சனி, 19 ஆகஸ்ட், 2017

மனிதன் மரியாதைக்குரியவன்!



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

ஏழை-பணக்காரர் எனப் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், கருப்பு-வெள்ளை என உடலின் நிறத்தில் வேறுபாடு இருந்தாலும், ஆண்-பெண் எனப் பாலின வேறுபாடு இருந்தாலும் மனிதன் மரியாதைக்குரியவன். ஒருவருக்கொருவரின் மதிப்பு, மரியாதையில் கூடுதல் குறைவு இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட மரியாதை உண்டு. இதுவே இஸ்லாமிய மார்க்கம் வகுத்துள்ள மனிதச் சமத்துவம்; மனித உரிமை.

மனிதனை அவமதிப்பதோ, கேவலப்படுத்துவதோ, அசிங்கப்படுத்துவதோ, மானபங்கப்படுத்துவதோ ஒருபோதும் கூடாது. சுருக்கமாக, யாருடைய மனதும் புண்படுமாறு நடந்துகொள்ளக்கூடாது. ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். ஏனென்றால் மனிதன் மரியாதைக்குரியவன்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக ஆதமின் மக்களை (மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தியுள்ளோம். அவர்களைத் தரையிலும் கடலிலும் (வாகனங்கள் மூலம்) நாமே சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அüக்கிறோம். மேலும் நாம் படைத்துள்ள பெரும்பாலானவற்றைவிட அவர்களுக்குக் கூடுதல் சிறப்புகளை வழங்கியுள்ளோம். (17: 70)

இவ்வசனத்தில் "நாம் படைத்துள்ள பெரும்பாலானவற்றைவிட அவர்களுக்குக் கூடுதல் சிறப்புகளை வழங்கியுள்ளோம்'' எனும் அல்லாஹ்வின் கூற்று கவனிக்கத்தக்கது. இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள கோடானு கோடிப் படைப்புகளைவிட மனிதனே உயர்வானவன்; மரியாதைக்குரியவன் என்பது நமக்குப் புலப்படுகிறது.

வானவர்கள், "இறைவா! ஆதமின் மக்களுக்கு (மனிதர்களுக்கு) உலகத்தை வழங்கியுள்ளாய். அதில் அவர்கள் உண்ணவும் பருகவும் (ஆடைகளை) அணியவும் செய்கின்றார்கள். ஆனால் நாங்கள் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் உண்பதோ பருகுவதோ வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதோ இல்லை. எனவே உலகத்தை அவர்களுக்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மறுமையை எங்களுக்குரியதாக ஆக்குவாயாக'' என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ், "நான் என் கையால் படைத்த ஒருவரின் (ஆதமின்) வழிவந்தவர்களில் நல்லவர்களை, "ஆகு' என்றவுடன் உண்டாகிவிட்ட (வான)வர்களைப் போன்று ஆக்க மாட்டேன்'' என்று கூறினான். (நூல்: தப்ரானீ)

இவ்விடத்தில் "நான் என் கையால் படைத்த ஒருவரின் வழிவந்தவர்களில் நல்லவர்களை'' எனும் வாக்கியம் மிகுந்த கவனத்திற்குரியது. வானவர்களை அல்லாஹ் ஒளியால் படைத்தான். ஆனால் "ஆகு' எனும் சொல்லால் அவர்களைப் படைத்தான். அதேநேரத்தில் மனிதனை அவன் தன் கையால் படைத்தான். ஆகவே அவன் மிகுந்த மரியாதைக்குரியவன்; மற்றெல்லாப் படைப்பினங்களைவிடச் சிறப்பிற்குரியவன்; ஏன், வானவர்களைவிட மேலானவன்.

இதனால்தான் தன் கையால் படைத்த உயரிய படைப்பான மனிதனுக்கு வானவர்கள் அனைவரும் சிரம்பணியுமாறு கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்குப் பணிந்து முதல் மனிதரான ஆதமுக்குச் சிரம் பணிந்தனர். சிரம் பணிய மறுத்த இப்லீசைச் சபித்து விரட்டியடித்தான்.
 
மனிதன் மரியாதைக்குரியவனாக இருப்பதால் அவனுடைய மானமும் மரியாதையும் காக்கப்பட வேண்டும்; அவனுடைய மரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடாது; அவனைப் பிறர் முன்னிலையில் கேவலப்படுத்தக்கூடாது. இதனை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி ஹஜ்ஜில் மக்கள் திரள் முன்னிலையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

"உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய நாள் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரீ: 67)

புனிதமிக்க மக்கா நகர் குறித்த மதிப்பும் மரியாதையும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துள்ளது. அதில் அமைந்துள்ள கஅபாவை முன்னோக்கியே உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் தொழுதுவருகின்றார்கள். அத்தகைய கஅபா எனும் இறையாலயம் அமைந்துள்ள நகரம் எந்த அளவு புனிதமானதோ அதே அளவு ஒவ்வொரு மனிதனின் மானமும்  மரியாதையும் புனிதமானது என்பதை உள்ளடக்கிக் கூறியுள்ளார்கள்.

மனிதன் உயர்வானவன். மேன்மையானவன் அவன் எந்த மனிதனுக்கும் தலைசாய்க்கத் தேவையில்லை. எந்தத் தலைவரையும் வணங்கத் தேவையில்லை. அவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிமை இல்லை என்பதைப் பின்வரும் நபிமொழி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது: முஆத் (ரளி) அவர்கள் சிரியாவிலிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்குச் சிரவணக்கம் செய்தார்கள். "முஆதே! இது என்ன (புதுப்பழக்கம்)?'' என்று வினவினார்கள். "நான் சிரியாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் தம் பாதிரிமார்களுக்கும் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைக் கண்டேன். எனவே நான் அதைத் தங்களுக்குச் செய்ய வேண்டுமென விரும்பினேன்'' என்று விடையளித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர். திண்ணமாக நான் அல்லாஹ் அல்லாதவருக்குச் சிரவணக்கம் செய்ய யாரையேனும் ஏவுவதாக இருந்தால், ஒரு பெண் தன் கணவனுக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் ஏவியிருப்பேன்...'' என்று கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா: 1843)

இதில் மிக முக்கியமான செய்திகள் உள்ளன. ஒரு மனிதர் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவருக்குப் பிறர் குனியவோ, தலைதாழ்த்தி வணங்கவோ, அவரது காலைத் தொட்டு வணங்கவோ தேவையில்லை; அவ்வாறு செய்வது கூடாது. அதுபோலவே ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவள் தன் கணவனுக்குச் சிரம் தாழ்த்த வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. ஆணும் பெண்ணும் சமமே என்பதும் இதில் உள்ளடங்கியுள்ளது.

ஆக, எல்லாப் படைப்பினங்களையும்விட உயரிய மனிதன், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காகக் கொல்லப்படலாமா? எல்லாப் படைப்பினங்களையும் மரியாதைக்குரிய மனிதனின் பயன்பாட்டிற்காகத்தான் உயர்ந்தோன் அல்லாஹ் படைத்துள்ளான். எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கு அல்லாஹ் ஆகுமாக்கிய உணவுகளுள் தான் விரும்பியவற்றை உண்ண முழு உரிமை உண்டு.  அப்படியிருக்கும்போது அவன் விரும்பிய உணவை உண்ணவிடாமல் தடைசெய்யவோ அவனை அடிக்கவோ, கொலை செய்யவோ யாருக்கும் உரிமையில்லை.

இவ்வுலகில் பிறந்துள்ள அனைவரும் சமமே. நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் குலங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களுள் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களுள் யார் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். (49: 13)

இவ்வுலகிலுள்ள அனைவரும்  ஓர் ஆண்-பெண்ணிலிருந்து பிறந்த சமமதிப்புடைய மனிதர்களே ஆவர். அவர்களுள் மிகுந்த இறையச்சமுடையவரே இறைவனிடம் மிகுந்த மரியாதைக்குரியவர். எனவே இறைவனின் படைப்பிலும் மனிதப் பிறப்பிலும் ஒருவருக்கொருவர் எந்த வித்தியாசமும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுதான் இஸ்லாமிய மார்க்கம் வகுத்துள்ள மனித உரிமைச்சட்டம் ஆகும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் பிற மனிதர்களை மதித்து அவரவர்க்குரிய மரியாதையைக் கொடுத்து மனிதநேயத்தோடு வாழ்வோம்.
=========================================




கருத்துகள் இல்லை: