-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
படைத்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும்
மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் (கட்டளை) வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே
இந்தக் கடல் மை அனைத்தும் தீர்ந்துவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக்
கொண்டபோதிலும்கூட! (16: 109)
மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும்
எழுதுகோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்(து
எழுதி முடித்)த போதிலும் அல்லாஹ்வுடைய (கட்டளை) வாக்கியங்கள் (எழுதி) முடிவு பெறா.
நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(31: 27)
இந்த வசனங்களைச் சிந்தித்தவாறே என்னுடைய கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன்.
கணினித் தட்டச்சு விசைப்பலகையில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு விசை (ரிமீஹ்) யைத் தட்ட
வேண்டும். பல எழுத்துகளுக்கு இரண்டு தடவையும் வேறு பல எழுத்துகளுக்கு மூன்று தடவையும்
அந்த விசையைத் தட்ட வேண்டியுள்ளது. இடையிடையே
அழித்தல் விசையையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. முற்றுப்புள்ளிக்குத் தனியே ஒரு விசையை
அழுத்த வேண்டியிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு விசையும் ஒரு கட்டளையாகும். நாம் இடுகின்ற
கட்டளைக்கேற்பவே அந்தத் தட்டச்சு எழுத்துகள் பதிவாகின்றன. நூறு பக்கங்கள் கொண்ட ஒரு
நூலைத் தட்டச்சு செய்து முடிக்க எத்தனைக் கட்டளைகளை நாம் இட வேண்டும்? அதாவது எத்தனைத் தடவை அந்த விசைப்பலகையின் விசையை நாம்
தட்ட வேண்டும்? இதனைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றை எழுத்துகளால் பதிவு செய்ய முடியாத அளவிற்கு எண்ணற்ற
கட்டளைகள் உள்ளன என்பதை நாம் உணரலாம்.
ஒரு நூலைத் தட்டச்சு செய்ய இத்தனைக் கட்டளைகள் தேவைப்படுகிறதென்றால், இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்த எத்தனையெத்தனைக் கட்டளைகள்
தேவைப்படும் என்று சிந்திக்கும்போது பெரும் வியப்பாக இருந்தது. அப்போதுதான் மேற்கண்ட வசனங்களின் பொருள் புரிந்தது.
புவியின் மரங்களையெல்லாம் எழுதுகோல்களாக்கி, ஏழு கடல் நீரையும் மையாக்கி எழுதினாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை எழுதி முடித்துவிட
முடியாது என்பதைத் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ள முடிந்தது.
இவ்வுலகில் எத்தனையோ மரங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எத்தனையெத்தனை இலைகள் உள்ளன.
அவை முளைப்பதும் வளர்ச்சியடைவதும் பின்னர் முதிர்ச்சியடைவதும், பிறகு அவை பழுத்துக் கீழே விழுவதும் இறைவனின் கட்டளையின்றி
நடைபெறுவதில்லை. அப்படியானால் எண்ணற்ற மரங்களின் எண்ணிறந்த இலைகள் முளைப்பதற்கும், பசுமையாவதற்கும், முதிர்ச்சியடைந்து உலர்வதற்கும், பழுத்துக் கீழே விழுவதற்கும் எத்தனையெத்தனைக் கட்டளைகள்
தேவைப்படும் என்பதை நாம் சிந்தித்தால் எழுதித் தீராக் கட்டளைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அது குறித்துப் பின்வரும் இறைவசனம் பேசுகிறது:
மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும்
அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை.
பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
(6: 59)
உதிர்ந்துவிழும் இலைகளும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே செயல்படுகின்றன என்றால், முதிர்ந்துவரும் பயிர்களுக்குக் கட்டளைகள் இல்லாமல் போய்விடுமா? ஒவ்வொரு நாட்டிலும் கோடிக்கணக்கான டன்கள் அளவிற்கு விளையும்
நெற்பயிர்கள், கோதுமைப் பயிர்கள் உள்ளிட்ட
எத்தனையெத்தனைத் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் இப்புவியில் விளைகின்றன.
அவையெல்லாம் தாமாகவே விளைந்துவிடுவதில்லை. எல்லாம் அல்லாஹ்வின் கட்டளைப்படியே விளைகின்றன.
அவன் நாடிய நெல்மணியை ஏழு முதல் எழுநூறு மடங்கு வரை முளைக்கச் செய்வான்; அவன் நாடியவற்றைப் பதர்களாக ஆக்கிவிடுவான். எல்லாமே அவனுடைய
கட்டளைகளுக்குப் பணிகின்றன; எல்லாம் அவனது கட்டளைப்படியே இயங்குகின்றன.
இப்புவியில் எத்தனையெத்தனை மரங்களும் செடிகளும் உள்ளன. அவற்றில் எத்தனையோ பூக்கள்
பூக்கின்றன. அவை இறைவனின் கட்டளைப்படியே மலர்கின்றன. அவனுடைய கட்டளையில்லாதவை மலர்வதில்லை.
பூப்பூத்து, காயாகி, பின்னர் கனியாகும் மரங்கள் ஏராளம் உள்ளன. அவனுடைய கட்டளை
உள்ளவை மட்டுமே காய்க்கின்றன. அவனுடைய கட்டளை உள்ளவை மட்டுமே கனிகின்றன. அவனுடைய கட்டளை
இல்லாதவை பூவாகவே மடிந்துபோய்விடுகின்றன.
இப்படிச் சிந்திக்கின்றபோது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுவதோடு அவனுடைய வசனத்திற்கான பொருளும் புரியும்.
இப்புவியின் நிலப்பரப்பைவிட நீர்ப்பரப்பு நீளமானது. நிலப்பரப்பின் கட்டளைகளே எண்ணற்றவை
எனும்போது நீர்ப்பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு
எத்தனையெத்தனைக் கட்டளைகள் இடப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்தால் சிந்தை அயர்ச்சியாகிவிடும்.
அதில் வாழும் ஒவ்வொரு மீனின் வாழ்நாள்களும் அது மீனவனின் வலையில் பிடிபடும் காலமும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றொன்றிற்கு இரையாவதும், தன்னைவிடப் பெரிதுக்கு இரையாவதும் உண்டு. எதுவும் இறைவனின்
பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
ஆழிக்குள் அலைந்து திரியும் எண்ணற்ற வகை மீன்களோடு மனிதன் சாப்பிடுகிற, சாப்பிடக்கூடாத கோடானு கோடி உயிரினங்கள் உள்ளன. அவை
அனைத்திற்கும் எந்தெந்த நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும் என்பதும், அவை மனிதன் வீசுகிற வலையில் சிக்குதல், அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துத் தம் சந்ததிகளைப்
பெருக்குதல் உள்ளிட்ட அத்தனையும் இறைவனின் கட்டளைப்படியே நடைபெறுகின்றன. ஆக அத்தனை
உயிரினங்களுக்குமான கட்டளைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், அத்தனையும் எழுதித் தீராக் கட்டளைகள் என்பதை நாம் உய்த்துணர்ந்துகொள்ளலாம்.
உலகில் உலா வருகின்ற தேனீக்களைக் கவனித்தீர்களா? கோடானு கோடித் தேனீக்கள் உள்ளன. அவை ஒன்றிணைந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றன. ஒரு
கூட்டில் ஒரு படி தேனைச் சேமிக்க அவை எத்தனையெத்தனை மலர்களை நாடிச் செல்கின்றன. ஒவ்வொரு
மலராகப் பறந்து சென்று, அதன்மீது சில முறை வட்டமிட்டு, அதன் நுண்ணுணர்வுகளைத் தூண்டியபின் அதிலுள்ள தேனை உறிஞ்சி உட்கொண்டு, அதைத் தேனாகக் கக்கி, கூட்டில் சேர்க்கிறது. தேனீயின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின்
கட்டளை உள்ளது. அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பேசுகின்றான்:
உங்கள் இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். மேலும்
"நீ ஒவ்வொரு பூவிலிருந்தும் புசித்து, உன் இறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய
கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம்
(தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. (16: 68-69)
மனித உடல் இறைவனின் ஓர் அற்புதமான படைப்பு. அது கோடானு கோடி செல்களால் ஆனது.
பிறந்தது முதல் 21 வயது வரை வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறான். அதன்பின் ஒவ்வொரு
பருவத்திலும் வளர்சிதை மாற்றம் அவனுள் நிகழ்கிறது. அதாவது அவனுடைய பழைய செல்கள் இறந்துபோகின்றன; அவ்விடத்தில் புதிய செல்கள் பிறக்கின்றன. இவ்வாறு அவனது
உடலில் பழைய செல்கள் இறப்பதும் புதிய செல்கள் தோன்றுவதும் தொடர்கின்றன. அதனால்தான்
அவன் ஒவ்வொரு பருவத்திலும் மாற்றங்களைக் காண்கின்றான். ஆக அல்லாஹ் உயிர்கொடுத்தல், மரணிக்கச் செய்தல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே
இருக்கின்றான். ஒரு மனித உடலுக்கே கோடானு கோடிக் கட்டளைகள் எனும்போது கோடானு கோடி
மனிதர்களுக்கு எத்தனையெத்தனைக் கட்டளைகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது; சிந்தை நிலைகுலைந்து போகிறது.
மனித உடலின் வளர்ச்சிக்கு இத்தனைக் கட்டளைகள் என்றால், அவனுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கு எத்தனையெத்தனை கட்டளைகள்
இட வேண்டிவரும்? அவனது செயல்பாடுகள் அனைத்தும்
அல்லாஹ்வின் அடக்கியாளும் ஆற்றலுக்குக்கீழ்தான் நடைபெறுகின்றன. ஒருவனின் முயற்சி வெற்றிபெறுவதும்
மற்றொருவனின் முயற்சி தோல்வியில் முடிவதும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கின்றன. அவற்றிற்கெல்லாம்
எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது இறைவனின் பேராற்றலை
நாம் விளங்கிக்கொள்ளமுடிகிறது.
நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் அவன் கட்டளையிடுவதில்லை. நிலத்திற்குள்
புதையுண்ட மனிதர்களை எவ்வெப்போது என்னென்ன
செய்ய வேண்டும் என்பது குறித்து நிலத்திற்குக் கட்டளையிடுகின்றான். புதையுண்ட மனிதர்களுள்
யாரைத் தின்ன வேண்டும், எவ்வளவு தின்ன வேண்டும், எதைத் தின்னக் கூடாது, யாரைத் தின்னக்கூடாது என்றெல்லாம் இறைவன் கட்டளையிட்டுக்கொண்டே இருக்கின்றான்.
அது உண்மைதான் என்பதை நாம் காஃப் அத்தியாயத்திலுள்ள ஒரு வசனத்தில் காணலாம். “(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று (கொஞ்சம்
கொஞ்சமாகக்) குறைத்து (அழித்து)க் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.” (50: 4)
ஆக அவன் கட்டளையிடாமல் எந்த அணுவும் அசைவதில்லை என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.
எனவே மனிதன் தனக்கு நடக்கும் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. எல்லாம் இறைவனின்
கட்டளைப்படியே நடைபெறுகின்றன. அவனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டு எதுவும் நடந்துவிடுவதில்லை.
ஆகவே ஏற்படும் சின்னச் சின்ன இழப்புகள் குறித்து வருந்தத் தேவையில்லை. நமக்கு வேண்டியதை
இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் நமக்கான தருணம் வரும்போது தந்துவிடுவான்.
எனவே கேட்பதை விட்டுவிடக் கூடாது.
“என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது
வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிடச் சிறியதோ
பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல்
இல்லை” (34: 3) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ஆகவே அவனுடைய கட்டளையின்றி, அவனுடைய ஞானமின்றி இங்கு எதுவும் அசைந்திட முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை
நம் அனைவருக்கும் அவன் தருவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக