-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
விளையாட்டு என்றால் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும்; சிலர் விதிவிலக்கு இருக்கலாம். சிறுவர்-சிறுமியர் தம்மைச் சுற்றியுள்ள எதையும் பொருட்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள். விளையாட்டுதான் அவர்களுடைய ஆரோக்கியமான வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது. ஓடியாடி விளையாடாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால் அப்பிள்ளைக்கு ஏதோ உடல்சார் குறைபாடு உள்ளது என்பதைப் பெற்றோர் அறிந்துகொள்வார்கள்.
குழந்தைப் பருவ விளையாட்டின் நீட்சியாக இளமைப்பருவ விளையாட்டுகள் தொடர்கின்றன. சிறுபிராயத்தில் விளையாடிய விளையாட்டுக்கும் இளமைப் பருவத்தில் விளையாடுகின்ற விளையாட்டிற்கும் வித்தியாசம் உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவது இயல்பானதும் குறிக்கோள் அற்றதுமாகும். இளமைப் பருவம் வந்ததும், தமக்குப் பிடித்தமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, வெற்றி#தோல்விக்கென ஓர் இலக்கை நிர்ணயித்து விளையாடி, வெற்றிபெற்றதும் குதூகலித்து மகிழ்வதாகும். தோல்வியடைந்தவர்கள் நாம் அடுத்த முறை வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதில் கொள்வதாகும்.
இளைஞர்கள் சிலருக்கு ஓடுவதும் தாண்டுவதும் பிடிக்கும்; சிலருக்குப் பந்து விளையாட்டு பிடிக்கும்; வேறு சிலருக்கு கிரிக்கெட் பிடிக்கும்; இன்னும் சிலருக்கு நீச்சல் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளையாட்டு பிடிக்கும்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு, ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற, மனவலிமையைப் பெருக்குகின்ற விளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். ஓட்டப் பயிற்சி, அம்பெறிதல், ஈட்டி எறிதல், துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆர்வமூட்டி, முறையான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
குதிரையேற்றம், அம்பெறிதல் போன்ற பயிற்சிகளை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. ஒரு தடவை நபித்தோழர்கள் தம்மிடையே இரு பிரிவினராக நின்றுகொண்டு அம்பெறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுள் ஓரணியினர் பக்கம் நின்றுகொண்டு, இப்போது நீங்கள் அம்பெறியுங்கள் என்றதும், மற்றோர் அணியினர் விளையாட்டை நிறுத்திவிட்டனர். ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று நபியவர்கள் கேட்டபோது, தாங்கள் அந்தப் பக்கம் இருக்கும்போது நாங்கள் எப்படித் தங்களுக்கெதிராக அம்பெறிய முடியும்? என்று கேட்க, சரி, நீங்கள் அம்பெறியுங்கள். நான் உங்கள் அனைவரின் பக்கமும் இருக்கிறேன் என்றார்கள்.
இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றிருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டையே இன்றைய இளைஞர்கள் பலர் விரும்புகிறார்கள். அதில் உரிய பயிற்சி மேற்கொண்டால் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளலாம்; பின்னர் தேசிய அளவிலான போட்டியில் வென்றால், இந்திய அணியில் ஒருவராகப் பங்குபெற்று உலக அளவில் சாதனை படைக்கலாம்.
அதே நேரத்தில் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள விளையாட்டுகளைத் தேர்வு செய்து அதில் பயிற்சி பெற்றால் உலக அளவில் சாதனை படைக்கலாம் என்பதையும் இன்றைய இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஓட்டம், நீளம் தாண்டுதல், நீச்சல், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் உலக அளவில் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
இவ்வாறு பரந்த நோக்கோடு சிந்தித்துச் செயல்படுவதும் விளையாட்டிற்கான சீரான வழியைக் காட்டுவதும் பெற்றோரின் பெரும் பொறுப்பாகும். இவற்றில் கவனம் செலுத்தாமல், உங்கள் பிள்ளைகள் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கிப்போவதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்களின் மனவலிமையும் உடற்திறனும் குன்றிப்போவதோடு ஆரோக்கியத்தை இழப்பதற்கான சாத்தியமும் நிறையவே உண்டு என்பதை மறவாதீர்கள்.
வீட்டிற்குள் விளையாடும் (இன் டோர் கேம்ஸ்) விளையாட்டுகளிலேயே இன்றைய சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கிப்போகின்றார்கள். வெளியில் சென்று விளையாடுவதற்கான சூழ்நிலை இல்லை. அதனால் அவர்கள் செல்போனிலும் கணினியிலும் பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுகளை விளையாடுவதிலேயே பொழுதைக் கழித்துவிடுகின்றனர். அவர்கள் விளையாடும்
விளையாட்டுகளில் சுடுதல்,
அடித்தல், மிதித்தல், கொல்லுதல், வேகமாக
கார் ஓட்டுதல் போன்ற வன்மமான செயல்களே இருக்கின்றன. சிறுவர்களின் இளநெஞ்சில் நஞ்சை
விதைக்கும்வண்ணம் திட்டமிட்டு, இவை
போன்ற விளையாட்டுகள் யூதர்களால் பரப்பப்படுகின்றன. சில விளையாட்டுகள் நம்
சிறுவர்களை அவற்றிலேயே அடிமையாக்கிவிடுகின்றன.
அதையும் தாண்டி, உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளும் உள்ளன. ஈராண்டுகளுக்கு முன்பு சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் புளூவேல் (நீலத்திமிங்கலம்) எனும் தற்கொலை விளையாட்டு நுழைந்து, பல்வேறு உயிர்களைப் பலிகொண்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். பின்னர் மக்கள் பலரின் எதிர்ப்பால் அது தடைசெய்யப்பட்டது. தற்போது அதே வகையில் பப்ஜி (PUBG) எனும் விளையாட்டு சிறுவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த விளையாட்டு இன்றையச் சிறுவர்களைக் கட்டிப்போட்டுள்ளது. இந்த விளையாட்டில் கண்மூடித்தனமாக மூழ்கிய சிறுவர்கள் சிலர் உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறுதான் இன்றைய செல்போன் விளையாட்டுகள் உள்ளன. எனவே பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவைபோன்ற ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்த்துவிட்டு, பயன்தரும் விளையாட்டுகளையும் அறிவுத்திறனை மேம்படுத்தும் விளையாட்டுகளையும் நம் பிள்ளைகளுக்குச் சுட்டிக் காட்டி அவர்களுடைய சிந்தனையை மடைதிருப்பலாம். சொற்களை உண்டாக்குகிற அல்லது கண்டுபிடிக்கிற சொல்விளையாட்டு (வேர்ட் கேம்), வார்த்தைகளை இணைத்து வாக்கியங்களை உருவாக்கும் விளையாட்டு, கணித விளையாட்டு எனப் பயன்தரும் விளையாட்டுகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றைக் கண்டறிந்து நம் பிள்ளைகளை அவற்றில் ஈடுபடுத்தினால் விளையாட்டு மூலமே கல்வியைக் கற்றுக்கொள்வார்கள்.
விளையாட்டு மனவலிமையையும் நிர்வாகத்திறனையும் தரவல்லது. அத்தோடு வெற்றி-தோல்வியை எதிர்கொள்கின்ற பக்குவத்தையும் கொடுக்கிறது. அதன் அடிப்படையிலேயே விளையாட்டு வீரர்கள் பலர், பெரும் பெரும் பதவிகளில் இருந்துள்ளார்கள்; தற்போதும் இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம். இந்தியக் கிரிக்கெட் வீரர் முஹம்மது அஸாருத்தீன் 2009ஆம் ஆண்டு உ.பி.யில் முராதாபாத் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகத் திகழ்ந்தார். பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான் தற்போது அந்நாட்டின் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் போன்று பலர் உள்ளனர். நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பலர் விளையாட்டுத் துறையில் போதுமான கவனம் செலுத்தாமைக்குக் காரணம் அதைக் குறித்த விழிப்புணர்வின்மையே ஆகும்.
விளையாட்டில் ஈடுபட்டால் வாழ்க்கையே விளையாட்டாக ஆகிவிடுமோ
என்ற அச்சமும் ஒருபுறம் உண்டு. நன்கு விளையாடி, சிறந்த
விளையாட்டு வீரனாக உருவானால் அதுவே அவரது வாழ்க்கைக்குப் போதுமல்லவா? ஏன் அந்தக் கோணத்தில் நாம் சிந்திப்பதில்லை?
இஸ்லாமிய மார்க்கம் தீங்கான விளையாட்டைத்தான் கண்டிக்கிறது. வீண்விளையாட்டுகளில் ஈடுபடாதீர்கள் என்று எச்சரிக்கிறது. சூதாட்டத்தைத் தடைசெய்கிறது.
அதாவது அல்லாஹ்வை மறந்து விளையாட்டில் இலயிப்பதுதான் வீண்விளையாட்டு. அத்தோடு உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை, தீய எண்ணங்களைத் தூண்டுபவை, வன்முறையைத் தூண்டுபவை, சண்டையை உண்டாக்குகிற சூதாட்டம் இவையெல்லாம் வீண்விளையாட்டுகளாகும். இவற்றைத் தவிர்த்துக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும்.
விளையாடுபவர்கள் குறைவாக இருந்தாலும் விளையாட்டைப் பார்த்து இரசிக்க நிறையப் பேர் உண்டு. இது எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள், தம் தோழர்களோடு அம்பெறியும் விளையாட்டில் கலந்துகொண்டுள்ளதோடு, தம் அன்பு மனைவி ஆயிஷா (ரளி) அவர்களோடு விளையாட்டைப் பார்த்து இரசித்திருக்கிறார்கள். குறிப்பாக பெருநாள் அன்று, தம் அன்பு மனைவி ஆயிஷாவோடு, அபிசீனியர்கள் அம்பெறிந்து விளையாடிய விளையாட்டைப் பார்த்து இரசித்திருக்கிறார்கள். தம் மனைவி ஆயிஷாவிடம், போதுமா என்று கேட்டு, அவரது ஆசை தீரும் வரை கண்டு இரசித்திருக்கிறார்கள் என்ற செய்தியை புகாரீ, நஸாயீ உள்ளிட்ட நபிமொழித் தொகுப்பு நூல்களில் காண முடிகிறது.
ஆக, விளையாட்டைப் பார்த்து இரசிப்பது குற்றமில்லை. அல்லாஹ்வை மறந்து அதிலேயே இலயிப்பதும் தன்னை மறந்து அதில் மூழ்கிவிடுவதுமே குற்றம். இறையச்சம் கொண்ட விளையாட்டு வீரர்கள் தொழுகை நேரம் வந்ததும் அம்மைதானத்திலேயே தொழுவதை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். அதுதான் இறையச்சத்தின் வெளிப்பாடு. தொழுகைக்குரிய நேரத்தைத் தவறவிட்டு விடாமல் விளையாட்டில் ஈடுபடலாம்; விளையாட்டைப் பார்த்து இரசிக்கலாம்.
முடிவாக, இஸ்லாம் விளையாட்டிற்குத் தடைவிதிக்கவில்லை என்பதையும் சூதாட்டத்தையும் வீண்விளையாட்டுகளையுமே இஸ்லாம் எதிர்க்கிறது என்பதையும் உணர்ந்துகொள்வோம். ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் செல்போன் விளையாட்டுகளில் மூழ்கி, தம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதையும் தடுத்து நிறுத்தி, மனவலிமையை அதிகரிக்கச் செய்யும் விளையாட்டுகளிலும் வீரவிளையாட்டுகளிலும் ஈடுபட வழிகாட்டுவோம். ஆளுமைத்திறன் பெற்ற பிள்ளைகளாக உருவாக்கப் பாடுபடுவோம்.
=========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக