என்ஜாய் யுவர் லைஃப் எனும் ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்துகொண்டிருக்கிறேன். (மூலநூலாசிரியர்: டாக்டர் மௌலானா அப்துர் ரஹ்மான் அரீஃபீ-சவூதி) அதில் கேட்டல் கலை எனும் தலைப்பில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு...
சிறப்புவாய்ந்த இஸ்லாமியப் பிரச்சாரகர் ஒருவரை நான் நினைவுகூர்கிறேன். அவர் ஆழமான அறிவுடையவர்; இலக்கியப் பேச்சாளர்; சொற்பொழிவுக்காக அடிக்கடி அழைக்கப்படுபவர்; வெள்ளிக்கிழமை உரையாகட்டும்; ஃபிக்ஹ் வகுப்பாகட்டும்; பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தும் உரையாகட்டும் அவர் தொடர்படியாகப் பேசுவார். அவர் பேசுவதை மக்கள் நேரடியாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஆர்வத்துடன் கேட்பார்கள். அவருடைய மனைவியைத் தவிர. ஏனென்றால் அவர் தம் மனைவியிடம் இருக்கும்போதும் வழமைபோல் அவர்தாம் பேசிக்கொண்டே இருப்பாரே தவிர, மனைவி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டார்.
அவரைப் பற்றி அவர்தம் மனைவி அவரிடமே புகார் தெரிவிப்பார். ஆனால் தம் மனைவி எதற்காகத் தம்மைப் பற்றிப் புகார் கூறுகிறார் என்பதை அறியாமலே இருந்துவந்தார். அவருடைய மனைவியைத் தவிர ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். எனவே அவர் ஒரு நாள் தம்முடைய சொற்பொழிவைக் கேட்கத் தம் மனைவியையும் தம்மோடு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். அப்போதாவது அவர் தம்மைப் பாராட்டுவார் அல்லவா என எண்ணிக்கொண்டார்.
"நீ என்னோடு வருகிறாயா?'' என்று கேட்டார். "எங்கே?'' என்று அவர் கேட்க, "ஒரு சொற்பொழிவாளர் ஆற்றுகின்ற உரையைக் கேட்பதற்காக உன்னை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அதன்மூலம் நாம் மிகுந்த பயனடையலாம். நீ வருகிறாயா?'' என்று கேட்டார்.
அவள் தன் கணவருடன் காரில் ஏறி அமர்ந்தாள். குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தவுடன் காரிலிருந்து இறங்கி, பள்ளிவாசலின் கதவு வரை நடந்து சென்றனர். ஒரு மிகப்பெரும் கூட்டம் அவருடைய சொற்பொழிவைக் கேட்க வருகை தந்திருந்தது. அவர்தம் மனைவி பெருங்கூட்டத்தின் இடையே நடந்து சென்று, பெண்கள் பகுதியில் அமர்ந்துகொண்டாள். சொற்பொழிவு தொடங்கியது. மக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன் அவரது உரையைக் கேட்டனர். அவருடைய மனைவியும்கூட வியப்போடு கேட்டாள். சொற்பொழிவு முடிந்ததும் அவர் தமது காரில் ஏறி அமர்ந்துகொண்டார். தம்முடைய சொற்பொழிவை எண்ணி மகிழ்ந்துகொண்டார். அவருடைய மனைவியும் வந்து காரில் அமர்ந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்ததும், வழமைபோல் அவர் அவளுக்குப் பேச வாய்ப்புக் கொடுக்காமல், அங்கிருந்த கூட்டத்தைப் பற்றியும் மஸ்ஜிதின் அழகைப் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்.
பிறகு அவர் தம் மனைவியிடம், "இன்றைய சொற்பொழிவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்க, "அது நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அது சரி! சொற்பொழிவாளர் யார்?'' என்று கேட்டார். அவர் ஆச்சரியத்துடன், ''என்ன! உனக்கு யாருடைய குரல் என்று தெரியவில்லையா?'' என்று கேட்க, ''சரிதான்! கூட்டத்தில், ஒலிபெருக்கி சரியில்லாததால், என்னால் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை'' என்றாள்.
அவர் பெருமையோடு, "நான்தான் உரையாற்றினேன்'' என்றார். அதற்கவள், "ஓ! அப்படியா! பேசிக்கொண்டிருந்தபோதே, இவர் எப்போது முடிப்பார் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்'' என்றாள்.
எனவே மற்றவர் பேசுவதைக் கேட்பதும் ஒரு கலைதான். அது எல்லோருக்கும் வாய்க்காது என்பதை நாம் உணரலாம்...
-தமிழாக்கம்: முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி (ஆலங்குடி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக