ஞாயிறு, 12 மே, 2019

நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழையுங்கள் நாங்கள் எங்கள் வீட்டுக்கு அழைக்கிறோம்!



-----------------------------------------------------------------
1. தமிழகத்தின் தாய்க்கல்லூரியான அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கலாச்சாலையின் பேராசிரியர் குழு 40 ஆண்டுகள் கடும் உழைப்பில் உருவாகி வெளிவந்துள்ள ஜவாஹிருல் குர்ஆன்எனும் திருக்குர்ஆன் விரிவுரை 16 பாகங்களைக் கொண்டுள்ளது. 

2. ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் குழு பல்லாண்டுகளாக அரும்பாடுபட்டு வெளியிட்டுள்ள தஃப்சீர் இப்னு கஸீர்இதுவரை 9 பாகங்கள் வெளியாகியுள்ளன. 

3. ரஹ்மத் பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பாளர் குழு வெளியிட்டுள்ள புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், சுனனுந் நஸாயீ, இப்னுமாஜா ஆகிய ஆதாரப்பூர்வமான ஆறு நபிமொழித் தொகுப்புகள் தெள்ளு தமிழில் பல பாகங்களாக வெளிவந்துள்ளன. 

4. இப்னு கஸீர் (ரஹ்) அரபியில் எழுதிய அல்பிதாயா-வந்நிஹாயா இஸ்லாமிய வரலாற்று நூல் ஆயிஷா பதிப்பகத்தின் சார்பாக, இதுவரை 7 பாகங்கள் செந்தமிழில் வெளிவந்துள்ளன. 
இவைபோக கடந்த காலங்களில் வெளிவந்த அன்வாறுல் குர்ஆன் எனும் திருக்குர்ஆன் விரிவுரை உள்ளிட்ட எத்தனையெத்தனையோ ஞானக் கருவூலங்கள் தீந்தமிழில் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடையவும் சத்தியச் செய்திகள்; மக்கள் அனைவரும் படித்துச் செயல்படுத்த வேண்டியவை. அவற்றைப் படிக்கவே இங்கு ஆளைக் காணவில்லை. 

சிலர், கதை, புதினம், கவிதை- இவற்றுக்கு இஸ்லாத்தில் எந்த ஆதரவும் இல்லையே என அங்கலாய்க்கிறார்கள். கடைசியில் இந்த ஆலிம்கள் இலக்கிய இரசனையற்றவர்கள் என்ற முத்திரையோடு முடிக்கின்றனர். 

ஆலிம்கள் தொடர்ந்து குர்ஆன்-ஹதீஸை நோக்கியே பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்ற இக்காலத்திலும் திருக்குர்ஆனை அரபியில் பார்த்து வாசிக்கத் தெரிந்தோர் எத்தனை சதவிகிதம்? உங்களால் திருப்தியான பதிலைத் தர முடியுமா

ஆலிம்கள், அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடையவும் ஞானக் கருவூலங்களைப் படிக்க அழைப்பார்களா? கற்பனைக் கதைகளையும் புனைவுகளையும் படிக்க அழைப்பு விடுப்பார்களா? அவர்கள் எதை நோக்கி அழைக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? எது அவர்களின் கடமை

ஏன் கற்பனைக் கதைகளும் புனைவுகளும்தாம் இலக்கியத்தின் பங்களிப்பா? ஆலிம்கள் இவ்வளவு அரபி நூல்களைத் தெள்ளு தமிழுக்குக் கொண்டுவந்துள்ளது அவர்களின் இலக்கியப் பங்களிப்பு இல்லையா

பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது வீட்டுக்குத்தான் மக்களை அழைப்பார்களே தவிர, ‘அடுத்த வீட்டுக்குப் போங்கஎன்று சொல்ல மாட்டார்கள். ஆகவே இலக்கியவாதிகள்-நீங்கள் உங்கள் வீட்டுக்கு மக்களை அழையுங்கள். ஆலிம்கள்-நாங்கள் எங்கள் வீட்டுக்கு மக்களை அழைக்கிறோம். இருசாராரும் அழைப்போம். அதுதானே நியாயம்?

அதனை விட்டுவிட்டு இஸ்லாத்தில் இலக்கியத்திற்கு ஆதரவு இல்லைஎன்ற விமர்சனம் ஏன்? அதில் மறைபொருளாக ஆலிம்களைக் குறைகூறுவது ஏன்? கதை, கவிதை, புதினம் எழுதுகின்ற எவரையாவது எந்த ஆலிமாவது தடை செய்திருக்கிறாரா? அப்படி யாரையாவது காட்ட முடியுமா? அவரவர் துறை அவரவர்க்கு. அவ்வளவுதானே?

இனியாகிலும் இத்தகைய விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். 

-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68 
12 05 2019 (06 09 1440)
===========================================

கருத்துகள் இல்லை: