சனி, 12 அக்டோபர், 2019

பொருளாதாரச் சீரழிவுக்கான தீர்வென்ன?



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் சீரழிந்து கிடக்கிறது என்பதை நாம் அறிவோம். அதற்குப் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். பணமதிப்பிழப்புச் செய்யப்பட்டதிலிருந்து பொருளாதாரம் சீரழிந்து வருகிறது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மத்திய அரசு மதியில்லாமல் விதித்த ஜி.எஸ்.டி. வரிதான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். பொருளாதார மந்த நிலையின் எதிரொலியால், பல நிறுவனங்கள் தம் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன. ஐந்து ரூபாய் பிஸ்கெட்டைக்கூட வாங்குவதற்கு மக்கள் யோசிக்கிறார்கள் என்று சில பிஸ்கெட் நிறுவனங்கள் புலம்புகின்றன. சாதாரண காரை வாங்கவும் ஆள் இல்லை என கார் நிறுவனம் ஒன்று புலம்புகிறது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாகப் புலம்புவதைக் காணமுடிகிறது.

பொருளாதார வல்லுநர்கள், அறிவொளி இழந்த இன்றைய ஆட்சியாளரின் முரட்டுத்தனமான நிர்வாகத்தைக் குறைகூறுகின்றனர். இந்நிலை இப்படியே நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். பணமதிப்பு முற்றிலும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர்.

வட்டி: வட்டியை அடிப்படையில் பொருளாதாரக் கணக்கை மேற்கொண்டால் அது எந்த நாட்டுக்கும் கேடுதான். ஏனென்றால் வட்டி குட்டி போடும் என்று சொல்வார்கள். அவ்வாறு வட்டி குட்டி போட்டால், அது பணத்தைக் கடனாக வாங்கியவனுக்கு மிகப் பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும். அது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துமே தவிர பரவலான, தாராளமான பணப்புழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது. அது ஒரு சாராரை வாட்டி, மற்றொரு சாராரை வாழ வைக்கும். பொருளாதாரம் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தேங்குவதற்கு வழிவகுக்கும். இதனால்தான் நுண்ணறிவாளன் அல்லாஹ் வட்டியைத் தடைசெய்துள்ளான்.
இறைநம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பல்கிப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அதன்மூலம்) நீங்கள் வெற்றி பெறலாம். (3: 130)

இந்த அடிப்படையில் நம் நாடு உலக வங்கியிடம் வாங்கிய கடனுக்கு மட்டும் 6.6 இலட்சம் கோடி வட்டியாகக் கட்டுகிறது. அசல்தொகையைச் செலுத்தவே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் பெருகி வருகிற வட்டியை மட்டுமே செலுத்திக்கொண்டு வருகிறது. இதுதான் வட்டியின் கொடூரமுகம். வாங்கியவன் தொடர்ந்து அடிமையாகவே இருக்க வேண்டுமே தவிர, அதிலிருந்து மீளமுடியாது. இதனால் நம்முடைய குறிப்பிட்ட வரி வருமானத்தில் மக்களுக்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் கடன் வாங்கியே திட்டங்களை நிறைவேற்றும் அவல நிலை தொடர்கிறது.
வாராக்கடன்: விவசாயக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் முதலான கடன்களைப் பெறுவோர் அதைத் திருப்பி ஒப்படைக்க முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் செலுத்துவதற்குள் வட்டி பன்மடங்காகப் பெருகிவிடுவதுதான். அதனால் அவர்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்ற மனநிலையே மாறிவிடுகிறது. ஆகையால் வங்கிக்கு வாராக்கடன் பெருகி, இழப்பு ஏற்படுகிறது. அதை ஈடுகட்ட வட்டி விகிதத்தை மேலும் உயர்த்துகிறது வங்கி.

மற்றொரு புறம், பெரும் பெரும் நிறுவனங்களை நடத்துவோர் தம் நிறுவனங்களின் வளர்ச்சியைக் காட்டி, பல்லாயிரம் கோடி வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறுகின்றார்கள். குறிப்பிட்ட காலத்தில் அதைத் திருப்பிச் செலுத்தாமல் நஷ்டக் கணக்கைக் காட்டித் தப்பித்துக்கொள்கின்றனர். அல்லது அரசியல் தலைவர்களின் ஆதரவோடு அயல்நாடுகளுக்குத் தப்பித்துச் சென்றுவிடுகின்றனர். இதனால் வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி நட்டம் ஏற்படுகிறது. அதன்மூலம் இந்தியப் பொருளாதாரம் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது.

வரிக்குமேல் வரி: ஒரு கல்லூரியிலோ நிறுவனத்திலோ பணியாற்றும் ஒருவர், தம் சம்பளத்தைப் பெறும்போது வரிபிடித்தம் செய்யப்பட்டுத்தான் பெறுகிறார். பின்னர் அவர் பொதுவெளிக்கு வந்து, தமக்குத் தேவையான பொருள்களை வாங்கும்போது ஜி.எஸ்.டி. என்ற வகையில் 5 முதல் 28 சதவிகிதம் வரை வரி கட்ட வேண்டியுள்ளது. இப்படி அவர் வாங்குகின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. கட்டுவதால் அவர் பெருமளவு பாதிக்கப்படுகிறார். இதனால் பலர் தம் அடிப்படைத் தேவைகளைத் தவிர, பிறவற்றை வாங்காமல் ஒத்திப்போடுகின்றனர். ஆகவே பணப்புழக்கம் குறைகிறது. மக்களின் பணம் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது; பொருளாதார மந்தநிலை ஏற்படுகிறது.

வரிஏய்ப்பு: பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தம் வருமானத்திற்கான வரியை அரசாங்கத்திற்கு உரிய முறையில் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்கின்றனர். அதற்கான காரணம், வருமான வரியும், தொழிற்சாலை வரியும் உச்சத்தில் இருப்பதுதான். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் முப்பது சதவிகித வரியைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றார்கள். எனவே அவர்கள் இவ்வளவு அதிகமான வரியைச் செலுத்த முன்வருவதில்லை. அதனால் அவர்கள் பொய்க்கணக்கையும் நட்டக் கணக்கையும் காட்டி, வரி கட்டுவதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். அல்லது குறைவான வரியைச் செலுத்துகின்றார்கள். அது மட்டுமல்ல, செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்படப் பலர் வெளிநாட்டு வங்கிகளில் தம் பணத்தைச் சேமித்துவைக்கிறார்கள். இதனாலும் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து நிற்கிறது.

வேலையின்மை: இந்திய நாட்டில் பல பேருக்கு வேலை இல்லை. இது பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை. உழைப்பு எங்கே இருக்கிறதோ அந்த நாடுதான் முன்னேற்றமும் வளர்ச்சியும் அடையும். வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. பிறரைச் சார்ந்து வாழ்வது, பிச்சையெடுப்பது, கொள்ளையடிப்பது, திருடுவது, ஏமாற்றுவது உள்ளிட்டவை பரவலாக இருப்பதும் வேலையின்மையின் விளைவுகள்தாம். எல்லோருக்கும் வேலை கிடைத்து, எல்லோரும் உழைக்கத் தொடங்கிவிட்டால் அந்நாடு பன்மடங்கு வளர்ச்சியடைந்துவிடும்.

உழைப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைக் காணீர்!
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 2072) கைத்தொழில் செய்தும், கையால் உழைத்தும் உண்ண வேண்டும் என்பதற்கான வழியைக் காட்டியுள்ளார்கள். ஒவ்வோர் இறைத்தூதரும் ஒவ்வொரு கைத்தொழிலை மேற்கொண்டுள்ளார்கள். நபி ஸகரிய்யா (அலை) தச்சராகவும், நபி தாவூத் (அலை) கவச ஆடைகளைச் செய்பவராகவும், இத்ரீஸ் (அலை) தையலராகவும், மற்றும் இறைத்தூதர்கள் பலர் ஆடுமேய்ப்போராகவும் இருந்துள்ளார்கள். உழைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது என்பதை இறைத்தூதர்கள் மூலம் இறைவன் கற்பித்துள்ளான்.

நூறு நாள்கள் வேலைத் திட்டம் என்பதும் கானல் நீராக உள்ளது. பற்பல நிறுவனங்கள் தம் பணியாள்களைக் குறைக்கின்றன. இவ்வாறு வேலையிழப்பு மிகுந்து சென்றுகொண்டிருக்கின்றது. மற்றொரு பக்கம் வேலை வாய்ப்பு என்பதே உருவாக்கப்படுவதில்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையெல்லாம் சரிசெய்யாமல் நம் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்ய முடியாது. எனவே வேலையின்மையை முதலில் களைய அரசு முன்வர வேண்டும்.

தீர்வு: வட்டிப் பொருளாதாரப் பகிர்வை அடியோடு ஒழிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரச் சுமையிலிருந்து ஒவ்வொருவரும் மீண்டெழ முடியும். வாராக்கடன்களை மீட்டெடுக்க வேண்டும்; வங்கிகளில் கடன் பெற்று, அதைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய தொழிலதிபர்களை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவந்து, அவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். கணக்கில் காட்டாமல் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்துள்ள பணத்தை உடனடியாக மீட்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரே சீரான வரியை விதிக்க வேண்டும். அதாவது ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டுகின்ற ஒவ்வொருவருக்கும் இரண்டரை சதவிகித வரி என்பதை நாடு முழுக்க ஒரே சீராகச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு குறைந்தபட்ச வரி விதித்தால் எல்லோரும் தத்தம் வரியை முறையாகச் செலுத்திவிடுவார்கள். அதனால் பொருளாதாரச் சுமை குறையும்; அரசுக் கருவூலம் நிறையும்; பணப்புழக்கம் பரவும்; பொருளாதார மந்த நிலை முடிவுக்கு வரும்.
=========================================








கருத்துகள் இல்லை: