பொதுவாக முஸ்லிம்கள் நடத்தும் திருமணத்தில் அவர்கள் பிறமதச் சகோதரர்களையும் விருந்துக்கு அழைப்பதுண்டு. திருமணத்திற்கு வருகை தருவோருள் பிரியாணியை விரும்பி உண்போரும் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவோரும் உண்டு. ஏன், இன்று முஸ்லிம்களே நிறையப் பேர் மருத்துவர்களின் அறிவுறுத்தலால் (அல்லது அச்சுறுத்தலால்) சைவ உணவைச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர். எனவே விருந்து ஏற்பாடு செய்வோர் அசைவ உணவையும் சைவ உணவையும் தனித்தனியே ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். விருந்துக்கு அழைப்போருக்கு இது இரட்டைச் சுமைதான் என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு சுகமான சுமையாக அதைச் செய்துவருகின்றனர்.
இந்தச் சிரமத்தை நீக்கும் முகமாக எல்லோருக்கும் சைவ உணவையே ( வெஜிடபிள் பிரியாணி) ஏற்பாடு செய்துவிட்டு, அத்தோடு பக்க உணவாக (சைடு டிஷ்) அசைவப் பொரியல் செய்துவிட்டால் எல்லோரையும் ஒரே மொத்தமாக அமர வைத்துவிடலாம். சைவம் தனி, அசைவம் தனி எனப் பிரிக்கத் தேவை ஏற்படாது. அசைவம் தேவைப்படுவோருக்கு மட்டும் அதை வழங்கலாம். சைவம் சாப்பிடுவோருக்கு அதைத் தவிர்த்துவிடலாம்.
இதனால் வேலைப்பளு குறைவதோடு, சைவ உணவு எவ்வளவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கணக்குத் தெரியாமல் வாங்கி அல்லது ஆக்கி, விரயம் செய்வது தவிர்க்கப்படும்.
இனி வரும் காலங்களில் எல்லோருக்கும் ஒரே உணவு என்ற முறையைக் கடைப்பிடிக்கலாமே!
-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக