புதன், 11 ஜூலை, 2018

ஆணும் பெண்ணும்...


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனித இனத்தை ஆண்-பெண் என அல்லாஹ் ஈரினமாகப் படைத்தான். அந்த ஆணும் பெண்ணும் ஒன்றாகச் சேர்ந்து வாழ சில நிபந்தனைகள் விதித்தான். அதுவரை அவ்விருவரும் ஒருவரையொருவர்  சந்திக்கத் தடைவிதித்தான். அந்தத் தடையை மனிதன் உடைத்தான். அதனால் பல்வேறு கேடுகளும் தீமைகளும் உண்டாயின; உண்டாகிக்கொண்டே இருக்கின்றன. 
ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலந்து இறைவனை வணங்குவதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்காதபோது பிற செயல்களில் அவ்விருவரும் ஒன்றிணைவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? சேர்ந்து படித்தல், சேர்ந்து பணியாற்றுதல், சேர்ந்து பழகுதல் என அனுமதிக்கின்றபோது அங்கு அவ்விருவருக்கிடையே தூய எண்ணம் களையப்பட்டு, தீய எண்ணத்தைத் தூண்டுகின்ற ஷைத்தான் வந்துவிடுகின்றான். இறைவன் விதித்த நிபந்தனையை மீறிச் சந்தித்ததால் புவியில் பற்பல கேடுகள் பிறக்கத் தொடங்கின.

இன்றைய நவீன உலகில் “ஆணுக்குப் பெண் சமம்” என்ற மாயையான வாக்கியத்திற்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது பெண் சமூகம். அதனால் ஓர் ஆண் எங்கெல்லாம் செல்கின்றானோ அங்கெல்லாம் அவளும் செல்கின்றாள். அவன் எதையெல்லாம் செய்கின்றானோ அதையெல்லாம் அவளும் செய்கின்றாள். இதனால் அவள் தன்னை ஆணுக்குச் சமமாகிவிட்டதாகக் கருதிக்கொள்கின்றாள். 

ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கலப்பதால்-படித்தல், பணியாற்றுதல், பழகுதல்- தீமை நடந்துவிடுமா? எல்லோருமா அப்படிச் செய்துவிடுவார்கள்? என்று சிலர் கேட்கலாம். எல்லோரும்  தகாத செயலைச் செய்யமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். ஆனால் யாருமே தவறிழைக்க மாட்டார்கள் என்று கூற முடியாது. நூறு சதவிகிதத்தில் தொண்ணூறு பேர் நல்லவர்கள்தாம். பத்து சதவிகிதம் பேரே கெட்டவர்கள்; தவறிழைக்கின்றார்கள். அந்தப் பத்து சதவிகிதத் தவறுகளும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே அல்லாஹ்வின் நாட்டம். எனவேதான் அவன் செவ்வனே இயற்றியுள்ளான் சட்டம். 

பத்து சதவிகித ஆணும் பெண்ணும் தவறு செய்வதைத் தடுக்கவும் எஞ்சியுள்ள தொண்ணூறு சதவிகிதத்தினர் தவறு செய்யத் துணிவு பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவுமே அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மனித சமுதாயத்திற்கான சட்டத்தை அமைத்துத் தந்துள்ளார்கள்.  அதேநேரத்தில் அந்தப் பத்து சதவிகிதத் தவறுகள் எல்லா ஆண்களையும் பெண்களையும் பாதிக்கும் என்பது உண்மை.  ஏனென்றால் அச்சமும் பயமும் எல்லோருக்கும் உண்டு. சமுதாயத்தில் நடைபெறும் முறைகேடான ஒரு நிகழ்வுகூட எல்லோரின் உள்ளத்திலும் அச்சத்தை ஏற்படுத்தலாம்; அவர்களின் நிம்மதியைக் கெடுக்கலாம். தொண்ணூறு சதவிகித மக்களின் நல்வாழ்வைக் காக்கவே பத்து சதவிகிதத் தவறுகள்கூட நிகழாவண்ணம் இறைவன் சட்டத்தை வகுத்துள்ளான்.

“(பெண்களே!) நீங்கள் உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக்காலப் பெண்கள் (சுற்றித் திரிந்ததைப்) போல் சுற்றித் திரியாதீர்கள்” (33: 33) என்று அல்லாஹ் கூறுகின்றான்.  
“ஒரு பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியே புறப்பட்டுவிட்டால் ஷைத்தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க வைக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1093)

முந்தைய அறியாமைக் காலப் பெண்கள் வீதிகளில் சுற்றித் திரிந்ததைப்போல் இறைநம்பிக்கைகொண்ட பெண்கள் சுற்றித் திரியக்கூடாது என்பது இறைக்கட்டளை. ஒரு பெண் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் ஷைத்தான் அவளை வரவேற்று, அவளைப் பிற ஆடவர் பார்க்குமாறு தூண்டுகிறான் என்பது இறைத்தூதரின் எச்சரிக்கை. இவ்விரண்டும் நம்முன் இருக்கும்போது பெண்கள் வெளியில் செல்ல, ஒன்றாகப் படிக்க, பணியாற்ற, பழக எவ்வாறு அனுமதிக்க முடியும்? ஆனாலும்  வகுக்கப்பட்ட விதிகளை மீறி மனித சமுதாயம் செயல்படத் துணிந்துவிட்டதால் பெண்சீண்டல், வன்புணர்வு, கர்ப்பம், கொலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் சிலர் அந்த மன உளைச்சலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு சிலர் மக்களின் பழிச் சொல்லுக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். 

நிம்மதியான வாழ்க்கைக்குத்தான் இஸ்லாம் வழிகாட்டுகிறது. அதனை நாம் அனுபவிக்க வேண்டுமெனில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பயணித்தால்தான் இயலும். இல்லையேல் பல தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். அதனால் நாமும் நிம்மதியிழந்து நம்மைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் நிம்மதியிழக்க நேரிடும். 

பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழ அனுமதிக்கும் அதேநேரத்தில் அவள் மறைமுகமாக இருந்து, தன் வீட்டினுள் உள்அறைக்குள் தொழுவதே சாலச் சிறந்தது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தற்கால இளைஞிகள் நினைவுகூர வேண்டும்.

பெண்கள் ஆண்களோடு சேரும்போது முதன்முதலில் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படாவிட்டாலும் பார்த்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்பார்வைதான் பாவத்திற்கான தொடக்கப்புள்ளி. பின்னர் படிப்படியாக வளர்ந்து அப்பார்வையானது பேச்சுக்கு வழியமைத்து, அப்பேச்சு இருவருக்கும் இனிமையூட்டி, தடைசெய்யப்பட்ட விபச்சாரத்திற்கு வழிவகுக்கும். இவர்தாம் பாவம் செய்வார், அவர் செய்ய மாட்டார் எனப் பிரித்தறிந்து பழகவோ பேசவோ முடியாது. ஏனென்றால் எம்மனிதனும் பாவம் செய்யலாம் என்ற இயல்போடும் துணிவோடும்தான் அவன் படைக்கப்பட்டுள்ளான். 
உயர்பதவியில் இருப்போர்கூடச் சிலவேளை சில அசிங்கமான செயல்களைச் செய்யலாம்; உயர் கல்வி பயின்றவர், இறைவனுக்கு நெருக்கமானவர், இறைவனை நோக்கி அழைப்பவர் என யாரும் அசிங்கமான செயல்களில் ஈடுபடலாம்; பெண்களோடு தவறாக நடந்துகொள்ளலாம். எனவே இவர் செய்வார், இவர் செய்யமாட்டார் என வரையறுத்துக் கூற முடியாது. 

ஏனென்றால் மனிதன் சூழ்நிலைக் கைதி. பாவம் செய்வதற்கான சூழல் அமையாத வரை அனைவரும் நல்லவரே. பாவம் செய்வதற்கான சூழ்நிலை அமைந்துவிட்டால் யாரையும் நம்ப முடியாது. ஆகவேதான் பாவம் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி அதனுள் மனிதனை விழவைக்க ஷைத்தான் எல்லா விதத்திலும் முயன்றுகொண்டிருக்கிறான். 
“பெண்கள் ஷைத்தானின் வலைகள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே ஷைத்தான் பெண்கள்  எனும் வலையை அங்கிங்கெனாதபடி புவியெங்கும் பரப்பிவைத்துள்ளான். அதில் மனிதன் சிக்கிக்கொள்கின்றான். எனவே பெண்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் பெண்ணோடு தனிமையில்  சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதுமே ஆண்களுக்கான பாதுகாப்பு. 

பெண்கள் கல்லூரிக்குப் படிக்கச் சென்றால், படிக்கத்தானே செல்கின்றார்கள் அதில் எந்த ஆபத்தும் இல்லை என்று கருதிக்கொண்டிருந்தார்கள். தற்போது ஒரு கல்லூரிப் பேராசிரியை தம் மாணவிகளுக்கு போன் செய்து, அதிக மதிப்பெண் பெற வேண்டுமானால் நான் சொன்னபடி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனக் கூறி, சில உயர்அதிகாரிகளின் ஆசைக்கிணங்குமாறு அழைத்துள்ளார். இச்செய்தி வெளியே பரவி, படிக்க வைக்கும் பெற்றோருக்குப் பீதியைக் கிளப்பியுள்ளது. ஒழுக்கமும் வெட்க உணர்வும் கொண்ட பெண்கள் அந்த அசிங்கமான செயலிலிருந்து தூர ஓடிவிடுவார்கள். அதேநேரத்தில் வெட்க உணர்வற்றவர்களாகவும், உயர் பதவிக்கு ஆசைப்படுவோராகவும் இருந்தால் அந்தப் பேராசிரியையின் ஆணைக்கேற்ப அதிகாரிகளின் ஆசைக்கிணங்க உடன்படுவார்கள். ஆக ஷைத்தான் எல்லா இடங்களிலும் பெண்கள் எனும் வலையை விரித்து வைத்துள்ளான். 

பெண்கள் பணியாற்றும் இடங்களானாலும் ஆண்கள் பணியாற்றும் இடங்களானாலும் ஈரினத்தாரின் பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் பெண்களின் கற்பு விலைபேசப்படுவதைக் காணமுடிகின்றது.  சில இடங்களில் பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களைத் தம் அற்ப ஆசைக்கு இணங்க வைக்கின்ற கயவர்கள் இருக்கின்றார்கள். கணவனை நம்பிப் பயன் இல்லை; பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள  ‘இது ஒன்றே வழி’ எனத் தவறான முடிவெடுத்துத் தம் கற்பை அடகுவைக்கின்ற பாதகிகளும் உண்டு.  
இங்கே “ஆண்கள்தாம் வேட்டைக்காரர்கள்; பெண்கள் வேட்டையாடப்படுபவர்கள்” என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஈரினத்திலும் வேட்டைக்காரர்களும் உண்டு; வேட்டையாடப்படுவோரும் உண்டு. அதற்கான சான்று திருக்குர்ஆனில் உண்டு. 

பெண்கள் சிலர் அலுவலகங்களில் தமக்குரிய சலுகை வழங்கப்படவில்லை என்பதற்காக அல்லது பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பதற்காக அங்குள்ள மேலாளரைப் பழிவாங்கும் எண்ணத்தில், தன்னிடம் அவர் தவறாக நடக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன்மூலம் அவர்களை மிரட்டி, காரியத்தைச் சாதித்துக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனவே ஈரினத்தாரும் தம் எதிர்பாலினத்தாரிடம் எச்சரிக்கையுணர்வோடு இருந்துகொள்வது நல்லது.

ஒரு வேட்டைக்காரன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட ஒரு ஞானி அந்த வேட்டைக்காரனிடம், “நீ வேட்டையாடப்படாமல் கவனமாக இருந்துகொள்” என்று எச்சரித்தார். ஆம்! ஓர் ஆணிடம் ஒரு பெண் மாட்டிக்கொள்வது ஆபத்து என்றால், ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் மாட்டிக்கொள்வது பேராபத்தாகும். இவ்விஷயத்தில் ஆண் பலவீனன்; பெண்ணோ பலசாலி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.     
“(பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ: 5096)

பெண்கள் ஆண்களுக்கு எவ்வளவு பெரிய துன்பமும் தொல்லையுமாக உள்ளார்கள் என்பதை இந்நபிமொழி உணர்த்துகிறது. எனவே  பெண்கள் ஆண்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதைவிட ஒருபடி மேலாக ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையுணர்வோடு இருக்க வேண்டும். அதுவே அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் நமக்குப் போதிக்கும் போதனையாகும். 
=====================================
கருத்துகள் இல்லை: