தொடர் - 2
மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்-40
____________
சென்னை கல்மண்டபம் அருகிலுள்ள ஏரியாவில்
வசித்து வருகின்ற ஓர் இளம் மெளலவி மர்ஹூம் அப்துர் ரஹ்மான்
ஹழ்ரத் அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் தம் தங்கைக்குத் திருமணம் முடிக்கவும் வீட்டுத்
தேவைகளுக்காகவும் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்பச் செலுத்த இயலாமல் மிகவும்
சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து நிராசையாகிவிட்டார்; மனமுடைந்து
போய்விட்டார்.
அச்சமயத்தில் உஸ்தாதைச் சந்தித்துவிட்டு வந்தால் மனசுக்கு
அமைதி ஏற்படுமே என்றெண்ணி, ஹழ்ரத் அவர்களைச் சந்திக்கச் சென்றார். தம் சோகங்களையும் மன
வேதனைகளையும் எடுத்துச் சொன்னார். அதற்கவர்கள், குறிப்பிட்ட
அவ்ராதைச் சொல்லிக் கொடுத்து “இதை 40 நாள்கள்
தொடர்ந்து ஓதிவிட்டு 41 ஆம் நாள் என்னைச் சந்திங்கம்மா. அல்லாஹ் உங்களுக்கு உதவி
செய்வான்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவரும் அந்த அவ்ராதை 40 நாள்கள்
இடைவிடாமல் ஓதிவந்தார். பின்னர் மலர்ந்த முகத்துடன் உஸ்தாதைச் சந்திக்கச்
சென்றார்.
அவரை அன்புடன் வரவேற்று ஆரத்தழுவி அரவணைத்து, ஐம்பதாயிரம் ரூபாயை
அவர் கையில் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அந்த இளம் மௌலவி அடைந்த ஆனந்தத்திற்கு
அளவில்லை. பணம் கொடுத்ததோடு விட்டுவிடாமல், அழகிய அறிவுரையும் வழங்கினார்கள். “வாப்பா, நாம் எப்போதும் அல்லாஹ்வை
நம்பியிருக்கணும்; அவன் தருவான் என்று
நம்பணும்; போதுமென்ற மனதோடு
வாழப் பழகிக்கணும்; பிறரிடம் வாங்கியே
வாழ்ந்திடலாம் என்று இருக்கக்கூடாது” என்ற அறிவுரையோடு அனுப்பிவைத்தார்கள்.
இதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. “அல்லாஹ் தருவான்” என்று சொல்லி அனுப்பிவைத்து, 40 நாள்களுக்குப்
பிறகு அவர்களைச் சந்தித்தபின் “அல்லாஹ் தருவான்” என்ற நம்பிக்கையோடு
வந்தவரிடம் பணத்தைக் கொடுத்து,
அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
வாங்கிய மனம் அதையே பழகிக்கொண்டு அவ்வப்போது வந்து கைநீட்டிவிடக்கூடாது; போதுமென்ற மனதோடும், இருப்பதைக் கொண்டு திருப்தியோடும் வாழப் பழகிக்கொள்ள
வேண்டுமென்ற எண்ணத்தை உண்டாக்கி அனுப்பிவைக்கிறார்கள்.
இதையெல்லாம் அவர்களின் நடைமுறை வாழ்க்கையிலிருந்து பாடங்களாக
நாம் பெற்றுக்கொள்ளலாம்.
(தொடரும்)
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
04.06.2020 11.10.1441
=================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக