வியாழன், 16 மே, 2019

அவசரப்படாதீர்!




-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் - நன்மையைக் கொண்டு அவன் பிரார்த்தனை செய்வதைப் போன்று (சில நேரங்களில்) தீமையைக் கொண்டும் பிரார்த்தனை செய்கிறான். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்” (17: 11) என்று அல்லாஹ் கூறுகின்றான். 

அதாவது மனிதன் தனது அவசரத்தால், ஏதோ ஒன்றை மிக அவசரமாக அல்லாஹ்விடம் கேட்கிறான். அவன் அது தனக்கு நன்மையெனக் கருதிக் கேட்கிறான். ஆனால் அது அவனுக்குக் கேடாக இருப்பதை அவன் உணர மாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். மனிதன் பிரார்த்தனை செய்கின்றபோது சிலவற்றை அல்லாஹ் உடனடியாகக் கொடுப்பதில்லை; தாமதப்படுத்துவான். அதற்கான காரணம் என்னவெனில், இப்போது அது அவனுக்கு அவசியமில்லை என்பதால்தான். இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை நினைவுகூர்வது சாலப் பொருத்தமாகும். நான் பிரார்த்தித்தேன், ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லைஎன்று கூறி, உங்களுள் ஒருவர் அவசரப்படாத வரை அவரது பிரார்த்தனை ஏற்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்: 5283)

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்” (70: 19) என்று படைத்தோன் அல்லாஹ் பறைசாற்றுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதன் தொடரில் கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியமானது. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டுவிட்டால் பதறிப் போய் விடுகிறான்; அதே வேளையில் அவனுக்கு ஏதேனும் நன்மை கிடைத்துவிட்டால் அதைப் பிறருக்குக் கொடுத்துவிடாமல் தனக்கே உரியதெனத் தடுத்து வைத்துக் கொள்கிறான். மனிதன் அவசரக்காரன் என்பதற்கான அடையாளம்தான் இது. ஏனெனில் துன்பத்தைக் கொடுப்பவனும் இன்பத்தைக் கொடுப்பவனும் ஏக இறைவன் அல்லாஹ்வே ஆவான்.

எனவே துன்பத்தைக் கண்டு துவண்டுவிடுவதோ இன்பத்தைக் கண்டு துள்ளிக் குதிப்பதோ கூடாது. இரண்டு நிலைகளிலும் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அல்லாஹ் வழங்கிய செல்வத்தைத் தனக்கே உரியதென வைத்துக் கொள்ளாமல் அதைப் பிறருக்கு வழங்கும்போது அது கண்டு அல்லாஹ் மகிழ்ந்து அதைவிடப் பல மடங்கு கொடுப்பான். அதுதான் நம்பிக்கையாளர்களின் பண்பென அல்லாஹ் கூறுகின்றான்.
எழுதும்போதும் தட்டச்சு அடிக்கும்போதும் சிலர், ‘அவசரம்என்று எழுதுவதற்குப் பதிலாக, ‘அவரசம்என்று எழுதி விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு அவசரம். படிப்போரும் அவசரப்படுகின்றனர். அவசரமாகப் படித்து, தவறாக விளங்கிக்கொள்கின்றனர். நிதானமாக வாசித்து, எழுதியவர் சொல்ல வந்த கருத்தென்ன என்பதைத் தெளிவாக விளங்க முற்பட வேண்டும். 

பெண்கள் சிலர் பார்த்ததும் ஒருவரைப் பற்றி முடிவெடுத்து விடுகின்றனர். அவர் நல்லவர் - என்று அவசர முடிவெடுத்து, அவரையே காதலித்து, அவரே தம் கணவர் என்று முடிவெடுத்தும் விடுகின்றனர். பெற்றோரின் சம்மதம் இல்லாமலே திருமணமும் செய்துவிடுகின்றனர். இறுதியில் அவர் கெட்டவர்எனத் தெரிந்ததும், யாருடைய பேச்சையும் கேட்காமல் அவசரப்பட்டு முடிவெடுத்ததை எண்ணி வருந்துகின்றனர்.

மனஅமைதியைப் பெறுவதற்காகப் பள்ளிவாசலுக்கு வருகைபுரிகின்ற மனிதர்கள்கூட, கடைசி நேரத்தில் வந்து, மிகத் துரிதமாக வெளியேறிவிடுகின்றனர். நிம்மதியாக உளூச் செய்து, நிம்மதியாக நின்று, பொறுமையாக ஓதித் தொழுது, தன் தேவைகளை இறைவனிடம் முன்வைத்து, பின்னர் சற்று நேரம் இறைவனை நினைத்து, மனமுருக நேரமில்லை. உள்ளே நுழைந்த வேகத்தில் வெளியேறிச் செல்வது இன்றைய இளைஞர்களின் இயல்பாக மாறிவிட்டது. 

ஆண்கள் ஒருபுறம் அவசரப்படுகின்றார்கள் என்றால், பெண்கள் மறுபுறம் அதைவிட மிகுதியாக அவசரப்படுகின்றார்கள். ரேஷன் கடையில் மற்றவர்களெல்லாம் வரிசையில் நிற்க, ஒரு பெண் இடையில் புகுந்து வாங்கிச் செல்ல எத்தனிக்கிறாள். அதனால் பின்னால் கால்கடுக்க வெகுநேரம் நிற்பவர்கள் கூச்சல்போடுகின்றார்கள். அந்தக் கூச்சலைத் தாங்க முடியாமல் அவள் வரிசையின் கடைசியில் போய் நிற்கிறாள். இது ஒரு வகை அவசரம். 

எல்லாவற்றையும் உடனடியாக வாங்கிக் குவித்துவிட வேண்டுமென நினைக்கிறாள் மனைவி. கணவனின் கடின உழைப்பை அறிந்து, அவனுடைய வருமானத்தைத் தெரிந்து, அதற்கேற்பக் காலம் தாழ்த்தி வாங்கிக்கொள்ளலாமே என்றெண்ணாமல் அவசர அவசரமாகப் பொருள்களை வாங்குவதால் குடும்பச் செலவுக்குக் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான் கணவன். எது அவசியமோ அதை வாங்கிக்கொண்டு, பிறவற்றைப் பின்னர் வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டமிடல் இருந்தால் வாழ்க்கை சுவையாக இருக்கும். 

வாகனம் ஓட்டுகின்ற இளைஞர்கள் கண்மண் தெரியாமல் மிக அவசரமாகச் செல்கின்றார்கள். பிற வாகனங்களையோ சாலையில் நடந்துசெல்வோரையோ பொருட்டாகக் கருதுவதில்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள, போக்குவரத்து விளக்குகளின் வண்ணத்தைக் கவனிப்பதில்லை. கவனித்தாலும் அவசரப்பட்டு முன்னே செல்கிறார்கள். மிக அவசரமாகச் சென்று ஆபத்தில் சிக்குவதைப் பார்க்கின்றோம். 

கரும்பைச் சிறிது சிறிதாகக் கடித்துச் சுவைத்து அதன் சாற்றை விழுங்குவதைப் போன்றது வாழ்க்கை. இறைவன் நமக்கு வழங்கிய ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் விரும்பியவாறு நிதானமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும். மாறாக, சாலையோரத்தில் விற்கப்படும் கரும்புச் சாற்றை நின்றுகொண்டே மிகத் துரிதமாகப் பருகிவிட்டுச் செல்வதைப்போல் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நிம்மதி இருக்காது. 

திட்டமிட்ட வாழ்க்கை இல்லாததே மனிதனின் அவசரத்திற்கு முதற்காரணம். இரவு எப்போது துயில்கொள்ள வேண்டும்; காலையில் எப்போது துயிலெழ வேண்டும்; எதுயெதனை எப்போது செய்ய வேண்டும் என்ற திட்டமிடலோ வரையறையோ இருப்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற அசட்டைத்தனமான போக்கால் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் பதற்றத்திலும் அவசரத்திலும் சுழல்கின்றன. 

அவசரப்பட்டுக் கடனை வாங்கி வீட்டைக் கட்டியாயிற்று. இப்போது வாங்கிய கடனைக் கட்டுவதற்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. ஓரிரு மாதங்கள் தவணைத் தொகையைக் கட்டாமல் விட்டுவிட்டால் வட்டி மிகுதியாகிவிடுமே என்ற நிர்ப்பந்தச் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளான். இது மாதிரி, ஒவ்வொன்றுக்கும் கடன் வாங்கிக்கொண்டே இருக்கின்றான். அதனால் அதற்கான தவணைத்தொகையைக் கட்டுவதற்காக அல்லும் பகலும் ஓடிக்கொண்டிருக்கிறான். அதற்குப் பதிலாக, வீட்டைக் கட்டுவதற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்தபின் கட்டினால் இத்தகைய அவசரம் தேவையில்லை. இவ்வளவு இறுக்கம் மனத்தில் ஏற்படாது. 

ஆக ஆண்-பெண் பாகுபாடின்றி மனிதர்கள் அனைவருக்கும் அவசரம். ஆனால் ஒவ்வொன்றும் அதற்குரிய நேரத்தில்தான் நிகழும். எதுவும் முந்தாது; எதுவும் பிந்தாது. ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருக்கிறது. நடக்க வேண்டியவை ஒவ்வொன்றும் அதுவதற்குரிய நேரத்தில் நன்றாகவே நடைபெறும். ஆகவே நாம் அவசரப்படாமல் நிதானப்போக்கைக் கடைப்பிடிப்போம். நிம்மதியாக வாழ்வோம்.
==========================================







கருத்துகள் இல்லை: