-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
‘வடபழனி’ என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் அவர்களின் முகம்தான். கடந்த 07 07 2024 அன்று அதிகாலை நேரத்தில் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டு மறுமைப் பயணத்தை மேற்கொண்டார். அவரின் மரணச் செய்தியைக் கேட்ட அவர்தம் நேசர்கள் மிகுந்த திடுக்கமும் பதற்றமும் அடைந்தனர். நேற்றுதானே பேசினேன், போன வாரம் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசினேனே என்றெல்லாம் தம் கவலையை வெளிப்படுத்தினர்.
ஷேக் அப்துல்லாஹ்-கமருன்னிஸா தம்பதியருக்கு ஆறு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள். அந்த ஆண்பிள்ளைகளுள் நான்காமவராகப் பிறந்தவர் தர்வேஷ் ஹள்ரத் ஆவார். இவர் 1964ஆம் ஆண்டு பிறந்தார். உள்ளூரில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் யாரேனும் ஒருவராவது மார்க்கக் கல்வி பயின்று ஆலிமாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையில், முதன்முதலாக அவ்வூரிலேயே அமைந்துள்ள மக்தூமிய்யா அரபுக்கல்லூரியில் மார்க்கக் கல்வி பயிலத் தொடங்கினார். பின்னர் திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபுக் கல்லூரியில் ஓதினார். பிறகு தாவூதிய்யாவில் ஓதி, அங்கிருந்து அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரிக்குச் சென்றார். நான்கு ஆண்டுகள் அங்கே ஓதிய அவர், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி, பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற சில ஆண்டுகளுக்குப்பின் வடபழனி ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாகச் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலைத் தொழுகை முடிந்தபின் மஸ்ஜிதிலேயே அமர்ந்து மஹல்லாவின் பல்வேறு செய்திகளை அலசும் ஹள்ரத் அவர்கள், அந்த அமர்வைத் தமது மஹல்லாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தினார். பல்வேறு மனிதர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் சிக்கல்களைத் தீர்க்க உதவினார். தம்மால் இயன்றதைத் தாமே தீர்த்து வைத்தார். தம்மால் இயலாததை அதற்கெனத் தகுதியான ஆளிடம் ஒப்படைத்துத் தீர்த்துவைத்தார்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றி, மஹல்லா மக்களின் பல்வேறு முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகலாக இருந்த அந்தப் பள்ளிவாசல் அவர்தம் முயற்சியால் விசாலமானதாக மாறியது. உலமாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகலிடமாக அந்தப் பள்ளி இருந்தது.
கருத்து வேறுபாடுகளாலும் கொள்கைக் கோட்பாடுகளாலும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணமே தர்வேஷ் ஹள்ரத் அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்தது. அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டார் என்றால் அது மிகையில்லை. மார்க்க விளக்கக் கூட்டங்கள், போராட்டக் களங்கள், அரசியல் கூட்டங்கள், சமய நல்லிணக்கக் கூட்டங்கள் உள்ளிட்ட எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தம்முடைய கருத்துகளைப் பளிச்செனத் தெரிவிப்பது ஹள்ரத் அவர்களின் இயல்பு. அதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.
சென்னைக்குப் புதிதாக வருகிற இளம் ஆலிம்கள் பலர், ஹள்ரத் அவர்களைச் சந்தித்து, தம்முடைய வேலை வாய்ப்பிற்காக ஏதேனும் ஓரிடத்தைச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கான இடத்தைச் சொல்லி, “அங்கு ஒரு மஸ்ஜிதில் இமாம் தேவைப்படுகிறார்; அங்கே ஒரு மத்ரஸாவில் உஸ்தாத் தேவைப்படுகிறார்” என்று சொல்லி அவரவரின் தகுதிக்கேற்ப ஆங்காங்கே அனுப்பிவைப்பார். அல்லது பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போது உரிய இடத்தைச் சொல்வார். அத்தகைய பொதுநலன் விரும்பியாக இருந்துள்ளார். ஆக அவரின் பணிக்காலத்தில் ஹக்கானி மஸ்ஜித் ஆலிம்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அலுவலகமாகத் திகழ்ந்தது.
ரமளான் மாதத்தில் அந்த மஸ்ஜிதின் கதவுகள் நோன்பாளிகளுக்காகவும் தொழுகையாளிகளுக்காகவும் இருபத்து நான்கு மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் நிர்வாகத்தினரிடம் சொல்லி ஏற்பாடு செய்தார். அந்த மஸ்ஜிதைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் யாரும் எப்போது வேண்டுமானாலும் அங்கு வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தியமை பாராட்டுக்குரியது. தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் பூட்டப்படுகின்ற மற்ற மஸ்ஜிதுகளைப் போன்று அல்லாமல் எல்லா நேரமும் மஸ்ஜித் திறக்கப்பட்டிருக்க வேண்டும்; முஸ்லிம்கள் மஸ்ஜிதை எப்போதும் பயன்படுத்தும் நிலையில் அது இருக்க வேண்டும் என்பதை நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தவர்.
எல்லோரையும் கவரும் தன்மை உடையவர்; ஆலிம்களைக் கண்ணியப்படுத்துபவர்; இளம் ஆலிம்களானாலும் மரியாதை செய்பவர். நோட்டிஸில் பெயர் போடாவிட்டாலும் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து, அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புச் செய்பவர்; சிறியவர் ஆனாலும் நன்றாகப் பேசத் தெரிந்த ஆலிம் என்றால் அவரை மேடையேற்றி முன்னிலைப்படுத்துபவர். பிறரின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்; மனிதர்களின் சூழ்நிலைகளையும் முகக்குறிகளையும் மிகத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் செயல்படுபவர்.
தம்முடைய பிள்ளைகளை மார்க்கக் கல்வி கற்க வைத்து, குர்ஆனுக்கு வாரிசாக்கினார். ஆம்! தம் பிள்ளைகள் இருவரையும் ஹாஃபிழ் ஆக்கி, ஆலிமாக்கவும் முனைந்துள்ளார். தாம் வாழும் காலத்திலேயே, தாம் பணியாற்றி வரும் பள்ளிவாசலில் ரமளான் தராவீஹ் தொழவைக்கும் ஹாஃபிழாக நியமித்து, தம் மகனை முன்னிலைப்படுத்தினார். “தந்தை மகற் காற்றும் உதவி அவையத்துள் முந்தி இருப்பச் செயல்” எனும் குறளுக்கேற்பத் தாம் வாழும் காலத்திலேயே தம் மகனைச் சபையேற்றியுள்ளார்.
ஹள்ரத் அவர்களின் குடும்பம் பாரம்பரியமிக்க ஒரு குடும்பமாகும். அவர்தம் பாட்டனார் ஷேக் அப்துல் காதர் கேரளாவிலிருந்து பள்ளப்பட்டிக்கு வந்தவர். அவர் மூலம்தான் அந்த ஊரைச் சுற்றியுள்ள பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஊரில் தொப்பியில்லாத ஆண்பிள்ளையையும் புர்கா இல்லாத பெண்பிள்ளையையும் காணவே முடியாது. இத்தகைய பேணுதலுக்கான காரணர் ஹள்ரத் அவர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த ஊர்மக்கள் எல்லோரும் இங்கே ஒன்றுசேர வேண்டும்; இவ்வூரில் கியாமத் வரை சோறு பொங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று அந்தப் பெரியவர் துஆ செய்தார். அதன் பயனை இன்று வரை அவ்வூர் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். அதன்படி ஹள்ரத் அவர்களும் தாம் இறந்தபின் தம்மைப் பள்ளப்பட்டியில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்னரே வஸிய்யத் (மரண சாசனம்) செய்திருந்தார். அவர்தம் வேண்டுகோளுக்கிணங்க பள்ளப்பட்டியில் அவருடைய குடும்பத்தாருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அவருடைய பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வல்லோன் அல்லாஹ் ஹள்ரத் அவர்களின் பிழைகளை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக. அவர்தம் சேவைகளை அவன் ஏற்றுக்கொண்டு அதற்கான பிரதிபலன்களை முழுமையாக அவருக்கு வழங்குவானாக. அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.
===========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக