செவ்வாய், 14 மே, 2019

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவோம்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் ஆன்மா உள்ளது. அந்த ஒவ்வோர் ஆன்மாவுக்குள்ளும் ஓராயிரம் எண்ணங்களும் கற்பனைகளும் புதைந்து கிடக்கின்றன. அந்த ஆன்மாவுக்குள் பொறாமை, வஞ்சகம், சூது, கள்ளம், கபடம், மோசடி, வன்மம், குரோதம், விரோதம், குதர்க்கம், ஆபாசம், வக்கிரம், வெட்கமின்மை, காமம், சினம் உள்ளிட்ட கெட்ட பண்புகள் நிறைந்து கிடக்கின்றன. கெட்டுப்போன ஆன்மாவை இறையச்சத்தால் தூய்மைப்படுத்தி, நற்பண்புகளால் நிறைத்தால் ஒவ்வொரு மனிதனும் ஈருலகிலும் வெற்றி பெறலாம். அதற்கான வழியையே இஸ்லாம் காட்டுகிறது.

உலகில் ஒவ்வோர் இறைத்தூதரும் ஓரிறைக் கொள்கையை மக்களுக்குப் போதிப்பதற்கும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தவுமே அனுப்பப்பட்டார்கள். அந்தந்த இறைத்தூதரை ஏற்றுக்கொண்டோர் தத்தம்  ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு வெற்றிபெற்றார்கள். இறைத்தூதர்களை ஏற்றுக்கொள்ளாதோர் இழப்பிற்குரியோராக ஆயினர். அதேநேரத்தில் நம்முள் பலர் ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டு, இறுதி இறைத்தூதரை ஏற்று உளமார உறுதிகொண்டாலும் தம் ஆன்மாக்களை இறையச்சத்தால் தூய்மைப்படுத்தாமலும் நற்பண்புகளால் நிரப்பாமலும் அசிங்கமான, அருவருக்கத்தக்க பண்புகளை அதனுள் நிறைத்து வைத்திருக்கின்றார்கள்.

அதனால்தான் நம்முள் பலர் ஒருவருக்கொருவர் பொறாமை, சண்டை, மோசடி, ஏமாற்றம் உள்ளிட்ட கெடுசெயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுவாக நமது ஆன்மா பாவங்களை ஆர்வத்தோடு செய்யக்கூடியதாகவும் குற்றம் செய்யத் தூண்டக்கூடியதாகவும் உள்ளது. அத்தகைய நிலையிலுள்ள ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே நமக்கு தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் முதலான வழிபாடுகள் (இபாதத்) கடமையாக்கப்பட்டுள்ளன. அந்த வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்றத் தொடங்கிவிட்டால் ஆன்மா தூய்மையடையத் தொடங்கிவிடும். அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதன்மூலம் ஆன்மா தூய்மையடைவதால்தான் இதனை ஆன்மிகம் என்று அழைக்கின்றார்கள். 

எந்த ஆன்மாவுக்குள் இறையச்சம் வந்துவிட்டதோ அந்த ஆன்மாதான் தன் இறைவனுக்கு அஞ்சி வழிபாடுகளைச் செவ்வனே நிறைவேற்ற முற்படும். இறையச்சமில்லா ஆன்மா கடமைகளை நிறைவேற்றாமல் உறங்கிக்கொண்டிருக்கும்; வீண்வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். குற்றம் செய்ய அஞ்சாது. தொடர்ந்து குற்றங்களே செய்துகொண்டிருப்பதால் அந்த ஆன்மா கருத்துப்போய்விடும். குற்றங்களை ஒரு பொருட்டாகவே கருதாது. அத்தகைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவே "தவ்பா' எனும் பாவமன்னிப்பு உள்ளது.

ஆன்மா தூய்மையடைந்துவிட்டால் நம் கண்கள் அழகான பெண்ணைப் பார்த்தபோதும் அந்த ஆன்மாவுக்குள் காமம் தோன்றாது; மாறாக இறைநினைவே ஏற்படும். பிறரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைகொள்ளாது. பிறரின் வியாபாரத்தைக் கண்டு எரிச்சலடையாது. பிறரை ஏளனமாகவோ மட்டமாகவோ நினைக்காது; பெருமை கொள்ளாது. மாறாக எல்லோரையும் சமமாகவே நினைக்கும். உலக ஆசை குறைந்து மறுமையைப் பற்றிய கவலை மிகுதியாகிவிடும்.
ஆன்மாவை அவ்வளவு எளிதில் தூய்மைப்படுத்திட இயலாது. ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்: என்னை நானே (குற்றமற்றவள் எனத்) தூய்மைப்படுத்திக்கொள்ளவில்லை.
நிச்சயமாக மனம் தீமை செய்யுமாறு தூண்டக்கூடியதுதான்; என் இறைவனின் அருளுக்குரியவர் தவிர. என் இறைவன் மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். (12: 53)

ஆம்! மனித ஆன்மா பாவங்களைத் தூண்டக்கூடியது. அது பாவங்களைத் தூண்டிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம்தாம் அதனைக் கட்டுப்படுத்தி அடக்கி, நற்செயல்களைச் செய்யப் பழக்கப்படுத்த வேண்டும். நம் நேரங்களைக் கேளிக்கையிலும் வீண்விளையாட்டுகளிலும் கழிக்கத் தூண்டும்; தவறான காட்சிகளைக் காணத் தூண்டும்; வீண் அரட்டைகளில் ஈடுபடத் தூண்டும்; தொழுகாமல் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்லும்; நற்செயல்களைச் செய்யச் சோம்பல் கொள்ளும். இத்தனையையும் மீறி, அடக்கி, கட்டுப்படுத்தி, தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மா மட்டுமே ஈருலக வெற்றியைப் பெற முடியும்; சொர்க்கத்தில் நுழைய முடியும். 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல் எனும் பணி ஒரு தடவையோடு முடிந்துவிடுவதில்லை. தூய்மைப்படுத்தும் பணி தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். நமது வீட்டை ஒரு தடவை தூய்மைப்படுத்திச் சுத்தம் செய்துவிட்டு, அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டைப் பெருக்கிச் சுத்தமாக வைத்துக்கொள்ளவே செய்கிறோம். சுத்தம் செய்த அலமாரியை ஒரு மாதம் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டால் அதில் புழுதி படிந்திருப்பதைக் காணலாம். அதுபோலவே ஒரு தடவை வழிபாடு செய்து, இறைவனை நினைத்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டால் அது மீண்டும் அழுக்காகிவிடும்; அதில் அசிங்கங்கள் குடியேறிவிடும். எனவேதான் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது. அந்தத் தொழுகை மூலம் அதனைத் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு முடிவுறாச் செயல்பாடு. 

உயர்ந்தோன் அல்லாஹ் சத்தியம் செய்கின்றபோது பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தியுள்ளான். ஒவ்வோர் இடத்திலும் ஒரு பொருள்மீதோ இரண்டு பொருள்கள்மீதோ மூன்று முதல் ஐந்து பொருள்கள் மீதோ சத்தியம் செய்துள்ளான். ஆனால் ஆன்மாவைப் பற்றிச் சொல்ல வருகின்றபோது பதினோரு பொருள்கள்மீது சத்தியம் செய்துள்ளான். அவ்வசனத்தைப் பாருங்கள்: ஆன்மாவின்மீது சத்தியமாக! அதைச் சீர்படுத்தி, அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தவன் மீது சத்தியமாக! (இஸ்லாத்தின்மூலம்) அதனைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வெற்றிபெற்றுவிட்டார். அதைப் (பாவத்தில்) புதைத்தவர் நட்டமடைந்துவிட்டார். (91: 7-10)

பதினோரு பொருள்கள்மீது சத்தியம் செய்து, ஆன்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக்கொடுத்திருப்பதாகக் கூறுகின்றான். அந்த ஆன்மா அவ்வளவு முக்கியமானது என்பதையே அல்லாஹ்வின் சத்தியம் காட்டுகிறது. ஆனால் அந்த ஆன்மாவோ மனிதனைத் தீமையைச் செய்யவே தூண்டிக்கொண்டிருக்கிறது. எனவே அதனை நன்மை செய்யுமாறு திசைதிருப்பி, நற்செயல்கள் செய்ய வைக்கவே மனிதனுக்கு அறிவு எனும் கூராயுதம் வழங்கப்பட்டுள்ளது. தீமை செய்யத் தூண்டும் ஆன்மாவுக்குத் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி, புரியவைத்து, அதனைத் திசைதிருப்பி நன்மை செய்தால்தான் வெற்றி என்பதை அதற்கு உணர்த்த வேண்டும். மாறாக மனம்போன போக்கிலே போனால் மனிதன் செல்லுமிடம் நரகம்தான் என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் ஆன்மிகப் பயிற்சிகளுள் மிக முக்கியமானதுதான் நோன்பு. சுவையான உணவும், சுவையான குடிபானமும் இருந்தபோதிலும் நாம் அவற்றை உண்ணவோ பருகவோ முற்படுவதில்லை. ஆன்மா தூண்டினாலும், அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று நம் அறிவால் அதற்கு உணர்த்துகின்றோம். அதற்குப் பயிற்சி கொடுக்கின்றோம். இந்த ஆன்மிகப் பயிற்சியை மேற்கொள்ளும் மனிதர்களைப் பார்த்து இறைவனே வியந்துபோகின்றான். தன்னைச் சுற்றியுள்ள வானவர்களிடம் தன் அடியார்கள் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றான். தன் அடியார்களின் இச்செயலைப் பாராட்டி, அவர்களுக்கு அவனே அதற்கான கூலியை வழங்குகிறான். மற்ற நற்செயல்களுக்கு வானவர்கள்மூலம் கூலி வழங்கும் இறைவன், நோன்புக்கு மட்டும் அவனே கூலி வழங்குவதன் நோக்கம் என்ன? மற்ற வழிபாடுகளைப் பிறர் பார்க்கலாம். ஆனால் நோன்பு எனும் வழிபாட்டை அடியானையும் அல்லாஹ்வையும் தவிர யாரும் அறிய முடியாது. எனவேதான் அந்த நோன்புக்கு அல்லாஹ்வே நேரடியாகக் கூலி வழங்குகின்றான். ஆகவே அந்தப் பயிற்சியை நம்முள் ஒவ்வொருவரும் ரமளான் மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். உபரியான நோன்புகளையும் நோற்க வேண்டும். அதன்மூலம் நம் ஆன்மாவை நாம் தூய்மைப்படுத்திக்கொள்ளலாம். 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பயிற்சிகளுள் மற்றொன்றுதான் ஸகாத். மனிதன் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்துச் சேர்த்த பணத்தில் இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்குக் கொடுப்பதே ஸகாத். மனிதன் உடல்சார்ந்த வழிபாட்டைக்கூடச் சிரமப்பட்டுச் செய்துவிடுவான். ஆனால் தான் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை எவ்வித இலாபமுமின்றித் தானம் செய்ய விரும்பமாட்டான். ஆன்மா அவனைத் தடுக்கும்; உன் பணம் குறைந்துபோய்விடும் என எச்சரிக்கும்; பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் தர்மம் செய்யலாமா எனக் கஞ்சத்தனம் செய்யும். இதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, என் இறைவன் வழங்கிய பணத்தை அவனுக்காக, அவனுடைய பாதையில் செலவு செய்வேன் என ஏழைகளுக்கு வழங்கும்போது ஆன்மா அடங்குகிறது; கட்டுப்படுகிறது; பயிற்சி பெற்றுப் பழகிக்கொள்கிறது. இவ்வாறு அவன் வழங்கியதால் அவன் சொர்க்கம் செல்ல அது காரணமாக அமைகிறது. 

இவ்வாறு ஒவ்வொரு வழிபாடும் ஆன்மாவிற்கான பயிற்சிதான். அந்த ஆன்மாவை வழிபாட்டின் மூலமே அடக்கிவைக்க வேண்டும். இறைவனின் கட்டளைகளைச் செவ்வனே செய்வதில்தான் வெற்றி என்பதை அதற்கு உணர்த்த வேண்டியது நம் கடமை. இனி வரும் காலங்களிலாவது மனம்போன போக்கில் நம் வாழ்க்கையைக் கடத்தாமல் இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழியில் செல்ல முனைவோம்; ஈருலகிலும் வெற்றியடைவோம்.
===========================================







கருத்துகள் இல்லை: