திங்கள், 9 ஜனவரி, 2017

நபிகளார் நவின்ற நான்குகள் (தொடர்-10)

தீனுக்கு ஏன் முன்னுரிமை?

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: பெண்கள் நான்கு நோக்கங்களுக்காக மணமுடிக்கப்படுகிறார்கள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளுடைய குலத்திற்காக, 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடைய பெண்ணை மணந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும். இதை அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  (நூல்: நஸாயீ: 3178)

இஸ்லாமிய மார்க்கத்தில் ஓர் ஆண், பெண்ணுக்கு மஹர் கொடுத்துத்தான் அவளை மணந்துகொள்ள வேண்டும் என்றிருந்தபோதிலும் மஹர் கொடுத்துத் திருமணம் செய்துகொள்ளும் நிலையில் உள்ளவர்கள் ஏழை வீட்டிலா பெண்பேசச் செல்கின்றார்கள்? பணக்கார வீட்டை நோக்கித்தானே படையெடுக்கின்றார்கள்? பணத்திற்காகவும் செல்வத்திற்காகவும் மணமுடிப்பது காலம் காலமாகத் தொடர்ந்து வரக்கூடிய ஒரு நடைமுறைதான். பணம் பணத்தோடுதான் சேரும்எனும் முதுமொழிக்கேற்பப் பணக்காரர்கள் தமக்குச் சமமான நிலையில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு, அவர்களோடுதான் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றார்கள். பணமில்லா ஏழைப் பெண்கள் புறக்கணிக்கப்படுவதும் திருமணத்திற்காக ஏங்கித் தவிப்பதும் காலம் காலமாக நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.  ஆகவே ஒரு பெண் அவளது செல்வத்திற்காக மணமுடிக்கப்படுகிறாள்எனும் நபிகளாரின் கூற்று மெய்ப்பிக்கப்படுவதை இன்றும்கூட நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது.

சாதாரண குடும்பங்களிலிருந்தோ, கீழ்மட்டத் தொழில் செய்வோரின் குடும்பங்களிலிருந்தோ பெண்களை மணமுடித்துக்கொள்ள இன்றைய இளைஞர்களும் அவர்களைப் பெற்றோரும் முன்வருவதில்லை. மணப்பெண் நல்ல குலமகளாக, உயர்குடிப் பிறந்தவளாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ணுவது இயல்புதான். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள், இரண்டாவதாகக் குலத்தைக்குறிப்பிட்டார்கள். குலப்பெருமைக்காகவும் வமிசப் பெருமைக்காகவும் மணமுடிப்பது இயல்பாக மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நடைமுறை.

மூன்றாவது, அழகுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. அழகை அனைவரும் விரும்புவர்.  ஒரு பெண் பணக்காரியாகவும் உயர்குடிப் பெண்ணாகவும் இருந்து, அழகியாகவும் இருந்துவிட்டால் அப்பெண்ணை மணமுடிக்க எத்தனையோ பேர் போட்டியிடுவர். ஒன்றுமே இல்லாதவன்கூட அழகான பெண்ணை முற்றிலும் விரும்புவான். அதனால்தான் மூன்றாவதாக நபி (ஸல்) அவர்கள் அழகைக் குறிப்பிட்டுள்ளார்கள். அழகிற்கு மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனிப்பட்ட இடமுண்டு. எதுவுமே இல்லாமல் அழகு மட்டும் இருந்தாலும் அவளை மணந்துகொள்ள ஆயிரம் பேர் உண்டு.

ஆனால் மேற்கண்ட இம்மூன்றையும்விட, மார்க்க அறிவு எப்பெண்ணிடம் உள்ளதோ அத்தகைய பெண்ணை மணப்பதுதான் இல்வாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடையாளம் எனத் தெளிவுபடுத்தியிருப்பது நன்கு கவனிக்கத்தக்கது. ஏன் எல்லாவற்றையும்விட மார்க்க அறிவுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்? அதில் அப்படி என்ன நன்மை இருக்கிறது? சிந்தியுங்கள்.

அழகும் செல்வமும் தற்காலிகமானவை. அவை எப்போது வேண்டுமானாலும் அகன்றுபோய்விடக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட காலம்தான் அழகு நீடிக்கும். வயது ஆக ஆக அழகு மங்கிக்கொண்டே செல்லும் என்பது நிதர்சன உண்மை. அது அனைவருக்கும் தெரியும். செல்வமோ செலவு செய்யச் செய்யத் தீர்ந்துபோகக்கூடியது. அதைப் பாதுகாப்பதும் சிரமம். செல்வத்தின்மூலம் இல்வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியையோ அன்பையோ வாங்கிவிட முடியாது. அது போலவே குலப்பெருமை பேசிப் பெருமிதம் கொள்வது குறிப்பிட்ட காலத்திற்குத்தான். பிறகு அதுவும் எந்தப் பயனும் நல்காது.

ஆனால் ஒரு பெண்ணிடம் மார்க்க அறிவு இருந்தால் அதன்மூலம் குடும்பம் சீராக இயங்கும்; பிள்ளைகள் சீராக வளர்க்கப்படுவார்கள்; அறிவூட்டப்படுவார்கள்; அவள் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பாள்; அவனுக்குப் பணிவிடைகள் செய்வதில் ஆர்வம் கொள்வாள்; இஸ்லாமிய நடைமுறைகளையும் சட்டங்களையும் பேணி நடப்பாள்; தேவையில்லாமல் கண்டதையும் வாங்கித்தரச் சொல்லிக் கணவனுக்குத் தொந்தரவு தரமாட்டாள்; கணவனின் வரவறிந்து செலவு செய்வாள்.  ஆக மொத்தத்தில் அவள் கணவனின் வீட்டிற்கு விளக்கேற்ற வந்த குலமகள் ஆவாள். வீட்டில் ஏற்றப்படும் விளக்கு அவ்வீடு முழுவதும் ஒளி தருவதைப்போல் அவளும் குடும்பத்திற்கு  ஒளியூட்டுவாள்; அழகூட்டுவாள். இல்வாழ்விற்குத் தேவையான அன்பும் அறனும் மார்க்க அறிவுகொண்ட பெண்ணின்மூலம் கிடைக்கப்பெறும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவேதான் மார்க்க அறிவு கொண்ட மங்கை நல்லாளை மணந்துகொண்டு வெற்றிபெறு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அது முற்றிலும் உண்மை என்பதை, அத்தகைய பெண்ணை மனைவியாகப் பெற்ற அனைவரும் உணர்ந்துகொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மேற்கண்ட செய்திக்குள் மற்றொரு கருத்தும் மறைந்து கிடக்கிறது. அதாவது இந்நான்கு காரணங்களை முன்னிலைப்படுத்தித் திருமணம் செய்வது மனித இயல்பு. எனவே அதில் தவறேதும் இல்லை. இவை அல்லாத காரணங்களுக்காக ஒரு பெண்ணின் திருமணம் தள்ளிப்போவது அல்லது அவளை மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஒரு சமூகக் குற்றமும் சமூகச் சீர்கேடும் ஆகும். பெண்ணுக்குப் பெற்றோர் இல்லை என்பதால், தந்தை இல்லை என்பதால், தாய் இல்லை என்பதால், அதிகம் படித்திருக்கிறாள் என்பதால், உறவினர்கள் இல்லை என்பதால், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவள் என்பதால், மணவிலக்குப் பெற்றவள் என்பதால், பெண்ணோடு குழந்தையும் இருக்கிறது என்பதால் ஒரு பெண்ணை மணப்பெண்ணாகத் தேர்ந்தெடுக்காமல் நிராகரிப்பவர்கள் சமூகக் குற்றவாளிகளே ஆவர். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

பொதுவாகப் பெண்கள் பட்டப்படிப்பு வரை படிக்கும் ஆரோக்கியமான சூழ்நிலை இன்று நிலவுகிறது. இது வரவேற்கத்தக்கதே ஆகும். இருப்பினும் பல ஊர்களில் ஆண்-பெண் பட்டம்பெற்றோர் விகிதாச்சாரம் வேறுபடுவதால் படித்துப் பட்டம்பெற்ற பெண்களுக்கு அதற்கு நிகரான மணாளன் கிடைக்கப்பெறாத சூழ்நிலை உள்ளது. அதனால் அவர்கள் தம்மைவிடக் குறைவாகப் படித்துள்ள மணாளனுக்கு வாழ்க்கைப்பட முன்வந்தாலும், “இவள் மணாளனைவிட அதிகம் படித்தவள்என்ற காரணத்திற்காக அவள் நிராகரிக்கப்படுகின்றாள். இதுவே அவளுக்கு நீடிக்கும்போதுதான் அவள் வேறு சமயத்தைச் சார்ந்த ஆடவனைக் கைப்பிடிக்க நேரிடுகிறது. இது சமுதாயப் பெரியவர்களால் கண்டிக்கப்பட்டு, சீர்செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான சேவையாகும்.

அதுபோலவே புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வந்துள்ள பெண்கள் திருமணத்தின்போது பெரும் சிரமத்தைச் சந்திக்க நேரிடுகிறது. புதிதாக வந்தவர்களைப் பிறப்பால் முஸ்லிம்களாக உள்ளோர் அரவணைத்து ஆதரவு தராததால் அவர்கள் மீண்டும் தம் பொய்யான சமயத்தை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். குடும்பத்தோடு வந்தவர்கள் குடும்பத்துடனேயே திரும்பிச் சென்றுவிடுகின்றார்கள். இந்நிலை மாற வேண்டுமெனில் புதிதாக வந்த பெண்களுக்கு நம் வீட்டு ஆண்பிள்ளைகளை மணமுடித்துக் கொடுப்பதும், அவர்களுடைய ஆண்பிள்ளைகளுக்கு நம் வீட்டுப் பெண்பிள்ளைகளை மணமுடித்துக் கொண்டு வருவதும் தொடர வேண்டும். அவர்களை ஆதரித்து அரவணைத்துக் கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஒவ்வோர் அறிவுரைக்குள்ளும் ஆயிரமாயிரம் கருத்துகள் புதைந்து கிடப்பதை நாம் அவற்றைப் படிக்கப் படிக்க, சிந்திக்கச் சிந்திக்க அறிந்துகொள்ளலாம்.
                             -இன்ஷா அல்லாஹ் தொடரும்

======================================




கருத்துகள் இல்லை: