புதன், 25 ஜனவரி, 2017

சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம்

இலங்கையில் நடைபெற்ற (10, 11, 12-12-2016) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு இதழுக்கு நான் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை. இதோ உங்கள் பார்வைக்கு... உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.


சினிமா ஊடகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட இஸ்லாம் பற்றிய பயங்கரவாத மாயை

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

வெளியில் பார்ப்பதைத் திரையிலும் பார்க்கலாம்; வெளியில் பார்க்கத் தகாததைத் திரையிலும் பார்க்கக்கூடாது என்பதே சினிமா பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் ஆகும். சினிமா என்பது ஓர் ஊடகம். அவ்வளவுதான். அதன்மூலம் மக்கள் மனதில் நன்மையை விதைப்பதும் தீமையை விதைப்பதும் அவரவரின் எண்ணத்திற்கேற்ற வெளிப்பாடு. நல்லெண்ணம் கொண்டு மக்கள் நலன் நாடுவோர் நன்மையைக் கொண்டு செல்கின்றனர்; தீய எண்ணம் கொண்டோர் அதன்மூலம் தீமையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி நன்மையா, தீமையா என்று கேட்டால் அதனைப் பயன்படுத்துவதை வைத்துதான் அதற்கான விடையைச் சொல்ல முடியும். மாறாக, பொத்தாம் பொதுவாக, ‘அது தீமைஎன்று சொல்லிவிட முடியாது. அதுபோலவே சினிமாவும் அமைந்துள்ளது. மக்களின் அளவற்ற விருப்பத்தால் இது ஊடகத் துறையில் முக்கிய இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

அதேநேரத்தில் ஓர் ஊடகத்தைப் பிறர் எவ்வாறு பயன்படுத்துகின்றார்களோ அதே விதத்தில்தான் முஸ்லிம்களாகிய நாமும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த ஊடகத்தை நல்வழியில் எவ்வாறு நாம் பயன்படுத்த இயலும் என்பதை யூகித்துணர்ந்து, அதை நோக்கித் திருப்ப வேண்டும். அதற்காகத்தான்  படைத்தோன் அல்லாஹ் நமக்குப் பகுத்தறிவை வழங்கியுள்ளான். வழிகாட்ட வான்மறையும் அண்ணல் நபியின் அமுத மொழிகளும் உள்ளன. அவற்றை மைல்கல்லாகக் கொண்டு நன்மையை நோக்கி மக்களை இழுக்கும் விதத்தில் இந்த சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சமூக விழிப்புணர்வு, பகுத்தறிவை ஊட்டுதல், மூடப்பழக்கங்களை முறியடித்தல், மதுவின் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வரலாற்றைப் பதிவு செய்தல் உள்ளிட்ட எத்தனையெத்தனையோ நல்ல கருத்துகள்மூலம் மக்கள் மனதை மாற்றிச் செம்மைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. மக்கள் அவற்றைப் பார்த்துப் பொழுதுபோக்கியதோடு நல்ல கருத்துகளையும் தெரிந்துகொண்டனர்.

அதன் பின்னர் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சினிமா தயாரிக்கப்படலானது. அப்போது தொடங்கி இன்று வரை அது மிகப்பெரிய அளவிலான ஒரு வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் மோசடி என்பதும் அதனைத் தொற்றிக்கொண்டு வந்துவிடும். மோசடி என்பதற்கு முகம் தெரியாது.  யாரை வேண்டுமானாலும் அது மோசடியால் வஞ்சிக்கும். அதனால்தான் இந்த இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்களையே தேசத் துரோகிகளாகக் காட்டத் தொடங்கிவிட்டனர் அந்த மோசடிக்காரர்கள்.

சினிமா என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த ஊடகம் ஆகும். அது மக்களின் மனதில் நேரடியாகச் சென்று ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது இன்றைக்கு மக்களோடு இரண்டறக் கலந்துவிட்டது. அது அவர்களின் பொழுதுபோக்கு மட்டுமல்ல; வாழ்க்கையாகவே மாறிப்போய்விட்டது. இதை நன்றாக அறிந்துகொண்ட யூதர்கள்  ஆங்காங்கே உள்ள திரைப்பட இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து, முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான தவறான மாயப் பிம்பத்தை மக்கள் மனதில் உருவாக்கும் விதத்தில் கதையை அமைக்க வலைவீசினார்கள். அந்த மாய வலைக்குள் விழுந்தவர்கள்தாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் அவர்கள்மீது வெறுப்புணர்வைத் தூண்டுமுகமாகவும் திரைப்படங்களை உருவாக்கினார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதன் முதலாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு ரோஷா எனும் திரைப்படம் வெளியானது. அதில் காஷ்மீர் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டினார். அதுதான் தொடக்கம். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறு இயக்குநர்கள் முஸ்லிம்களுக்கெதிரான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் 2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம் எனும் திரைப்படம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரே குரலாகத் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அதன் பயனாக அதிலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் அந்தத் திரைப்படம் மக்கள் மனதில் முஸ்லிம்கள் குறித்த ஒரு தவறான பிம்பத்தைப் பதியத்தான் செய்தது. 

Innocence of Muslims  எனும் தலைப்பில் முன்னோட்டம் வெளியாகி, அதன்பின்  The innocent Prophet  எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்து, உலக முஸ்லிம்கள் அனைவரும் தம் உயிரைவிட மேலாக மதித்துப் பின்பற்றி வருகின்ற இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தியது; உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பியது. ஆக, அவர்களின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும் சொச்சைப்படுத்த வேண்டும். அனைவரும் அவர்களை வெறுக்க வேண்டும் என்பதேயாகும்.

இதன் பின்னணி நோக்கம் என்னவென்றால், உலக அளவில் மக்களை அழிவுக்குள்ளாக்குவதும் அதன்மூலம்  வியாபாரம் செய்வதும்தான். அழிவு என்பது மக்களை நேரடியாக அழித்தல், சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்தி அதன்மூலம் அழித்தல் என இரண்டும் அடங்கும். இவ்வுலகை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என யூதர்கள் எண்ணுகிறார்களோ அதற்கேற்பக் கட்டமைக்க முனைகிறார்கள்.

திரைப்படத்தின் மூலம், வன்முறையைத் தூண்டுதல், சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுதல், குடும்பத்தைச் சிதைத்தல், ஆடம்பரப் பொருள்களை விரும்பச் செய்தல், நாணத்தை நீக்குதல், உறவுகளைச் சிதைத்தல், சின்னச்சின்ன விஷயங்களுக்காகக் கொலை செய்யத் தூண்டுதல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பல வகையான கேடுகளைக் காட்சியாகக் காட்டி மக்கள் மனதைக் கெடுத்து, தாம் விரும்பிய கருத்தைத் திணிக்க முயல்கின்றார்கள். தாம் காட்டுவதுதான் நாகரிகம், பண்பாடு என்ற சிந்தையை ஊட்டுகின்றார்கள். 

எல்லாமே அவர்களுக்கு வியாபாரம்தான். வன்முறையைத் தூண்டுவதன்மூலம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள் வியாபாரம், சிறுவர்களின் மனதைக் கவர்வதன்மூலம் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் (கேம்ஸ்)குறிப்பிட்ட அலைவரிசைகளைப் பார்க்கத் தூண்டி வியாபாரம், பெண்களைக் கவர்ச்சியாகவும் அழகாகவும் அரைகுறை ஆடைகளுடன் காட்டுவதன்மூலம் ஆடைகள், அழகு சாதனப் பொருள்களின் வியாபாரம், மது குடித்தல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளைத் தவறாது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்டுவதன்மூலம் மது, சிகரெட் வியாபாரம் என ஒவ்வொன்றிலும் வியாபாரத் தந்திரம் மறைந்துள்ளது. ஏனென்றால் இவை அனைத்தையும் தயாரிப்பது அவர்கள்தாம். 

திரைப்படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதன்மூலம் புதிதாக யாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையை உண்டுபண்ணுவது மற்றொரு தந்திரம். ஏன்? முஸ்லிம்கள் மது குடிப்பதில்லை; போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதில்லை; வட்டிக்குக் கடன் வாங்குவதில்லை; பெண்கள் புர்கா அணிவதால் அவர்கள் அழகுசாதனப் பொருள்களையோ அரைகுறை ஆடைகளையோ  வாங்கி அலங்கரித்துக்கொண்டு வீதியில் உலா வருவதில்லை; இதனால் அவர்களின் வியாபாரம் கொழிப்பதில்லை. ஆகவேதான் முஸ்லிம்கள்மீது அவர்களுக்கு எந்தவித விருப்பமுமில்லை. அவர்களைப் பொறுத்த வரை முஸ்லிம்களை அவர்களின் வியாபாரத்திற்கு ஒரு தடைக்கல்லாகத்தான் எண்ணுகின்றார்கள்.

தற்போது இந்தியாவில் இருபத்தைந்து கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்னும் ஐம்பது கோடிப் பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் நிலைமை என்னாகும்? அங்கெல்லாம் மதுக்கடைகள் மூடப்படும்; அழகு சாதனப் பொருள்கள், கவர்ச்சியான ஆடைகளின் வியாபாரம் படுத்துக்கொள்ளும்; விபச்சாரத் தொழில் நசிந்துபோகும்; வட்டிக் கடைகள் வழக்கொழிந்துபோகும்; பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் மறைந்துபோகும். சமூகம் தூய்மையடைந்து விடுவதால் சமுதாயச் சீர்கேட்டை உண்டுபண்ணுகின்ற எந்த வியாபாரமும் முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறாது. இவற்றையெல்லாம் அவர்கள் விரும்புவார்களா?

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாதுஎன்ற இறைக்கட்டளையையும் மீறி, தம் சூழ்ச்சியாலும் தந்திரத்தாலும் மீன்பிடித்தவர்கள்தாமே இந்த யூதர்கள்? அவர்கள் தம் வியாபாரம்  நொடித்துப் போகுமாறு விட்டுவிடுவார்களா? தம் வியாபாரத்திற்கு எதிராக உள்ள எவரையும் வளரத்தான் விடுவார்களா?

இந்தத் திரைப்படங்களின் தாக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சரியாக அறியாதோரின் மனங்களில்  அவர்களைப் பற்றிய தவறான பிம்பத்தைப் பதிவு செய்துவிட்டது. இதனால் முஸ்லிம்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தாம் என்ற மனஓட்டத்திற்கு அவர்களைத் தள்ளிவிட்டது. ஆதலால் அம்மக்கள் முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை; அவர்களோடு இயல்பாகப் பழகுவதில்லை; நட்புகொள்வதில்லை; அண்டைவீட்டினராக இருக்க விரும்புவதில்லை. இன்னும் ஒருபடி மேலேபோய், அண்ணன்-தம்பிகளாக, மாமன்-மச்சான்களாகப் பழகிவந்தோரும் அவர்களைத் தவறான எண்ணத்தோடும் நம்பிக்கையின்மையோடும் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டது. அது மட்டுமல்ல, அவர்களை யாராவது அடித்தாலும் ஓடிவந்து தடுப்பதில்லை. அவர்கள் எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் கைகொடுப்பதில்லை. இதனால் பிற சமயச் சகோதரர்களைவிட்டு விலகியே வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இன்றைய முஸ்லிம்கள்.

இவ்வாறு தீய எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்களின் தாக்கம் அப்போது தோன்றி, குறிப்பிட்ட சில நாள்களோடு முடிந்துபோய்விடுவதில்லை. அந்தத் தவறான கருத்தை அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றார்கள். ஆம்! தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்த நச்சுக் கருத்தைக் கொண்டுள்ள திரைப்படங்களை அவ்வப்போது ஒளிபரப்புகின்றார்கள். அதைக் காணும் பிஞ்சு உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான பிம்பம் பதிந்துபோய்விடுகிறது. அது மட்டுமின்றி, யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதால் அவை காலந்தோறும் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டே இருக்கும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

1995ஆம் ஆண்டு வெளியான பம்பாய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கிவிஜயகாந்த் நடிப்பில் வெளியான நரசிம்மா உள்ளிட்ட பல திரைப்படங்கள், அர்ஜுன் நடித்துள்ள பல திரைப்படங்கள் முதலியவை முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சமூக விரோதிகளாகவும் நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் கடத்தல்காரர்களாகவும் தவறாகச் சித்திரிப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றன. இந்தப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் இவ்வுலகில் அமைதி திரும்பாது; வன்முறை தொடர்ந்துகொண்டே இருக்கும். அதைச் செய்வோர் முஸ்லிம்கள் அல்லர். ஏனென்றால், “பாதையில் இடர்தரும் பொருள்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போதித்த பொய்யாமொழியை முஸ்லிம்கள் தம் அன்றாட வாழ்வில் பின்பற்றி வருவதால் அவர்கள் யாருக்கும் எந்த இடையூறும் செய்ய மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களின் எதிரிகள் வன்முறைச் செயல்களைத் தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். அவற்றைச் செய்துமுடித்ததும் முஸ்லிம்கள்மீது பழி போடுவார்கள்; அவர்கள் கைது செய்யப்படுவார்கள்; சிறைக்குள் வைத்துச் சித்திரவதை செய்யப்படுவார்கள். திரைப்படங்களால் தவறான கருத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் அதை உண்மையென நம்புவார்கள். இது ஒரு தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

உலக அளவில் அந்தந்த நாட்டு மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உலக மக்கள் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் இஸ்லாத்திற்கெதிரான கருத்தை விதைக்கும் வேலையை யூதர்கள் தொடர்ந்து மறைமுகமாகவே செய்துகொண்டிருக்கின்றார்கள். காட்சி ஊடகம் மட்டுமின்றி, அச்சு ஊடகத்தின் மூலமாகவும் இஸ்லாத்திற்கு முரணான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு நயமான நயவஞ்சகப் பேச்சாளர்கள்மூலமும் தவறான கருத்தை விதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான தீர்வு என்னவென்றால் இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் கொள்கைக் கோட்பாடுகளையும் திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயமாக நவின்ற பொய்யாமொழிகளையும் சகோதரச் சமுதாய மக்களுக்கு எவ்வகையிலேனும் தெரியப்படுத்த வேண்டும். அத்தோடு நாம் நடத்துகின்ற இஸ்லாம் சார்ந்த சொற்பொழிவுகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். மேலும் நாம் இஸ்லாமிய வரையறைக்கு உட்பட்டு, காட்சி ஊடகத்தையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களில் உள்ள தவறான மனப்பான்மையை மாற்ற முடியும்.   =====================================
கருத்துகள் இல்லை: