செவ்வாய், 14 ஜனவரி, 2020

இளைஞர்களின் ஆற்றல் சமுதாயத்திற்கு அரண்!



-
முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
==============

மனித வாழ்வின் முப்பருவங்களில் முக்கியமான பருவம் இளமைப்பருவமே ஆகும். இளமைப்பருவத்தின் ஆற்றலும் வீரமும் சீரான நேர்க்கோட்டில் சென்றால் அவர்கள் பயன்பெறுவதோடு அவர்களால் சமுதாயமும் பயன்பெறும். அவர்களின் அளப்பரிய ஆற்றலைப் புரிந்துகொண்டு அவர்களைச் சரியான பாதையில் நடத்துவது சமுதாயப் பொறுப்பிலுள்ள பெரியவர்களின் கடமையாகும்.

சுறுசுறுப்போடும் துடிப்போடும் இயங்குவதால் அவர்களுக்கென ஏதாவது பொறுப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டால் அதைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள். ஏனெனில் அறிவும் ஆற்றலும் ஒருசேரக் கொண்டுள்ள பருவம் அல்லவா அது?

ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர் மன்றம் ஒன்றை அமைத்து, அதில் அப்பகுதியிலுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து அவரவருக்கான பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது அந்தந்த மஹல்லாவிலுள்ள பள்ளி நிர்வாகிகளின் கடமையாகும்.

இளைஞர்களின் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வெற்றிபெறுவார்கள். அவர்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள் தோல்வியடைவார்கள். அது மட்டுமின்றிப் பல்வேறு பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கொண்டுள்ள அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் பொறுப்புணர்வுமிக்க சமுதாய நிர்வாகத்தின் வெற்றியாகும். முதியவர்களை மட்டும் கொண்டுள்ள எந்த நிர்வாகமும் வெற்றியடைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் தம் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். ஒரு கட்டத்தில் மனச்சோர்வுற்ற அவர்கள், "அல்லாஹ்வே! அபூஜஹ்ல், உமர் பின் கத்தாப் ஆகிய இரண்டு இளைஞர்களுள் யாரையாவது ஒருவரை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்கச் செய்து, இம்மார்க்கத்திற்குப் பக்கபலமாக ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ், உமர் பின் கத்தாப் (ரளி) அவர்களுக்கு அத்தகைய நல்வாய்ப்பை நல்கினான். எனவே உமர் (ரளி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்; இஸ்லாமிய மார்க்கத்திற்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள்.

ஒருநாள், உமர் (ரளி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கொண்டுவந்துள்ள இம்மார்க்கம் உண்மையானதுதானே?'' என்று வினவ, "ஆம்! உண்மைதான்!'' என்று கூற, "பிறகேன் இந்த இறைமறுப்பாளர்களுக்குப் பயந்து, நாம் மறைந்துகொண்டு தொழ வேண்டும்? பகிரங்கமாகத் தொழலாமே?'' என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்கள். அதன்பின்னர் ஏகத்துவப் பிரச்சாரம் பகிரங்கமாகச் செய்யப்பட்டது என்பது வரலாறு.

"
உமர் (ரளி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் கண்ணியமாகவே இருந்து வந்தோம்'' என்று அப்துல்லாஹ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்ற செய்தி புகாரீ எனும் நபிமொழித் தொகுப்பு நூலில் (3408) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் இளமையின் ஆற்றல். இளைஞர்களின் ஒருங்கிணைந்த ஆற்றல் சமுதாயத்திற்கு அரண் என்பதை இச்செய்தியின் வாயிலாக அறியலாம்.

நபி (ஸல்) அவர்களே தம் தூதுத்துவத்திற்கு முன்பாக, தம் 35ஆம் அகவையில் ஹிஸ்புல் ஃபுளூல் எனும் ஓர் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, அதன்மூலம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சமுதாயத் தொண்டாற்றினார்கள் என்பதை வரலாற்றில் அறிகிறோம். ஆக இளைஞர் மன்றம் என்பது இளைஞர்களுக்குச் சமுதாயப் பொறுப்புணர்வை ஊட்டுவதற்காகவும் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் அவர்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதற்காகவுமே ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் இளைஞர்களைச் சரியான முறையில் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கான பொறுப்புகளைக் கொடுத்து, அவர்களைச் சீரான முறையில் வழிநடத்தினார்கள். இளம் வயதிலேயே போர்ப்படையை வழிநடத்திச் செல்லும் தளபதி பொறுப்பை ஸைத் பின் ஹாரிஸா (ரளி) அவர்களுக்கு வழங்கினார்கள். ஸைத் (ரளி) அவர்கள் தம் படையினரை வழிநடத்திச் சென்று, வெற்றி வாகை சூடி வந்தார்கள் என்பது வரலாறு.

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து, தம் வேதத்தைப் படித்துக் காட்டும்போது, அதில் சிலவற்றைப் படித்துக் காட்டிவிட்டு, வேறு சிலவற்றை மறைத்து விடுவார்கள். எங்கள் வேதத்தில் இப்படித்தான் சட்டம் உள்ளது என்று கூறி ஏமாற்றுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்கள்மீது சந்தேகம் கொண்ட நபியவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்களிடம், "நீங்கள் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ஸைத் அவர்கள், நபியவர்களின் கட்டளையை ஏற்று, மிகுந்த சிரத்தையோடும் அக்கறையோடும் ஈடுபட்டு, பதினேழே நாள்களில் அம்மொழியைக் கற்றுக்கொண்டுவிட்டார்கள். இதுதான் இளைஞரின் ஆற்றல்.

நபி (ஸல்) அவர்கள் தம் தாயகம் துறந்து மதீனா செல்ல நேரிட்டபோது, எதிரிகளின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க ஸவ்ர் குகையில் மூன்று நாள்கள் தங்கினார்கள். அப்போது பகலெல்லாம் மக்காவின் முக்கிய வீதிகளில் குரைஷித் தலைவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, இரவில் ஆடு மேய்க்கும் இடையராகச் சென்று, நபி (ஸல்) அவர்களுக்கு ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுத்துவிட்டு, மக்காவின் செய்திகளையும் சொல்லிவிட்டுச் செல்லும் ஓர் ஒற்றராகச் செயல்பட்டவர் அபூபக்ர் (ரளி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் எனும் இளைஞர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எத்தனையோ அசாதாரணமான செயல்களைச் செய்து காட்டும் திறன்மிக்கவர்கள்தாம் இளைஞர்கள். அத்தகைய இளைஞர்களுக்கு அவரவரின் திறமையறிந்து உரிய பொறுப்புகளை வழங்கி, அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அவர்கள் வேறு எங்கேனும் சென்று, பொறுப்பைப் பெற்றுக்கொண்டு அந்த இயக்கத்திற்காகப் பாடுபடத் தொடங்கிவிடுவார்கள். அது நமக்கே எதிராகக் கூட அமையலாம்.

நபி (ஸல்) அவர்களின் வழியைக் கடைப்பிடித்து, அபூபக்ர் (ரளி) அவர்களும் இளைஞர்களைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றிபெற்றார்கள். நபியவர்களின் இறப்பிற்குப்பின், ஹிஜ்ரீ 11ஆம் ஆண்டு நடைபெற்ற யமாமா போரில் ஹாஃபிழ்கள் எழுபது பேர் மரணமடைந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இறுதிவேதமான திருக்குர்ஆனை ஒரே தொகுப்பாகத் தொகுக்க வேண்டும் என்ற கருத்து கலீஃபா அபூபக்ர் ஸித்தீக் (ரளி) அவர்களிடம் முன்வைக்கப்பட்டபோது, நீண்ட ஆலோசனைக்குப்பிறகு அக்கருத்தை ஏற்றுக்கொண்ட அவர்கள், இவ்வளவு பெரிய பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்த வேளையில், அப்பொறுப்பை இளைஞரான ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அவர்களின் தலைமையின்கீழ் வேறு சில இளைஞர்களையும் நியமித்து உத்தரவிட்டார்கள். ஸைத் பின் ஸாபித் (ரளி) அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடும் அக்கறையோடும் ஆழ்ந்த கவனத்தோடும் இப்பணியை மேற்கொண்டார்கள். இறுதியில் வெற்றிகரமாக இப்பணியை முடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்கள்.

சத்தியத்தைத் துணிந்து ஏற்கும் திறனும் அசத்தியத்தை எதிர்க்கின்ற துணிச்சலும் இளைஞர்களுக்கு உண்டு. அதனால்தான் அத்தகைய வரலாற்று நிகழ்வைத் திருக்குர்ஆன் பதிவுசெய்கிறது. தன்னை வணங்குமாறு கட்டளையிட்ட அரசனின் கட்டளையை ஏற்க மறுத்து, அவனை வணங்காமல் இறைவன் ஒருவனே வணங்கப்படத் தகுதியானவன் என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இளைஞர்கள், தமது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு, ஊரின் எல்லையில் அமைந்துள்ள ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள். அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அல்லாஹ் அவர்களை நீண்ட நித்திரையில் ஆழ்த்திவிட்டான். 300 ஆண்டுகளுக்கும் மேலாக உறங்கி, ஒரு நாள் விழித்தெழுந்தார்கள். அவர்கள் தமக்குள் எத்தனை நாள்கள் உறங்கினோம் என்று பேசிக்கொண்டபோது, ஒரு நாள், அல்லது அரை நாள் தூங்கியிருக்கலாம் என்று கூறிக்கொண்டார்கள். அவர்களுள் ஒருவரை உணவு வாங்க அனுப்பிவைத்தார்கள். அவர் தம்மிடம் இருந்த பழைய காசைக் கொடுத்து, உணவு வாங்க முற்பட்டபோது, அச்செய்தி அரசருக்குச் செல்கிறது. பின்னர் அவரைப் பின்பற்றி அக்குகைக்கு எல்லோரும் சென்றார்கள். ஆனால் அவர் உள்ளே நுழைந்ததும் அக்குகை வாசல் மூடிக்கொண்டது. ஆக அநியாயத்திற்கு எதிராகப் போராடும் துணிச்சல் இளைஞர்களுக்கு உள்ளது என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்பதையும் இவ்வரலாற்றின் மூலம் அறியலாம்.

இன்றைய இளைஞர்கள் சிலர் தம் இளமைக் காலத்தில் எந்த நோக்கமும் திட்டமும் இல்லாமல் மனம்போன போக்கில் செயல்படுகிறார்கள். அதனால் அவர்களின் வாழ்க்கை மிகச் சாதாரணமாக அமைந்துவிடுகிறது. வேறு சிலர் எதிர்காலத் திட்டத்தோடு வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுகின்றார்கள். அவர்கள் நல்லவிதமாகப் படித்து, நல்லதொரு பணியில் அமர்ந்து தமது வாழ்க்கையைச் சீராக அமைத்துக்கொள்கின்றார்கள். இந்த இரண்டையும் தாண்டி, வேறு சில இளைஞர்களோ சேரக்கூடாத நண்பர்களோடு சேர்ந்து, தவறான பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டு, போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் அடிமையாகி, தமது வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கின்றார்கள். அவர்கள் தமது வாழ்க்கையை மட்டுமின்றி, தம்மை நம்பி வந்த மனைவி-
பிள்ளைகளின் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றார்கள்.

இன்றைய இளைஞர்கள் அனைவரும் பின்வரும் நபிமொழியைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மகனிடம் (மனிதனிடம்) ஐந்து விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படுவதற்குமுன் இறைவனுக்கு அருகிலிருந்து அவன் பாதம் நகர முடியாது. (அவை:) 1. அவன் தனது வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? 2. அவன் தனது இளமையை எவ்வாறு பயன்படுத்தினான்? 3. அவன் தனது பொருளாதாரத்தை எவ்வாறு ஈட்டினான்? 4. அ(ந்தப் பொருளாதாரத்)தை எவ்வாறு செலவிட்டான்? 5. அவன் கற்ற கல்விமூலம் என்ன செயலாற்றினான்? (நூல்: திர்மிதீ: 2340)

வாழ்நாள் குறித்து ஒரு வினாவும் இளமையைக் குறித்து ஒரு தனிப்பட்ட வினாவும் உண்டு என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். ஏனெனில் முப்பருவங்களுள் அது முக்கியமான பருவமாகும். அந்தப் பருவத்தைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெற்றிபெறுகின்றார்கள். அப்பருவத்தை வீணடித்தவர்கள் தம் வாழ்க்கையில் தோல்வியடைகின்றார்கள். எனவே இளைஞர்கள் தமது இளமைப் பருவத்தைச் சீரான பாதையில் செலுத்த வேண்டும். பெரியவர்களின் ஆலோசனைப்படி தமது போக்கை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிப்பாதையாக அமையும். அது இவ்வுலக வெற்றி மட்டுமல்ல மறுமையின் வெற்றியுமாகும்.
இவ்வுலகில் ஓர் இளைஞன் மூத்தோரின் ஆலோசனையை ஏற்று, அல்லாஹ்வுக்குப் பிடித்தமான முறையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால், அவன் ஈருலகிலும் வெற்றிபெற்றவனாக மாறிவிடுகின்றான். ஆம். பின்வரும் நபிமொழி அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (இறையாசனத்தின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (#அடைக்கலம்) அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்... (நூல்: புகாரீ: 660)

இறைவணக்கத்திலேயே தனது இளமையைக் கழிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? பள்ளிவாசல்களோடு தொடர்புவைத்துக்கொள்ளும் இளைஞர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு ஈருலகிலும் வெற்றி உள்ளதை இந்நபிமொழி சுட்டிக் காட்டுகிறது.

இளைஞர்களின் ஆற்றலைச் சமுதாயப் பெரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மஹல்லாவிலும் இளைஞர் மன்றம் அமைத்து, இளைஞர்களுக்குப் பொறுப்புகளை வழங்கி, அவர்களைச் சமுதாயச் சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொரு மஹல்லாவிலும் செய்யத் தொடங்கிவிட்டால் இளைஞர்கள் பாதை மாறிச் செல்வது தடுக்கப்பட்டு, இச்சமுதாயத்திற்கு அவர்களின் ஆற்றல் பயன்படும். அது மட்டுமல்ல அவர்களின் வாழ்க்கை ஈருலகிலும் வெற்றிக்குரியதாக மாறும் என்பதில் ஐயமில்லை. இளைஞர்கள் சமுதாயத்தின் அரண் என்பதை நம் சமுதாயப் பெரியவர்கள் எப்போது உணர்கிறார்களோ அப்போது இச்சமுதாயம் இன்னும் தழைக்கும்; தலைநிமிர்ந்து நிற்கும்.
==============================================






கருத்துகள் இல்லை: