ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

வெறுப்பை விதைக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்புப் பிரச்சாரம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் பரப்பப்பட்டு வருகிறது. அதன் விளைவாக இந்திய நாட்டின் வடமாநிலங்களில் தொடர்ந்து வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூரில் நடந்த இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன; பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டுள்ளன.

 

அதனைத் தொடர்ந்து தற்போது ஹரியானா மாநிலத்தில் நூஹ் மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தினர் கலவரத்தில் ஈடுபட்டு ஷாஹி ஸஅத் என்ற 19 வயது இமாமைக் கொடூரமாகக் கொன்று பள்ளிவாசலை எரித்திருக்கின்றார்கள். மேலும் சிலரைக் கொலை செய்திருக்கின்றார்கள். ஆக ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடெங்கும் வன்முறையையும் கலவரத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். எங்கெங்கும் சிறுபான்மை மக்களுக்கெதிரான வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.  குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தைத்  தொடர்கின்றார்கள்.

 

31.07.2023 அன்று ஜெய்ப்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பெற்றிருந்த இரயில்வே பாதுகாப்புப் படை RPF காவலர் சேத்தன் சிங் என்பவர் அந்தத் தொடர்வண்டியில் பயணித்த முஸ்லிம்கள் மூவரையும் மலைவாழ் இனத்தைச் சார்ந்த தம் மேலதிகாரி ஒருவரையும் துப்பாக்கியால் வெறித்தனமாகச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

 

உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த அந்தக் காவலர் கொலையுண்டவர்களின் பிரேதங்கள் மீது காலை வைத்துக்கொண்டு  பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்களைத்தான் நான் கொன்றேன்; இந்தியாவில் வாழவிரும்புவோர் மோடி, யோகி ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டல்  விட்டுக் கத்தியிருக்கிறார். இது குறித்த விசாரணை தொடங்குமுன்னரே கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று ஊடகங்களில் செய்திகளைப் பரப்புகின்றார்கள். எந்த அளவிற்கு அவரின்  மனத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு இருந்திருந்தால் இவ்வாறு முஸ்லிம்களைத் தேடித்தேடிப் போய்ச் சுட்டுக் கொன்றிருப்பார் என்பதை நாம் ஊகித்துக்கொள்ளலாம்.  

 

மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பைப் பரப்பவும் வெட்டிக்கொண்டு சாகவும் படைக்கப்படவில்லை. ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழவே படைக்கப்பட்டுள்ளனர். அப்படியிருக்கும்போது இது இப்படியே தொடர்ந்தால் இந்திய நாடு வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்பைப் பரப்புவதை நிறுத்திவிட்டு, அன்பைப் பரப்ப முனைவோம். அதுவே நாம் மனிதர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

 

பழையதைக் கிளறாதே: ஒரு கட்சியில் அல்லது ஓர் இயக்கத்தில் இருக்கின்ற தலைவரோ தொண்டரோ தொடக்கக் காலத்தில் ஒருவிதமாகப் பேசியிருப்பார்; பிற்காலத்தில் அது தவறென உணர்ந்திருப்பார். எனவே தான் ஏற்கெனவே பேசியதற்கு மாறாகப் புதிய கருத்தைப் பிறகு பேசியிருப்பார். அதை மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பார்கள். அதையே அவரது வாழ்வின் இறுதி வரை கடைப்பிடித்திருப்பார்.  ஆகவே இறுதியாகப் பேசியதைத்தான் அவரது கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, உணர்ச்சி வேகத்தில், கோபத்தில் பேசிய கடந்த காலக் கருத்துகளை அவரது கொள்கையாகவோ கருத்தாகவோ எடுத்துக்கொண்டு அவரைத் தற்போது நாம் விமர்சனம் செய்வது முறையாகாது. அது அவர்மீது பற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவோர்மீது நமக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். அவ்வாறு வெறுப்பைப் பரப்புவோர் மனித வாழ்வின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் ஆவர்.

 

அந்த வகையில் பெரியார் ஈவெரா தொடக்கக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிய சில கருத்துகள் அண்மையில் புலனம் (வாட்ஸ்அப்) வழியாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அதைப் படிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டுத் தம் கருத்துகளை அவருக்கெதிராகப் பகிர்ந்து வருகின்றார்கள். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. தற்போது அவரைப் பின்பற்றி வருகின்ற  இளைஞர்களுக்கும் இதைப் பரப்புகின்ற இளைஞர்களுக்குமிடையே வெறுப்பை வளர்க்குமே தவிர வேறொன்றும் பயனில்லை. மாறாகப் பழைய கருத்துகளை மறந்துவிட வேண்டும்; அவை காலாவதியான கருத்துகள் ஆகும். பெரியார் ஈவெரா இஸ்லாம் குறித்துக் கடைசியாகப் பேசிய கருத்து, ‘தீண்டாமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து என்பதுதான். இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறித்தும் மீலாது மேடைகளில் அவர் பேசிய எத்தனையெத்தனையோ நற்கருத்துகள் இருக்கின்றன. அவற்றைப் பரப்புவோம்; மனிதர்கள் மத்தியில் அன்பை வளர்ப்போம்.

 

வேதங்கள் மூலம் வெறுப்பைப் பரப்புதல்: 1971ஆம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கை, நிதிச்சுமையைக் காரணம் காட்டி, நீக்கினார் கருணாநிதி. அதாவது ஒருவன் 1971க்கு முன் மது குடித்தால் கைது செய்யப்படுவான். ஆனால் தற்போது ஒருவன் மது குடித்தால் கைது செய்யப்பட மாட்டான். அதுபோலவே திருக்குர்ஆனின் சில கட்டளைகளும் அமைந்துள்ளன. இணைவைப்பாளர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்பது போர்க்காலச் சூழலில் சொல்லப்பட்ட ஒரு வசனம். அதைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, திருக்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது என்று பேசுவது அறியாமையாகும்.

 

அந்தக் கட்டளை பிற்காலத்தில் மாற்றப்பட்டுவிட்டது. லகும் தீனுக்கும் வலிய தீன்-உங்களுக்கு உங்களின் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம் என்ற வசனத்தின்மூலம் திருக்குர்ஆன் மத நல்லிணக்கத்தையே போதிக்கிறது. அதாவது அவரவர் தத்தம் மார்க்கத்தைப் பின்பற்றலாம்; எந்தத் தடையுமில்லை. அதனடிப்படையில்தான் நபியவர்களின் காலத்திலேயே முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்களின் ஆட்சியின்கீழ் நிம்மதியாக வாழ்ந்துள்ளார்கள்.  தற்போது வரை அதுதான் நிலைமை. முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாத கிறிஸ்தவர்கள், யூதர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை வெறுப்பைப் பரப்புவோர் உணர வேண்டும்.

 

அதுபோலவே அம்பேத்கார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் தொடக்கக் காலத்தில் இஸ்லாம் குறித்துத் தவறாகப் பேசியிருக்கலாம்; எழுதியிருக்கலாம். அவற்றையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட வேண்டும். அவர்களின் பழைய கருத்துகளைக் கிளற வேண்டிய அவசியம் நமக்கில்லை. அவர்களுடைய இறுதியான கருத்துகள் என்ன என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை மட்டுமே பரப்ப வேண்டும். அதுவே தற்போது வாழுகின்ற நமக்கு மத்தியில் வேற்றுமைத் தீ பரவாமல் தடுக்கவும், நிம்மதியாக வாழவும் சிறந்த வழியாகும்.

 

திருக்குர்ஆனை எரித்தல்: ஒரு சமுதாய மக்கள் மிகவும் புனிதமாகக் கருதும் வேதத்தை எரித்தல் அல்லது இழிவுபடுத்துதல் மூலம் அவர்கள் மத்தியில் வெறுப்பைப் பரப்புகின்றார்கள். கடந்த ஜூன் மாதம்  ஸ்வீடன் தலைநகரான ஸ்டொக்ஹோம் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர், முஸ்லிம்கள் எல்லோரும் புனிதமாகக் கருதுகின்ற திருக்குர்ஆனை மக்கள் மத்தியில் எரித்துள்ளார். இச்செயல் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் அவரது இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

 

வெறுப்புச் சொற்களை உதிர்த்தல்: நாம் தமிழர் எனும் பெயரில்  கட்சி நடத்துகின்ற சீமான், தமிழ் இளைஞர்களைக் குறிவைத்து, திமுக.விற்கு எதிராகப் படைதிரட்டுகின்ற வேலையைச் செவ்வனே செய்துவருகிறார்.  அவ்வப்போது இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க உரையாற்றுகின்ற அவர், பற்பல பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார். திராவிடத்திற்கு எதிராகத் தமிழினம் என்ற பெயரில் இளைஞர்களை ஒன்றிணைக்க முனைகிறார். திராவிடக் கட்சிகளுக்கு வாக்குச் செலுத்திய முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று பிதற்றுகிறார். ஒரு கட்சி வெற்றிபெறச் சிறுபான்மையினர் செலுத்திய வாக்குகள் மட்டுமே காரணமாக அமையுமா? முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத இந்துக்கள் உள்ளிட்ட பற்பல இனத்தினரும் மதத்தினரும் யாருக்கு வாக்குச் செலுத்தினார்கள்? அவர்கள் வாக்குச் செலுத்தாமலா திமுகவோ அதிமுகவோ வெற்றிபெற்றது? ஆக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் திமுகவிற்கு எதிராகத் திசைதிருப்புவதற்காக எடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

 

இவ்வாறு பற்பல கோணங்களில் வெறுப்புத் தீ பரப்பப்படுகிறது. மனிதர்களை இனரீதியாக, மொழிரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரித்துத் துண்டாடி, ஒற்றுமையைக் குலைத்து, வாக்குகளை வாங்கி, ஆட்சியைப் பிடித்து, சொகுசாக வாழ்வதற்கு அரசியல் வாதிகள் செய்யும் சூழ்ச்சிகள் ஏராளம். குறிப்பாக ஆர்எஸ்எஸ். இயக்கத்தினர் சிறுபான்மை மக்கள்மீது வெறுப்பு ஏற்படும் விதத்தில் தம் உறுப்பினர்களுக்குப் பயிற்சியளிக்கின்றனர்; ஆங்காங்கே துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கின்றனர். இதனால் நாட்டில் வெறுப்பும் அமைதியின்மையும் பரவிக்கொண்டிருக்கின்றன. இனியேனும் அவர்கள் தம் நரித்தனமான சூழ்ச்சிகளையும் நிறுத்திக்கொள்ளட்டும். வருங்காலத்தில் நாம் அனைவரும் மக்கள் மத்தியில் அன்பை வளர்த்து, அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவோம். இனரீதியாக, மொழிரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாகப் பிரிந்துவிடாமல் ஒன்றுபட்டு வாழ்வோம்.      

 

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) சொல்லுங்கள். வெறுப்பைத் தூண்டாதீர்கள் (புகாரீ: 69) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் இப்புவியில் வாழ்ந்து, இந்த மண்ணின், ‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற மூலமந்திரத்தைக் காப்போம்.       

===========







கருத்துகள் இல்லை: