திங்கள், 16 செப்டம்பர், 2024

உரிமையைப் பறிக்காதீர்!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

 

மனிதர்கள் அமைதியாக வாழ ஒரே வழி ஒவ்வொருவரும் தத்தம் கடமையைப் புரிந்து, அதைச் சரியாகச் செய்வதும் பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் இருப்பதுமே ஆகும்.  ஆனால்  பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறு வாழ்வதில்லை என்பதால்தான் மனிதர்களின் நிம்மதியும் அமைதியும் குலைகின்றன. மனிதர்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து கடமையாற்றுவதும் பிறரின் உரிமையைப் பேணி நடப்பதும் அரிதிலும் அரிதாகவே நடைபெறுகிறது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றார்கள்.

 

ஒருவன் மற்றொருவனை அநியாயமாகக் கொலை செய்கிறான்; திருமணமாகி வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அதன்பின் அந்த மனைவியை எக்காரணமுமின்றி மணவிலக்குச் செய்துவிடுகிறான்; கணவனின் உரிமையைச் சரியாக வழங்காமல் அவனோடு மல்லுக்கு நிற்கிறாள்; அண்டைவீட்டார் நிலத்தை அநியாயமாக ஆக்கிரமித்துக்கொள்கிறான்; தாய்-தந்தையை மதிக்காமல் வீட்டை விட்டுத் துரத்துகிறான்; அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டிய சொத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிடுகிறான். இப்படி எல்லாத் தளங்களிலும் எல்லை மீறலும் உரிமை மீறலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் மனித சமுதாயம் ஒவ்வொரு நாளும் நிம்மதியற்ற வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

 

மனைவி தன் கணவனின் உரிமையைப் பறித்தல்: ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவி வழங்க வேண்டிய உரிமைகளுள் மிக முக்கியமானது, அவனது பாலியல் தேவையை நிறைவேற்றுவதாகும். அவன் விரும்பும் நேரத்தில்  அவனுக்கு உடன்படுவது மனைவியின் கடமையாகும். அதை அவளிடமிருந்து பெற்றுக்கொள்வது கணவனின் உரிமையாகும். ஷரீஅத் ரீதியான காரணங்களான மாதவிடாய் உதிரப்போக்கு, பிள்ளைப்பேறு உதிரப்போக்கு, நோய்வாய்ப்பட்டிருத்தல் ஆகியவை உள்ள நேரத்தில் தவிர மற்ற நாள்களில் கணவனுக்கு அவனுடைய விருப்பத்திற்கேற்றவாறு இணங்குவது மனைவியின் கடமையாகும்.

 

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ள செய்தி: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். (புகாரீ: 3237)

 

கணவன் தன் மனைவியின் உரிமையைப் பறித்தல்: ஒரு கணவன் தன்னை நம்பி வந்துள்ள மனைவிக்கு உரிய முறையில் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை வழங்குவது கடமையாகும். உரிய முறையில் உணவுக்குப் பணம் கொடுக்கவில்லையானால், அவனுடைய சட்டைப்பையிலிருந்து மனைவி தானாகவே எடுத்துக்கொள்ள அனுமதியுண்டு. அது அவளது உரிமையாகும்.

 

மேலும் கணவன் அவளோடு நல்லமுறையில் வாழவேண்டும்; அவளுடைய பாலியல் தேவையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் அவளை நல்லமுறையில் பிரித்து, விட்டுவிட வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் அவள் மற்றொரு திருமணம் முடித்துக்கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையைத் தொடர்வாள். ஆண்கள் சிலர்  தம் ஆண்மைக்குறைபாடு காரணமாகத் தம் மனைவியோடு நல்ல முறையில் வாழாமல், அதேநேரத்தில் அவளை மணவிலக்குச் செய்து, மற்றொரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பும் கொடுக்காமல், வெறுமனே ஊரார் பார்வைக்குக் கணவன்-மனைவியாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இத்தகைய கணவர்கள் தம் மனைவியின் உரிமையைப் பறிக்கின்றார்கள் என்பதே உண்மை.

 

அத்தகையோரை அல்லாஹ் கண்டிக்கின்றான்:  (உங்கள்) மனைவிகளை நீங்கள் (மீட்டிக்கொள்ளும் வகையிலான) தலாக் கூறி, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையிலிருந்தால் (அத்தவணை முடிவதற்குள்) அவர்களை முறைப்படி (மனைவிகளாகவே) நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது (இத்தாவின் தவணையை முடித்துக் கொண்டபின்) முறைப்படி விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் அநியாயமாகத் துன்புறுத்துவதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள். இவ்விதம் எவரேனும் செய்தால் நிச்சயமாக அவர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டவராவார்...(2: 231)

 

தந்தை தம் பிள்ளைகளின் உரிமையைப் பறித்தல்: பெற்றெடுத்த பிள்ளைக்கு நல்ல பெயர் சூட்டுதல், நல்லொழுக்கம் போதித்தல், நற்கல்வியை வழங்குதல், உரிய பருவத்தில் திருமணம் செய்துவைத்தல் ஆகியவை ஒரு தந்தையின் கடமையாகும். இவை ஒரு தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய பிள்ளைகளுக்கான உரிமைகளாகும். பெற்றோர் சிலர் தம் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வரை வழங்குகின்றார்கள். ஆனால் இஸ்லாமிய நற்போதனைகளையும் நல்லொழுக்கத்தையும் போதிக்க மறந்துவிடுகின்றார்கள். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடைபெறுகின்ற மக்தப்-பாலர் வகுப்பிற்கு அழைத்துச் சென்று, அமர வைக்கத் தவறிவிடுகின்றார்கள். இத்தகைய சூழலில் வளர்கின்ற பிள்ளை, நாளை தன் பெற்றோரையே எதிர்த்துப் பேசுகின்றவனாகவும் மரியாதையின்றி நடத்துபவனாகவும் மாறிவிடுகின்றான். அதற்கான காரணம் அந்தப் பெற்றோரே ஆவர். எனவே பெற்றோர் பிள்ளைகளின் உரிமைகளைச் சரியாக வழங்கினால் அவர்களும் தம் பெற்றோருக்கான கடமையைச் சரியாகச் செய்வார்கள்.

 

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு நல்லொழுக்கத்தைவிடச் சிறந்த வெகுமதியை வழங்குவதில்லைஎன்று  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1952) ஆக நல்லொழுக்கம்தான் ஒரு தந்தை தன் பிள்ளைக்கு வழங்குகின்ற மிகப் பெரும் வெகுமதியாகும். எனவே அதற்குத்தான் ஒவ்வொரு  பெற்றோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

 

மேலும் ஒருவர் தம் பிள்ளைக்குப் பருவ வயதடைந்ததும் திருமணம் செய்துவைக்காவிட்டால், அதனால் அந்த மகள் அல்லது மகன் தவறிழைத்துவிட்டால், அந்தப் பாவம் அவனுடைய தந்தையையே சாரும். எனவே அதில் கூடுதல் கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமையாகும். இன்றைய பெற்றோர் தம் பிள்ளைகளின் உரிமைகளைச் செவ்வனே வழங்கும்போது, நாளை அந்தப் பிள்ளைகள் தம் தந்தைக்கு வழங்க வேண்டிய உரிமைகளைச் சிறப்பாக வழங்குவார்கள்.

 

பிள்ளைகள் தம் பெற்றோரின் உரிமையைப் பறித்தல்: பெற்றோரின் உயர்வையும் சிறப்பையும் எல்லோரும் அறிவார்கள். இருப்பினும் இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் பிள்ளைகள் தம் பெற்றோரின் மதிப்பையும் கண்ணியத்தையும் உணராமல் இருக்கின்றார்கள். அவர்களுடைய கண்ணியத்தையும் உயர்வையும் உணர வேண்டுமெனில் திருக்குர்ஆன் வசனங்களைப் படிக்க வேண்டும். அல்லாஹ் தன் அடியார்களிடம் பேசும்போது, தனக்கு நன்றி செலுத்தியபின், பெற்றோருக்கு நன்றி செலுத்துமாறு கூறுகின்றான்: (நபியே!) உங்கள் இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வழிபடக் கூடாதென்றும், தாய் தந்தைக்கு நன்றி செலுத்துமாறும் கட்டளையிட்டிருக்கிறான். (17: 23)

 

மற்றொரு வசனத்தில் கூறுகின்றான்: தனது தாய் தந்தைக்கு நன்றி செலுத்துமாறு மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கு நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. (31: 14) ஆகவே தாய்-தந்தையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். ஒருவேளை அவர்கள் இறந்துபோய்விட்டால், அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

இன்றைய இளைஞர்கள் தம் பெற்றோரின் மதிப்பையும் கண்ணியத்தையும் உணராமல் அவர்களைக் கேவலப்படுத்துகின்றார்கள். இழிவுபடுத்துகின்றார்கள். மனைவியின் அழகில் மதிமயங்கி, பெற்றோரை உதாசீனப்படுத்துகின்றார்கள். ஒரு பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தால், இங்கு ஒரு மாதம், அங்கு ஒரு மாதம் என்று அவர்கள் தம் பெற்றோரை அலைய விடுகின்றார்கள். செலவுக்குப் பணம் கொடுக்காமல் அவர்களையே கேட்க வைக்கின்றார்கள். தம் பெற்றோர் செலவுக்குப் பணம் கேட்கும்போது பிள்ளைகள் சிலர் கொடுக்க மறுக்கின்றார்கள். ஆனால் பெற்றோர் தம் பிள்ளைகளிடம் கேட்காமலேயே செலவுக்குப் பணம் எடுத்துக்கொள்ள முழு உரிமையுண்டு என்பதை இன்றைய இளைஞர்கள் அறியாதிருக்கின்றார்கள்.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: அல்லாஹ்வின் தூதரே! திண்ணமாக எனக்குப் பொருட்செல்வமும் குழந்தையும் உள்ளன. என்னுடைய தந்தை என்னுடைய பொருளை எடுத்துக்கொள்ள நாடுகிறார்என்று ஒருவர் (புகார்) கூறினார். அதற்கவர்கள், “நீயும் உன்னுடைய பொருளும் உன்னுடைய தந்தைக்குத்தான்என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (இப்னுமாஜா: 2282) இவ்வாறு ஒரு தந்தைக்குத் தன் மகனிடம் பற்பல உரிமைகள் உள்ளன. அந்த உரிமைகளையெல்லாம் மகன் பறித்துக்கொள்வதால் தந்தையும் தாயும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள். சிலர் தம்மைப் பெற்றெடுத்த பெற்றோரை அடிக்கின்றார்கள்; திட்டுகின்றார்கள். வேறு சிலர் சொத்துக்காகத் தந்தையை அல்லது தாயைக் கொலை செய்யத் துணிந்துவிடுகின்றார்கள். இவை அனைத்தும் இஸ்லாம் குறித்த அறியாமையால்தான் நடைபெறுகின்றன.


ஒரு முதலாளி தன் தொழிலாளியின் உரிமையைப் பறித்தல்: இது இன்று நேற்றின்றி எப்போதும் உள்ள நடைமுறைதான். ஒரு முதலாளி தன் தொழிலாளிக்குக் கொடுக்க வேண்டிய உரிமையைக் கொடுப்பதில்லை. ஊதியத்தில் ஏமாற்றம் செய்தல், விடுமுறை கொடுக்காதிருத்தல், ஊக்கத்தொகை வழங்காதிருத்தல், மருத்துவ உதவி வழங்காதிருத்தல், உள்ளிட்ட எத்தனையோ வரம்புமீறல்கள் பல்லாண்டுகளாக நீடித்து வருகின்றன. முதலாளிகள் சிலர் குறிப்பிட்ட வேலை நேரத்தைத் தாண்டியும் நீண்ட நேரம் வேலை வாங்கிக்கொள்கின்றார்கள். ஆனால் அதற்கு ஊக்கத்தொகை வழங்காமல், அதே சம்பளத்தையே வழங்குகின்றார்கள்.

 

அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை  அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள்  ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரீ: 30)

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் ஏப்ரல் 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இருந்தபோதிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பால் அந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆக தொழிலாளிகளின் உரிமையைப் பறிக்கும் விஷயத்தில், அரசே முன்நிற்பதைக் கண்டு வியப்படைகிறோம்.

 

ஆக ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் மற்றவரின் உரிமைகளைப் பறித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது நிதர்சன உண்மையாகும். ஆட்சியாளர்கள் மக்களின் உரிமைகளைச் செவ்வனே நிறைவேற்றாமல், அவர்களின் உரிமையைப் பறித்து விடுகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மாற்ற முனைதல், வக்ஃபு வாரியச் சட்டங்களை மாற்ற முனைதல், ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதித்துக் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்தல், முஸ்லிம் இளைஞர்களைச் சட்ட விரோதமாகக் கைது செய்து நீண்ட காலத்திற்குச் சிறையில் அடைத்தல், வாக்குரிமையைப் பறிக்க முனைதல், ஊழல் பிரச்சனைகளை மறைக்க மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துதல், பொருளாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான உரிமைமீறலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 

சிறுபான்மையரின் உரிமைகளைப் பெரும்பான்மையர் பறித்தல், ஏழைகளின் உரிமைகளைப் பெருமுதலாளிகள் பறித்தல் என ஒவ்வொரு தளத்திலும் உரிமைமீறல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இனிவரும் காலங்களிலாவது ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் செய்வதோடு பிறரின் உரிமைகளைப் பறிக்காமல் வாழ இறைவன் அருள்புரிவானாக.

=================== 











கருத்துகள் இல்லை: