வியாழன், 1 அக்டோபர், 2020

கவனமின்மை தவிர்ப்போம்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 அடுப்பில் பாலை வைத்துப் பற்ற வைத்துவிட்டு, திடீரென ஒலித்த செல்போனை எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டே வெளியே சென்றவள் பேச்சிலேயே இலயித்துவிட்டதால் பால் பொங்கிக் கீழே வழிந்து வீணாகிவிடுவதுண்டு. சில வேளைகளில் அணைக்க வேண்டிய தீயை அணைக்காமல், அடுப்பில் எதையேனும் பாத்திரத்தை வைத்துவிட்டு, மறதியாக வேறு வேலைகளில்  ஈடுபடுவதுண்டு. அதனால் அடுப்பில் வைக்கப்பட்ட பொருள் தீய்ந்துபோய் வீணாகிவிடலாம். இவையெல்லாம் இல்லங்களில் அவ்வப்போது நடைபெறும் கவனமின்மைகள். இதுபோன்ற கவனமின்மையால் பொருள் இழப்புதானே தவிர பேரிழப்போ உயிரிழப்போ இல்லை.

ஆனால் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர், திடீரென ஒலிக்கின்ற செல்பேசியை எடுத்துப் பேசிக்கொண்டே ஓட்டுவதால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்குள்ளாவதுண்டு. அல்லது மிகை வேகத்தால் விபத்து ஏற்படலாம். அல்லது காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட கவனச்சிதறல் விபத்துக்குக் காரணமாவதுண்டு. இதுபோன்ற வாகன ஓட்டிகள் தம்முயிரை இழப்பதோடு பிறரின் உயிரிழப்புக்கும்  காரணமாகின்றனர். இதுபோன்றே கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் தம் கவனக்குறைவால் தம்முயிரை இழப்பதோடு பிறரின் உயிரிழப்புக்கும் காரணமாகின்றனர்.

தற்காலத்தில் பெரும்பாலானோரின் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய ஒரு பொதுவான பொருள் செல்பேசி ஆகும். அவசியத்துக்கும் அவசரத்துக்கும் பயன்படுத்த வேண்டிய பொருளை நம்முள் பலர் எப்போதும் பயன்படுத்திக்கொண்டே இருப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதோடு செய்கின்ற செயல்களில் கவனக்குறைவும் ஏற்படுகிறது. கவனக்குறைவால் அவருக்கு மட்டும் ஆபத்தில்லை. பிறருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. செல்போன் பேசிக்கொண்டே மற்றொரு பணியையும் மேற்கொள்வதால் ஏற்படுகின்ற கவனச் சிதறல் பல்வேறு தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணமாகின்றது.  செல்போன் பேசிக்கொண்டே சமைப்பது, பேசிக்கொண்டே தட்டச்சு செய்வது, பேசிக்கொண்டே பணத்தை எண்ணுவது, பேசிக்கொண்டே சாலையைக் கடப்பது, பேசிக்கொண்டே  பேருந்தில் ஏறுவது, பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது முதலான பல்வேறு செயல்களை இப்படித்தான் பலர் செய்கிறார்கள். கடந்த காலங்களிலும் கவனக்குறைவு இருந்தது என்றாலும் தற்காலத்தில் அது மிகையாகக் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக செல்பேசியால் பல்வேறு விபத்துகளும் பேரிழப்புகளும் ஏற்படுகின்றன என்றால் மிகையில்லை. 

அடுப்பின் நெருப்பைச் சரியாகக் கவனிக்காததால் தமக்கும் விபத்தை ஏற்படுத்திக்கொண்டு, பிறருக்கும் விபத்தை ஏற்படுத்தும் பெண்டிர் உண்டு. அடுப்பைப் பற்ற வைக்கும்போது ஏற்பட்ட கவனக்குறைவால் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் 94 குழந்தைகள் கருகி இறந்த செய்தியை நாம் அனைவரும் அறிவோம். அதுபோல் ஆங்காங்கே நிகழ்கிற கவனக்குறைவால் அவ்வப்போது கேஸ் சிலிண்டர் வெடிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சிலரின் சின்னச் சின்னக் கவனக்குறைவால் பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அல்லது உடலுறுப்புகளை இழந்து ஊனமாக வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே நாம் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். நாம் கவனமாக இருப்பதால் நம்மையும் விபத்திலிருந்து காத்து, பிறரையும் காத்துக்கொள்ளலாம். அது நம் கடமையாகும். இது குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "ஓர் இறைநம்பிக்கையாளர் ஒரு பொந்தில் இரண்டு தடவை கொட்டுப்பட மாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 6133)

ஒரு தடவை ஓரிடத்தில் விபத்து ஏற்பட்டது; அல்லது ஒரு பொருளால் ஏற்பட்டது என்றால் அடுத்த தடவை அதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இரண்டாம் தடவையும் அவ்விடத்திலேயே அல்லது அப்பொருளாலேயே விபத்தை ஏற்படுத்திக்கொண்டால் அவன் கவனமற்றவன்; முட்டாள் என்று பொருள். ஒரு தடவை ஒருவனுக்குக் கடன் கொடுத்து அவன் வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான். இரண்டாம் தடவை வந்து அவன் கடன் கேட்கும்போது, அவன்மீது இரக்கப்பட்டுக் கடன் கொடுப்பது அறிவுடைமையாகாது. முதல் தடவை அனுபவத்தை வைத்து எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும்.

செல்போன் பேசிக்கொண்டே சென்றதால் ஒரு தடவை விபத்து ஏற்பட்டது. இப்போதுதான் உடல் நலம் பெற்றிருக்கிறான். மீண்டும் அதேபோல் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது அறிவுடைமையாகாது. முதல் தடவை அடிபட்டதன்மூலம் படிப்பினை பெற்று எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும். இல்லையேல் அவனை முட்டாள் என்றுதான் சொல்வோம்.

தனிமனிதன் தன்னைப் பற்றி அக்கறையோடும் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும்போது பிறர் தொடர்பான நலம் தம் கையில் இருப்போர் மிகுந்த கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய இடங்களில் பணியாற்றுவோர் மிகுந்த எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவும் அவர்களின் உயிரைப் பறித்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல பிறரின் உயிர்களும் பறிக்கப்படலாம். பெட்ரோல் நிலையங்கள், பட்டாசுத் தொழிற்சாலைகள், துப்பாக்கித் தொழிற்சாலைகள், தீப்பட்டித் தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் முதலானவை. நாம் அடிக்கடி கேள்விப்படுகிற செய்தி: பட்டாசுத் தொழிற்சாலை வெடித்து, பெண்கள் உள்பட 7 பேர் மரணம். எவ்வளவு கவனமாக இருக்க வேண்டிய இடம் அது! ஆனால் யாரோ சிலரின் கவனக் குறைவாலும் அலட்சியத்தாலும் பலரின் உயிர்கள் பறிபோகின்றன.

பட்டாசுத் தொழில் பெரும்பாலான இடங்களில் குடிசைத் தொழிலாக, பாதுகாப்பற்ற நிலையில் நடைபெற்று வருகிறது. அதனால்தான் இந்த விபத்தை நாம் அடிக்கடி கேள்விப்பட நேரிடுகிறது.  அவ்வப்போது விபத்தைக் கேள்விப்பட்டும் மக்கள் மிகுந்த கவனத்தோடு பணியாற்றாமல் கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும் செயல்படுவதே தொடர் விபத்துக்குக் காரணமாகும். தீப்பட்டித் தொழிற்சாலையிலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதைக் கேள்விப்படுகிறோம். இதுவும் குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். பாதுகாப்பற்ற சூழ்நிலையில்தான் வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்தும் பெண்கள் தம் குடும்ப வறுமையைப் போக்க, உயிரைப் பணயம் வைத்து இத்தொழிலைச் செய்து வருகின்றார்கள். காலப்போக்கில் அவர்களின் வறுமை ஒழிகிறதோ இல்லையோ, அவர்கள் ஏதேனும் விபத்தில் மாட்டிக்கொண்டு தம் உயிரை விட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

"மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து ஒருவர் மரணம்'' என்ற செய்தியை அவ்வப்போது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த ஒருவர் செய்ய வேண்டிய பணியைச் செவ்வனே செய்யாததால் பொதுமக்களுள் யாரோ ஒருவர் உயிரிழக்க வேண்டியுள்ளது. "செப்டிக் டேங்கைச் சுத்தம் செய்ய அதனுள் இறங்கிய இரண்டு தொழிலாளிகள் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறி இறப்பு'' என்ற செய்தியையும் நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். தொழிலாளிகளுக்கு வேண்டிய உபகரணங்களை வாங்கிக் கொடுக்காத அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும் அலட்சியத்தாலும் பல உயிர்கள் இதுபோன்று பறிபோகின்றன.

"செல்போன் பேசிக்கொண்டே இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாலிபர் அல்லது இளம்பெண் மரணம்'' என்ற செய்தியை அவ்வப்போது நாம் கேள்விப்படுகிறோம்; நாளிதழ்களில் படிக்கிறோம். "விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்கி மரணம்; விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி மரணம்; வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைமீது டி.வி. விழுந்து மரணம்'' போன்ற செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆக தனிமனிதர்களின் கவனக்குறைவும் அதிகாரிகளின் கவனக்குறைவும்  அலட்சியப்போக்கும் மரணங்களுக்கு வழிவகுக்கின்றன. 

ஒருவரின் கவனக்குறைவால் அவருக்கு மட்டும் ஆபத்து ஏற்படுவது அல்லது உயிர்ப்பலி ஏற்படுவது குறைவான இழப்புதான். ஆனால் ஒருவரின் கவனக்குறைவு அவரது உயிரையும் பறித்து, பிறரின் உயிர்களையும் பறிக்கிறதென்றால் அது மிகப்பெரிய இழப்பாகும். ஆகவே தண்ணீர் லாரி ஓட்டுநர், பள்ளி வாகன ஓட்டுநர், பொதுப் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் ஓட்டுவது அவசியமாகும். அவர்களின் கவனம் சிதறினால் பற்பல உயிர்களை இழக்க வேண்டியது ஏற்படலாம்.

இனியாகிலும் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பில் மிகுந்த கவனம் செலுத்தி, "ஒருபோதும் என்னால் எந்த உயிரும் பறிபோகாதவண்ணம் என் பணியை மேற்கொள்வேன்'' என்று உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.

"ஒவ்வொருவரும் பொறுப்பாளி; ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார்'' என்ற நபிமொழியை நெஞ்சில் நிறுத்தி கவனத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்படுவோம்.

===========================






திங்கள், 28 செப்டம்பர், 2020

கொரோனா-அச்சம் தவிர்!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

------------------------------------------------

அச்சமும் பயமும் மனிதனை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன. எதைப் பார்த்தாலும் பயம்; பயணம் செய்யும்போதும் பயம்; நடக்கும்போதும் பயம்; பேசும்போதும் பயம்; எழுதும்போதும் பயம்; அதிகாரியைச் சந்திக்கும்போதும் பயம்; நோயைக் கண்டு பயம்; மரணத்தைக் கண்டு பயம். எதை நினைத்தாலும் பயம் கவ்விக்கொள்கிறது. இதற்கெல்லாம் தீர்வு உண்டா? நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும் பயந்தால் வேறெதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.

மனிதனின் பார்வைக்குப் புலப்படாத இறைவனுக்கு அஞ்சாமல் அவனை மறந்துவிடுவதால், அவனது கண்ணுக்குப் புலப்படுபவை, புலப்படாதவை ஆகிய எதைக் கண்டபோதிலும் எது குறித்துக் கேள்விப்பட்டபோதிலும் பயம் பற்றிக்கொள்கிறது. நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சமும் பயமும் தொற்றிக்கொள்கிறது. எங்கோ பரவுகின்ற நோய் குறித்துக் கேள்விப்பட்டதும் பயம் மனதைக் கவ்விக்கொள்கிறது.

தற்போது கொரோனா கிருமியைக் கேள்விப்படும்போதெல்லாம் பயம் பற்றிக்கொள்கிறது. அது நம்மைத் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் கவ்விக்கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்திகள் அதற்கு விடையாக அமைந்துள்ளன. தொற்றுநோய் கிடையாது; பறவைச் சகுனம் ஏதும் கிடையாது; ஆந்தைச் சகுனம் ஏதும் கிடையாது; ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5757)

இப்னு உமர் (ரளி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்று நோய் (பற்றிய நம்பிக்கை) கிடையாது; பறவைச் சகுனம் கிடையாது'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே, ஓர் ஒட்டகத்துக்குச் சிரங்கு ஏற்பட்டிருக்கும். பின்னர் அது எல்லா ஒட்டகங்களையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றதே (அது எப்படி)?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதுதான் விதியாகும். அது சரி, முதல் ஒட்டகத்துக்குச் சிரங்கை ஏற்படுத்தியது யார்?'' என்று கேட்டார்கள். (நூல்: இப்னுமாஜா: 83)

ஆக மேற்கண்ட நபிமொழிகள் தெரிவிப்பவை என்னவென்றால், தொற்றுநோய் கிடையாது. எல்லாம் இறைவனின் விதி. இறைவன் யாருக்கு நாடுகின்றானோ அவருக்கு நோயைக் கொடுக்கின்றான். யாரை நாடுகின்றானோ அவரை அந்நோயிலிருந்து காப்பாற்றுகின்றான். சிலருக்கு நோயைக் கொடுத்து, பின்னர் காப்பாற்றுகின்றான். சிலருக்கு நோயைக் கொடுக்காமலே காப்பாற்றுகின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, இன்று வரை கொள்ளை நோய் என்பது உலகில் இருக்கத்தான் செய்கின்றது. அது அவ்வப்போது தலைகாட்டும். எனவே அதைக் கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே அவர்களிடம்) நீர், ‘அல்லாஹ் எங்களுக்கு எழுதியதைத் தவிர வேறு எதுவும் எங்களை ஒருபோதும் அணுகாது. அவனே எங்கள் பொறுப்பாளன்; எனவே இறைநம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்என்று கூறுவீராக. (9: 51) அல்லாஹ் நாடியதைத் தவிர வேறெதுவும் நம்மை அணுகாதுஎன்பதில் நாம் மிக மிக உறுதியாக இருக்க வேண்டும். நம் மனதை எந்த அளவிற்கு உறுதியாகவும் நிலையாகவும் வைத்துக்கொள்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். அல்லாஹ் அத்தகைய ஆற்றலை நம் மனஉறுதிக்குக் கொடுத்துள்ளான்.

தீதும் நன்றும் பிறர்தர வாராஎனும் முதுமொழியை நாம் அறிவோம். அல்லாஹ் நாடாமல் நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. அல்லாஹ் நாடாமல் எந்தத் தீமையும் விளையப்போவதில்லை. அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதரும் நமக்கு இறைநம்பிக்கை மிகுந்த வாழ்க்கையைத்தான் காட்டித் தந்துள்ளார்கள். எனவே நாம் எதைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

தொற்றுநோய் கிடையாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் ஆறுதல் மொழி கூறியிருந்தாலும் இறைநம்பிக்கையில் எல்லோரும் ஒரே அளவினர் கிடையாது. சிலர் தம் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாக இருக்கலாம். பலர் உறுதிகுறைந்தவர்களாக இருக்கலாம். சிலர் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக இருக்கலாம். பலர் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாக இருக்கலாம். ஆக நான்கு வகை மனிதர்கள் உள்ளனர். அவர்களுள் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாகவும் உள்ளோர்,  இறைநம்பிக்கையில் உறுதிகுறைந்தவர்களாக இருந்தாலும் நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தவர்களாக உள்ளோர்,  நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாக இருந்தாலும் இறைநம்பிக்கையில் உறுதிமிக்கவர்களாக உள்ளோர் ஆகியோரைக் கொரோனா உள்ளிட்ட தொற்றுநோய்கள் தாக்குவதில்லை. இறைநம்பிக்கையில் உறுதிகுறைந்தவர்களாகவும் நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களாகவும் உள்ளோரே பெரும்பாலும் இத்தகைய தொற்றுநோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அத்தகைய பலவீனமான இறைநம்பிக்கைகொண்டோரைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட கருத்திற்கு எதிரான கருத்துகளையும் கூறியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி புகாரீ நபிமொழித் தொகுப்பு நூலில் (5707) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நபிமொழி கூறும் உட்கருத்து என்னவெனில், இறைநம்பிக்கையில் பலவீனமானவர்கள்  பிறருக்கு உள்ள நோய் தம்மையும் தொற்றிக்கொள்ளுமோ என்று எண்ணலாம். அவர்களின் பலவீனமான நிலையைக் கருத்தில்கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “தொழுநோயாளியைக் கண்டால் வெருண்டோடிவிடுஎன்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். அதேநேரத்தில் இறைநம்பிக்கையில் வலுவானவர்கள் நோயாளிகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்கு அச்சமும் ஏற்படாது. எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்.

அதுபோலவே கொள்ளைநோய் பரவியுள்ள ஊரிலிருந்து யாரும் கொள்ளைநோய் இல்லாத ஊருக்குச் செல்ல வேண்டாம் என்ற கட்டளையும் அமைந்துள்ளது. ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5728) இந்தச் செய்தியும் இறைநம்பிக்கையில் பலவீனமானவர்களை மனதில் கொண்டு சொல்லப்பட்டதாகும். ஓர் ஊருக்குள் புதிதாக நுழைந்த ஒருவனின் மூலம் நோய் பரவினால், அவ்வூர் மக்கள் அனைவரும் அவனை ஏசுவர்.  இவனால்தான் நமக்கு நோய் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவர். அது இறைநம்பிக்கைக்கு எதிரானதாகும். ஏனெனில்  நோயைக் கொடுப்பதும் அல்லாஹ், அதைக் குணப்படுத்துவதும் அல்லாஹ்தான். அவ்வாறிருக்கும்போது இவனால்தான் நோய் பரவியதுஎன்று கூறுவது எவ்வாறு சரியாகும்? இதையெல்லாம் தவிர்க்கும்முகமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்டுள்ளார்கள்.   

ஆக மேற்கண்ட நபிமொழிகளின் மாறுபட்ட கருத்துகளை அடிப்படையாக வைத்துச் சிந்திக்கும்போது, தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ள நேரத்தில் அறிஞர்கள் எடுத்துள்ள முடிவு சரியானதுதான் என்பது புலப்படும்.  அதாவது இறைநம்பிக்கையில் பலவீனமானவர்களும் பிற மதச் சகோதர, சகோதரிகளும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களின் பீதியைப் போக்கும் வகையில் நாமும் நம்முடைய வழிபாட்டு நேரங்களில் சில மாற்றங்களைச் செய்துகொண்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்குகிறோம். எங்களால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதைச் செயலில் காட்டுவதே நம் நோக்கமாகும். அதுவன்றி, “இறைவன்தான் நோயைக் கொடுக்கின்றான்; அவன்தான் அதைக் குணப்படுத்துகின்றான்என்பதில் முஸ்லிம்கள் உறுதியாகவே இருக்கின்றார்கள்.

தொற்றுநோய் பரவப் பல்வேறு காரணங்கள் உண்டு. நோயாளியைக் கூர்ந்து பார்த்தல், நோயாளியின் அருகிலேயே நீண்ட நேரம் இருத்தல், காற்றின் மூலம் பரவுதல் முதலானவை. மனிதர்கள் இரண்டு வகையினர் உண்டு. சூடான இயல்பு கொண்டவர்கள், குளிர்ச்சியான இயல்பு கொண்டவர்கள். குளிர்ச்சியான இயல்பு கொண்டவர்களுக்குத்தான் நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு. எனவே அத்தகையோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

 

நோய் உள்ளவரிடம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே தவிர, நோய் இல்லாதவர்களைப் பார்க்கும்போதும் அவர்கள் நம்மிடம் பேச எத்தனிக்கின்றபோதும் ஒதுங்கிச் செல்வது நன்றாக இருக்காது. அவ்வாறு செய்தால் நாம் யாரிடமும் பேசவோ பழகவோ முடியாது. அப்படியான சூழ்நிலைதான் இப்போது நம்மிடையே நிலவுகிறது. யாரைப் பார்த்தாலும் சந்தேகம் கொள்வது, ஒதுங்கிக்கொள்வது எச்சரிக்கை உணர்வில் சேராது. நம்மோடு எப்போதும் இயல்பாகப் பழகுகின்றவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கும்போது  அவர்களிடம் நாம்  பேசாமல் ஒதுங்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொழுகை நேரத்திற்குப் பள்ளிக்குச் சென்று தொழுவதையும் பிற இடங்களுக்கு இயல்பாகச் செல்வதையும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

இந்த (கஅபா எனும்) வீட்டின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். அவன்தான் அவர்களின் பசிக்கு உணவளித்தான். அச்சத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்” (106: 3-4) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த இறைவசனத்தின் அடிப்படையில் பசிக்கு உணவளித்து, அச்சத்திலிருந்தும் பீதியிலிருந்தும் அபயமளிப்பவன் அல்லாஹ் என்பதை நாம் உணர்வோம். அவன் ஒருவனை அஞ்சினால் வேறு எப்பொருளுக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. எனவே பரவிவருகின்ற நோயைக் கண்டு நாம் அஞ்சாமல் அல்லாஹ் ஒருவனையே அஞ்சி, அவனையே சார்ந்திருப்போம். அவனையே வணங்குவோம். அவனிடமே கையேந்துவோம்.

================================










ஞாயிறு, 5 ஜூலை, 2020

புதிதாய் எழுதுவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

நாம் ஒருவரைப் பார்த்ததும் விரும்புகிறோம். மற்றொருவரைப் பார்த்ததும் வெறுக்கிறோம். இருவரும் நம் பார்வையில் அவ்வப்போது வந்துசெல்பவர்கள். ஒருவர் நம்முடன் நெருங்கிப் பழகுகிறார்;  அன்பாக நலம் விசாரிக்கிறார். அவரைப் பற்றிய நன்மதிப்பும் அன்பும் நம் மனதில் பதிந்துவிடுகின்றன. மற்றொருவர் நமக்கு ஏதும் நன்மை செய்யவில்லை; அன்பாகப் பழகவில்லை; அத்தோடு ஏதோ ஒரு தடவை நம் மனதுக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அவ்வளவுதான். ஆகவே அவரைப் பற்றிய தவறான பிம்பம் நம் மனதில் பதிந்துவிட்டது. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் தவறான அப்பிம்பமே நம் மனதில் தோன்றுகிறது. அதுவே அவரை வெறுக்கத் தூண்டுகிறது.

மனைவியாக இருக்கலாம்; அண்டைவீட்டாராக இருக்கலாம்; உறவினராக இருக்கலாம்; உடன் பணியாற்றுபவராக இருக்கலாம். அவர்கள் முதல் தடவை எப்படி நம்மிடம் நடந்துகொள்கின்றார்களோ அதை வைத்து, இவர் இப்படித்தான் என்று நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். அதனால் நாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனதில் பதிவு செய்ததையே நம் மனம் முன்னிலைப்படுத்துகிறது. எனவே அவர்களுள் சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் மகிழ்கிறது. அவர்களுள் வேறு சிலரைப் பார்க்கும்போதே நம் மனம் வெறுக்கிறது.

ஏதோ ஒரு தடவை நம் முதலாளி நம்மிடம் கடுமையாக நடந்துகொண்டார் என்பதற்காக அவரைப் பற்றி நம் மனதில், அவர் கடுகடுப்பானவர்; கோபக்காரர் என்று பதிவு செய்துகொள்கிறோம்.  பிறகு அவரைப் பார்க்கும்போதெல்லாம் அவரைப் பற்றி நம் மனதில் பதிவுசெய்தவையே தோன்றித் தோன்றி மறைகின்றன. எனவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்குப் பிடிப்பதில்லை.
நம்முடைய மனக்குழப்பத்திற்கும் நிம்மதியின்மைக்கும் காரணம் இதுதான். ஒரு விஷயத்தைப் பற்றி, இது தீராத பிரச்சனை என்றோ தீர்க்க முடியாத பிரச்சனை என்றோ நம் மனதில் பதிவு செய்துகொள்கிறோம். எனவே அதைப் பற்றிப் பேசினாலே நமக்குப் பிடிப்பதில்லை. தீராப் பிரச்சனை என்று நம் மனதில் பதிவு செய்துவிட்டதால், அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழியை நாம் ஆராய்வதே இல்லை; அது குறித்துச் சிந்திப்பதே இல்லை. எனவே அது தீராப் பிரச்சனையாகவே நீடிக்கிறது.

அண்டை வீட்டார் ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார்; அல்லது நமக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டார் என்பதற்காக அவரைப் பற்றிய நம் கணிப்பு, அவர் எப்போதும் சண்டை போடுபவர் என்பதுதான். அதன்பின் அவரிடம் ஒரு தடவையேனும் அன்பாகப் பேசிப் பார்த்திருக்கிறோமா? அன்பாக நலம் விசாரித்திருக்கிறோமா? அப்படிச் செய்திருந்தால் அவர் நல்லவரா,  கெட்டவரா என்பது நமக்குப் புரிந்திருக்கும்.

நம் சகோதரனோ, சகோதரியோ, உறவினரோ ஏதோ ஒரு தடவை நம்மை எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக மாதக் கணக்காக, ஆண்டுக்கணக்காக அவரிடம் பேசாமல் இருப்பது சரியா? அவர் அப்படித்தான் என்று பதிந்துவிட்ட எதிர்மறையான பிம்பத்தை அழிக்க நாம் என்றாவது ஒரு நாள் முயன்றுள்ளோமா? நம்மோடு ஒன்றாக வாழ்ந்தவராயிற்றே. சொத்துப் பங்கீட்டின்போதோ திருமண நிகழ்வின் போதோ ஏற்பட்ட கசப்பான அனுபவம் இன்னும் நம் மனதில் தோன்றித் தோன்றி மறைகிறதே. அதை அழிக்க முயன்றுள்ளோமா?

நாம் ஒருவரைப் பற்றி எப்போதோ நம் மனதில் பதிந்த நேர்மறையான எண்ணத்தை மாற்றி எழுதப் பழகிக்கொண்டால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். எல்லோரும் நம் அன்பிற்குரியோராக மாறிவிடுவர். ஆம். நாம் ஒருவரைப் பற்றி நம் மனதில் எழுதிய கடந்த காலப் பிம்பத்தை அழித்துவிட்டு, தற்போது அவரைப் பற்றிப் புதிதாக எழுத வேண்டும். நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அவரைப் பற்றிய நற்குணங்களையும் நல்ல எண்ணங்களையும் நம் மனதில் புதிதாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்போது அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்து அகற்றப்பட்டு, நேர்மறையான கருத்து, அவரைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றும்.

எழுதுபலகையில் கண்டபடி கிறுக்கப்பட்டவற்றையெல்லாம் அழித்துத் தூய்மைப்படுத்தினால்தான் அதில் அழகிய ஓவியத்தைத் தீட்ட முடியும்; அழகிய எழுத்துகளால் அதை நிறைக்க முடியும். கிறுக்கப்பட்டவற்றை அழிக்காமலேயே அதில் மேலும் மேலும் எழுதினால் எதுவும் தெரியாது. 

அதுபோலவே நம் மனது எனும் எழுதுபலகையில் பிறரைப் பற்றித் தப்பும் தவறுமாக நிறைய எழுதி எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளோம். அவற்றை அழித்துச் சுத்தப்படுத்தினால்தான் நாம் நம் மனதில் புதிது புதிதாக எழுத முடியும். நம் அண்டைவீட்டார், உறவினர், மனைவி, சகோதரர், சகோதரி என யாரைப் பற்றி நாம் நம் மனப் பலகையில் தவறாகவும் எதிர்மறையாகவும் எழுதி வைத்துள்ளோமோ அவ்வளவையும் அழித்துவிட்டு, அவர்களைப் பற்றிச் சரியாகவும் நேர்மறையாகவும் எழுதி வைத்தால்  நாம் அவர்களைச் சந்திக்க நேரிடுகின்றபோது நம்மையறியாமலேயே அவர்கள்மீது அன்பு ஏற்படும். அதனால் அவர்களுக்கு நன்மையோ இல்லையோ நமக்கு நன்மை; நம் மனதுக்கு மகிழ்ச்சி.

இவ்வுலகைப் படைத்த இறைவன், தன் அடியார்கள் செய்கின்ற பாவங்களை மன்னித்துக்கொண்டே இருக்கின்றான். மனிதன் பாவம் செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்கின்றான். அதை உடனடியாக இறைவன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு மன்னிப்பு வழங்குகின்றான். மீண்டும் ஷைத்தானின் தூண்டலால் பாவம் செய்துவிடுகின்றான். பின்னர் அதை உணர்ந்து இறைவனிடம் அழுது மன்னிப்பு கேட்கின்றான். அவனுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவனுக்கு மீண்டும் மன்னிப்பு வழங்குகின்றான். இதுதான் இறைவனின் அன்பிற்கும் கருணைக்குமான அடையாளமாகத் திகழ்கின்றது. அடியான் எத்தனை தடவை பாவம் செய்தாலும், அவன் மன்னிப்பு கேட்டவுடனேயே அவனை மன்னித்துவிடுகின்றான்.

ஆனால் நாம், என்றோ ஒரு நாள் நம் சகோதரன் நம்மை வன்மையாகப் பேசிவிட்டான் என்பதற்காக அவனுடன் ஆண்டுக்கணக்கில் பேசுவதில்லை; அவனுடைய வீட்டிற்குச் செல்வதில்லை. அதனைத் தொடர்ந்து அவனுடைய பிள்ளைகளிடமும் பேசுவதில்லை. காரணம், அவன் அன்று பேசிய பேச்சை நம் மனதிலிருந்து நம்மால் அழிக்க முடியவில்லை. அதைச் சுமந்துகொண்டே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைத் திருப்பித் திருப்பி நம் நினைவில் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு மனப்பாரம் கூடுகின்றது; நெஞ்சு படபடக்கிறது.  அவனை எங்கேனும் ஓரிடத்தில் அல்லது ஒரு திருமணத்தில் சந்திக்க நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்று விடுகிறோம். 

இதனால் நம் மகிழ்ச்சி பாழாகிறதல்லவா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழியை இவ்விடத்தில் நினைவுகூர்வது இன்றியமையாதது: "ஒரு முஸ்லிம் தம் சகோதரரை (அவருடன் கோபித்துக்கொண்டு) மூன்று நாள்களுக்குமேல் வெறுத்து ஒதுக்கக்கூடாது. அவ்விருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். இவர் அவரைப் புறக்கணிக்கிறார்; அவர் இவரைப் புறக்கணிக்கிறார். (இவ்வாறிருக்கும்போது) அவ்விருவருள் யார் சலாம் சொல்லி(ப் பேச்சை)த் தொடங்குகின்றாரோ அவரே சிறந்தவர்.'' (நூல்: அபூதாவூத்: 4265)

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பேர் எத்தனையோ தருணங்களில் தொல்லை  கொடுத்திருக்கின்றார்கள்
துன்புறுத்தியிருக்கின்றார்கள்; கடுஞ்சொற்களால் வதைத்திருக்கின்றார்கள்.  ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் தம் மனதுக்குள் பதிய வைத்துக்கொள்ளவில்லை. ஒருவரைப் பற்றிய நன்மதிப்பை மட்டுமே பதிய வைத்துக்கொள்வார்கள். அதனால்தான் அவர்களால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது. யாரைப் பார்த்தாலும் புன்முறுவலோடும் மலர்ந்த முகத்தோடும் சந்திக்க முடிந்தது. எனவே மன்னிப்பதும் நம் மனதிலுள்ள பழைய பதிவுகளை அழித்துவிட்டு, ஒருவரைப் பற்றிப் புதிய புதிய நன்மதிப்புகளைப் பதிய வைத்துக்கொள்வதும்தான் நம் மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிவகுக்கும். ஆகவே நம் மனதிலுள்ள பழையனவற்றை அழித்துவிட்டு, புதிது புதிதாக எழுதுவோம்; புத்துணர்வு பெறுவோம்; மகிழ்ச்சியாய் வாழ்வோம்.
========================================






வியாழன், 4 ஜூன், 2020

மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்-40


தொடர் - 2
மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்-40
____________ 
சென்னை கல்மண்டபம் அருகிலுள்ள ஏரியாவில்
வசித்து வருகின்ற ஓர் இளம் மெளலவி மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் அவர்களோடு  நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.      

அவர் தம் தங்கைக்குத் திருமணம் முடிக்கவும் வீட்டுத் தேவைகளுக்காகவும் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்பச் செலுத்த இயலாமல் மிகவும் சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து நிராசையாகிவிட்டார்; மனமுடைந்து போய்விட்டார்.


அச்சமயத்தில் உஸ்தாதைச் சந்தித்துவிட்டு வந்தால் மனசுக்கு அமைதி ஏற்படுமே என்றெண்ணி, ஹழ்ரத் அவர்களைச் சந்திக்கச் சென்றார். தம் சோகங்களையும் மன வேதனைகளையும் எடுத்துச் சொன்னார். அதற்கவர்கள், குறிப்பிட்ட அவ்ராதைச் சொல்லிக் கொடுத்து “இதை 40 நாள்கள் தொடர்ந்து ஓதிவிட்டு 41 ஆம் நாள் என்னைச் சந்திங்கம்மா. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவரும் அந்த அவ்ராதை 40 நாள்கள் இடைவிடாமல் ஓதிவந்தார். பின்னர் மலர்ந்த முகத்துடன் உஸ்தாதைச் சந்திக்கச் சென்றார்.

அவரை அன்புடன் வரவேற்று ஆரத்தழுவி அரவணைத்து, ஐம்பதாயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அந்த இளம் மௌலவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. பணம் கொடுத்ததோடு விட்டுவிடாமல், அழகிய அறிவுரையும் வழங்கினார்கள். வாப்பா, நாம் எப்போதும் அல்லாஹ்வை நம்பியிருக்கணும்; அவன் தருவான் என்று நம்பணும்; போதுமென்ற மனதோடு வாழப் பழகிக்கணும்; பிறரிடம் வாங்கியே வாழ்ந்திடலாம் என்று இருக்கக்கூடாதுஎன்ற அறிவுரையோடு அனுப்பிவைத்தார்கள்.  

இதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அல்லாஹ் தருவான்என்று சொல்லி அனுப்பிவைத்து, 40 நாள்களுக்குப் பிறகு அவர்களைச் சந்தித்தபின் அல்லாஹ் தருவான்என்ற நம்பிக்கையோடு வந்தவரிடம் பணத்தைக் கொடுத்து, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

வாங்கிய மனம் அதையே பழகிக்கொண்டு அவ்வப்போது வந்து கைநீட்டிவிடக்கூடாது; போதுமென்ற மனதோடும், இருப்பதைக் கொண்டு திருப்தியோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கி அனுப்பிவைக்கிறார்கள். 

இதையெல்லாம் அவர்களின் நடைமுறை வாழ்க்கையிலிருந்து பாடங்களாக நாம் பெற்றுக்கொள்ளலாம்.

(தொடரும்)

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி
04.06.2020 11.10.1441
=================================