளைப் பரப்புகின்றார்கள். எந்த அளவிற்கு அவரின்  மனத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு இருந்திருந்தால் இவ்வாறு முஸ்லிம்களைத் தேடித்தேடிப் போய்ச் சுட்டுக் கொன்றிருப்பார் என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.  

 

மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பைப் பரப்பவும் வெட்டிக்கொண்டு சாகவும் படைக்கப்படவில்லை. ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவே படைக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது இது இப்படியே தொடர்ந்தால் இந்திய நாடு வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்பைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, அன்பைப் பரப்ப முனைவோம். அதுவே நாம் மனிதர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

 

பழையதைக் கிளறாதே: ஒரு கட்சியில் அல்லது ஓர் இயக்கத்தில் இருக்கின்ற தலைவரோ தொண்டரோ தொடக்கக் காலத்தில் ஒருவிதமாகப் பேசியிருப்பார்; பிற்காலத்தில் அது தவறென உணர்ந்திருப்பார். எனவே தான் ஏற்கெனவே பேசியதற்கு மாறாகப் புதிய கருத்தைப் பிறகு பேசியிருப்பார். அதை மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பார்கள். அதையே அவரது வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்திருப்பார்.  ஆகவே இறுதியாகப் பேசியதைத்தான் அவரது கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சி வேகத்தில், கோபத்தில் பேசிய கடந்த காலக் கருத்துகளை அவரது கொள்கையாகவோ கருத்தாகவோ எடுத்துக்கொண்டு அவரைத் தற்போது நாம் விமர்சனம் செய்வது முறையாகாது. அது அவர்மீது பற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவோர்மீது நமக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். அவ்வாறு வெறுப்பைப் பரப்புவோர் மனித வாழ்வின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் ஆவர்.

 

அந்த வகையில் பெரியார் ஈவெரா தொடக்கக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய சில கருத்துகள் அண்மையில் புலனம் (வாட்ஸ்அப்) வழியாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அதைப் படிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டுத் தம் கருத்துகளை அவருக்கெதிராகப் பகிர்ந்து வருகின்றார்கள். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. தற்போது அவரைப் பின்பற்றி வருகின்ற  இளைஞர்களுக்கும் இதைப் பரப்புகின்ற இளைஞர்களுக்குமிடையே வெறுப்பை வளர்க்குமே தவிர வேறொன்றும் பயனில்லை. மாறாகப் பழைய கருத்துகளை மறந்துவிட வேண்டும்; அவை காலாவதியான கருத்துகள் ஆகும். பெரியார் ஈவெரா இஸ்லாம் குறித்துக் கடைசியாகப் பேசிய கருத்து, ‘தீண்டாமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்பதுதான். இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறித்தும் மீலாது மேடைகளில் அவர் பேசிய எத்தனையெத்தனையோ நற்கருத்துகள் இருக்கின்றன. அவற்றைப் பரப்புவோம்; மனிதர்கள் மத்தியில் அன்பை வளர்ப்போம்.

 

வேதங்கள் மூலம் வெறுப்பைப் பரப்புதல்: 1971ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கை, நிதிச்சுமையைக் காரணம் காட்டி, நீக்கினார் கருணாநிதி. அதாவது ஒருவன் 1971க்கு முன் மது குடித்தால் கைது செய்யப்படுவான். ஆனால் தற்போது ஒருவன் மது குடித்தால் கைது செய்யப்பட மாட்டான். அதுபோலவே திருக்குர்ஆனின் சில கட்டளைகளும் அமைந்துள்ளன. இணைவைப்பாளர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்பது போர்க்காலச் சூழலில் சொல்லப்பட்ட ஒரு வசனம். அதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, திருக்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது என்று பேசுவது அறியாமையாகும்.

 

அந்தக் கட்டளை பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது. லகும் தீனுக்கும் வலிய தீன்-உங்களுக்கு உங்களின் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம் என்ற வசனத்தின்மூலம் திருக்குர்ஆன் மத நல்லிணக்கத்தையே போதிக்கிறது. அதாவது அவரவர் தத்தம் மார்க்கத்தைப் பின்பற்றலாம்; எந்தத் தடையுமில்லை. அதனடிப்படையில்தான் நபியவர்களின் காலத்திலேயே முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ் நிம்மதியாக வாழ்ந்துள்ளார்கள்.  தற்போது வரை அதுதான் நிலைமை. முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள், யூதர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை வெறுப்பைப் பரப்புவோர் உணர வேண்டும்.

 

அதுபோலவே அம்பேத்கார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தொடக்கக் காலத்தில் இஸ்லாம் குறித்துத் தவறாகப் பேசியிருக்கலாம்; எழுதியிருக்கலாம். அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட வேண்டும். அவர்களின் பழைய கருத்துகளைக் கிளற வேண்டிய அவசியம் நமக்கில்லை. அவர்களுடைய இறுதியான கருத்துகள் என்ன என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை மட்டுமே பரப்ப வேண்டும். அதுவே தற்போது வாழுகின்ற நமக்கு மத்தியில் வேற்றுமைத் தீ பரவாமல் தடுக்கவும், நிம்மதியாக வாழவும் சிறந்த வழியாகும்.

 

திருக்குர்ஆனை எரித்தல்: ஒரு சமுதாய மக்கள் மிகவும் புனிதமாகக் கருதும் வேதத்தை எரித்தல் அல்லது இழிவுபடுத்துதல் மூலம் அவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்புகின்றார்கள். கடந்த ஜூன் மாதம்  ஸ்வீடன் தலைநகரான ஸ்டொக்ஹோம் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர், முஸ்லிம்கள் எல்லோரும் புனிதமாகக் கருதுகின்ற திருக்குர்ஆனை மக்கள் மத்தியில் எரித்துள்ளார். இச்செயல் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் அவரது இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

வெறுப்புச் சொற்களை உதிர்த்தல்: நாம் தமிழர் எனும் பெயரில்  கட்சி நடத்துகின்ற சீமான், தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து, திமுக.விற்கு எதிராகப் படைதிரட்டுகின்ற வேலையைச் செவ்வனே செய்துவருகிறார்.  அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க உரையாற்றுகின்ற அவர், பற்பல பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார். திராவிடத்திற்கு எதிராகத் தமிழினம் என்ற பெயரில் இளைஞர்களை ஒன்றிணைக்க முனைகிறார். திராவிடக் கட்சிகளுக்கு வாக்குச் செலுத்திய முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று பிதற்றுகிறார். ஒரு கட்சி வெற்றிபெறச் சிறுபான்மையினர் செலுத்திய வாக்குகள் மட்டுமே காரணமாக அமையுமா? முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத இந்துக்கள் உள்ளிட்ட பற்பல இனத்தினரும் மதத்தினரும் யாருக்கு வாக்குச் செலுத்தினார்கள்? அவர்கள் வாக்குச் செலுத்தாமலா திமுகவோ அதிமுகவோ வெற்றிபெற்றது? ஆக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் திமுகவிற்கு எதிராகத் திசைதிருப்புவதற்காக எடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

 

இவ்வாறு பற்பல கோணங்களில் வெறுப்புத் தீ பரப்பப்படுகிறது. மனிதர்களை இனரீதியாக, மொழிரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரித்துத் துண்டாடி, ஒற்றுமையைக் குலைத்து, வாக்குகளை வாங்கி, ஆட்சியைப் பிடித்து, சொகுசாக வாழ்வதற்கு அரசியல் வாதிகள் செய்யும் சூழ்ச்சிகள் ஏராளம். குறிப்பாக ஆர்எஸ்எஸ். இயக்கத்தினர் சிறுபான்மை மக்கள்மீது வெறுப்பு ஏற்படும் விதத்தில் தம் உறுப்பினர்களுக்குப் பயிற்சியளிக்கின்றனர்; ஆங்காங்கே துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கின்றனர். இதனால் நாட்டில் வெறுப்பும் அமைதியின்மையும் பரவிக்கொண்டிருக்கின்றன. இனியேனும் அவர்கள் தம் நரித்தனமான சூழ்ச்சிகளையும் நிறுத்திக்கொள்ளட்டும். வருங்காலத்தில் நாம் அனைவரும் மக்கள் மத்தியில் அன்பை வளர்த்து, அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவோம். இனரீதியாக, மொழிரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரிந்துவிடாமல் ஒன்றுபட்டு வாழ்வோம்.      

 

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப்பைத் தூண்டாதீர்கள் (புகாரீ: 69) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் இப்புவியில் வாழ்ந்து, இந்த மண்ணின், ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற மூலமந்திரத்தைக் காப்போம்.       

===========







வெள்ளி, 30 ஜூன், 2023

பொது சிவில் சட்டம்-ஓர் ஆபத்து Uniform Civil Code is dangerous


பொது சிவில் சட்டம்-ஓர் ஆபத்து Uniform Civil Code is dangerous அக்கா மகளைத் திருமணம் செய்யலாம் என இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இது முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. அதேபோல சித்தியின் மகளை திருமணம் செய்யக் கூடாது என்பதாக இந்து தனியார் சட்டம் சொல்லும். ஆனால் இந்தச் சட்டமும் முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. இப்படியாக மேற்காணும் இரண்டு விஷயங்களில் மட்டும் ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருக்கலாம். இப்படி இருக்கும்போது பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தவரும் பாதிக்கப்படுவார்கள். -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 30/ 06 / 2023 11/ 12 / 1444

வெள்ளி, 2 ஜூன், 2023

காற்றில் பறந்த வாக்குறுதிகள் The promises flown in the air



காற்றில் பறந்த வாக்குறுதிகள் The promises flown in the air -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. நாங்கள் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்- “உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.” (அல்குர்அன் 17:34) இமாம் மதீனா மஸ்ஜித் பட்டினப்பாக்கம் சென்னை-28 02/ 06 / 2023 12 / 11 / 1444