சிறுகதை
_____________
பற்பல தவறுகளைச் செய்து ரௌடிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த
முஸ்தபாவின் பெயர் அவ்வூர் போலிஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவருக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது.
ஒரு நாள் மாலையில் சிகரெட் பற்ற வைத்து உள்ளிழுத்து மூக்கு
வழியாக வெளியேற்றியவாறு, “திருந்தி நல்லவனாக வாழ என்ன வழி” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனை அறிந்த
தப்லீக் சகோதரர்கள் சிலர் அவனை நெருங்கி, “கலிமா
சொல்லியுள்ள நீங்க தொழுகையைக் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியம். ஐவேளைத் தொழுகைய
ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகணும்; வாங்க பாய் பள்ளிவாசலுக்குப் போகலாம்" என்று
சொல்லி அழைத்துச் சென்றார்கள்.
தொழுது முடித்து வெளியே வரும்வேளையில்,
“அடுத்த வாரம் நம்
பள்ளியிலிருந்து ஒரு ஜமாத் புறப்படுது. ஒரு நாற்பது நாள் எங்களோட ஜமாத் வாங்க
பாய். அல்லாஹ்வுடைய பாதையிலே போயி இஸ்லாமிய மார்க்கத்த கத்துக்கலாம். நாலு பேரப்
போல ஒரு நல்ல மனுஷனா வாழலாம். உங்க பேரையும் எழுதிக்கலாமா?" என்று அவனை
மனதளவில் தயார்படுத்தி, சம்மதிக்க வைத்தார் அந்த ஊர் அமீர்ஸாப்.
மூன்று மூன்று நாள்களாகப் பல்வேறு ஊர்கள் சென்று பல்வேறு
பள்ளிவாசல்களில் தங்கினார்கள். உண்டார்கள்; உறங்கினார்கள்; கற்றுக்
கொடுத்தார்கள். முஸ்தபா புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டான். தொழுவது
குறித்து அறிந்துகொண்டான். திருக்குர்ஆனிலிருந்து சில (சூராக்களை) பகுதிகளை மனனம்
செய்துகொண்டான். நாற்பது நாள் முடிந்து போனது. இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சா
என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பினான்.
ஊர் வந்த சில நாள்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இதுவரை பள்ளிவாசலில் தொழுது பழகிய அவனுக்கு வீட்டில் தொழுவது திருப்தியாக இல்லை.
அன்று ஒரு வெள்ளிக்கிழமை. ஊரடங்கு இன்னும் தொடர்கிற வேளை.
பக்கத்திலுள்ள அமீர்ஸாப் வீட்டுக்குச் சென்று, “வாங்க பாய்
தொழுகப் போகலாம். இன்று ஜும்ஆ பாய். என்னால வீட்ல தொழுக முடியல பாய்” என்றான்.
“தம்பி முஸ்தபா, ஊரடங்கு
போட்டுருக்காங்க. பள்ளிவாசலுக்குப் போகக்கூடாதுப்பா. வீட்லதான் தொழுகணும்"
என்றார் அமீர்ஸாப்.
“என்ன பாய், நீங்களே இப்படிச்
சொல்லலாமா? ஒவ்வொரு முஸ்லிமும் ஐவேளை தொழுகணும்; வீட்ல தொழுவதைவிட
பள்ளிவாசல்ல தொழுதா 27 மடங்கு நன்மைன்னு நீங்கதான் சொன்னீங்க. இப்ப நீங்களே வீட்ல
தொழுகச் சொல்றீங்களே?”
“வாங்க பாய். யாருக்கும் பயப்படாதீங்க. எல்லாம் நான்
பாத்துக்குறேன் பாய்” என்று கூறி அமீர்ஸாபைச் சம்மதிக்க வச்சு, அக்கம் பக்கத்துல
இருந்த சில இளைஞர்களையும் கூட்டிக்கொண்டு பள்ளிவாசலுக்குப் போனான். பள்ளிவாசல்
கேட் பூட்டியிருந்தது.
உள்ளே பார்த்தால் இமாமும் பள்ளி ஊழியர்களும் மட்டுமே தொழுது
கொண்டிருந்தார்கள். எப்படி உள்ளே போவது என்று யோசித்த முஸ்தபாவுக்கு பக்கத்தில்
இருந்த சின்ன கேட் பக்கம் பார்வை சென்றது. அதில் துருப்பிடித்த பூட்டு ஒன்று
தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பலமாகப் பிடித்து இழுத்தான். அது கையோடு வந்தது.
மிக வேகமாக எல்லோரும் ஓடிச் சென்று தொழுகையில் கலந்து
கொண்டார்கள். தொழுகை முடிந்து துஆ ஓதி முடிப்பதற்குள் போலிஸ் குரல் கேட்டு
உள்ளிருந்த அனைவரும் பீதியடைந்தனர்.
“பாய், எல்லோரும் வெளியே வாங்க” என்று போலிஸின் அதிகாரக்
குரல் ஒன்று வன்மையாகக் கேட்டதும் அனைவரும் பயந்துகொண்டே வெளியே வந்தனர்.
“ஏன் பாய், ஊரடங்கு போட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?
உங்களுக்குத் தனியா சொல்லணுமா? எல்லோரும் வேன்ல ஏறுங்க” என்று மிரட்ட, எல்லோரும்
வேனில் ஏறினார்கள்.
எல்லோரையும் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, சிறையில்
அடைத்தார்கள். எல்லோரும் அச்சத்தில் இருக்க, முஸ்தபா மட்டும் ஆழ்ந்து யோசித்துக்
கொண்டிருந்தான்.
அவன் பக்கத்தில் இருந்த அமீர்ஸாப் அவனிடம், “என்னப்பா
ஆழ்ந்த யோசனை?” என்று கேட்க, “இல்ல பாய், நான் எத்தனையோ தவறுகள் செய்துட்டு இந்த
ஜெயிலுக்குப் பல தடவை வந்துருக்கேன். அதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா இப்ப, நான்
என்ன தவறு செய்தேன். எதற்காக கைது செய்து இந்த ஜெயிலுல போட்ருக்காங்க? நன்மை
செய்வதுகூட தவறா பாய்?” என்று கோபமாகக் கேட்டான்.
“அப்படி இல்லப்பா, நாம தொழுததால் நம்மைக் கைது செய்யல. சட்டத்த
மீறிச் செயல்பட்டதால்தான் நம்மைக் கைது செய்துருக்காங்க. சட்டத்த மீறினால்
கைதுதான். இதில் நல்லது, கெட்டதுன்னு எதுவுமில்ல. சட்டத்தால் நல்லதையும் கெட்டதாக்க
முடியும். கெட்டதையும் நல்லதாக்க முடியும்” என்றார்.
“எப்படி பாய், புரியலையே” என்றான்.
“ஒனக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். “மது குடிப்பது தடை”ன்னு
அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது
செய்வாங்க. “மது குடிப்பது தடை இல்லை”ன்னு அரசாங்கம் சட்டம் போட்டுருக்கும்போது
ஒருவன் மது குடித்தால் அவனைக் கைது செய்ய மாட்டாங்க. இதுதான்பா சட்டத்தின் வலிமை.
இப்ப புரியுதா?” என்றார் அமீர் ஸாப்.
“தெளிவாப் புரிஞ்சுது பாய்” என்றான்
“சரி, வாப்பா அசர் தொழுகலாம். நேரமாச்சு” என்று அமீர்ஸாப் சொல்ல,
“உளூ செய்யணுமே. என்ன செய்யிறது பாய்?” என்றான் முஸ்தபா.
“உளூ செய்ய முடியாதபோது, தயம்மும் செய்துக்கலாம். எப்படி
செய்யிறதுன்னு நான் உனக்குச் சொல்லித்தாரேன். நான் செய்வதைப்போல் நீயும் செய்”
என்று சொல்லிவிட்டு அமீர்ஸாப் தயம்மும் செய்யத் தொடங்கினார்.
அதன்பின் அவ்விருவரும் அங்கே தொழுக, மற்றவர்களும் ஆங்காங்கே
தொழுதார்கள்.
இவர்களின் நன்னடத்தையைப் பார்த்த எஸ்.ஐ., இவர்கள்
அனைவரையும் விடுதலை செய்ய மேலிடத்துக்குப் பரிந்துரை செய்தார்.
மேலிடத்திலிருந்து விடுதலைக்கான உத்தரவு வருவதற்குள்,
ஊரடங்கு உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.
“அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லியவாறே அனைவரும் விடுதலையாகி
ஊர் திரும்பினர்.
ஊருக்குள் சென்றதும், அனைவரும் தத்தம் வீட்டிற்குச் செல்வதற்குமுன்
அல்லாஹ்வின் வீட்டிற்குள் சென்று நிம்மதியாகத் தொழுதனர்.
18 04 2020 24 08 1441
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக