சனி, 9 செப்டம்பர், 2023

கமுக்கம் காப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
-------------------------------------------

இரகசியத்தைத்தான் கமுக்கம் என்ற மற்றொரு வார்த்தையில் கூறுகின்றனர். அது நிறையப் பேருக்குத் தெரியாமலேயே கமுக்கமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓராயிரம் இரகசியங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளலாம்; அவற்றுள் பலவற்றைக் கமுக்கமாகவே வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவை நம்மையே ஒரு நாள் அசிங்கப்படுத்திவிடலாம். தாய்-தந்தைக்கிடையே உள்ள இரகசியங்கள்; கணவன்-மனைவிக்கிடையே உள்ள இரகசியங்கள்; நண்பர்களுக்கிடையே உள்ள இரகசியங்கள்; தாய்க்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள்; தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே உள்ள இரகசியங்கள். இப்படி இரகசியங்கள் பற்பல பரிமாணங்கள் கொண்டவை.


“ஆம்பளையிடம் வருமானத்தைக் கேட்காதே; பொம்பளையிடம் வயதைக் கேட்காதே” என்று மூத்தோர் சொல்வதுண்டு. கணவனின் சம்பளமோ வருமானமோ மனைவிக்கு முழுமையாகத் தெரிந்துவிட்டால், அதற்கேற்பச் செலவுகளை ஏற்படுத்திவிடுவாள்; அல்லது நீதான் இவ்வளவு சம்பாதிக்கிறாயே, எனக்கு அதை வாங்கிக் கொடுத்தால் என்ன என்று சண்டையிடுவாள். அல்லது அதை வாங்கிக் கொடு; இதை வாங்கிக்கொடு என்று நச்சரிப்பாள். அதேநேரத்தில் கணவனின் வருமானம் இரகசியமாக இருக்கும்போது, அவன் தன் குடும்பத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, எதிர்கால நலனை நாடிச் சிறிதளவு சேமிப்பான்; தாய்-தந்தைக்கு அல்லது நெருங்கிய உறவினர்களுக்குச் செலவு செய்வான். அதனால் கணவன்-மனைவிக்கிடையே உள்ள இல்வாழ்வில் இடர்ப்பாடு ஏதும் ஏற்படாமல் சீராகச் செல்லும்.


“இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று கூறி, ஏதேனும் இரகசியத்தை ஒருவரிடம் சொன்னால் அது இரகசியமில்லை. ஏனெனில் அது எப்படியும் பிறருக்குப் பரவிவிடும். நமக்குள் இருக்கின்ற வரைதான் அது இரகசியம். நம்மைவிட்டு அடுத்தவருக்குச் சென்றுவிட்டால் அது இரகசியமே கிடையாது. இரகசியத்தைத் தெரிந்துகொள்வதிலும் பரப்புவதிலும் பெண்கள் மிகுந்த ஆர்வமுடையவர்கள். எனவே ஒரு விஷயத்தை மனைவியிடம் சொல்லி, “இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்று சொன்னால் அது எல்லோரிடமும் பரவிவிடும் என்பது திண்ணம். அதற்கான வரலாற்றுச் சான்று ஒன்றை நாம் காணலாம்.


நபியவர்களின் இரகசியத்தைப் பரப்பிய மனைவி: அல்லாஹ்வின் தூதர் சத்தியம் செய்துவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்று கூறியதை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் தெரிவித்துவிட்டதால், அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள செய்தி புகாரீ நூலில் கீழ்க்கண்டவாறு விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதலில் வருவார்களோ அவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூற வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்தபடி கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே 66:1ஆம் இறைவசனம் அருளப்பெற்றது.) (புகாரீ: 4912)


இருப்பினும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அந்த இரகசியத்தைப் பாதுகாக்கவில்லை. மாறாக, அதை ஹஃப்ஸாவிடம் சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு "இறைத்தூது' அறிவித்தான். எனவே, தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக நபியவர்கள் ஆயிஷாவைக் கடிந்து கொண்டார்கள்.


(நம்முடைய) நபி தம் மனைவிகளுள் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிவிட்டான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்துவிட்டார். (இவ்வாறு) நபி தம் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி “இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர், “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார். (66: 3, நூல்: புகாரீ)


இரகசியம் பரவும் இடங்கள்: வீட்டில் ஏதேனும் விசேஷம், திருமண விழாக்கள், சந்திப்புகள் -இவற்றின்போதுதான் இரகசியங்கள் பரிமாறிக்கொள்ளப்படும். ஒருவரின் இரகசியங்கள் வெளிப்படுகின்றபோது பல்வேறு தீமைகள் விளையும் என்பது உறுதி. அரிதாக எப்போதேனும் ஏதாவது நன்மை ஏற்படலாம். கமுக்கம் என்பது எல்லா இடங்களிலும் உண்டு. அலுவலகத்தில் இருக்கலாம்; குடும்பத்தில் இருக்கலாம்; உறவினர்களுக்கு மத்தியில் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதைக் காப்பது நமது கடமை. எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லிவிடக் கூடாது. ஒருவர் குறித்து நமக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்களைப் பிறருக்குப் பரப்பக்கூடாது. அது அவர்மீது மற்றவர்கள் வைத்துள்ள மரியாதையைக் குறைத்துவிடும்.

 
நபியவர்கள் மேற்கொண்ட இரகசியங்கள்: இரகசியம் குறித்தும் அதன் ஒழுங்குகள் குறித்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறையப் பேசியுள்ளார்கள். அத்தோடு நபியவர்களும் தம் அன்றாட வாழ்க்கையில் பற்பல கமுக்கங்களை மேற்கொண்டுள்ளார்கள். சிலநேரங்களில் போருக்குப் புறப்படுமாறு அறிவிப்புச் செய்வார்கள்; அதனைக் கேட்டு, நபித்தோழர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள்; ஆயுதங்களை ஆயத்தநிலையில் வைப்பார்கள்; நிதியைச் சேகரிப்பார்கள்; எல்லாம் நடைபெறும்; தூரமான பயணம் என்றும் நபியவர்கள் சொல்வார்கள்; ஆனால் எங்கு செல்கிறோம் என்பதை இரகசியமாக வைப்பார்கள். இது அவர்கள் மேற்கொண்ட போர்த்தந்திரம் ஆகும். இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்திருக்கின்றார்கள் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.


இன்றும் ஒவ்வொரு நாடும் இராணுவ இரகசியங்களை வெளியிடுவதில்லை. ஒவ்வொரு நாட்டின் இராணுவத் தகவல்களும் இரகசியமாகவே இருக்கும். ஒரு நாட்டின் இராணுவத்தில் எத்தனை வீரர்கள் பணியாற்றுகின்றார்கள், எத்தனை ஆயுதங்கள் உள்ளன, எத்தனை பீரங்கிகள், தோட்டாக்கள் உள்ளன, அணு ஆயுதங்கள், திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் கமுக்கமானவை. அவற்றைப் பிற நாட்டுக்குப் பரப்புவோர் தேசத் துரோகிகள் என வர்ணிக்கப்படுவார்கள்.


இரகசியத்தைப் பாதுகாத்த நபித்தோழர்கள்: பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியங்கள், நிரந்தரமான இரகசியங்கள் என இருவகை உண்டு. நபியவர்கள் சொன்ன இரகசியத்தை அவர்களின் தோழர்கள் மிகச் சிறப்பாகப் பேணிக் காத்துள்ளார்கள். அந்தச் செய்தியை மக்கள் தெரிந்துகொள்வது அவர்களுக்கு நலம் பயக்கும் என்ற எண்ணத்திலும், தமக்குத் தெரிந்த கல்வியை மறைக்கக்கூடாது என்ற நபிமொழியின் காரணத்தாலும் இது குறிப்பிட்ட காலத்திற்கான இரகசியம்தான் என்பதை உணர்ந்ததாலும் சிலவற்றை நபியவர்களின் மரணத்திற்குப்பின் சிலர் தெரிவித்தார்கள். அதேநேரத்தில் சிலர் நபியவர்களின் மரணத்திற்குப் பின்னரும் அதைக் காத்தார்கள். அவ்வாறு நபியவர்களின் இரகசியத்தை இறுதிவரை பாதுகாத்த தோழர் ஒருவரின் செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரகசியம் ஒன்றைச் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. (புகாரீ: 6289) இதுதான் இரகசியத்தைப் பாதுகாக்கும் ஒழுங்குமுறை.


நபியவர்களின் இரகசியத்தைப் பாதுகாத்த அவர்களின் நெருங்கிய நண்பர் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு. அவர்கள் குறித்த ஒரு செய்தி புகாரீ நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவரை வேறொருவருக்கு மணமுடித்து வைக்க எண்ணினார்கள். அது குறித்து) உமர் இப்னுல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
நான் உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று, (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறினேன்.

அதற்கு அவர்கள், “(தங்கள் மகளை நான் மணந்துகொள்ளும் இந்த) என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; (யோசித்து என் முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு அவர்கள் என்னைச் சந்தித்து 'இப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டாம் என்றே எனக்குத் தோன்றுகிறது'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) “நீங்கள் விரும்பினால், என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்தப் பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விட அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்மீதே நான் மிகவும் மனவருத்தம் கொண்டவனாக இருந்தேன்; சில நாள்கள் பொறுத்திருந்தேன்.


பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு என்னைச் சந்தித்து, “நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்குப் பதிலேதும் கூறாததால், உங்களுக்கு என்மீது மனவருத்தம் இருக்கக்கூடும்'' என்று கூறினார்கள். நான், “ஆம்'' என்று சொன்னேன்.


(அதற்கு) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, “நீங்கள் கூறியபோது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்ததே ஆகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்குப் பதிலேதும் கூறவில்லை). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால், உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்” என்று கூறினார்கள். (புகாரீ: 5122)


தம்பதியரிடையே இரகசியங்கள்: கணவன்-மனைவிக்கிடையே ஆயிரமாயிரம் இரகசியங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவன் பற்றி மனைவிக்கும் மனைவி குறித்துக் கணவனுக்கும் நன்றாகத் தெரியும். அவ்விருவருள் ஒவ்வொருவரின் குறைகளும் பலவீனங்களும் மற்றவருக்குத் தெரியும். அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. கணவனின் குறையை மனைவியும் மனைவியின் குறையைக் கணவனும் மறைக்க வேண்டும். இல்லையேல் அது அவ்விருவரின் இல்வாழ்வில் மிகப்பெரும் சிக்கலை உண்டுபண்ணிவிடும். பொதுவாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி: யார் ஒரு முஸ்லிமை (அவருடைய பாவத்தை அல்லது குறையை) மறைத்தாரோ அவரை (அவர்தம் பாவத்தை அல்லது குறையை) அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைக்கின்றான். (இப்னுமாஜா: 2534)

அதேபோல் கணவன்-மனைவிக்கிடையே நடைபெறுகிற தாம்பத்திய உறவு குறித்தும் அதன் நிறை-குறைகள் குறித்தும் கணவன் தன் நண்பர்களிடமோ, மனைவி தன் தோழிகளிடமோ பகிர்ந்துகொள்ளக்கூடாது. அது மிகப்பெரும் குற்றமாகும். அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளதாவது:

மறுமைநாளில் அல்லாஹ்விடம் (தண்டனையால்) மிகக் கடுமையான நிலையில் உள்ள மனிதன் யாரென்றால், அவன் தன் மனைவியுடன் உடலுறவுகொண்டபின் அவன் அவளுடைய இரகசியங்களைப் பரப்புகிறானே அவனாவான். (நூல்: முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் ஆண்களின் பக்கம் திரும்பி அவர்களிடம் கேட்டார்கள்:

“உங்களுள் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவுக்காக) வருகிறார்; கதவைச் சாத்திக் கொள்கிறார்; அல்லாஹ்வின் திரையால் தம்மை மறைத்துக் கொள்கிறார். அதன் பிறகு (தம் நண்பர்களுடன்) அமர்ந்து கொண்டு நான் இவ்வாறு செய்தேன்; நான் இவ்வாறு செய்தேன் என்று சொல்லக்கூடியவர் யாரேனும் உள்ளாரா?” அங்கிருந்த ஆண்களெல்லாம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்கள் பெண்களை நோக்கி, “உங்களுள் யாரேனும் தம்முடைய தாம்பத்திய இரகசியங்களை வெளியிடுபவர் உள்ளாரா?'' என்று கேட்டார்கள். அவர்களும் அமைதியாகவே இருந்தார்கள்.

பிறகு, ஓர் இளமங்கை, நபியவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக ஒற்றைக் காலில் நின்று கொண்டு மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஆண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்; பெண்களும் அது பற்றிப் பேசுகின்றார்கள்'' என்று சொன்னாள்.
பிறகு நபியவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்கு அதனுடைய உதாரணம் தெரியுமா? அதற்கு உதாரணம், ஒரு பெண்ஷைத்தானைப் போலவாகும். அந்தப் பெண்ஷைத்தான் ஓர் ஆண்ஷைத்தானை வழியில் கண்டது. (அங்கேயே) அந்த ஆண்ஷைத்தான் மக்களெல்லாம் பார்க்கின்ற நிலையில் தன் தேவையை முடித்துக் கொண்டது..... (நூல்கள்: அபூதாவூத்: 2174, முஸ்னது அஹ்மது: 27583)


தாம்பத்திய உறவில் கணவன்-மனைவிக்கிடையே உள்ள குறை-நிறைகளை மூன்றாம் மனிதரோடு பகிர்ந்துகொள்வது வெட்கக்கேடான செயலாகும். குறைபாட்டைக் களையுமுகமாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காகக் கூறுவது தவறில்லை. மாறாகப் பிரச்சனையை ஏற்படுத்துமுகமாகவோ மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்காகவோ தன் இணையின் இரகசியத்தைப் பிறரிடம் தெரிவிக்கக் கூடாது.

செல்வமும் இரகசியமே: ஒருவர் தாம் சேமித்து வைத்துள்ள செல்வம் குறித்துப் பிறரிடம் பெருமையாகப் பேசுவது கூடாது. ஒருவரிடம் உள்ள செல்வம் அவருக்கான இரகசியமாகும். என்னிடம் இவ்வளவு இருக்கின்றது; நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று தம்பட்டம் அடிப்பது கூடாது. இதையே “உடையது விளம்பேல்” எனத் தமிழ் மூதாட்டி ஔவை கூறியுள்ளார். அவ்வாறு ஒருவர் தம்மிடம் உள்ள செல்வத்தைப் பிறரிடம் சொல்லும்போது, அது இல்லாதவனுக்கு ஏக்கத்தை ஏற்படுத்தும்; அதை அபகரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் சிலருக்கு ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்ப்பதற்கே அத்தகைய அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைக்காதே: அண்டை வீட்டிலுள்ள ஒருவரைச் சந்திக்கின்றபோது, சாப்பிட்டீங்களா? என்று நாம் கேட்பதுண்டு. அவர் அதற்கான பதிலைச் சொல்வார். அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் நாகரிகமானது. அவர் ஆம் என்றதும், என்ன சாப்பிட்டீங்க? என்று கேட்பது அநாகரிமானது. அவ்வாறு நாம் ஒருபோதும் கேட்கக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவரின் குடும்ப நிலைமை என்னவென்று நமக்குத் தெரியாது. அவர் சாதாரணமான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். அல்லது மிக உயர்வான உணவைச் சாப்பிட்டிருக்கலாம். நமக்காகப் பொய் சொல்ல வேண்டியது ஏற்படலாம். கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மைக்கு மாறாகப் பேசலாம். எனவே அத்தகைய கேள்வியே தேவையற்றது. என்ன சாப்பிட்டார் என்பது இரகசியமானது; பிறரின் இரகசியத்திற்குள் மூக்கை நுழைப்பது கூடாது.
 
ஆனால் இன்று முகநூல், புலனம் (வாட்ஸ்அப்), இன்ஸ்டாகிராம், கீச்சகம் (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெட்கமின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கின்றார்கள். அவர்களுக்கு இரகசியம் என்று எதுவும் கிடையாது. இத்தகையோரைப் பார்க்கும்போது, எனக்கு இந்த நபிமொழிதான் நினைவுக்கு வருகிறது: “உனக்கு வெட்கம் இல்லையென்றால் நீ விரும்பியதைச் செய்துகொள்.” (புகாரீ: 3483)


ஆக ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஓராயிரம் இரகசியங்கள் நிறைந்தது. அவற்றுள் எதைப் பிறருக்குச் சொல்ல வேண்டும்; எதைப் பிறருக்குச் சொல்லக் கூடாது; எதை மூடிமறைக்க வேண்டும்; எதை இலைமறை காயாகச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து, புரிந்து செயல்பட வேண்டும். அதுதான் இறைநம்பிக்கைகொண்ட ஆண்-பெண்ணுக்கான பண்பாகும். எனவே இரகசியம் காப்போம்; பிறரின் இரகசியத்திற்குள் தலையிடாதிருப்போம்.
=========================












கருத்துகள் இல்லை: