செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

கூட்டுக் குர்பானியா? வியாபாரமா?


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

துல்ஹஜ் பத்தாம் நாள் உலகம் முழுவதும் இறைவனுக்காகப் பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டை முஸ்லிம்கள் செய்துவருகின்றார்கள். தம்மால் இயன்ற பொருளாதாரத்தைச் செலவு செய்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பிராணியை வாங்கி, அறுத்துப் பலியிட்டு, தாமும் உண்டு, ஏழைகளுக்கும் உண்ணக் கொடுத்துக் கொண்டாடப்படுகின்ற இரண்டாவது திருநாள்; பெருநாள்.

“துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அன்று ஒரு மனிதர் செய்யும் நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் (இந்தக் குர்பானி) நற்செயலைவிட வேறெதுவுமில்லை. மறுமை நாளில் அந்தக் குர்பானிப் பிராணி தனது கொம்புகளுடனும் உரோமங்களுடனும் கால்குளம்புகளுடனும் (முழுமையாக) வரும். (குர்பானிப் பிராணியின்) அந்த இரத்தம், நிலத்தில் விழுவதற்குமுன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுவிடுகிறது. எனவே மனநிறைவுடன் குர்பானி கொடுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1413)

இதன் முக்கியத்துவத்தை அறியாதோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இறைச்சி மட்டுமே இதன் நோக்கம் எனத் தவறாக எண்ணிக்கொண்டுள்ளார்கள். ‘குர்பானி ஒரு வழிபாடு’ என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றார்கள். “உம் இறைவனை வணங்குவீராக. (பின்னர் அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக” (108: 2) என்று உயர்ந்தோன் அல்லாஹ் கூறுவதை நினைவுகூர்வது அவசியமாகும்.

நம்முள் பலர் தத்தம் வீடுகளில் அன்றைய நாளில் ஆட்டை அறுத்துப் பலியிடுவதைக் கடமையாகக் கருதிச் செய்துவந்தாலும் இன்னும் ஒரு பெரும்தொகையினர் கூட்டுக் குர்பானி கொடுப்பதையே தமக்கு வசதியாகக் கருதுகின்றார்கள். “ஆட்டை வாங்கி, அறுத்து, அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது” என்று அலுத்துக்கொள்கின்றார்கள். “ஆட்டை அறுப்பவர் (கஸாயி) கிடைப்பதே  பெரும் திண்டாட்டமாக உள்ளது. அவர் கேட்கும் தொகையும் மிக அதிகமாக உள்ளது” என்று வேறு சிலர் அங்கலாய்த்துக்கொள்கின்றார்கள். இப்படிப் பல்வேறு சாக்குப்போக்குகள் கூறி, வசதியிருந்தும் அதிலுள்ள சில சங்கடங்களைச் சகித்துக்கொள்ள முடியாத பலர் கூட்டுக் குர்பானியைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர்.

இன்றைய அவசர உலகில், கூட்டுக் குர்பானியைப் பருவக் காலத் தொழிலாகவும் வியாபாரமாகவும் கருதியே பலரும் இதில் ஈடுபடுகின்றனர். “இது ஒரு வழிபாடு” என்பதை மறந்து செயல்படுகின்றனர். எழுபது பேர் பங்கு சேர்ந்திருந்தால் பத்து மாடுகளை அறுக்க வேண்டும். ஆனால் பங்குதாரர்கள் பலர் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமில்லாததால், “எங்களுக்கு இறைச்சி வேண்டாம். நீங்களே பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்” என்று எல்லாப் பொறுப்பையும் அவர்கள்மீதே சாட்டிவிட்டு, இவர்கள் தம் கடமை முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்கின்றார்கள்.  இதனால் பத்து மாடுகளை அறுப்பதற்குப் பதிலாக ஐந்து அல்லது ஏழு மாடுகளை அறுத்து, இறைச்சியைக் கேட்போருக்கு மட்டும் பகிர்ந்துவிட்டு, அப்படியே முடித்துக் கொள்கின்றார்கள்.

உண்மையில் கூட்டுக் குர்பானி என்பது, அருகருகே உள்ள ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்து, ஒரு மாட்டை வாங்கி,  ஓரிடத்தில் வைத்து, அவர்களுள் ஒருவர் அதனை அறுத்து, அதன்பின் அந்த ஏழுபேரும் அதன் இறைச்சியைச் சமமாகப் பங்கு வைத்துக்கொள்வதுதான். இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த கூட்டுக் குர்பானி முறை ஆகும். இவ்வாறு ஏழு ஏழு பேராகக் கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்ற வேண்டிய வழிபாட்டை, சிலர் தாமே முன்னின்று செய்வதாகப் பங்குதாரர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அறுக்க வேண்டிய அளவிற்கு மாடுகளை அறுக்காமல், பங்குதாரர்களின் வழிபாட்டை முடக்கிவிடுகின்றார்கள்.

ஆகவே கூட்டுக் குர்பானியில் பங்கு சேர்பவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். “மாட்டை அறுக்கும்போது நாங்களும் அங்கு வந்து நிற்போம்” என்ற தகவலை அவர்களிடம் தெரிவித்துவிட வேண்டும்.    பங்குதாரர் இறைச்சியைச் சாப்பிடாவிட்டாலும், அதை அவர்களிடமிருந்து வாங்கி ஏழைகளுக்கு நேரடியாக அவர்களே வழங்க வேண்டும். அப்போதுதான் இது முறையாக நடைபெறும். அல்லது சிரமம் பாராமல், ஒவ்வொருவரும் தமக்குரிய ஓர் ஆட்டை வாங்கி, தம் கையால் அதை அறுத்துப் பலியிட்டு, குர்பானி வழிபாட்டை முழுமையாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தனியாக ஓர் ஆட்டையோ மாட்டையோ வாங்க இயலாதோருக்குத்தான் கூட்டுக் குர்பானி. தனியாக ஓர் ஆட்டையோ மாட்டையோ வாங்க முடியும் என்ற சூழ்நிலையில் உள்ளோர் சுயமாகவே இந்த வழிபாட்டைத் தத்தம் இல்லங்களில் நிறைவேற்ற வேண்டும்; கூட்டுக் குர்பானியில் சேரக் கூடாது.

மற்றொரு புறம், கறிக்கடை வைத்து நடத்துபவர்களும் கூட்டுக் குர்பானிக்காகப் பங்குதாரர்களைச் சேர்க்கின்றார்கள். அவர்கள் அத்தொழிலையே ஆண்டுமுழுவதும் செய்துவருவதால், வியாபார நுணுக்கத்தோடு இதில் பெருவாரியான இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றார்கள். பங்குதாரர்களிடம் மிகுதியான பணத்தைப் பெற்றுக்கொண்டு, விலை குறைவான மாட்டை அறுத்து, குர்பானியை முடித்துவிடுகின்றார்கள். அவர்கள் மாட்டை அறுக்கும்போது பங்குதாரர்கள் அங்கு நிற்பதோ பார்ப்பதோ கிடையாது. பெரும்பாலோர் மாட்டிறைச்சி என்பதால் குர்பானி இறைச்சியை வாங்குவதும் கிடையாது. இவையெல்லாம் அவர்களுக்கு வசதியாகப் போய்விடுகின்றன. ஆக, ஒரு வழிபாடு எப்படியெல்லாம் திசைமாறிச் செல்கிறது என்பதைக் கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.

மற்றொரு சாரார் கூட்டுக் குர்பானியை நாடுவதன் காரணம், அவர்களுக்குப் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிடத் தேவையான இடவசதி இல்லாததே ஆகும். பெருநகரங்களில் மிகுதியானோர் தொகுப்பு வீடுகளில்  (அபார்ட்மெண்ட்) வசித்து வருகின்றனர். அவர்களிடம் போதுமான பொருளாதார வசதி இருந்தும், ஆட்டை வாங்கி அறுத்துப் பலியிடத் தேவையான இடவசதி இல்லை. அக்கம் பக்கம் வசிப்போர் பிறமதச் சகோதரர்களாக இருப்பதால் அவர்களின் நலம் நாட வேண்டியுள்ளது. இதனால் இத்தகையோர் தம் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, இவர்கள் அனைவரும் கூட்டுக் குர்பானியை நாடுகின்றனர். ஆகவே  இவர்கள் தம் குர்பானி வழிபாட்டைச் செவ்வனே நிறைவேற்றிக்கொள்ள இடவசதி செய்து கொடுக்க வேண்டும்.

பள்ளிவாசலைச் சுற்றிக் காலி இடம் இருந்தால் அதைக் குர்பானி வழிபாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ள அந்தந்தப் பள்ளி நிர்வாகிகள் அனுமதியளிக்க வேண்டும்; அதனைத் தம் மஹல்லா மக்களுக்குப் பொது அறிவிப்புச் செய்ய வேண்டும். அல்லது வேறு காலியிடங்கள் இருந்தால் அங்கு அந்த மஹல்லா நிர்வாகமே அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுக்க வேண்டும். இதனால் முஸ்லிம்கள் பலர் குர்பானி எனும் வழிபாட்டைத் திருப்தியோடு செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக நாம் அனைவரும் மாசற்ற மனதோடு, இந்தக் குர்பானி வழிபாட்டை மனதார நிறைவேற்ற உயர்ந்தோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வாய்ப்பை நல்குவானாக. நாம் அறுத்துப் பலியிடுகின்ற உயிர்ப்பிராணியை நாளை மறுமையில் சிராத்துல் முஸ்த்தக்கீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் வாகனமாக நமக்கு ஆக்கித் தருவானாக.

=========================================================





கருத்துகள் இல்லை: