-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தாம் அனுப்பப்பட்ட சமுதாய மக்கள் நலனுக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். இச்சமுதாய மக்களுள் யாரும் நரகத்திற்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பெருமுயற்சி செய்தார்கள். எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று, ஏகத்துவ உறுதிமொழியை மனதாரச் சொல்லிவிட வேண்டுமென்பதற்காக அல்லும் பகலும் பெருமுயற்சி செய்தார்கள். அதை ஏற்காதவர்களை எண்ணியெண்ணிக் கவலையடைந்தார்கள். அவர்களின் பெருங்கவலையைக் கண்ட அல்லாஹ், “(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அவர்களின் போக்கிற்காகக் கடும் துக்கப்பட்டு உம்மைநீரே மாய்த்துக் கொள்வீர் போலும்!” (18: 6) என்று திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.
எல்லா இறைத்தூதர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்புப் பிரார்த்தனையைக் கொடுப்பது அல்லாஹ்வின் வழக்கம். அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளாமல், அதைத் தமது சமுதாய மக்களின் மறுமை நலனுக்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள்.
இந்த அளவிற்குத் தம் சமுதாய மக்கள்மீது பேரன்பு கொண்டுள்ள இறைத்தூதருக்கு இச்சமுதாய மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை என்ற வினா நம்முன் நிற்கிறது. அத்தகைய கடமைகளுள் மிக முக்கியமானவை மூன்று உள்ளன. 1. அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசித்தல், 2. அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுதல், 3. அவர்கள்மீது அதிகமாக ஸலவாத் ஓதுதல் ஆகியவையாகும்.
நம் உயிரைவிட மேலாக நாம் ஏன் அவர்களை நேசிக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வாறு நேசித்தால்தான் நம்முடைய இறைநம்பிக்கையே- ஈமானே- முழுமையடையும்.
அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க மேலானவர். (33: 6)
“உங்களுள் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரீ: 15)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனமும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழியும் சான்றுக்காக ஒவ்வொன்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இதுபோல் திருக்குர்ஆனின் பல வசனங்களில் இந்த இறைத்தூதரை நேசித்தல், கண்ணியப்படுத்துதல், உதவி செய்தல், குரலைத் தாழ்த்திப் பேசுதல், முந்திக்கொண்டு கருத்துச் சொல்லாதிருத்தல் உள்ளிட்ட பலவற்றையும் அல்லாஹ் கூறியுள்ளான். மேலும் தம்மை மக்கள் நேசிக்க வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்மீது அவர்கள்தம் தோழர்கள் எந்த அளவிற்கு அன்பும் நேசமும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாற்றில் காண்கிறோம். ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின்போது உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குரைஷிகள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்திருந்தார். அப்போது பல விஷயங்களைப் பேசியபின், “இந்த முகங்களையெல்லாம் பார்த்தால், உமக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது உம்மை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள் என்றுதான் தெரிகிறது” என்றார். அதைக் கேட்ட அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு, “லாத் உடைய அந்தரங்க உறுப்பைச் சப்புடா. நாங்கள் எங்களுடைய இறைத்தூதரை விட்டுவிட்டு ஓடிவிடுவோம் என்றா சொல்கிறாய்?” என மிகுந்த சினத்துடன் கேட்டார்கள். அவர்கள் இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் இதுபோன்று சினம் கொண்டதில்லை. அந்த அளவிற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டிருந்தார்கள்.
உர்வா பின் மஸ்ஊத் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவினார். பாதுகாப்பிற்காக நபியவர்களின் அருகில் நின்றுகொண்டிருந்த முஃகீரா பின் ஷுஅபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவருடைய கையைத் தமது வாளால் தட்டிவிட்டார்கள். இரண்டாவது முறையும் அவர் நபியவர்களின் தாடியைப் பிடித்துத் தடவியபோது தமது வாளால் தட்டிவிட்டார்கள். மூன்றாம் முறை பிடித்தபோது, உடனே அவர்கள் தமது வாளால் அவரது கையைத் தட்டிவிட்டு, “கையை எடுத்துவிடு. இல்லையேல் உன் கை உன்னிடம் திரும்பாது” என்று கடும் சினத்தோடு கூறினார்கள். இந்த அளவிற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டிருந்தார்கள். விரும்புவோர் புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் விரிவாகப் படித்துக்கொள்ளலாம். (2731)
உஹுதுப் போர் மிகக் கடினமான போர். முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். முஸ்லிம்கள் பலர் ஷஹீதாக்கப்பட்டார்கள். அந்தப் போரின் இடையே எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முஸ்லிம்கள் அங்குமிங்கும் ஓடினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் யாருமில்லாத நிலை ஏற்பட்டது. அதையறிந்த தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபியவர்கள்மீது எதிரிகள் எய்த அம்புகளையெல்லாம் தம் உடலைக் கேடயமாக்கி, அவர்களைப் பாதுகாத்தார்கள். பற்பல அம்புகள் அவர்களின் உடலைத் துளைத்தன. தம் உயிரையே பணயம் வைத்து நபியவர்களைக் காத்தார்கள். இதுதான் அன்பின் வெளிப்பாடு; நேசத்தின் அடையாளம்.
நபிவழியை-சுன்னத்தை-ப் பின்பற்றுதல்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது நேசம் கொண்டோர் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை-வாழ்க்கை நெறிமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டும். அதுதான் அவர் நபியவர்கள்மீது நேசம் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும். வெறுமனே வாயளவில் சொன்னால் மட்டும் போதாது. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஒருவர் நம்மைப் பார்த்ததும் ‘இவர் ஒரு முஸ்லிம்’ என்று தெரிகின்ற விதத்தில் நம் தோற்றத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நாம் வழியில் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம்-முகமன் கூற வேண்டும். நாம் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் கூறுதல், பிறர் தும்மி அல்ஹம்து லில்லாஹ் கூறினால் அதற்குப் பதிலளிக்குமுகமாக யர்ஹமுகல்லாஹ் கூறுதல், கொட்டாவி விட்டால் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் கூறுதல், சாப்பிடுமுன்-சாப்பிட்டபின்-தூங்குமுன்-தூங்கி எழுந்தபின்-கழிவறைக்குள் நுழையுமுன்-அங்கிருந்து வெளியே வந்தபின்- முதலான தருணங்களில் துஆ ஓதுதல்- இவை யாவும் நபிவழிகளாகும்.
மஸ்ஜிதுக்குள் நுழையும்போது நபியவர்களுக்கு ஸலாம் கூறி, பின்னர் அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக என்று துஆ ஓதுவதும், பாங்கு சொல்லப்படும்போது அவ்வார்த்தைகளையே பதிலாகக் கூறுவதும், அதன்பின் நபியவர்கள்மீது ஸலவாத் ஓதி, அவர்களுக்காக ‘வசீலா’ எனும் உயர்பதவியை அல்லாஹ்விடம் கேட்டு துஆ செய்வதும், மனைவியிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதும், பிள்ளைகளிடம் அன்போடு நடந்து கொள்வதும், உறவினர்களைப் பேணி வாழ்வதும், அண்டை வீட்டாரை அரவணைத்து வாழ்வதும், துன்பங்களைச் சகித்துக்கொள்வதும், பிறரைப் பார்க்கும்போது முகமலர்ச்சியோடு சந்திப்பதும், கடமையான தொழுகைகளை நிறைவேற்றியபின் சுன்னத்தான தொழுகைகளைத் தொழுவதும், வியாபாரத்தை நேர்மையாகச் செய்வதும், கடன் வாங்கினால் குறிப்பிட்ட தவணைக்காலத்தில் உரிய முறையில் நிறைவேற்றுவதும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நபிவழிகளாகும்.
பெண்கள் தம் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், அவரை முகமலர்ச்சியோடு வரவேற்பதும், மகிழ்ச்சிப்படுத்துவதும், அவருடைய கட்டளைகளுக்குப் பணிவதும், அவருக்குப் பணிவிடைகள் செய்வதும், அவருடைய பொருள்களைப் பாதுகாப்பதும், பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதும் அவர்கள் நபியவர்கள்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாகும்.
ஸலவாத் கூறுதல்: நபியவர்கள்மீது நாம் ஒவ்வொரு நாளும் ஸலவாத் கூறுமுகமாகவே அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களின் பெயர் கூறாமல் அவர்கள்மீது ஸலவாத் ஓதாமல் தொழுகை என்பதே கிடையாது. அவர்களின் பெயர் கூறப்படாமல் பாங்கும் இகாமத்தும் கிடையாது; கலிமாவும் இல்லை.
அல்லாஹ் கூறுகின்றான்: திண்ணமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபிமீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள். (33: 56) இந்த இறைவசனத்தின்படி அவர்களுக்கு முகமன் கூறுவதும் அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் கடமையாகும். “அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ்” என்று நாம் கூறினால் அதை எடுத்துச் சென்று அவர்களிடம் சமர்ப்பிக்கும் வானவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அதை எடுத்துச் சென்று இன்னார் உங்களுக்கு ஸலாம் சொன்னார் என்று தெரிவித்துவிடுவார்கள். இதனால்தான் நாம் பள்ளிவாசலுக்குள் நுழைகின்றபோது அவர்களுக்கு ஸலாம்-முகமன் கூற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நம் உயிரைவிட மேலாக நேசிப்பதும் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் வழிமுறையைப் பேணி நடப்பதும், அவர்கள்மீது ஸலவாத் ஓதுவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நற்பேற்றை நல்குவானாக.
=========================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக