வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

பிணக்கம் நீக்கி இணக்கம் காண்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

------------------

சின்னச் சின்னக் கருத்துவேறுபாடுகளுக்காக உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், ஒத்த கொள்கைவாதிகள் உள்ளிட்டோர் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொண்டு, எதிரெதிராக நிற்கின்றார்கள். ஒன்றுபட்டு, கூட்டாகச் சாதிக்க வேண்டியதைச் சிதறுண்டு இழக்கின்றார்கள். உறவினர்களிடம் பிணக்கம் ஏற்படும்போது இரண்டு பிரிவினர்களாகப் பிரிந்துபோகும் நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றாக, பெரும் குழுவினராக நிற்க வேண்டியவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நிற்கின்றார்கள். அல்லது குறிப்பிட்ட திருமணத்திற்கு ஒரு குழுவினர் கலந்துகொள்வதும் மற்றொரு குழுவினர் புறக்கணிப்பதும் நிகழ்கிறது. இவை அனைத்திற்கும் தீர்வு பிணக்கம் நீக்கி இணக்கம் காண்பதே ஆகும்.

 

ஓர் ஊரில் மூத்த தலைவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் ஊர் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட குழுவினர்களாகப் பிரிந்துவிடுகின்றனர். இதனால்  அந்த ஊரில் பெரும்பான்மையாக நாம் இருந்தும், ஒரு வார்டு தேர்தலில்கூட நம் இனத்தைச் சார்ந்தோர் வெற்றிபெற முடிவதில்லை. நம் மஹல்லாவிற்குத் தொடர்பில்லாத ஒருவர் நம் வாக்கின்மூலம் வெற்றிபெற்றுப் பதவியை அனுபவிக்கின்றார். ஒரே இறைவனை வணங்கி, ஒரே மறையை ஓதுகின்ற நாம் ஒற்றுமையாக ஓரணியில் நின்றிருந்தால் நம்முள் ஒருவர் அப்பதவியை அடைந்திருக்கலாம் அல்லவா?

 

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று நபிவழியைப் பின்பற்றுகிற அண்ணன்-தம்பி இருவரும் ஒற்றுமையாக ஒரு நிறுவனத்தை அல்லது வியாபாரத்தளத்தை நடத்திவருகின்றனர். திடீரென ஒரு நாள் அவர்களுக்கிடையே சொத்துத் தகராறு அல்லது இலாபப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அதனால் கருத்துவேறுபாடு உண்டாகிறது.  அதனால் அதுவரை சகோதர வாஞ்சையோடு பேசியதும் பழகியதும் கெட்டுப்போய்விடுகிறது. உலகுசார் பொருளுக்காகச் சகோதரப் பாசம் சிதைந்துவிடுகிறது. தொடர்ந்து அவ்விருவரும் கூட்டு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் முறிந்துபோய்விடுகிறது. இத்தகைய பிணக்குகள் ஏற்படுகிறபோது அதைக் குறுகிய நாள்களிலேயே சரிசெய்து இணக்கம் காண்பதே இருவருக்கும் நல்லது. அதுவே இன்றையத் தேவை. அது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (புகாரீ: 6065)

 

ஒரு மஹல்லா ஒன்றுபட்ட மஹல்லாவாகத் திகழும்போது அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளைச் செய்யலாம்; புதிய புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தலாம்; ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கலாம்; தொழில் வாய்ப்பு இல்லாதோருக்குச் சுயதொழில் தொடங்கப் பொருளாதார உதவி செய்யலாம்; திருமணம் செய்ய வசதி வாய்ப்பு இல்லாதோருக்குத் திருமணம் செய்துவைக்கலாம்; போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்; பைத்துல்மால் தொடங்கி நலிந்தோருக்கும் கைம்பெண்களுக்கும் உதவி செய்யலாம்; மகளிர்க்குத் தையல் எந்திரம் வழங்கி, தொழில் செய்ய ஊக்குவிக்கலாம்; இன்னும் எண்ணற்ற சேவைகளைச் செய்யலாம். அதேநேரத்தில் கொள்கைக் கோட்பாடுகளாலும் அரசியல் காரணங்களாலும் பிளவுண்டு ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிந்துகிடந்தால் எதுவும் செய்ய இயலாது போய்விடும்.

 

மார்க்க அறிஞர்கள் கொள்கைக் கோட்பாடுகளால் பற்பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றார்கள். சிறு சிறு  பிரிவுச் சட்டங்களில் கருத்துவேறுபாடு கொண்டு சிதறுண்டு கிடக்கின்றார்கள்.  கடமையான (ஃபர்ளான) சட்டங்களிலெல்லாம் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிற அவர்கள், உட்பிரிவுச் சட்டங்களில்தான் கருத்து வேறுபாடு கொள்கின்றார்கள். அவர்கள் அனைவரும் கொள்கை வேறுபாடுகளை மறந்து, இணக்கம் கண்டு இணங்கி வர வேண்டும். அவ்வாறு ஆலிம்கள் அனைவரும் இணங்கி வந்துவிட்டால் இச்சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன இருக்கின்றனவோ அவற்றில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்தச் சமுதாய மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதனை நோக்கி வழிகாட்டலாம்.

 

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் ஒன்றாக இருக்க முடியவில்லை. அவர்களுக்குள் ஷைத்தான் ஊடுருவி, தவறான சிந்தனையைத் தூண்டிவிடுகின்றான். அவள் மட்டும் ஓய்வெடுக்கணும், நான் வேலை செய்யணுமா; அவள் சும்மா இருக்க, நான் சமைக்கணுமாஎன்ற தவறான சிந்தனை அவ்விருவருக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுகிறது. ஒன்றுபட்டு ஒரே வீட்டில் வாழ வேண்டிய அவர்கள் இதற்காகவே இரண்டு குடும்பங்களாகப் பிரிகின்றார்கள். இருவரும் தனித்தனி வீட்டில் தம் கணவரோடும் பிள்ளைகளோடும் வசிக்கத் தொடங்குகின்றார்கள்.  பின்னர் இருவரும் தத்தம் வீட்டு வேலைகள் அனைத்தையும் தனித்தனியே அவர்களே செய்கின்றார்கள். அதற்குப் பதிலாக ஒரே வீட்டில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்யத் தொடங்கினால் இருவருக்கும் எவ்வளவோ ஓய்வு கிடைக்கும். ஒரு நாள் இளையவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மூத்தவள் பார்த்துக்கொள்வாள். மூத்தவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், இளையவள் பார்த்துக்கொள்வாள்.    அத்தகைய வாய்ப்பு கூட்டுக் குடும்பத்தில்தான் உள்ளது. தனிக் குடும்பமாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லையென்றாலும் அவளேதான் பார்க்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.

 

இத்தகைய பல்வேறு வகையான பிணக்குகள் நமக்கு மத்தியில் உள்ளன. இந்தப் பிணக்குகளெல்லாம் எவ்வளவு காலம் நீடிக்கும். இதனால் அவர்கள் சாதிப்பது என்ன? ஒன்றுமே இல்லை. இப்போதெல்லாம் திடீர் மரணங்கள்தாம் அதிகம். யார் எதுவரை வாழ்வார் என்ற உத்தரவாதம் சொல்ல முடியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.  காலையில் இருந்தவர் மாலையில் இல்லை. நேற்றிரவு இருந்தவர் இன்று காலை இல்லை. இத்தகைய சூழலில்  பிறரிடம் பிணங்கிக்கொண்டு நாம் எதைச் சாதிக்கப் போகிறோம். இணங்கி வாழ்ந்தால் நம்முடைய நல்ல நினைவுகளை எண்ணிப் பார்த்து, நமக்காக துஆ செய்வார்கள். எந்நேரமும் பிணங்கிக்கொண்டே வாழ்ந்தால் நம் மரணத்தைப் பற்றிக்கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். போய்த் தொலைந்தான்அல்லது போய்த் தொலைந்தாள்என்ற எண்ணமே அவர்களின் மனத்தில் தோன்றும். நமக்காக யாரும் துஆவும் செய்ய மாட்டார்கள்.

 

அது மட்டுமன்றி, நாம் எல்லோருடனும் இணங்கி வாழ்ந்தால் நம் ஆயுள் கூடும்; நம்முடைய வாழ்வாதாரம்  பெருகும். இதற்கு அடிப்படைக் காரணம், நாம் பிறரோடு இணங்கி வாழும்போது நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அதனால் நம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்; ஆகவே நம் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அதை உள்ளடக்கியே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து (இணக்கமாக) வாழட்டும். (புகாரீ: 2067)

 

வாழ்வாதாரம் பெருகும்என்பதன் உட்பொருள் என்னவெனில், கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது எல்லாம் ஒரே செலவாகப் போய்விடும். தனித்தனிக் குடும்பமாகச் செல்லும்போது நாமே ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்க வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, அதற்கு முன்பணம் கொடுத்தல், மாதந்தோறும் வாடகை கொடுத்தல், மின்கட்டணம் செலுத்துதல், எரிவாயு உருளை வாங்குதல், மளிகைப் பொருள்களை வாங்குதல் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் நாம் ஒருவரே மேற்கொள்ள வேண்டும். நம்முடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது என்பதையும் தாண்டி, எதிர்பாராச் செலவுகளுக்காகக் கடன் வாங்க வேண்டிய கட்டாயச் சூழலும் ஏற்படும். இதையெல்லாம் பொதிந்ததுதான் அந்த நபிமொழி. யோசித்துப் பார்த்தால் நபியவர்களின் தூரப்பார்வை நமக்கு நன்றாகவே விளங்கும்.

 

ஆகவே நம் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டினர், பொதுமக்கள், நாம் வேலை செய்யும் அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பிணக்குகள் ஏதுமின்றி நாம் இணக்கமாக வாழ்வதால் பற்பல நன்மைகளை இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிப்பதோடு, மறுமைக்கும் நன்மையாக அமையும். எனவே யாருடனும் பிணக்கின்றி இணக்கமாக வாழ முயல்வோம்.

=========================================




கருத்துகள் இல்லை: