வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மன்னரிடம் ஒரு பேட்டி


==========================
மன்னா, தங்களிடம் பேட்டி காண அயலூரிலிருந்து ஒரு பத்திரிகையாளர் வந்துள்ளார். உள்ளே வரச்சொல்லவா? என்று அமைச்சர் கேட்டார்.

யோவ், அமைச்சரே, நான்தான் யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்று தெரியாதா? பிறகு ஏனய்யா இந்தக் கேள்வி. திருப்பி அனுப்புமய்யா அவரை.

மன்னா, நான் தங்களின் வழக்கத்தை அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டேன். அவர் போக மறுக்கிறார். மிகவும் அடம்பிடிக்கிறார். நான் என்ன செய்ய?

சரி, வரச்சொல்லும்.

நிருபர்: மன்னா, தாங்கள் முதலில் 7 நாள்கள் ஊரடங்கு என்று சொன்னீர். பிறகு ஏப்ரல் 14 வரை என்று சொன்னீர். பின்னர் மே 3 வரை என்று நீடித்துள்ளீர். இதன் மர்மம் என்ன?

மன்னர்: ஐயா, ஒரு தட்டுச் சோற்றை அப்படியே ஒரே வாயில் ஒரே நேரத்தில் சாப்பிட முடியுமா? ஒவ்வொரு கவளமாகத்தானே சாப்பிட முடியும்? அதுபோல், 40 நாள்கள் ஊரடங்கு என்று ஒரே உத்தரவாகப் போட்டால் மக்கள் கொதிப்பார்கள்; வெகுண்டெழுவார்கள். எனவேதான் குடிமக்களின் நலன் கருதி கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கிறேன். இது நான் குடிமக்கள்மீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டவில்லையா?

நிருபர்: சரி மன்னா, ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் கணக்கு மட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறதே? மற்றொரு பக்கம் குணமாகிச் செல்வோர் கணக்கு மறைக்கப்படுகிறதே. இது குறித்து தங்களின் கருத்து?

மன்னர்: ஊரடங்கு போட்டுள்ள இச்சமயத்தில், நாம் போட்டுள்ள உத்தரவு சரியானதுதான் என்று மக்கள் நம்ப வேண்டாமா? குறைகிற கணக்கைக் காட்டத் தொடங்கினால், எஞ்சியுள்ள ஊரடங்கு நாள்களை எவ்வாறு கடத்துவது? கொஞ்சம் கொஞ்சமாக அச்சத்தை ஊட்டிக்கொண்டே இருந்தால்தானே நாம் போட்டுள்ள உத்தரவு சரிதான் என்று மக்கள் எண்ணுவார்கள்? மன்னர் சரியாகவே செயல்படுகிறார் என்று எம்மைப் புகழ்வார்கள். சரிதானே?

நிருபர்: தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மருந்துப் பொருள்களை அமெரிக்காவிற்குத் திருப்பிவிட்டுவிட்டீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே?

மன்னர்: ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்-பழமொழி கேள்விப்பட்டதில்லையா? நாம் அவர்களுக்கு மருந்து கொடுத்தால், நம் மக்கள் தாமே குணமடைவார்கள். இது தெரியாதா? இப்போது கேள்விப்பட்டீர்களா? அமெரிக்காவில் 34,000 பேருக்கு மேல் இறந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மிக அற்பமான எண்ணிக்கையில்தான் இறந்துள்ளார்கள். மக்களை நடமாட விட்டிருந்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எத்தனையோ பேர் இந்நேரம் இறந்திருப்பார்கள். அவர்களையெல்லாம் நான் காப்பாற்றியிருக்கிறேன் அல்லவா? இப்போது சொல்லுமய்யா என் ஆட்சியின் திறமையை.

நிருபர்: எல்லாருக்கும் ஊரடங்கு போட்ட நீங்க, பத்திரிகை அலுவலகத்தை மட்டும் விட்டுவிட்டீர்களே?

மன்னர்: அவர்களெல்லாம் நம்ம ஆளுங்க. அவங்களெல்லாம் நமக்கு சப்போர்ட் செய்யுற ஆளுங்க. அவங்கதானே ஒவ்வொரு நாளும் மக்களை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால் நம்ம உத்தரவு மக்களுக்கு நியாயமாகப் படுமா? பத்திரிகையும் டிவியும்தான் மாறி மாறி, போட்டி போட்டுக்கொண்டு மக்கள் மனங்களில் நம்மீது வெறுப்பு ஏற்பட்டு விடாமல், நல்லவர் என்ற தோற்றத்தைக் கட்டமைக்கின்றன. அவற்றைத் தடுத்துவிட்டால் நம் நிலை என்னாவது?

நிருபர்: அப்படியானால் பொதுவாக உள்ள பிரிண்டிங் பிரஸ்ஸையெல்லாம் திறந்துவிடலாமே?

மன்னர்: அவையெல்லாம் நம் கண்ட்ரோலில் இல்லை. அங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகள் நமக்கு எதிராகக்கூடச் செய்திகளை வெளியிடலாம். எனவே அவற்றுக்கெல்லாம் ஊடரங்கு தொடரட்டும். அவையெல்லாம் முடங்கட்டும்.

நிருபர்: மன்னா, இந்த ஊரடங்கு எப்போதுதான் முடிவுக்கு வரும்? மே 3ஆம் தேதியோடு முடிந்துவிடுமா? நீடிக்குமா?

மன்னர்: ஏற்கெனவே ஏப்ரல் 14-க்கு மேல் நீட்டிக்கும் எண்ணமில்லை என்று தெரிவித்தோம். அதற்கு முரணாக இப்போது மே 3 வரை என நீட்டித்துள்ளோம். அதுபோலவே கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்துக்கொண்டே இருப்போம். யார் நம்மைக் கேட்கப்போகிறார்? அப்படியே கேட்டாலும் அவரை ஆன்ட்டிஇன்டியன் என்று கூறி சிறையில் அடைத்துவிடுவோமல்லவா? ஹ்ஹா.... ஹ்ஹா.... ஹ்ஹா....

-
நூ. அப்துல் ஹாதி பாகவி
17 04 2020      22 08 1441    

=============================

கருத்துகள் இல்லை: