ஒருவர் எழுதுகின்ற ஏதேனும் ஆக்கத்தைப் படித்தவுடனே அதற்கான விமர்சனத்தை எழுதுவது இன்றைய நவீன உலகில் மிக எளிதாக உள்ளது. முகநூல், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்கங்கள் எழுதுவோரை வறுத்தெடுக்கும் விதமாக விமர்சனம் எழுதுவது எங்ஙனம் நியாயமாகும்? கடுஞ்சொல் விமர்சனங்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். நம் விமர்சனம் மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும். இல்லையேல் எழுதாமலே விட்டுவிட வேண்டும்.
நாம் எழுதும் விமர்சனம், எழுதியவரின் ஆக்கத்தைப் பாராட்டி அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அமைய வேண்டும். அவரைத் திட்டி, தட்டி வைத்து, முடக்கிவிடக்கூடாது. உள்ளத்தைப் பண்படுத்தும்விதமாக எழுத வேண்டும்; புண்படுத்திவிடக் கூடாது.
நமக்குப் பிடிக்காத ஆக்கத்தை ஒருவர் எழுதிவிட்டால், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாக ஒருவர் எழுதினால், “அது அவரது கொள்கை” என்ற முடிவுக்கு வர வேண்டும். மக்களைக் குழப்பும்விதமாக ஒருவர் எழுதினால், அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. அதைத் தாராளமாகச் செய்யலாம். அதுவல்லாமல் அவரது அந்தரங்கத்தைத் தோண்டிப் பார்க்க முயல்வதும் அவர் ஏற்கெனவே பாவமன்னிப்புக் கோரியவற்றையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து பொதுவெளியில் பரப்புவதும் அவ்வளவு நல்ல பழக்கம் இல்லை.
நாம் எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பயனற்றது என்றால் அதை எழுதாமல் இருப்பதே சிறப்பு. “என் பேனா பயனுள்ளதை மட்டுமே எழுதும்; பிறருக்குப் போட்டியாகவோ, ஏட்டிக்குப் போட்டியாகவோ, பிறர் மனதைப் புண்படுத்தும் விதமாகவோ ஒருபோதும் எழுதாது” என்ற கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும்.
“யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைகொண்டாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும்; இல்லையேல் மௌனமாக இருக்கட்டும்” எனும் நபிமொழி பேச்சுக்கு மட்டுமல்ல, எழுத்துக்கும் பொருந்தும் என்பதை எழுதுகோல் பிடிப்போர் ஏகமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
=====================================
=====================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக