வியாழன், 19 ஜனவரி, 2017

மனிதன் பேராசைக்காரன்...


- முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

மனிதன் ஒரு பேராசைக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆட்சியாளர்கள் அதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்; சட்டங்களையும் திட்டங்களையும் தீட்ட வேண்டும். இல்லையேல் அவனைக் கட்டுப்படுத்த முடியாது. மனிதனுக்குப் பொருள்மீதுள்ள பேராசையை எந்த வேலி போட்டும் தடுக்க முடியாது. அறிவுரைகள் கூறியும் அந்த ஆசையை அகற்ற முடியாது. ஏன், துறவிகளுக்கும் பொருளாசை உண்டு என்பதை யாராவது மறுக்க முடியுமா?

எவ்வளவுதான் சம்பாதித்துத் சேர்த்துவைத்தாலும் மீண்டும் மீண்டும் சேர்க்கத்தான் நினைப்பானே தவிர அதை நிறுத்திக்கொள்ள மாட்டான். அவனுக்கு எத்தனையெத்தனை பாடம் நடத்திப் புரிய வைக்க முயன்றாலும் அது தோல்வியில்தான் முடியும். அன்றாட வாழ்க்கையில் எப்போதும் பொருளைச் சேர்த்து, ஒன்றையும் அனுபவிக்காமல் இறந்துபோன எத்தனையெத்தனை நிகழ்வுகளைக் கண்ணாரக் கண்டாலும் அவன் நிறுத்த மாட்டான்; திருந்த மாட்டான்.
இதனால்தான் படைத்த இறைவன் மனிதனைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்: (இறந்து) மண்ணறையைச் சந்திக்கும் வரை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்ற பேராசை உங்களை வீணாக்கிவிட்டது. (102: 1-2) அதாவது மனிதனின் பேராசை அழிய வேண்டுமென்றால் முதலில் அவன் அழிய வேண்டும். அப்போதுதான் அவனது பேராசையும் அழியும். அது வரை அது தொடரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மனிதனின் பேராசை குறித்து இலக்கணம் கூறியுள்ளதாவது: ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது.... (நூல்: புகாரீ: 6436) இதை இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இன்று நாம் அன்றாடம் காணுகின்ற நாளிதழ் செய்திகள் இதை உண்மைப்படுத்துகின்றன. மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் முதல் அதிகாரத்தில் இல்லாத பெரும் பணக்காரர்கள் வரை எல்லைமீறிக் கொள்ளையடிப்பதையும் வரம்புமீறிப் பொருள் சேர்ப்பதையும் காணும்போது நமக்குத் தலையே சுற்றுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் அரசுக்குத் தெரியாமல் சேர்த்த மொத்தப் பணமும் இறுதியில் பறிபோகிறது. அவன் எண்ணி எண்ணிச் சேர்த்த எந்தப் பணத்தையும் அவன் அனுபவிக்க முடியாமல் போகிறது.

மேலும் எவ்வளவு பணத்தைத்தான் எண்ணியெண்ணிச் சேர்த்தாலும் அதையெல்லாம் அவன் அனுபவித்திடத்தான் முடியுமா? யாருக்காகச் சேர்க்கின்றான்? எதற்காகச் சேர்க்கின்றான்? அளவுக்கு மீறிச் சேர்க்கின்ற எந்தப் பணமும் அவனுக்கில்லை என்பதை நாம் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஏனென்றால் "தன்னுடைய பணம்' என்றால் என்னவென்ற இலக்கணம் தெரியாமல் மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான். "உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும், கொடுத்து மகிழ்ந்ததும் தவிர மனிதனுடைய செல்வம் எதுவும் இல்லை'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன்மொழி சிந்திக்கத்தக்கது.  

எவ்வளவு உண்கின்றானோ அதுவும், எவ்வளவு ஆடைகளை வாங்கி உடுத்துகின்றானோ அதுவும், எவ்வளவு பணத்தைத் தர்மம் செய்கின்றானோ அதுவும் தவிர பிறவற்றை எவ்வாறு அவனது செல்வம் என்று சொல்ல முடியும்? அவன் இறந்தவுடனேயே அவையெல்லாம் பிறருக்குரிய சொத்தாகிவிடுகின்றது. பிறகெப்படிச் சேர்த்தவற்றையெல்லாம் தனது சொத்தாகக் கருத முடியும்? சான்றாக, மறைந்த தமிழக முதல்வர் பல கோடி மதிப்புள்ள 306 சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவற்றையெல்லாம் அவர் மறைந்தபோது எடுத்துக்கொண்டா சென்றுவிட்டார்? யாரோ ஒருவர் அவற்றை அனுபவிக்கப்போகிறார். ஆக, மனிதனின் பேராசை ஒரு மாயை என்பதை அவன் புரிந்துகொள்கின்ற வரை அவன் பொருள் சேர்ப்பதை விட்டுவிட மாட்டான்.

இந்தப் பேராசைதான் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தவிடாமல் அவனைத் தடுக்கிறது. பேராசைகொண்டவனோடு கஞ்சத்தனமும் சேர்ந்துகொள்ளும். அவனுக்கு அள்ளி அள்ளிச் சேர்க்கத்தான் தெரியும். பிறருக்குக் கொடுக்க மனது வராது. ஏனென்றால் பேராசையும் கஞ்சத்தனமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆதலால் வருவதையெல்லாம் வாரி வாரிச் சுருட்டிக்கொள்வானே தவிர தன்னிடமிருந்து எதையும் பிறருக்குக் கொடுக்க மாட்டான். 

 மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம்  செய்யாது) தடுத்துக் கொள்கின்றான். (70: 19-21) அதாவது வர வரச் சேர்த்து வைத்துக்கொள்வான். தனது செல்வத்திற்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் கதிகலங்கிப் போய்விடுவான்.  அல்லும் பகலும் சிரமப்பட்டுச் சேர்த்த பணத்தில் முப்பது சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்துமாறு கூறினால் அவன் எப்படிச் செலுத்துவான்? எப்படியாவது ஏமாற்றிவிடத்தான் நினைப்பான். அரசு தனது பணத்தைக் கணக்குப் பார்க்கிறது என்று தெரிந்தால் அதைப் பதுக்க முயல்வான். அந்தரங்க அறைக்குள் மறைத்து வைப்பான். வெளிநாட்டு வங்கியில் போட்டு வைப்பான். ஆக அவனிடமிருந்து அரசு எந்தப் பணத்தையும் வாங்க முடியாது.

படைத்த இறைவன் மனிதனின் பேராசையை நன்றாகவே அறிந்தவன். அதனால்தான் அவனிடமிருந்து மிகக் குறைந்த தொகையாக வருடத்திற்கு இரண்டரை சதவிகிதம் மட்டுமே கேட்கிறான். இது முற்றிலும் குறைந்த தொகைதான். அதனால்தான் முஸ்லிம்கள் யாவரும் இறைவனுக்குப் பயந்து இதைத் தவறாது கொடுத்துவிடுகின்றனர். இதனால் முறையாக வரி செலுத்தப்படுகின்ற இஸ்லாமிய நாடுகளில் செல்வத்திற்குப் பஞ்சமில்லை; ஏழைகள் எஞ்சவில்லை.

இந்தியாவில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் அண்மைக் காலமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகின்றன. "ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்'' என்பதும் ஒரு புரட்சிகரமான திட்டம்தான். இது சிலருக்குப் பாதகமாகவும் வேறு சிலருக்குச் சாதகமாகவும் இருக்கலாம். ஆனால்  "நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரேவிதமான வருமான வரி-அது இரண்டரை சதவிகிதம்'' எனும்  ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தினால் வரி ஏய்ப்புச் செய்ய யாரும் எண்ணிக்கூடப் பார்க்கமாட்டார். முறையாகவும் துல்லியமாகவும் அரசுக்கு வரிகள் வந்து குவியும்; மக்களுக்கு மகிழ்ச்சி பெருகும். அரசு தான் எண்ணுகின்ற திட்டங்களை எளிதாகச் செயல்படுத்தலாம். அதுபோலவே விவசாயம் செய்து பொருளீட்டுவோருக்கு அவர்களுடைய மகசூலின் மதிப்பில் 5 சதவிகிதம் வரியாகச் செலுத்த ஆணை பிறப்பித்தால் அரசுக்கு நல்ல முறையில் வரி வந்து குவியும். இந்திய அரசின் வருமான வரிச் சட்டப்படி விவசாயிகளுக்கு வரிச் சலுகை உண்டு. அவர்கள் வரி கட்டத் தேவையில்லை. இதைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வோர் முறைகேடாக ஈட்டிய பணத்தை விவசாயத்தில் ஈட்டியதாகப் பொய்யான கணக்கைக் காட்டி, வரி கட்டாமல் தப்பித்துக்கொள்கின்றனர். அதற்கு ஒரு முடிவு கட்டிவிடலாம்.

வருமான வரித்துறை தகவல்படி, 2.5 இலட்ச ரூபாய்க்குக் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 2.5 இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 10 சதவிகிதம் வரியும் 5 இலட்ச ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் 20 சதவிகித வரியும் செலுத்த வேண்டும். ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் பெறுவோர் 30 சதவிகிதத்தை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். இது இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு. இதை மாற்றி, "ஒரே பணம் ஒரே வரி-இரண்டரை சதவிகிதம்'' எனும் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு நிச்சயம் ஏற்படாது என்று நம்பலாம். சட்டங்கள் எளிமையாக இருக்கும்போது அதை அனைவரும் விரும்பிப் பின்பற்றுவார்கள். அது மனித இயல்புக்கு மாற்றமாகவும் முரணாகவும் இருந்தால் அதை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது அறியாமை. எனவே படைத்த இறைவன் விதித்த வரையறையை நடைமுறைப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

மேலும் இப்போது உள்ள வரையறையையும் மாற்றி, ஒரு இலட்சம் வங்கி இருப்பில் உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை இரண்டரை சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்க வேண்டும். இதனால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகும். இன்னும் ஒரு படி மேலாகச் சொல்ல வேண்டுமானால், அவரவரின் வங்கி இருப்பிலிருந்து நேரடியாக வருமான வரித்துறையே வரியைப் பிடித்தம் செய்துகொள்கின்ற நடைமுறையையும் செயல்படுத்தினால் யாரும் வரி ஏய்ப்புச் செய்ய முடியாது என்பது உறுதி. இவ்வாறு வரியை முறைப்படுத்தினால், அரசு விரிவான திட்டங்களைச் செயல்படுத்தலாம். அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் நிகழாது. அது மட்டுமல்ல கூடிய விரைவிலேயே உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்திச் சுய மரியாதையோடு ஒவ்வோர் இந்தியனும் தலைநிமிர்ந்து நடக்கலாம். அத்தோடு வல்லரசு நாடுகளின் சட்டாம்பிள்ளைத்தனத்திற்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமும் ஏற்படாது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது வரி குறைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படலாம். வேறொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் அச்சம் தீர்ந்துவிடும். ஆயிரம் பேர் தலா ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கும் ஒரு இலட்சம் பேர் தலா நூறு ரூபாய் கொடுப்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் இலாபமா, நட்டமா என்பதை யூகிக்க முடியும்.


நம் நாடு மட்டுமல்ல எந்த நாட்டிலும் வரி ஏய்ப்பு நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் குறைவான வருமான வரியை விதித்தால்தான் அது சாத்தியமாகும். இத்திட்டத்தைத் துணிச்சலாகச் செயல்படுத்தும் பிரதமரைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.








கருத்துகள் இல்லை: