-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(பொறுப்பாசிரியர், இனிய திசைகள் மாதஇதழ்,
இமாம், மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28)
பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டும் இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டையும் கற்றுக்கொள்வதும் இரண்டிலும் பயிற்சி பெறுவதும் மிகவும் அவசியமாகும். இவ்விரண்டும் ஒரு கல்வியாளர் தம் கல்வியை மக்களுக்குத் எடுத்துச் சொல்ல உதவும் ஊடகங்கள் ஆகும். ஆகவே கற்கும் காலத்திலேயே ஒவ்வொரு மாணவரும் இந்த இரண்டு ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டு, பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. அதனால்தான் “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்று பாடி வைத்தார்கள்.
இன்றைய பெரும்பாலான அறிஞர்களின் கல்வி அவர்களுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது என்பதே உண்மை. அதேநேரத்தில் பேச்சாற்றல் மட்டும் உள்ளோர், தாம் கற்ற கல்வியைத் தம் பேச்சின் மூலம் மக்களுக்குச் சேர்த்துவிடுகின்றனர். அத்தோடு எழுத்தாற்றலும் இருந்தால், அவர்கள்தாம் தம் கல்வியை எழுத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு என்றென்றும் பயனுள்ளதாக ஆக்க முடியும். அத்தகைய எழுத்தாளர்களின் உழைப்பைத்தான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
எழுத்தின்மூலம் நாம் பதிவு செய்கின்ற நற்கருத்துகள் நூல்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவை எதிர்காலச் சமுதாயத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி. கடந்த காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள் பதிவு செய்தவற்றைத்தான் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். திருக்குர்ஆனின் விரிவுரைகள், நபிமொழித் திரட்டுகள், இஸ்லாமியச் சட்டவியல் (ஃபிக்ஹு) சார்ந்த நூல்கள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளனவென்றால் அது அவர்களுடைய எழுத்தின் பயனே ஆகும்.
இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்ற அழைப்புப் பணியில் இரண்டு ஆற்றல்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. முதன்முதலாகப் பேச்சாற்றல்தான் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் அந்தந்த மொழிபேசும் இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அதனால் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தமது தாய்மொழியில் பேசி, மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி அழைத்தனர் என்பது திருக்குர்ஆன் கூறும் வரலாறு. அல்லாஹ் கூறுகின்றான்: “எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியை உடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.” (அல்குர்ஆன்: 14: 4)
அந்த வகையில் நம்முடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அரபிமொழியில் சிறப்பாகப் பேசுகின்ற ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். அவர்களின் இலக்கிய நயமிக்க பேச்சால் பலர் ஈர்க்கப்பட்டனர். “பேச்சுக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது” என்ற நபிமொழியே அதற்குச் சான்றாக உள்ளது. மேலும் அல்லாஹ் தன் தூதருக்கு அழகிய இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றலை வழங்கியிருந்ததாலேயே அந்தத் தூதர் அரபியக் கவிஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்க்கவும் அழைக்கவும் இயன்றது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் மத்தியில் அவ்வப்போது ஆற்றிய சின்னச்சின்னச் சொற்பொழிவுகளும் வழங்கிய அறிவுரைகளும் மக்கள் மனங்களைப் பண்படுத்தின; தாமும் அவ்வாறே வாழவேண்டும் என்ற வேட்கையை விதைத்தன. அவர்களின் உரை அனைவருக்கும் ஓர் உற்சாகப் பானமாக இருந்தது. புதிது புதிதாகப் பலர் இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வந்தனர்.
நபியவர்களுக்குப்பின், அவர்களின் பாசறையில் பயின்ற நல்வழிபெற்ற கலீஃபாக்கள் தம் திறமைமிகு பேச்சால் மக்களை ஓரிறைக்கொள்கை நோக்கி அழைத்தார்கள். அத்தோடு தம் ஆட்சியைச் சிறப்பாக நடத்திய காரணத்தால் அதைப் பார்த்தே பலர் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அனைவரையும் சமமாக நடத்தினர். அனைவருக்கும் சமநீதி வழங்கினர் என்பது வரலாறு.
பேச்சாளர்கள் செய்த அழைப்புப் பணி: ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சபையில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து அவர்தம் பேச்சைக் கேட்பார்கள். ஆயிரக்கணக்கானோர் அவர்தம் பேச்சால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பேச்சாளர்கள் இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி தொடங்கப்பட்ட பின் அங்கிருந்து படித்துப் பட்டம் பெற்றுச் சென்ற ஆலிம்கள் பலர் பேச்சாளர்களாக உலா வந்தார்கள். ஒவ்வோர் ஊரிலும் தங்கியிருந்து மார்க்கப் பணியாற்றினார்கள். தம் பேச்சுத் திறனால் மக்கள் மத்தியில் மார்க்கப் போதனைகளைப் போதித்தார்கள். அவர்களுள் ஷம்ஸுல் ஹுதா பாகவி, கலீல் அஹ்மத் கீரனூரி, மணிமொழி மௌலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி, டிஜேஎம். ஸலாஹுத்தீன் ரியாஜி, கலந்தர் மஸ்தான் மஹ்ழரி, முஹம்மது ஷப்பீர் அலீ பாகவி, பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் பாகவி -ரஹிமஹுமுல்லாஹ் - உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
கடிதம்மூலம் அழைப்புப் பணி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தாலும், தம் பேச்சால் மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்த்ததைப்போன்று, அழைப்புப் பணிக்கு எழுத்தையும் பயன்படுத்தினார்கள். அந்த அடிப்படையில் எழுதத் தெரிந்த எழுத்தர்கள் மூலம் அண்டை நாட்டு அரசர்களுக்குக் கடிதம் எழுதி, தூதர்கள்மூலம் அழைப்பு விடுத்தார்கள். அவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர்; வேறு சிலர் மறுத்தனர். அந்த நேரத்தில் மறுத்தவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு தூதராகச் சென்றார் நபித்தோழர் திஹ்யத்துல் கல்பீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.
இறை வாழ்த்துக்குப்பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக்) குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்... என்று கடிதம் தொடர்கிறது. (புகாரீ: 7) ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுத்து மூலமும் அழைப்புப்பணியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
அழைப்புப் பணியாளர்கள்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்கும் போதிப்பதற்கும் நபித்தோழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்றார்கள். கடல் கடந்து சென்றவர்களும் உண்டு. அவர்கள் ஆங்காங்கே இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக்கூறி, அதன் அறவுரைகளைப் போதித்தார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. அவர்களைத் தொடர்ந்து அந்தந்த நாடு நகரங்களில் கற்றவர்களுக்கும் அத்தகைய உணர்வு ஏற்பட்டு, அவர்களும் அழைப்புப் பணிக்காகப் பயணம் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த வகையில் நபியவர்களின் காலத்திலேயே அரபு வணிகர்கள் வியாபாரத்திற்காக இந்தியாவிலுள்ள கேரளாவிற்கு வருகை தந்தார்கள். அவர்களுள் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவர்மூலம்தான் அம்மாகாண அரசரான சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார். இவரே இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். அவர் இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்துக் கேள்விப்பட்டு, மக்கா சென்று நேரடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார். திரும்பி வரும் வழியில் அவர் மரணத்தைத் தழுவுகிறார். அவரின் கட்டளைப்படியே கேரள மாநிலம் கொடுங்கலூரில் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. அது இன்று ‘சேரமான் பெருமாள் ஜும்ஆ மசூதி’ என்று அழைக்கப்படுகிறது.
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்: அழைப்புப் பணியில் முஸ்லிம்களைப் போன்றே கிறிஸ்தவர்களும் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவில் தற்போது முஸ்லிம்களின் அழைப்புப் பணியின் வேகம் குறைந்துவிட்டாலும் அவர்களின் அழைப்புப் பணி இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அழைப்புப் பணியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருந்தது. அதாவது அழைப்புப் பணி செய்வது முஸ்லிம்களுக்கு எளிதாகவும் கிறிஸ்தவர்களுக்குச் சிரமமானதாகவும் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக்கொடுத்து எளிதில் முஸ்லிமாக்கிவிடுவார்கள். அதன்பிறகு அரபி எழுத்துகளைக் கற்பித்து, குர்ஆனை ஓதவைத்து விடுவார்கள்.
ஆனால் கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் செய்து கிறிஸ்தவராக மாற்றியபின் அவர்களுக்குத் தம்முடைய வேதத்தைக் கற்பிப்பது மிகப்பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வேதம் ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இந்திய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களோ தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் கிறிஸ்தவத்தைப் போதிக்க ஒவ்வொரு மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருந்தது. எனவே அவர்கள் தம் வேதத்தை இங்குள்ளோருக்குக் கற்பிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால்தான் மதத்தைப் பரப்ப வந்த ஜி.யு. போப் (வீரமா முனிவர்) தமிழைக் கற்று, அதன்மூலம் திருக்குறளைப் படித்து, அதன் இலக்கிய அழகால் ஈர்க்கப்பட்டு, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.
மொழிபெயர்ப்புக் கலை: அப்பாஸிய கலீஃபா மன்சூர் (714 - 775 கி.பி.) முதல் கலீஃபா ஹாரூன் அர்ரஷீது (769 - 809 கி.பி.) காலக் கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்து பற்பல நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன. கி.பி. 786இல் ஹாரூன் அர்ரஷீது பதவி ஏற்றபின் அறிஞர்கள் பலரை ஒன்றுகூட்டி ‘தாருல் ஹிக்மா’ என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் ஹுனைன் பின் இஸ்ஹாக், யுஹன்னா, கஸ்தா பின் லூகா, அப்துல் மஸீஹ் பின் நயீமா, பனூ மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, ஸாபித் பின் குர்ரா, அல்கிந்தீ உள்ளிட்ட பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்களாக இருந்தனர்.
இஸ்லாம் குறித்த பல்வேறு செய்திகளையும் அறிவுக் கருவூலங்களையும் பிற நாட்டினர் தெரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் உதவியாக அமைந்தன. அத்தகைய அறிவுப் புரட்சியைத்தான் மன்னர் ஹாரூன் அர்ரஷீது தொடங்கிவைத்தார். அவருக்குப்பின் அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது அதனைத் தொடர்ந்தார். மேலும் பிறநாட்டு அறிவுகளும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி வந்தன. அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு இந்தக் கல்வியறிவெல்லாம் பரவின.
இறைநேசர்களின் அழைப்புப் பணி: நாகூர் ஷாஹுல் ஹமீது ரஹிமஹுல்லாஹ், ஏர்வாடி இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ், திருச்சி நத்தர்ஷா ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் தம் அழகிய பேச்சாலும் இனிய நற்குணங்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவர் ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தம் கவித்திறனால் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை உரைநடையில் சொல்ல, அதைக் கேட்டுக் கேட்டு அவர் காவியமாகப் பாடினார். அதுவே ‘சீறாப்புராணம்’ என்றழைக்கப்படுகிறது.
பாமர மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், கேள்வி-பதில் வடிவிலும், பாடல்களாலும் இயற்றப்பெற்ற பல்வேறு நூல்கள் முஸ்லிம்கள் மத்தியில் உலா வந்தன. நூறு மசாலா, ஆயிரம் மசாலா, பக்திப் பாமாலை, நசீகத்து நாமா, தரீக்குல் ஜன்னா, பெண்புத்தி மாலை உள்ளிட்டவை பெண்கள் மத்தியில் பிரபலமாக விளங்கின. சேக் பீர்முகம்மது சாகிபு எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள் உள்ளன. மச்சரேகைச் சித்தரின் பேரின்பச் சதகம், சாம் நைனா லெப்பை ஆலிம் எழுதிய அதபுமாலை, ஆலிப்புலவர் எழுதிய மிகுராசு மாலை, திருப்பாலைக்குடி சீதக்காதிப் புலவர் எழுதிய அபூசகுமா மாலை, செய்யது அனபிய்யா புலவர் எழுதிய நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், அபீபு முகமது லெப்பை எழுதிய மக்காக் கலம்பகம் முதலான நூல்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் இஸ்லாமியக் கொள்கையையும், நன்னெறிகளையும், வரலாறுகளையும் தெரிந்துகொள்ளப் பேருதவியாக இருந்தன. முன்னோர்களின் காலம் முடிந்தபோதே அவர்களோடு அந்த நூல்களின் ஞானமும் முடிவுக்கு வந்தது.
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு: ஆயிரம் ஆண்டுகளாகத் தேவைப்பட்ட ஒரு நூலான திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1949ஆம் ஆண்டு முதன்முதலாக வெளிவந்தது. கண்ணியத்திற்குரிய மௌலவி ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அதனை மொழிபெயர்த்தார். அதன்பின்னர்தான் தமிழ் முஸ்லிம்கள் திருக்குர்ஆனைப் படித்து, அதன் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்பட்டன.
நபிமொழித் தொகுப்பு தமிழாக்கம்: திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளிவந்து, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, 1994ஆம் ஆண்டு ரஹ்மத் பதிப்பகத்தின்மூலம் ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம் வெளியிடப்பட்டு, அது தமிழ்நாட்டைத் தாண்டி, தமிழ்பேசும் மக்கள் வாழும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபை, குவைத் முதலான நாடுகளுக்கும் பரவியது. அதுவரை நபிமொழிக் கலை குறித்து மக்கள் மத்தியில் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாதிருந்தது. அதன்பிறகுதான் நபிமொழிகள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. புகாரீ தமிழாக்கத்தைத் தொடர்ந்து முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதீ, சுனன் அபூதாவூத், சுனனுந் நஸாயீ, சுனன் இப்னுமாஜா ஆகிய ஆறு (ஸிஹாஹ் ஸித்தா) நூல்கள் வெளிவந்தன. நபிமொழிக் கலை குறித்த தெளிவு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப்பெரும் காரணமாக அமைந்தன.
பின்னர் அந்த நிறுவனமே திருக்குர்ஆன் விரிவுரை நூலான தஃப்ஸீர் இப்னுகஸீர் தமிழாக்கத்தை வெளியிட்டது. பிறகு ஆயிஷா பதிப்பகம் என்றொரு நிறுவனம் இப்னுகஸீர் ரஹிமஹுல்லாஹ் எழுதிய ‘அல்பிதாயா வந்நிஹாயா’ (தொடக்கமும் முடிவும்) எனும் இஸ்லாமிய வரலாற்று நூலைத் தமிழில் வெளியிடத்தொடங்கியது. அடுத்தடுத்த நிறுவனங்கள் தோன்றி, தாமும் சமுதாய நன்மைக்காக ஏதாவது ஒரு வகையில் உழைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வெவ்வேறு நபிமொழித் தொகுப்பு நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆக இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் சென்னையில் அமைந்துள்ளன. அவை இச்சமுதாய மக்களுக்கான நூல்கள் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் இஸ்லாமிய மார்க்கம் மக்கள் மத்தியில் பரவத் தம்மால் இயன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் மட்டுமல்லாது தற்காலத்திலும் இம்மார்க்கத்திற்காக உழைப்பவர்களை அல்லாஹ் இப்புவியில் தோன்றச் செய்துகொண்டே இருக்கின்றான் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே நாமும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிற சமுதாய மக்கள் மத்தியில் பரவச் செய்வதற்கு நமது பேச்சாலும் எழுத்தாலும் நம்மால் இயன்றதைச் செய்ய முனைவோம். வல்லோன் அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு நல்குவானாக.
==============================0