வெள்ளி, 17 அக்டோபர், 2025

திருமணத்திற்குத் தகுதியானவர் யார்?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

திருமணம் எனது வழிமுறை. யார் என் வழிமுறையைச் செயல்படுத்தவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை...” (இப்னுமாஜா: 1846/ 1836) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். இதன் அடிப்படையில்தான் நாம் அனைவரும் திருமணம் செய்துகொள்கிறோம்; திருமணம் செய்துவைக்கிறோம். ஆனால் எல்லோருமே திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்று கேட்டால், அதில் விதிவிலக்கு உள்ளோரும் இருக்கின்றனர் என்பதே பதிலாகும். இளைஞர்கள் மூவிதம் உள்ளனர். 1. ஆண்மை உணர்வு அளவுக்கு மிஞ்சிய நிலையிலுள்ள இளைஞர்கள். 2. ஆண்மை உணர்வு அறவே இல்லாத இளைஞர்கள். 3. ஆண்மை உணர்வு இயல்பாக உள்ள இளைஞர்கள்.

 

இம்மூவகையினருள் முதலாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (ஃபர்ள்) கட்டாயமானதாகும். இரண்டாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும். மூன்றாம் வகையினர் திருமணம் செய்துகொள்வது (சுன்னத்) நபிவழியாகும். முதலாம் வகையினர் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர்கள் விபச்சாரம் போன்ற தவறான வழியில் சென்றுவிட வாய்ப்புண்டு. எனவேதான் அவர்கள் திருமணம் செய்துகொள்வது கடமை என்கிறோம். இரண்டாம் வகையினர் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் தம் மனைவியைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்த இயலாது. அதனால் அப்பெண்ணின் வாழ்க்கை இழப்புக்குரியதாக மாறிவிடும். எனவேதான் அத்தகையோர் திருமணம் செய்வதுகொள்வது தடைசெய்யப்பட்டது என்கிறோம்.

 

ஆக இளைஞர்களாக உள்ள அனைவரும் திருமணம் செய்துகொள்வது சுன்னத் இல்லை. மாறாக ஆண்மை உணர்வுள்ள ஆண்களுக்குத்தான் திருமணம் செய்துகொள்வது சுன்னத் ஆகும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இளைஞர்களை நோக்கி, “இளைஞர்களே! (உங்களுள்) தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று சொன்னார்கள் (புகாரீ: 5066)

 

இந்த நபிமொழி நமக்கு உணர்த்துவது, தாம்பத்திய உறவு மேற்கொள்வதற்கான ஆற்றல் உள்ளோர்தாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தாம்பத்திய உறவில் மனைவியைத் திருப்திப்படுத்த இயலாது எனும் நிலையிலுள்ள இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வது தடையாகும். ஏனெனில் ஒவ்வோர் ஆணுக்கும் உணர்வுகள் இருப்பதைப்போல் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளின் தேவையை நிறைவேற்றுவதே மணமுடித்த ஆண்-பெண் இருபாலரின் கடமையாகும். அந்தத் தேவையை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் புரிதல் உணர்வோடு செயல்பட வேண்டும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்வதன்மூலம் தம் கற்பைக் காத்துக்கொள்ளலாம்.

 

திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஓர் இளைஞர் தம் மனைவியாக வரவுள்ள பெண்ணுக்குக் குறிப்பிட்ட அளவு மஹ்ர் (மணக்கொடை) கொடுக்க வேண்டும். அது பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ இருக்கலாம். ஓர் இளைஞர் ஏழையாக இருக்கிறார். அதேநேரத்தில் திருமணம் செய்துகொள்ள ஆர்வத்தோடு இருக்கிறார். ஆனால் மஹ்ர் கொடுக்க அவரிடம் எதுவும் இல்லை. இப்போது இவர் திருமணம் செய்துகொள்ளலாமா? ஆம். அவர் திருமணம் செய்துகொள்ளலாம். ஏனெனில் திருமணத்திற்கு மிக முக்கியத் தகுதி, அவர் தம் மனைவியைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்தும் வகையில் ஆண்மை உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் என்பதே. மாறாக பொருளாதாரம் இல்லை. அது இரண்டாம் பட்சம்தான். பின்வரும் நிகழ்வு அதற்குச் சான்றாக உள்ளது.

 

சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று சொன் னார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக்கொண்டார்கள். பிறகு தமது தலையைத் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.

 

தம் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களுள் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!” என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அவரிடம்), “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும்  இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று பதில் சொன்னார்.

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவர் போய்ப் பார்த்துவிட்டு, பிறகு திரும்பி வந்து, “இல்லை. அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “இரும்பாலான ஒரு மோதிரமாவது (கிடைக்குமா எனத்) தேடிப்பார்!” என்றார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒன்றும்) கிடைக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம்கூடக் கிடைக்கவில்லை; ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது” என்றார். -அறிவிப்பாளர் சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை; அதனால்தான் தமது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.-

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உமது (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவள்மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் உம்மீது அதில் ஏதும் இருக்காது. (உமது வேட்டியைக் கொடுத்து விட்டு என்ன செய்யப்போகிறாய்?)” என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள்.

 

அவ்வாறே அவர் அழைத்துவரப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “(குர்ஆனில்) இன்ன அத்தியாயம்இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிச் சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். “ஆம் (ஓதுவேன்)” என்று அவர் பதிலளித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!” என்று சொன்னார்கள். (புகாரீ: 5126)

 

மஹ்ராகக் கொடுக்க ஓர் இரும்பு மோதிரம்கூட இல்லாத, மாற்றுத் துணிகூட இல்லாத ஒருவருக்குத் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்கள் மனனமாகத் தெரிந்துள்ளதை அப்பெண்ணுக்குக் கற்றுக்கொடுப்பதையே மஹ்ராக ஆக்கித் திருமணம் செய்துவைத்தார்கள். ஆக அவர் பரம ஏழை என்பது தெளிவாகிறது. இருப்பினும் அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணமுடித்துவைத்த காரணம், அவர் அப்பெண்ணைத் தாம்பத்திய உறவில் திருப்திப்படுத்தும் ஆண்மையுள்ளவராக இருந்தார் என்பதால்தான்.

 

இவ்வாறு ஆண்மையுள்ளோராக இருந்தும் மஹ்ர் கொடுக்க வசதியில்லாத ஏழைகளாக இருந்தால் அவர்களுக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்பதுதான் அல்லாஹ்வின் கட்டளை. அதையே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: (ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களுள் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லோர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் அல்லாஹ் தன் அருளால் அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவனாகவும் (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (24: 32)

 

ஆகவே இந்த இறைவசனத்தின்படி, ஒவ்வொரு மஹல்லாவிலும் தாம்பத்திய உறவுக்குத் தகுதியான ஏழ்மை நிலையிலுள்ள இளைஞர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது செல்வர்கள்மீதும் அந்தந்தப் பள்ளித்  தலைவர்கள், நிர்வாகிகள்மீதும் கடமையாகும்.

 

ஒரு பெண்ணுக்கு ஆண்மையற்ற கணவன் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கப்பெற்றால், அவள் உடனடியாக அவனிடமிருந்து குலா பெறக் கூடாது. ஏனெனில் சிலருக்கு எல்லாப் பருவங்களிலும் ஆண்குறியில் விரைப்புத்தன்மை ஏற்படாது. ஆண்டின் நான்கு பருவங்களில் ஏதேனும் பருவத்தில் அவனுக்கு விரைப்புத்தன்மை ஏற்படலாம். அச்சமயத்தில் அவன் தன் மனைவியைத் திருப்திப்படுத்துவான். அதன்பின் அவர்களுக்குக் குழந்தையும் பிறக்கும். எனவே அவசரப்பட்டு, பெண்கள் குலா வாங்க முயலக் கூடாது.

 

இதுபோன்ற ஒரு நிகழ்வு நபியவர்களின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: ரிஃபாஆ அல்குரழீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மண உறவில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார்.  ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான) அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள். (புகாரீ: 2639)

 

அந்தப் பெண்மணி அவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின்னர்தான் அந்த ஆணுடைய நிலையை எடுத்துரைக்கிறார். இருந்தாலும் நபியவர்கள் உடனடியாக அப்பெண்ணுக்கு குலா கொடுத்துவிடுமாறு கட்டளையிடவில்லை. மாறாக நீயும் அவரும் ஒருவருக்கொருவர் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே அவரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து யோசிக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்கள். ஆகவே ஒரு பெண், ஆண்மைக் குறைபாடு என்ற காரணத்தை முன்வைத்து குலா கேட்டால், உடனடியாகக் கொடுத்துவிடாமல் ஓராண்டு வரை காத்திருக்குமாறு காழீ சொல்ல வேண்டும். அந்த ஓராண்டுக் காலத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபட்டு ஒருவரையொருவர் திருப்திப்படுத்த முயல வேண்டும்.

 

மேலும் ஆண்மைக் குறைபாடு என்பது பெரும்பாலும் தீர்க்க முடியாத குறைபாடு இல்லை. அதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்று, இயற்கை மருந்துகளைச் சாப்பிட்டால் எளிதில் சரிசெய்து விடலாம். ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு உள்ளதைப் போலவே பெண்களுக்குப் பெண்மைக் குறைபாடு உண்டு. அதாவது ஆண்களைப் பார்த்தால் எந்த உணர்வும் ஆசையும் ஏற்படாது. எவ்வளவு தூண்டினாலும் தொடுஉணர்வு செயல்படாது. இத்தகைய பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக் கூடாது. அதுபோலவே தீராப் பிணிக்கு ஆளான பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்கக்கூடாது.

 

ஆக எதிர் பாலினத்தைப் பார்க்கும்போது ஈர்ப்பு ஏற்படுகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமேயன்றி, ஈர்ப்பில்லாத ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்துவைப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு பெற்றோரும் பொறுப்பாளர்களும் உணர வேண்டும். குறிப்பாக ஆண்-பெண் விருப்பமின்றித் திருமணம் செய்துவைப்பதைத் தவிர்த்தல் வேண்டும். அதுவே தம்பதியர் தலாக், குலா எனும் முடிவுக்குச் செல்வதைத் தடுக்கும் வழியாகும்.

============================

















கருத்துகள் இல்லை: