ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இஸ்லாமியப் பார்வையில் நதிநீர்ப் பங்கீடு!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

வானம் பார்த்த பூமி என்பது மழை பொழிந்து, அதனால் விளையும் நிலமாகும். அதையே நன்செய் நிலம் என்கிறார்கள். பாசன நிலம் என்பது மனிதன் தன் உழைப்பால் தண்ணீர் பாய்ச்சி, வேளாண்மை செய்யும் நிலமாகும். அதையே புன்செய் நிலம் என்கிறார்கள். இஸ்லாமியப் பார்வையில், மழை பொழிந்து தானாக விளையும் நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்து சதவிகிதம் ஸகாத் வழங்க வேண்டும். சிரமப்பட்டுத் தண்ணீர் பாய்ச்சி விளைவிக்கும் நிலத்தின் மகசூலிலிருந்து ஐந்து சதவிகித ஸகாத் வழங்க வேண்டும்.  

மூன்று பொருள்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவை. அவை: (ஓடுகின்ற) நீர், புல், நெருப்பு ஆகியவையாகும். இவற்றை விற்பது விலக்கப்பட்டதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2463)  உங்களுள் ஒருவர் (தம் தேவைக்குப் போக) பொது மேய்ச்சல் நிலத்திற்குச் செல்லும் உபரி நீரைத் தேக்கிவைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 2469)

இஸ்லாமியப் பார்வையில் நீர் ஒரு பொதுச் சொத்தாகும். ஓடும் நீரைத் தடுத்து வைத்துக்கொள்வதோ குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் பயன்படுத்துவதோ கூடாது. நீரை விவசாயிகள் தம்மிடையே பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் மத்தியில் நீர்ப்பங்கீட்டில் சண்டை ஏற்பட்டால் அதில் அரசு தலையிட்டு, முறையாகப் பகிர்ந்தளிப்பது கடமையாகும்.

ஒரு தடவை வாய்க்கால் நீர்ப் பங்கீட்டில் இரண்டு விவசாயிகளிடையே சச்சரவு ஏற்பட்டு,  அவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. அது குறித்து நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரளி) அவர்கள் கூறியதாவது: மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த "ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்ஸாரிகளுள் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரளி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்ஸாரித் தோழர், "தண்ணீரைத் திறந்து ஓடவிடு'' என்று கூறினார். ஸுபைர் (ரளி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், "ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள்... (நூல்: புகாரீ: 2360)


வாய்க்கால் நீர், நதிநீர் உள்ளிட்ட நீர்கள் அனைத்தும் மக்களுக்கான பொதுச் சொத்தாகும். அதை விவசாயிகள் முறையாகத் தம்மிடையே பிரித்துக்கொண்டு வேளாண்மை செய்ய வேண்டும். அவர்களிடையே தகராறு ஏற்பட்டால் ஒரு நடுவர் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். அரசுதான் இதற்குப் பொறுப்பு. அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அது ஒரு பொதுச் சொத்து என்ற அடிப்படையில் ஒரு விவசாயி பயன்படுத்திய பிறகு மற்றொரு விவசாயி பயன்படுத்துவதற்கு அதை விட்டுக்கொடுக்க வேண்டும். இதுவே நியாயமும் நேர்மையும் ஆகும்.

ஆனால் இன்றைக்கு மிகவும் பிரச்சனையாக இருப்பது எது? தண்ணீர்தான். ஒரே நாட்டில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஒரு பிரச்சனையை நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில், அப்பொறுப்பை வகிப்பவர்தாமே இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை முறைப்படி பங்கிட்டுக்கொடுக்காமல், பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் பல்லாண்டுகளாக அதை வளர்த்துக்கொண்டே செல்வது ஆட்சியாளருக்கு அழகா?

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்கிவந்த நீர் 400க்கும் மேலான டிஎம்சி ஆகும். காலம் செல்லச் செல்ல, படிப்படியாகக் குறைந்து, 192 டிஎம்சி நீர் தருவதாக ஒத்துக்கொண்டு, வழங்கிக்கொண்டிருந்தபோது, தற்போது 177 டிஎம்சி நீரையே தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. அதையாவது ஒழுங்காகக் கொடுக்காமல் அதையும் தரமுடியாது என்று கூறுவது என்ன நியாயம்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்;  அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்... தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதை)த் தடுத்தவன். (மறுமையில்) அவனை நோக்கி, "உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கின்றேன்'' என்று அல்லாஹ் கூறுவான். (நூல்: புகாரீ: 2369) தேவைக்குப்போக எஞ்சிய தண்ணீரைத்தான் தமிழக விவசாயிகள் கேட்கின்றார்கள். அதைப் பெற்றுத் தருவதில்தான் எத்தனையெத்தனை அரசியல் சூழ்ச்சிகள்!  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள். (நூல்: புகாரீ: 2354) கர்நாடக விவசாயிகள் தம் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்திக்கொண்டு, மீதித் தண்ணீரைத் தமிழக விவசாயிகளுக்குத் தாராளமாக வழங்க முன்வந்தால் இரண்டு மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. 

ஊட்டி மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்ற தண்ணீரை அணைபோட்டுத் தடுத்துவிடாமல் அது செல்லும் வழியே அதைச் செல்லவிட்டு, எந்த விவசாயிக்கும் ஏமாற்றமளிக்காத தமிழக மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதே போன்ற பெருந்தன்மை மிக்கோராகக் கர்நாடக மக்கள் நடந்துகொண்டால் நாடும் நாட்டு மக்களும் நலமோடு வாழ்வார்கள். 

உலகில் வேறெங்கும் இத்தகைய பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.
எகிப்தில் பாய்ந்தோடுகின்ற நைல் நதி உலகின் மிக நீளமான நதிகளுள் ஒன்றாகும். இது 6,650 கி.மீ. நீளம் கொண்டதாகும். இது வடகிழக்கு ஆப்ரிக்காவில் தொடங்கி தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புரூண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்ரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய 11 நாடுகளைக் கடந்து மத்தியத் தரைக்கடலில் கலக்கிறது.

உலகின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றான அமேசான் ஆறு தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள பிரேசில் நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரில் உற்பத்தியாகி பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் வழியாக 6,760 கி.மீ. பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
சிந்து நதியின் நீளம் 3,610 கி.மீ. இது இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர்  அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றி லடாக், காஷ்மீர், பாகிஸ்தான் வழியாக பஞ்சாப் வரை வந்து அரபிக் கடலில் கலக்கிறது.

மிஸ்ஸிசிப்பி ஆறு வடஅமெரிக்காவில் உள்ளது. இது மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியிலிருந்து உற்பத்தியாகிறது. 3734 கி.மீ. நீளம். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இந்த ஆறு மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இல்லினாய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்ஸா, மிஸ்ஸிசிப்பி, லூசியானா ஆகிய மாநிலங்களைக் கடந்து செல்கிறது.

இப்படி உலகெங்கும் பரவலாக மக்களின் பயன்பாட்டைக் கருதி இறைவன் ஏற்படுத்திய நீர் வளத்தைக் கண்டு மனிதன் அதிசயிக்கிறான், அனுபவிக்கிறான்.  நதிகளும் ஆறுகளும் அதனதன் பாதையில் ஓடிக்கொண்டே இருந்தால் மக்கள் பயன்பெறுவார்கள். அதுதான் இறைவனின் நியதி. ஆண்டாண்டு காலமாக எந்தப் பிரச்சனையுமின்றி அவை ஓடிக்கொண்டே இருக்கின்றன. அந்தந்த நாட்டில் ஓடுகின்ற ஆறுகள் வேளாண்மைக்குப் பெரிதும் பயன்படுகின்றன. அங்கு ஓடுகின்ற நதி நீரை யாரும் தடுத்து வைத்துக்கொள்வதில்லை.

கொல்கத்தா ஹூக்ளி ஆறு 260 கி.மீ. நீளம் கொண்டது. கங்கையின் கிளை ஆறு. மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பிரிகிறது. 

கோதாவரி ஆறு மஹாராஷ்டிரா-நாசிக் அருகில் திரிம்பாக் எனுமிடத்தில் உற்பத்தியாகி மும்பையைக் கடந்து ஆந்திர மாநிலத்திலுள்ள இராஜமுந்திரி மாவட்டத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில் இரண்டு மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சனையுமில்லை. 
குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனுமிடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகின்ற இந்த ஆற்றின் நீளம் 800 கி.மீ. ஆகும். கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக வந்து தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்கள் வழியாக பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில்தான் இரண்டு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை நீண்ட காலமாக நீண்டுகொண்டே செல்கிறது.  

அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? மேகத்தில் இருந்து, நீங்கள் இதனைப் பொழியச் செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க, நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை? (56: 68-70)

திருக்குர்ஆனின் இவ்வசனங்கள் கூர்ந்து நோக்கத்தக்கவை. இறைவனின் அருட்கொடைகளை மனிதன் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு, அவனுக்கு நன்றி செலுத்திவர வேண்டும். அதை விடுத்து, சண்டையிட்டுக்கொண்டும் வரம்புமீறிக்கொண்டும் இருந்தால், இறைவன் மற்றொருவனை உள்ளுக்குள் கொண்டுவந்து அநியாயக்காரர்களைப் பழிதீர்ப்பான் என்பதே அவனது நியதி. அத்தகைய ஒரு சூழ்நிலை வருவதற்குள் புரிந்துணர்ந்து, நீரைப் பகிர்ந்துகொள்வதே நம் அனைவருக்கும் நலம் பயக்கும்.
========================================






கருத்துகள் இல்லை: