ஞாயிறு, 17 ஜூன், 2018

வழக்குகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள...ஆங்காங்கே முஸ்லிம்களுக்கு ஏற்படும் இன்னல்கள், சிக்கல்கள், பள்ளிவாசல் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் இவற்றையெல்லாம் தீர்ப்பதற்கும் தனிக்கவனம் செலுத்தி எதிர்கொள்வதற்கும் முஸ்லிம்கள்மீது அவ்வப்போது போடப்படுகின்ற பொய்வழக்குகளை எதிர்கொண்டு சந்திப்பதற்கும் முழுநேரம் பணியாற்றும் ஒரு குழு தேவை. 

அக்குழுவினருக்கான பொருளாதாரத் தேவையை முஸ்லிம் சமுதாயம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு எங்கு, என்ன பிரச்சனையானாலும் நேரடியாகச் சென்று அதைப் பேசித் தீர்க்க, அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அல்லது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முயல்வார்கள். பொய் வழக்குகளுள் சிக்குண்ட முஸ்லிம்களை மீட்பதற்குரிய வேலைகளைச் செய்வார்கள். 

பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமித்தல், புதிதாகப் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்படும் தடை, பொய்வழக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக்கொள்வார்கள். இக்குழுவில் ஆலிம்கள், வழக்கறிஞர்கள், படித்த இளைஞர்கள் இருப்பார்கள். இத்தகைய ஒரு குழுவினர் முஸ்லிம்களுக்கு அவசிய அவசரத் தேவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?  

ஜமாஅத்துல் உலமா சபை இதற்கான ஏற்பாட்டைச் செய்ய முன்வந்தால் சமுதாயம்  வரவேற்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில் சமுதாயம் இதற்கான பொருளாதார உதவி செய்வது முற்றிலும் அவசியம்.  

இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாக ஆலோசனை செய்து, செயல்பட முன்வருமா ஜமாஅத்துல் உலமா சபை?

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி  

கருத்துகள் இல்லை: