சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டட மண்டபத்தில் 15. 07. 2017 அன்று 159ஆவது பட்டமளிப்பு விழா
பல்கலைக்கழக வேந்தரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான
வித்யாசாகர் ராவ் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழக இணைவேந்தரும் உயர்கல்வித்துறை
அமைச்சருமான கே.பி. அன்பழகன், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பி. துரைசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார். மொத்தம் 13 ஆயிரத்து 780 பேர் பட்டம் பெறும் நிலையில்
இந்த நிகழ்வில் 1,216 பேர் பட்டம் பெற்றனர்.
சில நூறு பேருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கிய பின், மற்ற மாணவர்கள் அனைவருக்கும்
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி பட்டங்களை வழங்கினார். பல்வேறு துறைகளில்
முனைவர் பட்டம் பெற்ற 1,216 மாணவர்களுள் ஐவர் ஆலிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இனிய திசைகள் துணை ஆசிரியராகவும் மணலியில் உள்ள மஸ்ஜித் ஜாமிஉல்
அன்வார் பள்ளிவாசலில் இமாமாகவும் பணியாற்றி வருகின்ற, மொழிபெயர்ப்பாளர் மௌலவி
நூ. அப்துல் ஹாதி பாகவி, அண்ணா நகர் அருகே உள்ள
சாந்தி காலனியில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர்
பள்ளிவாசலில் இமாமாகவும் அரும்பாக்கம் சதக் மெட்ரிக்குலேஷன்
பள்ளியில் அரபித்துறை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்ற மௌலவி அல்ஹாஃபிழ் முஹிப்புல்லாஹ்
பாகவி, வண்டலூரில் அமைந்துள்ள
புகாரிய்யா அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்ற மௌலவி அப்துஸ் ஸமது நத்வி, புதுக் கல்லூரியில் உதவிப்
பேராசிரியராகப் பணியாற்றுகின்ற மௌலவி சையது ஃபஸ்லுல்லாஹ் பக்தியாரி உமரி நத்வி, இராயப்பேட்டையில் உள்ள
தலைமை காஜி மஸ்ஜிதில் இமாமாகப் பணியாற்றுகின்ற மௌலவி அல்ஹாஃபிழ் சயீதுத்தீன் ஜமாலி ஆகியோர் அரபித்துறையில்
முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஒரே நேரத்தில் ஆலிம்கள் ஐவர் முனைவர் பட்டம்
பெற்றுள்ளதன்மூலம் சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம் மேலோங்கி வருவதைக் காண முடிகிறது.
இவர்கள் ஐவரும் இன்றைய இளம் ஆலிம்களுக்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றார்கள்.
-தகவல்: முனைவர் மௌலவி நூ. அப்துல்ஹாதி
பாகவி
குறிப்பு: இச்செய்தியை வெளியிட்ட மணிச்சுடர் நாளிதழுக்கும் இனிய திசைகள் மாத
இதழுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக