புதன், 4 ஜூலை, 2018

ஆவிகள் உலகம்



முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(துணை ஆசிரியர்-இனிய திசைகள் மாத இதழ், இமாம்-மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை)

எதற்கெடுத்தாலும் "ஆதாரம் இருக்கிறதா?'' என்று கேட்பதுதான் இன்றைய தலைமுறையினரின் போக்கு. எல்லாவற்றிற்கும் நேரடியாக ஆதாரம் காட்ட முடியாது. அதேநேரத்தில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் (ஹதீஸ்) ஆகியவற்றில் நேரடியாக இல்லாவிட்டாலும் அதன் விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவற்றிலிருந்து பிறந்தவைதாம் இன்றுள்ள கல்விகள் யாவும். அந்த  அடிப்படையில்தான் ஆவிகள் குறித்த செய்திகள் அமையும். ஆவிகள் என்பது ஜின், ஷைத்தான்களையே குறிக்கும். இந்த ஆவிகள் மனிதர்களுக்கு எவ்வாறெல்லாம் தொல்லைகள் கொடுக்கின்றன; அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத் தெளிவுபடக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கம். நம்புவதும் செயல்படுத்துவதும் அவரவர் விருப்பம்.  

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ஷைத்தான் தனித்தனியே சாட்டப்பட்டுள்ளான். அந்த ஷைத்தான் அந்த மனிதரைத் தீமை செய்யுமாறு தூண்டிக்கொண்டே இருப்பான். அவனுடைய போக்கிலேயே  செல்பவர்கள்தாம் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள்; அவர்கள்தாம் கெட்டவர்கள்-பாவிகள். அவர்களையே அவன் மது குடித்தல், சூதாடுதல், திருடுதல், கொலை செய்தல், விபச்சாரம் செய்தல் ஆகிய பஞ்ச மாபாவங்களைச் செய்ய வைக்கிறான். இவ்வளவையும் செய்ய வைத்து, இறுதியில் அவனை நரகத்தில் கொண்டுபோய்ச்  சேர்த்துவிடுகின்றான்.
அதற்கு முரணாக, ஷைத்தான் தூண்டுகின்ற தீமைகளைச் செய்யாமல் அவனுடைய போக்கில் செல்லாமல் அவனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள்தாம் நல்லவர்கள். அவர்கள் தம்மைப் படைத்த இறைவனை அஞ்சி வாழ்கின்றார்கள். ஒவ்வொரு தடவையும் அவன் அவர்களைத் தூண்டும்போதெல்லாம் அவனுக்கு எதிராகச் செயல்பட்டு அவனுக்குக் கட்டுப்படாமல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். இறுதியில் அவன் அவர்களிடம் தோற்றுப்போய்விடுகின்றான். அவர்கள் இறைவனை அஞ்சிய நல்லடியார்களாக வாழ்ந்து மறைகின்றார்கள். மறுமையில் சொர்க்கத்தில் நுழைவார்கள்.

 ஆயிஷா (ரளி) அறிவித்துள்ளார்கள்: ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் என்னருகில் காணவில்லை. பிறகு அவர்கள், அருகில் (தொழுது) துஆ செய்து கொண்டிருந்ததைக் கண்டேன். பிறகு நான், அவர்கள் குளித்திருக்கின்றார்களா என்று தெரிந்துகொள்வதற்காக என் விரல்களால் அவர்களுடைய தலைமுடியைத் தடவினேன். (அவர்கள் தம் மனைவிகளுள் யாரேனும் ஒருவரிடம் இரகசியமாகச் சென்று வந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தோடு அவ்வாறு செய்தேன்.) அப்போது நபியவர்கள் "நிச்சயமாக உன்னுடைய (சந்தேகம் எனும்) ஷைத்தான் உன்னிடம் வந்துவிட்டான்'' என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஷைத்தான் இல்லையோ?'' என்று கேட்டேன்.  "ஆம்! (இருக்கிறான்). ஆனால், அல்லாஹ் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். ஏனென்றால், அவன் எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி) விட்டான்'' என்று கூறினார்கள். (நூல்: நஸாயீ: 3898)

ஒவ்வோர் ஆளுக்கும் தனித்தனி ஷைத்தான் நியமிக்கப்பட்டுள்ளான் என்பதும் அவரவரின் பண்பிற்கேற்ப அவன் மாறிவிடுகின்றான் என்பதும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்குகிறது.

ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய உயிர் அடங்கிவிடுகிறது. அவனுள் ஆட்கொண்டிருந்த ஷைத்தான் அவனைவிட்டு விலகிக்கொள்கின்றான். அவன் பிற மனிதர்களிடமுள்ள ஷைத்தானோடு தோழமை கொள்கிறான். அந்த மனிதன் எதையும் ஓதாத, இறைவனைத் தொழாத மனிதனாக இருந்தால் அவனை அவன் ஆட்கொண்டுவிடுகின்றான். கெட்ட மனிதர்களைக் கெட்ட மனிதர்களுக்குள் குடியிருந்த ஷைத்தான்கள் ஆக்கிரமித்துக்கொள்கின்றார்கள். காலப் போக்கில் அவன் மிகக் கெட்டவனாகிவிடுகின்றான். ஷைத்தான்கள் ஒன்றுகூடி அம்மனிதனைக் கெடுக்க முயல்வார்கள். அந்த ஷைத்தான்கள் அவனைத் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவிப்பார்கள். உடல் நிலையைப் பாதிப்படையச் செய்வார்கள். அவனுக்குள் இருந்துகொண்டு பேயாடுவார்கள்; கத்துவார்கள்; சேட்டை செய்வார்கள். இவை அனைத்தும் அவனுள் புகுந்துகொண்ட ஷைத்தான்களின் வேலையாகும்.

இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கான வழிமுறையை அல்லாஹ் தன்னுடைய தூதருக்குத் திருக்குர்ஆனில் கற்றுக்கொடுக்கின்றான்:
"என் இறைவா! (பாவமான செயல்களைச் செய்யும்படித்    தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். என் இறைவா! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். (23: 97-98) இந்த இறைவசனங்களின் அரபி மூலத்தை ஓதிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் சில முக்கியமான பாதுகாப்பு வசனங்களையும் துஆக்களையும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றுள் ஒன்று:  அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி, வ இகாபிஹி வ மின் ஷர்ரி இபாதிஹி, வ மின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வ அன் யஹ்ளுரூன். (நூல்: முஸ்னது அஹ்மத்: 15978)

(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவனுடைய சினத்திலிருந்தும் அவனுடைய தண்டனையிலிருந்தும் அவனுடைய அடியார்களின் தீங்கிலிருந்தும் ஷைத்தான்களின் ஊசலாட்டங்களிலிருந்தும் அந்த ஷைத்தான்கள் என்னிடம் நெருங்குவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.)   
  
நல்ல மனிதருக்குள்ளும் ஷைத்தான்  புகுந்துகொண்டு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதை உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரளி) அவர்கள் தம்மைக் குறித்து அறிவித்துள்ள கீழ்க்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தாயிஃப் நகருக்கு ஆளுநராக அனுப்பிவைத்தபோது (அங்கு) எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடத்தொடங்கியது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இதை நான் உணர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணித்துச் சென்றேன். "(என்னைக் கண்ட அவர்கள்) நீர் இப்னு அபில்ஆஸ்தானே? '' என்று வினவினார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே!  எனக்குத் தொழுகையில் ஏதோ ஒன்று குறுக்கிடுகிறது. நான் தொழுவது (எத்தனை, என்ன) என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை'' என்று கூறினேன். 

அதற்கவர்கள், "அதுதான் ஷைத்தான். நெருங்கிவாரீர்'' என்று கூறினார்கள். எனவே நான் அவர்களிடம் நெருங்கிச் சென்று என் கால்களின் நுனிப்பகுதி (தரையில் படும் வகை)யில் அமர்ந்தேன்.  அப்போது அவர்கள்  தம் கையால் என் நெஞ்சை அடித்தார்கள். என் வாயினுள் (உமிழ்நீர் கலந்த காற்றை) ஊதினார்கள். "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். பின்னர், "நீர் உம்முடைய நல்லறங்களைச் செய்வீர்'' என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: திண்ணமாக, அதன்பின் என்னை (எதுவும்) குழப்பத்தில் ஆழ்த்தவில்லை என்று நான் எண்ணுகிறேன். (நூல்: இப்னுமாஜா: 3538)

இந்நபிமொழியில் "அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு'' எனும் நபிகளாரின் வார்த்தை கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஷைத்தான் உள்ளே புகுந்து கொண்டதால்தான் "வெளியேறு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் இவ்வாறு ஷைத்தான்கள் மனிதருக்குள் நுழைந்துகொள்ள வாய்ப்புண்டு என்பதையும் இதன்மூலம் நாம் அறியலாம்.

பின்வரும் நபிமொழியும் உள்ளே புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்குத் தக்க ஆதாரமாக உள்ளது: நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறிவந்தார்கள். (நூல்: முஸ்னது அஹ்மத்: 16890)

ஒருவர் தம் சகோதரர் தன்னிலை மறந்துள்ளதாக நபியவர்களிடம் அழைத்துக்கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து முக்கியமான வசனங்களை ஓதி ஊதியதும் அவர் நிவாரணம் பெற்றுச் சென்றார் என்ற தகவலும் இப்னுமாஜா (3539) நபிமொழித் தொகுப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. "மருந்தில் சிறந்தது அல்குர்ஆன் (மூலம் நிவாரணம் தேடுவது) ஆகும்'' (நூல்: இப்னுமாஜா:  3492) என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதோடு விட்டுவிடாமல் அதற்கேற்பச் செயல்பட்டுள்ளார்கள் என்பதை நாம் அறியமுடிகிறது. 

மனிதருக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை-கெட்ட ஆவியை விரட்ட நபி (ஸல்) அவர்கள் "உக்ருஜ்-வெளியேறு' என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதைக் கேட்டதும் அந்த ஷைத்தான் விலகி ஓடிவிட்டான்.  ஆனால் இது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். சிலர் ஒரு சில பிரார்த்தனைகளை ஓதத் தொடங்கியதுமே அவன் விலகி ஓடிவிடுவான். சிலர் பலவிதமான பிரார்த்தனைகளை ஓதினால்தான் அவனிடமிருந்து அவன்  விலகுவான். இது ஓதிப்பார்ப்பவர் கொண்டுள்ள வலிமையான இறைநம்பிக்கையையும் மாசற்ற மனத்தையும் பொறுத்து அமைகிறது. அதாவது ஒருவரின் வீட்டில் அநியாயமாகப் புகுந்துகொண்டவனை ஒரு காவல்துறை அதிகாரி விரட்டுவதற்கும் சாதாரணமான மனிதன் விரட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? அதுபோலவே நன்கு கற்றறிந்த இறையச்சம் மிகுந்துள்ள ஆலிம் ஓதி ஊதுவதற்கும் மற்றோர் ஓதி ஊதுவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஆக ஒருவனின் உடலுக்குள் புகுந்துகொண்ட ஷைத்தானை விரட்டுவதற்கான பிரார்த்தனைகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவற்றை மனஉறுதியுடனும் மனஓர்மையுடனும் முழுமையான நம்பிக்கையோடும் ஓதி ஊதினால் நிச்சயமாக அந்த ஷைத்தான் விலகி ஓடிவிடுவான் என்பதில் சந்தேகம் இல்லை. அதை விட்டுவிட்டு எங்கெங்கோ கொண்டு சென்று சங்கிலியால் கட்டிப்போடுவது முறையான சிகிச்சை இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஷைத்தான் மனிதனைத் தீண்டவோ பாதிப்பை ஏற்படுத்தவோ முடியுமா என்று கேட்போர் உண்டு. அவர்கள் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கூர்ந்து படிக்க வேண்டும். "வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழ மாட்டார்கள்...'' (2: 275) 

ஷைத்தான் தீண்டினால் எவ்வாறு பித்துப் பிடித்தவர்கள் போல் இருப்பார்களோ அவர்களைப் போலவே வட்டியைத் தின்போர் எழுவார்கள் என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதனை ஷைத்தான்  ஆக்கிரமித்துக் கொண்டால் அவன் தன் சுயநினைவை இழந்துவிடுகின்றான். தான் செய்வதும் பேசுவதும் அவனுக்கே தெரிவதில்லை. அத்தகையோரைத்தான் நபியவர்களிடம் கொண்டுவந்து ஓதிப் பார்த்து, நிவாரணம் பெற்றுச் சென்றுள்ளார்கள். அவர்களை நோக்கித்தான் நபி (ஸல்) அவர்கள், "உக்ருஜ் அதுவ்வல்லாஹ், அன ரசூலுல்லாஹ்'' (அல்லாஹ்வின் விரோதியே வெளியேறு; நான் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறினார்கள். 

இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது:  வலிப்பு நோய் (Epilepsy) இரண்டு வகையாகும். 1. இப்பூமியிலுள்ள கெட்ட ஆவிகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல், 2. உடலின் மோசமான இயல்புகளால் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்படுதல். இந்த இரண்டாவதைப் பற்றித்தான் மருத்துவர்கள் விவாதிக்கின்றார்கள். அதற்கான காரணங்களையும் சிகிச்சையையும் கூறுகின்றார்கள். முதலாவது வகை குறித்து  அவர்கள் அறிவதில்லை.  

யாரேனும் ஒருவரின் உடலுக்குள் புகுந்துவிட்ட கெட்ட ஆவியிடம் பேசுகின்ற ஒருவரை எங்களின் ஆசிரியர் அனுப்பி வைப்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். அவர் பாதிக்கப்பட்டவரிடம் சென்று, “"கால லகஷ் ஷைக் உக்ருஜீ, ஃபஇன்ன ஹாதா  லா யஹில்லு லகி'' (நீ வெளியேறிச் செல்லுமாறு என் ஆசிரியர் கூறினார்; இது உன்னுடைய தங்குமிடமில்லை) என்று கூறுவார். உடனே பாதிக்கப்பட்டவர் தெளிவடைந்துவிடுவார். சிலவேளை சென்றவர் சுயமாகவே அந்த ஆவியிடம் பேசுவார். சிலவேளை அந்த ஆவி பிடிவாதமிக்கதாக இருக்கும். அப்போது அவர் அதை அடித்து வெளியேற்றுவார். அதன்பின் பாதிக்கப்பட்டவர் தெளிவடைவார்; அவர் அடித்த அடியின் வலியை பாதிக்கப்பட்டவர் உணரமாட்டார்.  இப்படிப் பல தடவை நாங்களும் மற்றவர்களும் அவர் செய்ததைப் பார்த்திருக்கிறோம்.

அவர் பெரும்பாலும், பாதிக்கப்பட்டவரின் காதில் ஓதுவது இதுதான்: (என்னே!) நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டுவரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?''  (23: 115)

ஓதிப் பார்க்கின்ற அவர் எனக்குத் தெரிவித்தார்: அவர் ஒரு தடவை, பாதிக்கப்பட்டவரின் காதில், மேற்கண்ட இறைவசனத்தை ஓதினார். அப்போது அந்த ஆன்மா-ஆவி, "ஆம்!''’என்று சொன்னது. உடனே நான் கையில் கம்பை எடுத்து அதன்  கழுத்து நரம்பில் அடித்தேன். அதை அடித்து அடித்து என் கைகள் சோர்ந்துவிட்டன. அந்த அடியில் பாதிக்கப்பட்ட மனிதன் இறந்துவிடுவானோ என்று மக்கள் எண்ணினார்கள். அடித்தபோது இடையில் அது, "நான் இவனை நேசிக்கிறேன்''’என்று கூறியது. அப்போது நான், “"இவன் உன்னை விரும்பவில்லை'' என்று கூறினேன். அதற்கு அது, “"நான் இவனோடு ஹஜ் செய்ய நாடுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான்,“ "இவன் உன்னோடு ஹஜ் செய்ய நாடவில்லை''’ என்று கூறினேன். அதற்கு அது,“ "உனக்கு மரியாதை கொடுத்து நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' என்று கூறியது. அதற்கு நான், “"இல்லை, மாறாக, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பணிந்து வெளியேறு'' என்று கூறினேன். அதற்கு அது,“ "நான் இவனைவிட்டு வெளியேறுகிறேன்'' எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டது.
அதன்பின் பாதிக்கப்பட்டவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு வலப்புறமும் இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். "நான் எப்படி என் ஆசிரியர் முன்னிலையில் வந்தேன்? '' என்று கேட்டார். "இதோ, இவர் அடித்த அடியில்தான் வந்தாய்'' என்று சொன்னார்கள். "நான் எந்தப் பாவமும் செய்யாத நிலையில் என்னை என் ஆசிரியர் ஏன் அடித்தார்?'' என்று கேட்டார். ஆக, அவர்மீது விழுந்த அடிகளையெல்லாம் அவர் உணரவே இல்லை.

எங்களின் ஆசிரியர் ‘"ஆயத்துல் குர்சீ'யை ஓதியபடியே சிகிச்சையை மேற்கொள்வார். பாதிக்கப்பட்டவரும் ஷைத்தானை-ஆவியை ஓட்டுபவரும் அதை ஓதிக்கொள்ளுமாறு கட்டளையிடுபவராக இருந்தார். மேலும் அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய அத்தியாயங்களையும் ஓதிக்கொள்ளுமாறு கூறிவந்தார். (நூல்: ஸாதுல் மஆத்) 

சில கெட்ட ஆவிகளால் தீண்டப்பட்ட வலிப்பு  நோய் தீராநோயாகவும் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாமல் பொறுமை காத்து, இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே சாலச் சிறந்தது என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்கிக் கூறுகிறது.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் என்னிடம், “"சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், “"ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கருப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (அதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்'' என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, “"நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 5652)

ஆக, இவ்வளவு ஆதாரங்களையும் முன்வைத்துப் பார்க்கும்போது ஜின், ஷைத்தான்களால் தீண்டப்படுவது உண்மையே என்றும் அதனால் பாதிப்பு ஏற்படுவது உண்மையே என்றும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பார்ப்போருக்கும் கேட்போருக்கும்  வேடிக்கையாகத்தான் தெரியும். பாதிக்கப்பட்டோருக்குத்தான் அதன் வேதனை புரியும். மேலும் மனித உடலுக்குள் ஜின் நுழைந்துகொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனும் கருத்து சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படைக் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
=============================================






கருத்துகள் இல்லை: