சனி, 29 மார்ச், 2025

வக்ஃப் சொத்தை எப்படிக் கையாள வேண்டும்?

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ.,எம்.ஃபில்.,பிஎச்.டி. 

பொறுப்பாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்,

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28    


வக்ஃப் என்பது அல்லாஹ்விற்காக ஒருவர் நிரந்தரமான நன்மையை நாடிச் செய்கின்ற தர்மம் ஆகும். “மூலச் சொத்தை அப்படியே வைத்துக்கொண்டு அதன் பயன்களை மக்களுக்குக் கொடுப்பதே” அதன் வரைவிலக்கணம் ஆகும். அதாவது மூலச் சொத்தை அழித்து விடாமல் பாதுகாப்பதோடு, அதன்மூலம் கிடைக்கின்ற பயன்களை மக்களுக்கு வழங்குவதே அதன் நோக்கமாகும்.

 

வக்ஃப் குறித்த சட்டத் தெளிவின்மை ஒருபுறம்; அதைத் தவறாகப் பயன்படுத்திவிடுவோமோ என்ற அச்சம் மறுபுறம். இவையே முஸ்லிம்கள் வக்ஃப் சொத்தின் மூலம் இதுவரை உரிய முறையில் பயன்பெறாததற்குக் காரணமாகும். முஸ்லிம்கள் பலர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் இருந்தும் அவர்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. அரசாங்கமும் அவ்வளவாகச் செய்யவில்லை. வக்ஃப் வாரியமும் வீரியமாகச் செயல்பட்டுத் திட்டங்களைத் தீட்டவில்லை. அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய உவப்பிற்காகவே பணியாற்றுகின்ற ஆலிம்கள், முஅத்தின்கள், அரபுக் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோரின் நலனைப் பேணும் வகையில் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவுமில்லை.


வக்ஃப் சொத்துகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற சட்டம் தெரியாததால்தான் நம் முன்னோர்கள்  அதன் பயன்களை ஏழை மக்களுக்கு உரிய முறையில் வழங்காமல் சென்றுவிட்டார்கள் எனலாம். இனிவரும் காலங்களிலாவது அதன் பயன்களை ஏழைகளுக்கும் அல்லாஹ்வின் பாதையில் அவனது பணிகளை ஆற்றக்கூடியோருக்கும் வழங்கிட அதன் பொறுப்பாளர்கள் முன்வர வேண்டும். 


நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து செலவு செய்கின்ற வரை நீங்கள் நன்மையைப்பெற முடியாது (3: 92) என்ற இறைவசனம் இறங்கிய பின், அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தமக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, விஷயத்தைக் கூறினார். அவரது தர்மத்தை ஏற்றுக்கொண்ட நபியவர்கள், அதை உம்முடைய உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவீராக என்று கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே என்று சொல்லிவிட்டு, தம் உறவினர்களுக்கும் சிற்றப்பா பிள்ளைகளுக்கும் அதனைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். 


அதாவது மேற்கண்ட இறைவசனம் இறங்கியவுடன் அதைச் செயல்படுத்துமுகமாக முதன்முதலாகச் செயல்பட்டவர் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம். அவரைத் தொடர்ந்து நபித்தோழர்கள் பலர் இந்த இறைவசனத்திற்கேற்பத் தம் செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் என்பது வரலாறு.  செல்வம் உடைய யாரும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் இருந்ததில்லை.


வக்ஃபின் சட்டங்கள்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கைபரில் ("ஃதம்ஃக்' என்னும்) ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள்.


 "அல்லாஹ்வின் தூதரே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. ஆகவே, அதை நான் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலைத் தர்மம் செய்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.


 அவ்வாறே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் "அதை (எவருக்கும்) விற்கக் கூடாது; அன்பளிப்பாக வழங்கக் கூடாது;  வாரிசுச் சொத்தாகவும்  எவருக்கும் அதை வழங்கக் கூடாது" என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், பயணிகளுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தமக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்). (புகாரீ: 2737) 


மேற்கண்ட ஹதீஸில் வக்ஃப் சொத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு உள்ளது. அதாவது மூலச் சொத்தை விற்கக் கூடாது; அன்பளிப்புச் செய்யக்கூடாது; அதை மற்றவர் தம் வாரிசுச் சொத்தாகவும் ஆக்கிக்கொள்ளக்கூடாது. யாரெல்லாம் அனுபவிக்கலாம் என்ற தெளிவும் உள்ளது. ஏழைகள், உறவினர்கள், அடிமைகள், அல்லாஹ்வின் பாதையில் பணியாற்றுவோர், பயணிகள், விருந்தாளிகள் முதலானோர் அனுபவிக்க அனுமதியுண்டு என அறிகிறோம். 


மூலச் சொத்தை அப்படியே வைத்துக்கொண்டு அதன் பயன்களை எவ்வாறு ஏழை முஸ்லிம்களை அனுபவிக்கச் செய்யலாம்? வக்ஃப் செய்யப்பட்ட நிலத்தில் வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டி, குறைவான வாடகைக்கு விடலாம். குறைவான வாடகையில் உள்ளோர் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, எங்கேனும் ஓரிடத்தை வாங்கி, அங்கு ஒரு புதிய வீட்டைக் கட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. அதன்பின் அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து விடுவார்கள். பிறகு அவ்வீட்டில் மற்றொருவர் குடிபுகுவார். இப்படி அதன் பயன்கள் நீடித்துக்கொண்டே போகும்.


நிலத்தைக் குத்தகைக்கு விடுதல், வாடகைக்கு விடுதல், விவசாயம் செய்தல், முதலான வகைகளில் வருகின்ற வருமானத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்குத் திருமண உதவி, கல்வி உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்யலாம். கைம்பெண்கள், முதியோர், ஆதரவற்றோர் உள்ளிட்டோருக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கலாம்; நம் பெண்களுக்குத் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, அதன்மூலம் பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னேற ஏற்பாடு செய்யலாம். ஆக நாம் எந்த முறையில் அதைப் பயன்படுத்தினாலும் வக்ஃப் செய்தோருக்கு அதன் நன்மைகள் சென்றுகொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.    


பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நூல்நிலையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி மக்களுக்கான சேவைகளைச் செய்யலாம். இவ்வாறு எண்ணற்ற நற்பணிகளை வக்ஃப் சொத்துகள் மூலம் செய்யலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. எனவே இனிவரும் காலங்களிலாவது வக்ஃப் சொத்துகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்ற தெளிவான சிந்தனையோடு, நம் சமுதாயத்தைச் சார்ந்த ஏழைகளுக்கு என்னால் இயன்ற வரை உதவுவேன் என்ற எண்ணத்தோடு அதன் பொறுப்பாளர்கள் செயல்பட வல்லோன் அல்லாஹ் நல்வாய்ப்பை நல்குவானாக. 

=====================================

புதன், 19 மார்ச், 2025

விளம்பர மோகம்

 விளம்பர மோகம்

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.


ஒருவர் தம்முடைய தயாரிப்புப் பொருளை மக்கள் மத்தியில் பெருமளவில் விற்பனை செய்ய விளம்பரம் உதவியாக உள்ளது. தம்முடைய தரமான பொருளை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கவே தொடக்கத்தில் விளம்பரத்தைத் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் காலப்போக்கில் தரமற்ற பொருள்களையும் விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். தற்போது விளம்பரத்தில் காட்டப்படுகிற பெரும்பாலான பொருள்கள் தரமற்றவையாகவும் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பவையாகவுமே உள்ளன. 


அவற்றை வாங்கக்கூடிய நுகர்வோர் இவை தரமானவையா, உடலுக்கு ஆரோக்கியமானவையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதைவிட இது ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதா என்றுதான் பார்க்கின்றனர். ‘அந்த நடிகை சொல்லிவிட்டாரே’ நன்றாகத்தான் இருக்கும்; ‘அந்த நடிகர் சொல்லிவிட்டாரே’ அப்படியென்றால் நன்றாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். காலப்போக்கில் அதன் பாதிப்பு தெரிய வரும்போதுதான், அந்தப் பொருள் எவ்வளவு மட்டமானது; எவ்வளவு தரமற்றது என்பதை உணர்கின்றார்கள்.


அதுபோலவே பிள்ளைகள் தொலைக்காட்சியில் காணுகின்ற விளம்பரங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.  அதனால் குறிப்பிட்ட அப்பொருள்களைத் தம் பெற்றோரிடம் கேட்கின்றார்கள். எவ்வித மறுப்புமின்றி அதை அப்படியே அவர்கள் தம் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கின்றார்கள். தம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு உகந்ததா, ஆரோக்கியமானதா, ஊட்டச்சத்து மிக்கதா என்று எதையும் பார்ப்பதில்லை; எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லை. கடைசியில் பிள்ளை நோய்வாய்ப்பட்டுப் படுக்கும்போதுதான் சிந்திக்கவே தொடங்குகின்றார்கள். ‘உங்கள் பிள்ளைக்கு நீங்கள் என்ன வாங்கிக் கொடுத்தீர்கள்’ என்று மருத்துவர் கேட்கும்போது, லேஸ், குர்குரே உள்ளிட்ட உப்பு கலந்த தின்பண்டங்களைக் கூறுவார்கள். அந்தத் தின்பண்டங்கள்தாம் உங்கள் குழந்தைக்குச் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று டயாலிஸிஸ் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டன என்று மருத்துவர்கள் சொல்லும்போது, தலையில் சம்மட்டியால் அடித்ததைப்போல் உணர்வார்கள். 


ஆக உணவுப் பொருள்கள் மட்டுமின்றி, நாம் பயன்படுத்தும் அத்தனைப் பொருள்களையும் ஏதாவது ஒரு நிறுவனம் செய்த விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் நம்முள் பெரும்பாலோர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்பயன்பாடு உள்ள பொருள்கள் எதை வாங்கினாலும் அதன் மூலம் அவ்வளவாக நமக்குப் பாதிப்பு இருக்காது; பணம் மட்டுமே வீணாகும். ஆனால் உண்பொருள்களாக இருந்தால் பணம் வீணாவதோடு நம் உடலும் சேர்ந்து வீணாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


இன்று பரபரப்பான உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வீட்டில் ஆற அமரச் சமைத்து, நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. கடையில் ஆயத்தநிலையில் கிடைக்கும் பொருள்களைத்தான் வாங்கிச் சமைத்து சாப்பிட்டு வருகிறோம். அவற்றுள் முக்கியமாகப் பாக்கெட் இட்லி மாவு இடம்பெறுகிறது. இன்று இதை வாங்காத குடும்பங்களே இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலோர் வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அது எந்த அளவிற்கு உடலுக்குக் கேடு என்பதை இன்றைய ஆண்களும் பெண்களும் விரைவில் உணர்வார்கள். அதுவரை அதன் விற்பனை கொடிகட்டிப் பறக்கும். அபரிமிதமான வேதிப் பொருள்கள் (கெமிக்கல்), சீக்கிரம் புளிக்காமல் இருக்க அதனுள் இடப்படும் தனிப்பட்ட வேதிப் பொருள் என அதன் இயல்பு நிலையே முற்றிலும் மாறிப்போய்விடுகிறது. அதனால் அது உடலுக்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பது உறுதி. மக்களின் சோம்பேறித்தனமே இந்த நிலைக்கு முழுமுதற்காரணமாகும். 


வீட்டுமனை விற்பனை, தொகுப்பு வீடுகள் விற்பனை, கல்லூரியில் சேர்க்கை, உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள், பணம் முதலீடு செய்தல், எளிதாகக் கடன் பெறுதல் உள்ளிட்ட அத்தனையும் விளம்பரம் மூலமாகவே நம்மை அடைகின்றன. அந்த விளம்பர வலைக்குள் சிக்குண்டு தம் பணத்தை இழந்தோரின் கதைகளை நாம் அன்றாடம் படித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இருந்தாலும் ‘பட்டால்தான் புத்திவரும்’ என்பதற்கேற்ப நாம் யாரிடமாவது ஏமாறுகிற வரை நாம் தெளிவடைவதில்லை. 


‘மிகக் குறைந்த பணத்தில் உம்ரா செய்யலாம்’ என்று பரபரப்பான விளம்பரம் செய்து, பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, கூட்டிச் சென்று, மக்கா அல்லது மதீனாவில் நிர்க்கதியாகத் தவிக்க விடுகின்ற மோசடி நிறுவனங்கள் உள்ளன. ஆஹா, ஓஹோவென விளம்பரம் செய்து, ‘இரட்டைக் கல்வியை வழங்குகிறோம்’ என்று வாக்களித்ததால், அதில் மயங்கி, தம் மகளைச் சேர்த்தவர், பிறகு சில ஆண்டுகளில் அவையெல்லாம் வெற்று விளம்பரங்களே எனத் தெரியவந்ததும், அண்மையில் சமூக ஊடகங்களில் அந்தக் கல்லூரி குறித்த எதார்த்த நிலையைக் குரல் செய்தி மூலம் பரப்பினார். அதைக் கேட்டுப் பலர் அதிர்ச்சியுற்றனர். 


இது ஒருபுறம் என்றால், புதிதாக ஒரு மத்ரஸாவோ கடையோ தொடங்குவோர் பிரபலமான ஒருவரின் முகத்தைத் தேடுகின்றார்கள். தேடிப் பிடித்து, அவரை முன்னிலைப்படுத்தி மத்ரஸா அல்லது கடையைத் திறந்துவிடுகின்றார்கள். அவருடைய புகழ் இருக்கின்ற வரை அதுவும் நல்லமுறையில் போய்க்கொண்டிருக்கும். திடீரென அவர்மீது ஓர் அவதூறு அல்லது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதன் காரணமாக அவரது புகழ் மங்கும்போது அந்தக் கல்வி நிறுவனங்களும் கடைகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. 


ஒருவர் தம் தனிப்பட்ட திறமையால், ஆற்றலால் புகழ்பெற்றவராக இருக்கிறார் என்பதால் ஆளாளுக்கு ‘எங்கள் கல்லூரியின் முதல்வர் இன்னவர்’ என்று குறிப்பிட்ட ஒருவரின் பெயரை முன்னிலைப்படுத்தித் தம் கல்வி நிறுவனங்களை அல்லது தொழில் நிறுவனங்களை இயக்குகின்றார்கள்; அவரின் பெயரை வைத்தே விளம்பரங்கள் செய்கின்றார்கள். அதனால் பெருமளவில் ஈர்க்கப்படுகிற பெற்றோர் தம் பிள்ளைகளை அங்கு வந்து சேர்க்கின்றார்கள்; நுகர்வோர் அந்த நிறுவனங்களை நோக்கிப் படையெடுக்கின்றார்கள்; பொருள்களை வாங்குகின்றார்கள். அதனால் அந்த நிறுவனத்தார் பணம் குவிக்கின்றார்கள். நாளடைவில் அவரின் புகழ் மங்கும்போது அந்த நிறுவனங்கள் காணாமல் போய்விடுகின்றன; அந்தக் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படுகின்றன.


ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகத்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன். (புகாரீ: 6499) 


நம்முள் சிலர் தம்முடைய முகம் எல்லா இடங்களிலும் தெரிய வேண்டும்; எல்லோருக்கும் அறிமுகமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நற்பணிகளில் ஈடுபடுகின்றனர். அதைப் பார்ப்போர் அவரின் செயல்பாடுகளைப் புகழ்கின்றார்கள்; போற்றுகின்றார்கள். இவையெல்லாம் இவ்வுலகோடு முடிந்துபோய்விடும். அல்லாஹ்விடம் எந்த நன்மையும் தமக்குக் கிடைக்காது என்பதை அவர்கள் உணர்வதில்லை. எனவேதான், ‘சிறிய  ஷிர்க்கை-இணைவைத்தலை நான் அஞ்சுகிறேன்’ என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், ‘சிறிய  ஷிர்க் என்றால் என்ன’ என்று கேட்டார்கள். ‘அதுதான் முகத்துதி’ என்று கூறினார்கள். அதாவது பிறர் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காகவே ஒருவர் நற்செயல்களைச் செய்தால், அதற்கான பிரதிபலன் இங்கேயே அவருக்குக் கொடுக்கப்பட்டு விடும்; மறுமையில் அவருக்கு ஒன்றும் கிடைக்காது. எனவே நாம் இத்தகைய இழிசெயலை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 


மக்களே! இன்றும் சிறு, குறு வியாபாரிகள் நகரங்களிலும் சிற்றூர்களிலும் நல்லெண்ணத்தோடு, மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு, தம்முடைய தயாரிப்புகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரின் தயாரிப்புகளைத் தேடிப்பிடித்து வாங்குங்கள். அவர்கள் தம் பொருள்கள் குறித்து அவ்வளவாக விளம்பரம் செய்வதில்லை. வாய்வழிச் செய்திகளாகத்தான் நம்மை அவை அடையும்.


இன்றும் மாசில்லா மனத்தோடு இறைஉவப்பை மட்டுமே நாடி மத்ரஸாக்களையும் பள்ளிக்கூடங்களையும் நடத்தி வருகின்ற நல்லடியார்கள் இருக்கின்றார்கள். அந்த மத்ரஸாக்களையும் பள்ளிக்கூடங்களையும் தேடிப் பிடித்து அதில் உங்கள் பிள்ளைகளைச் சேருங்கள். மாறாக விளம்பரங்களைக் கண்டு ஏமாற்றமடையாதீர்கள். நல்ல பொருள்களுக்கும் நல்ல மனிதர்களுக்கும் விளம்பரம் தேவையில்லை. குறிப்பாக இறைஉவப்பை மட்டுமே நாடும் நல்லோர் தம்மை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. 


கடைசியாக ஒரு வார்த்தை, இன்று நூறாண்டுகளைக் கடந்து உயர்ந்தோங்கி நிற்கும் சிலபல மத்ரஸாக்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் மாசற்ற மனங்கொண்டோரால் தோற்றுவிக்கப்பட்டவையாகும். ஆகவேதான் இன்று வரை அவை நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மாணவர்கள் சேர்ந்து பயின்றுகொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் தொடங்குகின்ற எதுவானாலும் அது மாசற்ற மனத்தோடு இறைஉவப்பை நாடியே இருக்க வேண்டும். அதுதான் இறுதி வரை நிலைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம். 

==============

திங்கள், 10 மார்ச், 2025

‘சிற்பிகளைச் செதுக்கிய வைரங்கள்’ நூல் வெளிவந்துவிட்டது

 


-------------------------------------

அன்புச் சகோதரர் மௌலவி எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி தம் ஆசிரியர்கள் குறித்து எழுதிய நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூல் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒவ்வொருவரும் இந்நூலைப் படித்தபின், தம் ஆசிரியரை எவ்வாறு கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதையும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் இந்நூலிலிருந்து கற்றுக்கொள்ளலாம். என்னைக் குறித்தும் ஒரு செய்தி இந்நூலினுள் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே.

 

நூல் விவரம்:

நூல்: சிற்பிகளைச் செதுக்கிய வைரங்கள்

நூலாசிரியர்: மௌலவி எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி

பக்கங்கள்: 260

விலை: ரூ. 250/-

தொடர்புக்கு: 97890 95748, 82483 94817

------------------------------------------------------------------------

நான் இந்நூலுக்கு எழுதிய அணிந்துரை உங்கள் பார்வைக்கு... 

=================================================

அணிந்துரை

ஆசிரியரை மதிப்போம்

முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை 

பொறுப்பாசிரியர் இனிய திசைகள் மாத இதழ்

 

எழுதுகோலால் எழுத்தைக் கற்பித்த ஏக இறைவனுக்கே எல்லாப் புகழும்! ஏகனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்கள்தம் குடும்பத்தார், தோழர்கள் அனைவர்மீதும் ஏகனின் அருளும் அன்பும் கருணையும் உண்டாவதாக!

 

அன்புச் சகோதரர் எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி, தாம் தொகுத்துள்ள “சிற்பிகளைச் செதுக்கிய வைரங்கள்” எனும் நூலை என்னிடம் கொடுத்து அணிந்துரை தருமாறு கேட்டுக்கொண்டார். நூலைத் திறந்து ஒவ்வொரு பக்கமாகப் படித்துப் பார்த்தேன். அவர் புலனக் குழுவில் (வாட்ஸ்அப்) எழுதியிருந்தபோதே நான் அந்த ஆக்கங்களைப் படித்துள்ளேன்.

 

நான் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப் பல்கலைக் கழகத்தில் பட்ட வகுப்பு இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து இவரோடு பழக்கமுண்டு. இவருடைய ஆசிரியர்களாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலோர் எனக்கும் ஆசிரியர்களே ஆவர். அந்த வகையில் இவர் புகழ்ந்து போற்றும் ஆசிரியர்களை நானும் புகழ்வதாகவே உணர்கிறேன்.

 

படித்துக்கொடுக்கின்ற ஆசிரியருக்கும் படிக்கின்ற புத்தகத்திற்கும் மரியாதை கொடு” என்று நான் என்னுடைய மாணவர்களுக்குச் சொல்வதுண்டு. படித்துக்கொடுக்கின்ற ஆசிரியரை உரிய முறையில் மதித்தால்தான் அவர் கற்பிக்கின்ற பாடத்தின்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். மரியாதை இல்லையேல் அவர் கற்பிக்கின்ற பாடத்தில் ஆர்வம் ஏற்படாது. அதனால் இழப்பு அந்த மாணவருக்குத்தான். எனவேதான் ஆசிரியரை மதி என்பேன்.

 

அந்த வகையில் இந்நூலைத் தொகுத்துள்ள சகோதரர் எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி, தம் ஆசிரியர்கள்மீது  எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை இந்நூலை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்வார்.  அந்த அளவிற்கு உயரிய மதிப்பும் மரியாதையும் இருப்பதால்தான், அவர்கள் தம் பாடவேளைகளில் சொன்ன ஒவ்வொரு தகவலையும் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் நினைவில் கொண்டுவந்து அவரால் எழுத முடிந்துள்ளது.

 

இவர் பதிவுசெய்துள்ள குறிப்புகளும் தகவல்களும் அந்த ஆசிரியர்களிடம் பயின்ற பிற மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவல்லவை. நம்மால் எழுத இயலாததை இவர் எழுதியுள்ளாரே என்றெண்ணி மகிழ்ச்சியடைவார்கள். மேலும் இவை தற்போது பயின்று வருகின்ற மாணவர்களின் சிந்தனைக்குரியவை; நாமும் நம் ஆசிரியர்களிடம் எவ்வாறெல்லாம் பயில வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தவல்லவை.

 

இந்நூலினுள் பதிவு செய்யப்பட்டுள்ள ‘சிப்பிக்குள் முத்து’ எனும் ஆக்கம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் நான் அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத்தில் காலடி வைத்த தருணத்தில், தன்னந்தனியாகவே உள்ளே நுழைந்தேன். அங்கு என்னைச் சேர்த்துவிட என்னுடன் யாரும் இல்லை. “என்னப்பா! தனியா வந்திருக்க? போய், உன் அத்தாவ கூட்டிட்டு வா” என்று கல்லூரி முதல்வர் பீ.எஸ்.பீ. ஹள்ரத் அவர்கள் கூற, அருகிலிருந்த ஹெச். கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேர்த்துக்கங்க ஹஸ்ரத். இன் ஷாஅல்லாஹ் நல்லா வருவான்” என்று கூறி, பரிந்துரை செய்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.

 

நான் பாக்கியாத்தில் பயின்ற காலத்திலேயே எழுத்துப் பணியைத் தொடங்கி, சில மாத இதழ்களுக்குக் கட்டுரை எழுதி அனுப்பி வந்தேன். அவற்றுள் ஓர் இதழ்தான் அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய மாத இதழ். அதில் ‘கணவனும் மனைவியும்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுதிவந்தேன். அந்தத் தொடர் கட்டுரையைப் படித்த ஒரு வாசகி, என் கட்டுரையைப் பாராட்டி எழுதியிருந்தார். அதைப் படித்த என் ஆசிரியத் தந்தை கமாலுத்தீன் ஹள்ரத் அவர்கள், இந்நூலாசிரியரிடம் அதைக் காட்டிப் படிக்கச் சொல்லியுள்ளார்கள். அப்போது ஹள்ரத் அவர்கள் என்னைப் பாராட்டிப் பேசியதை இந்நூலில் பதிவு செய்துள்ளார். அதைப் படித்தபோது, என் ஆசிரியர் மனம் மகிழும் விதத்தில் நான் வளர்ந்து வந்ததை எண்ணி, மகிழ்ந்துகொண்டேன். மேலும் அதையே என் ஆசிரியருக்குச் செய்த கைம்மாறாகக் கருதிக்கொண்டேன்.

 

இந்நூலைப் படிக்கின்ற யாராயினும், தம்முடைய ஆசிரியரோடு அவருக்கு இருந்த தொடர்பும் நெருக்கமும் புரிய வரும். அதை அவர் எழுத்து வடிவில் சொல்லாதவராக இருக்கலாம். ஆனால் அவர் மனத்தில் அவர்தம் ஆசிரியரின் நினைவு எழவே செய்யும். அதன்படி எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றை மலரும் நினைவுகளாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

 

 அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் இறுதியாண்டு புகாரீ வகுப்பறையில் ஒரு நாள் நடந்த நிகழ்விது. ஆசிரியர் மர்ஹூம்  மௌலானா ஹெச். கமாலுத்தீன் பாகவி அவர்கள், ஹதீஸ் பாடம் நடத்துகின்றபோது மாணவர்களின் புரிதலுக்காக, உலக நடைமுறை விஷயங்களையும் உதாரணமாகக் கூறுவது வழக்கம். அதுபோன்று ஒரு நாள், “ஒருவர் மரணித்தபின் மூன்று அவனைப் பின்தொடர்கின்றன. இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டும் அவனோடு இருந்துவிடுகிறது. அவனது சொத்து, குடும்பம், நல்லறங்கள்.....:: எனும் நபிமொழியை நடத்தினார்கள்.

 

அப்போது திடீரென அவர்களது சிந்தனையில் ஒரு கவிஞனின் கவிதை அரைகுறையாக நினைவில் வர, மாணவர்களைப் பார்த்து அதைப் பாடச் சொன்னார்கள். உடனே மாணவர்கள் நான்கைந்து பேர் ஒரேநேரத்தில் அக்கவிதையைப் பாடினார்கள்.

 

ஏய், ஏய், நிறுத்து, நிறுத்து. ஒருத்தன் பாடு” என்று கூற, நான்தான் அக்கவிதை வரிகளைப் பாடினேன். 

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?


இக்கவிதை வரிகளைக் கேட்டபின், “அக்கவிஞனுக்கு மட்டும் இந்த ஹதீஸ் தெரிந்திருந்தால் இப்படிப் பாடியிருக்க மாட்டான். கடைசி வரை வரப்போவது அவனுடைய நல் அமல்கள்தானே?” என்றார்கள்.

 

நான் மூன்றாம் ஆண்டு பாக்கியாத்தில் ஓதிக்கொண்டிருந்தபோது அந்நஃபாயிஸுல் இர்தளிய்யா எனும் நூலை மர்ஹூம் மௌலானா முஹம்மது இல்யாஸ் பாகவி அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இலக்கண, இலக்கிய விதிகளைத் தம்மால் இயன்ற வரை மாணவர்களுக்குப் புரிய வைப்பதில் மிகுந்த அக்கறை  எடுத்துக்கொள்வார்கள்.

 

 தஷ்பீஹ் (உவமானம், உவமேயம்) குறித்த பாடத்தில் இஸ்த்திஆரா தக்யீலிய்யா (கற்பனையை இரவல் வாங்குதல்) என்று ஒரு வகை உண்டு. அதாவது இதில் தனித்தனிப் பொருள்களைக் காண முடியும். அவை ஒன்றிணைந்த ஓர் உருவத்தைக் காணமுடியாது.

 

"எத்தனையோ தாயத்துகள் போட்டும் எதுவும் பயனளிக்கவில்லை. (எல்லாவற்றையும் தாண்டி) மரணம் தன் கோரநகத்தைப் பதித்துவிட்டது" எனும் கவிஞரின் கற்பனை வரிகளைச் சான்றாகக் காட்டியிருப்பார் நூலாசிரியர்.

 

1. மரணித்தவரைக் காணலாம். 2. வனவிலங்கின் கோர நகத்தையும் காணலாம். ஆனால் மரணத்தையே ஒரு வனவிலங்காகக் கற்பனை செய்துள்ளார் கவிஞர். அதைக் காண முடியாது.

 

இதை முதல் நாள் நடத்திவிட்டு, மறுநாள் வகுப்பறைக்கு வந்து, நேற்று நடத்திய பாடம் புரிந்ததா? என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அதை விளக்கிக்கூறத் தொடங்கினார்கள்.

 

அப்போது அவர்கள் செல்லும் வழியில் எங்கிருந்தோ காதில் விழுந்த கவிதை வரி ஒன்றை மேற்கோள் காட்டி அப்பாடத்தை விளக்கிக் கூறினார்கள். அக்கவிதை வரி இதுதான்.

 

ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்...’ இதில் ரெக்கையைப் பார்க்கலாம். சைக்கிளையும் பார்க்கலாம். ஆனால் ரெக்கை முளைத்த சைக்கிளைப் பார்க்க முடியாது. இதுதான் இஸ்த்திஆரா தஃக்யீலிய்யா என்று கூறி விளக்கினார்கள்.

 

ஆக, பாக்கியாத்தின் ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களுக்குப் பாடத்தைப் புரிய வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் அக்கறைகளும் இன்றும் என் மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளதை இங்கு பதிவுசெய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

 

இன்னும் பற்பல ஆசிரியர்கள் சொன்ன அரிய கருத்துகளும் அவர்கள் குறித்த நினைவுகளும் நம் நினைவகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. ஆக ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செலுத்துவதும், மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி ஆசிரியர்கள் மனமுவந்து துஆ செய்வதும் கல்விப் பரவல் சீராக நடைபெறுவதற்கு வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வதும் ஊக்கப்படுத்துவதும் தொடர்ந்து தொய்வின்றிக் கல்விப்பணியாற்ற பக்கபலமாக அமையும் என்பது திண்ணம்.

 

அந்த வகையில் சகோதரர் எம்.ஒய். அப்துர் ரஹ்மான் பாகவி தொகுத்துள்ள இந்நூல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரியது. இவர் இன்னும் பற்பல நூல்களை இச்சமுதாயத்திற்கு வழங்கிட வாழ்த்துகிறேன்; இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்தனை செய்கிறேன். ஏக இறைவன் அல்லாஹ் எல்லோருக்கும் பயனுள்ள நூலாக இதை ஆக்குவானாக.

  

அன்புடன்

முனைவர் மௌலவி

நூ. அப்துல் ஹாதி பாகவி

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அழைப்புப் பணியில் பேச்சாற்றல் - எழுத்தாற்றலின் பங்கு!

 



-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

(பொறுப்பாசிரியர், இனிய திசைகள் மாதஇதழ்,

இமாம், மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம், சென்னை-28)


பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டும் இரண்டு கண்களைப் போன்றவை. இரண்டையும் கற்றுக்கொள்வதும் இரண்டிலும் பயிற்சி பெறுவதும் மிகவும் அவசியமாகும். இவ்விரண்டும் ஒரு கல்வியாளர் தம் கல்வியை மக்களுக்குத் எடுத்துச் சொல்ல உதவும் ஊடகங்கள் ஆகும்.  ஆகவே கற்கும் காலத்திலேயே ஒவ்வொரு மாணவரும் இந்த இரண்டு ஆற்றல்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கவனக் குறைவாக இருந்துவிட்டு, பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. அதனால்தான் “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்” என்று பாடி வைத்தார்கள். 


இன்றைய பெரும்பாலான அறிஞர்களின் கல்வி அவர்களுக்குள்ளேயே முடங்கிவிடுகிறது என்பதே உண்மை. அதேநேரத்தில் பேச்சாற்றல் மட்டும் உள்ளோர், தாம் கற்ற கல்வியைத் தம் பேச்சின் மூலம்  மக்களுக்குச் சேர்த்துவிடுகின்றனர். அத்தோடு எழுத்தாற்றலும் இருந்தால், அவர்கள்தாம் தம் கல்வியை  எழுத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு என்றென்றும் பயனுள்ளதாக ஆக்க முடியும். அத்தகைய எழுத்தாளர்களின் உழைப்பைத்தான் இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.


எழுத்தின்மூலம் நாம் பதிவு செய்கின்ற நற்கருத்துகள் நூல்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவை எதிர்காலச் சமுதாயத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி. கடந்த காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள்  பதிவு செய்தவற்றைத்தான் இன்று நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். திருக்குர்ஆனின் விரிவுரைகள்,  நபிமொழித் திரட்டுகள், இஸ்லாமியச் சட்டவியல் (ஃபிக்ஹு) சார்ந்த நூல்கள், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட அனைத்தும் நமக்குக் கிடைத்துள்ளனவென்றால் அது அவர்களுடைய எழுத்தின் பயனே ஆகும். 


இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்ற அழைப்புப் பணியில் இரண்டு ஆற்றல்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. முதன்முதலாகப் பேச்சாற்றல்தான் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் அந்தந்த மொழிபேசும் இறைத்தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அதனால் ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தமது தாய்மொழியில் பேசி, மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி அழைத்தனர் என்பது திருக்குர்ஆன் கூறும் வரலாறு. அல்லாஹ் கூறுகின்றான்: “எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியை உடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.”     (அல்குர்ஆன்: 14: 4)

 

அந்த வகையில் நம்முடைய இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அரபிமொழியில் சிறப்பாகப் பேசுகின்ற ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தான். அவர்களின் இலக்கிய நயமிக்க பேச்சால் பலர் ஈர்க்கப்பட்டனர். “பேச்சுக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது” என்ற நபிமொழியே அதற்குச் சான்றாக உள்ளது. மேலும் அல்லாஹ் தன் தூதருக்கு அழகிய இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றலை வழங்கியிருந்ததாலேயே அந்தத் தூதர் அரபியக் கவிஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்க்கவும் அழைக்கவும் இயன்றது.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் மத்தியில் அவ்வப்போது ஆற்றிய சின்னச்சின்னச் சொற்பொழிவுகளும் வழங்கிய அறிவுரைகளும் மக்கள் மனங்களைப் பண்படுத்தின;  தாமும் அவ்வாறே வாழவேண்டும் என்ற வேட்கையை விதைத்தன. அவர்களின் உரை அனைவருக்கும் ஓர் உற்சாகப் பானமாக இருந்தது. புதிது புதிதாகப் பலர் இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வந்தனர். 


நபியவர்களுக்குப்பின், அவர்களின் பாசறையில் பயின்ற நல்வழிபெற்ற கலீஃபாக்கள் தம் திறமைமிகு பேச்சால் மக்களை ஓரிறைக்கொள்கை நோக்கி அழைத்தார்கள். அத்தோடு தம் ஆட்சியைச் சிறப்பாக நடத்திய காரணத்தால் அதைப் பார்த்தே பலர் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அனைவரையும் சமமாக நடத்தினர். அனைவருக்கும் சமநீதி வழங்கினர் என்பது வரலாறு. 


பேச்சாளர்கள் செய்த அழைப்புப் பணி: ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சபையில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து அவர்தம் பேச்சைக் கேட்பார்கள். ஆயிரக்கணக்கானோர் அவர்தம் பேச்சால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பேச்சாளர்கள் இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி தொடங்கப்பட்ட பின் அங்கிருந்து படித்துப் பட்டம் பெற்றுச் சென்ற ஆலிம்கள் பலர் பேச்சாளர்களாக உலா வந்தார்கள். ஒவ்வோர் ஊரிலும் தங்கியிருந்து மார்க்கப் பணியாற்றினார்கள். தம் பேச்சுத் திறனால் மக்கள் மத்தியில் மார்க்கப் போதனைகளைப் போதித்தார்கள். அவர்களுள் ஷம்ஸுல் ஹுதா பாகவி, கலீல் அஹ்மத் கீரனூரி, மணிமொழி மௌலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி, டிஜேஎம். ஸலாஹுத்தீன் ரியாஜி, கலந்தர் மஸ்தான் மஹ்ழரி, முஹம்மது ஷப்பீர் அலீ பாகவி, பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் பாகவி -ரஹிமஹுமுல்லாஹ் - உள்ளிட்ட பலர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 


கடிதம்மூலம் அழைப்புப் பணி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாக இருந்தாலும், தம் பேச்சால் மக்களை ஓரிறைக் கொள்கை நோக்கி ஈர்த்ததைப்போன்று, அழைப்புப் பணிக்கு எழுத்தையும் பயன்படுத்தினார்கள். அந்த அடிப்படையில் எழுதத் தெரிந்த எழுத்தர்கள் மூலம் அண்டை நாட்டு அரசர்களுக்குக் கடிதம் எழுதி, தூதர்கள்மூலம் அழைப்பு விடுத்தார்கள். அவர்களுள் சிலர் இஸ்லாத்தை ஏற்றனர்; வேறு சிலர் மறுத்தனர். அந்த நேரத்தில் மறுத்தவர்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களால் வெற்றிகொள்ளப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு தூதராகச் சென்றார் நபித்தோழர் திஹ்யத்துல் கல்பீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:


அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.


இறை வாழ்த்துக்குப்பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக்) குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்... என்று கடிதம் தொடர்கிறது. (புகாரீ: 7) ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுத்து மூலமும் அழைப்புப்பணியை மேற்கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. 

 

அழைப்புப் பணியாளர்கள்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதற்கும் போதிப்பதற்கும் நபித்தோழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்றார்கள். கடல் கடந்து சென்றவர்களும் உண்டு. அவர்கள் ஆங்காங்கே இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக்கூறி, அதன் அறவுரைகளைப் போதித்தார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. அவர்களைத் தொடர்ந்து அந்தந்த நாடு நகரங்களில்  கற்றவர்களுக்கும் அத்தகைய உணர்வு ஏற்பட்டு, அவர்களும் அழைப்புப் பணிக்காகப் பயணம் செய்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

 

அந்த வகையில் நபியவர்களின் காலத்திலேயே அரபு வணிகர்கள் வியாபாரத்திற்காக இந்தியாவிலுள்ள கேரளாவிற்கு வருகை தந்தார்கள். அவர்களுள் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவர்மூலம்தான் அம்மாகாண அரசரான சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா (Cheraman Perumal) என்பவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றார். இவரே இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும், தமிழரும் ஆவார். அவர் இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்துக் கேள்விப்பட்டு, மக்கா சென்று நேரடியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார். திரும்பி வரும் வழியில்  அவர் மரணத்தைத் தழுவுகிறார். அவரின் கட்டளைப்படியே கேரள மாநிலம் கொடுங்கலூரில் மாலிக் பின் தீனார் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. அது இன்று ‘சேரமான் பெருமாள் ஜும்ஆ மசூதி’ என்று அழைக்கப்படுகிறது. 


முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்: அழைப்புப் பணியில் முஸ்லிம்களைப் போன்றே கிறிஸ்தவர்களும் ஈடுபட்டு வந்தனர். இந்தியாவில் தற்போது முஸ்லிம்களின் அழைப்புப் பணியின் வேகம் குறைந்துவிட்டாலும் அவர்களின் அழைப்புப் பணி இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அழைப்புப் பணியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருந்தது. அதாவது அழைப்புப் பணி செய்வது முஸ்லிம்களுக்கு எளிதாகவும் கிறிஸ்தவர்களுக்குச் சிரமமானதாகவும் இருந்தது. ஏனெனில் முஸ்லிம்கள் ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக்கொடுத்து எளிதில் முஸ்லிமாக்கிவிடுவார்கள். அதன்பிறகு அரபி எழுத்துகளைக் கற்பித்து, குர்ஆனை ஓதவைத்து விடுவார்கள். 


ஆனால் கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் செய்து கிறிஸ்தவராக மாற்றியபின் அவர்களுக்குத் தம்முடைய வேதத்தைக் கற்பிப்பது மிகப்பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் அவர்களுடைய வேதம் ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இந்திய மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்களோ தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் கிறிஸ்தவத்தைப் போதிக்க ஒவ்வொரு மொழியைக் கற்க வேண்டிய நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு இருந்தது. எனவே அவர்கள் தம் வேதத்தை இங்குள்ளோருக்குக் கற்பிக்க மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால்தான் மதத்தைப் பரப்ப வந்த ஜி.யு. போப் (வீரமா முனிவர்) தமிழைக் கற்று, அதன்மூலம் திருக்குறளைப் படித்து, அதன் இலக்கிய அழகால் ஈர்க்கப்பட்டு, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.


மொழிபெயர்ப்புக் கலை: அப்பாஸிய கலீஃபா மன்சூர் (714  - 775 கி.பி.) முதல் கலீஃபா ஹாரூன் அர்ரஷீது (769 - 809 கி.பி.) காலக் கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்கம் ஆகிய மொழிகளிலிருந்து பற்பல நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன.  கி.பி. 786இல் ஹாரூன் அர்ரஷீது பதவி ஏற்றபின் அறிஞர்கள் பலரை ஒன்றுகூட்டி ‘தாருல் ஹிக்மா’ என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது  அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் ஹுனைன் பின் இஸ்ஹாக், யுஹன்னா, கஸ்தா பின் லூகா, அப்துல் மஸீஹ் பின் நயீமா, பனூ மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, ஸாபித் பின் குர்ரா, அல்கிந்தீ உள்ளிட்ட பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்களாக இருந்தனர்.


இஸ்லாம் குறித்த பல்வேறு செய்திகளையும் அறிவுக் கருவூலங்களையும் பிற நாட்டினர் தெரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு நூல்கள்தாம் உதவியாக அமைந்தன. அத்தகைய அறிவுப் புரட்சியைத்தான் மன்னர் ஹாரூன் அர்ரஷீது தொடங்கிவைத்தார். அவருக்குப்பின் அவர்தம் மகன் கலீஃபா மஃமூன் அர்ரஷீது அதனைத் தொடர்ந்தார். மேலும் பிறநாட்டு அறிவுகளும் இஸ்லாமிய நாடுகளை நோக்கி வந்தன. அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு இந்தக் கல்வியறிவெல்லாம் பரவின.    


இறைநேசர்களின் அழைப்புப் பணி: நாகூர் ஷாஹுல் ஹமீது ரஹிமஹுல்லாஹ்,  ஏர்வாடி இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ், திருச்சி நத்தர்ஷா ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் தம் அழகிய பேச்சாலும் இனிய நற்குணங்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா  ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவர்  ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்டோர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தம் கவித்திறனால் பரப்பினார்கள். ஷேக் ஸதக்கத்துல்லாஹ் அப்பா  ரஹிமஹுல்லாஹ், உமறுப்புலவருக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை உரைநடையில் சொல்ல, அதைக் கேட்டுக் கேட்டு அவர் காவியமாகப் பாடினார். அதுவே ‘சீறாப்புராணம்’ என்றழைக்கப்படுகிறது. 


பாமர மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், கேள்வி-பதில் வடிவிலும், பாடல்களாலும் இயற்றப்பெற்ற பல்வேறு நூல்கள் முஸ்லிம்கள் மத்தியில் உலா வந்தன. நூறு மசாலா, ஆயிரம் மசாலா, பக்திப் பாமாலை, நசீகத்து நாமா, தரீக்குல் ஜன்னா, பெண்புத்தி மாலை உள்ளிட்டவை பெண்கள் மத்தியில் பிரபலமாக விளங்கின. சேக் பீர்முகம்மது சாகிபு எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள் உள்ளன. மச்சரேகைச் சித்தரின் பேரின்பச் சதகம், சாம் நைனா லெப்பை ஆலிம் எழுதிய அதபுமாலை, ஆலிப்புலவர் எழுதிய மிகுராசு மாலை, திருப்பாலைக்குடி சீதக்காதிப் புலவர் எழுதிய அபூசகுமா மாலை, செய்யது அனபிய்யா புலவர் எழுதிய நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், அபீபு முகமது லெப்பை எழுதிய மக்காக் கலம்பகம் முதலான நூல்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் இஸ்லாமியக் கொள்கையையும், நன்னெறிகளையும், வரலாறுகளையும் தெரிந்துகொள்ளப் பேருதவியாக இருந்தன. முன்னோர்களின் காலம் முடிந்தபோதே அவர்களோடு அந்த நூல்களின் ஞானமும் முடிவுக்கு வந்தது.


 திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு: ஆயிரம் ஆண்டுகளாகத் தேவைப்பட்ட ஒரு நூலான திருக்குர்ஆன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1949ஆம் ஆண்டு முதன்முதலாக வெளிவந்தது. கண்ணியத்திற்குரிய மௌலவி ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அதனை மொழிபெயர்த்தார். அதன்பின்னர்தான் தமிழ் முஸ்லிம்கள் திருக்குர்ஆனைப் படித்து, அதன் பொருளை அறிந்துகொள்ளத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றமும் முன்னேற்றமும் காணப்பட்டன. 


நபிமொழித் தொகுப்பு தமிழாக்கம்: திருக்குர்ஆன் தமிழாக்கம் வெளிவந்து, நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, 1994ஆம் ஆண்டு ரஹ்மத் பதிப்பகத்தின்மூலம் ஸஹீஹுல் புகாரீ  தமிழாக்கம் வெளியிடப்பட்டு, அது தமிழ்நாட்டைத் தாண்டி, தமிழ்பேசும் மக்கள் வாழும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபை, குவைத் முதலான நாடுகளுக்கும் பரவியது. அதுவரை நபிமொழிக் கலை குறித்து மக்கள் மத்தியில் அவ்வளவாக விழிப்புணர்வு இல்லாதிருந்தது. அதன்பிறகுதான் நபிமொழிகள் குறித்த புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட்டது. புகாரீ தமிழாக்கத்தைத் தொடர்ந்து முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதீ, சுனன் அபூதாவூத், சுனனுந் நஸாயீ, சுனன் இப்னுமாஜா ஆகிய ஆறு (ஸிஹாஹ் ஸித்தா) நூல்கள் வெளிவந்தன. நபிமொழிக் கலை குறித்த தெளிவு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மிகப்பெரும் காரணமாக அமைந்தன. 


பின்னர் அந்த நிறுவனமே திருக்குர்ஆன் விரிவுரை நூலான தஃப்ஸீர் இப்னுகஸீர் தமிழாக்கத்தை வெளியிட்டது. பிறகு ஆயிஷா பதிப்பகம் என்றொரு நிறுவனம் இப்னுகஸீர் ரஹிமஹுல்லாஹ் எழுதிய ‘அல்பிதாயா வந்நிஹாயா’ (தொடக்கமும் முடிவும்) எனும் இஸ்லாமிய வரலாற்று நூலைத் தமிழில் வெளியிடத்தொடங்கியது. அடுத்தடுத்த நிறுவனங்கள் தோன்றி, தாமும் சமுதாய நன்மைக்காக ஏதாவது ஒரு வகையில் உழைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வெவ்வேறு நபிமொழித் தொகுப்பு நூல்களை வெளியிடத் தொடங்கின. ஆக இன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் சென்னையில் அமைந்துள்ளன. அவை இச்சமுதாய மக்களுக்கான நூல்கள் தேவையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன.


இவ்வாறு எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் இஸ்லாமிய மார்க்கம் மக்கள் மத்தியில் பரவத் தம்மால் இயன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் மட்டுமல்லாது தற்காலத்திலும் இம்மார்க்கத்திற்காக உழைப்பவர்களை அல்லாஹ் இப்புவியில் தோன்றச் செய்துகொண்டே இருக்கின்றான் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே நாமும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிற சமுதாய மக்கள் மத்தியில் பரவச் செய்வதற்கு நமது பேச்சாலும் எழுத்தாலும் நம்மால் இயன்றதைச் செய்ய முனைவோம். வல்லோன் அல்லாஹ் அதற்கான நல்வாய்ப்பை நமக்கு நல்குவானாக. 

==============================0

 


திங்கள், 24 பிப்ரவரி, 2025

எழுதித் தீராக் கட்டளைகள்

    

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28

 

   

படைத்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீங்கள் கூறுங்கள்: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் (கட்டளை) வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் மை அனைத்தும் தீர்ந்துவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்டபோதிலும்கூட! (16: 109)

 

 

மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: பூமியிலுள்ள மரங்கள் (செடிகள்) அனைத்தும் எழுதுகோல்களாகவும், கடல் நீரை மையாகவும் வைத்து (அது தீர்ந்து) பின்னும் ஏழு கடல் நீரையும் மையாக வைத்(து எழுதி முடித்)த போதிலும் அல்லாஹ்வுடைய (கட்டளை) வாக்கியங்கள் (எழுதி) முடிவு பெறா. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (31: 27)

 

 

இந்த வசனங்களைச் சிந்தித்தவாறே என்னுடைய கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். கணினித் தட்டச்சு விசைப்பலகையில் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு விசை (ரிமீஹ்) யைத் தட்ட வேண்டும். பல எழுத்துகளுக்கு இரண்டு தடவையும் வேறு பல எழுத்துகளுக்கு மூன்று தடவையும் அந்த விசையைத் தட்ட வேண்டியுள்ளது.  இடையிடையே அழித்தல் விசையையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. முற்றுப்புள்ளிக்குத் தனியே ஒரு விசையை அழுத்த வேண்டியிருந்தது. அதிலுள்ள ஒவ்வொரு விசையும் ஒரு கட்டளையாகும். நாம் இடுகின்ற கட்டளைக்கேற்பவே அந்தத் தட்டச்சு எழுத்துகள் பதிவாகின்றன. நூறு பக்கங்கள் கொண்ட ஒரு நூலைத் தட்டச்சு செய்து முடிக்க எத்தனைக் கட்டளைகளை நாம் இட வேண்டும்? அதாவது எத்தனைத் தடவை அந்த விசைப்பலகையின் விசையை நாம் தட்ட வேண்டும்? இதனைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றை எழுத்துகளால் பதிவு செய்ய முடியாத அளவிற்கு எண்ணற்ற கட்டளைகள் உள்ளன என்பதை நாம் உணரலாம்.

 

 

ஒரு நூலைத் தட்டச்சு செய்ய இத்தனைக் கட்டளைகள் தேவைப்படுகிறதென்றால், இந்தப் பிரபஞ்சத்தை வழிநடத்த எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்று சிந்திக்கும்போது பெரும் வியப்பாக இருந்தது.  அப்போதுதான் மேற்கண்ட வசனங்களின் பொருள் புரிந்தது. புவியின் மரங்களையெல்லாம் எழுதுகோல்களாக்கிஏழு கடல் நீரையும் மையாக்கி எழுதினாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை எழுதி முடித்துவிட முடியாது என்பதைத் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ள முடிந்தது.

 

 

இவ்வுலகில் எத்தனையோ மரங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எத்தனையெத்தனை இலைகள் உள்ளன. அவை முளைப்பதும் வளர்ச்சியடைவதும் பின்னர் முதிர்ச்சியடைவதும், பிறகு அவை பழுத்துக் கீழே விழுவதும் இறைவனின் கட்டளையின்றி நடைபெறுவதில்லை. அப்படியானால் எண்ணற்ற மரங்களின் எண்ணிறந்த இலைகள் முளைப்பதற்கும், பசுமையாவதற்கும், முதிர்ச்சியடைந்து உலர்வதற்கும், பழுத்துக் கீழே விழுவதற்கும் எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்பதை நாம் சிந்தித்தால் எழுதித் தீராக் கட்டளைகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ளலாம். அது குறித்துப் பின்வரும் இறைவசனம் பேசுகிறது:

 

  

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (6: 59)

 

 

உதிர்ந்துவிழும் இலைகளும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே செயல்படுகின்றன என்றால், முதிர்ந்துவரும் பயிர்களுக்குக் கட்டளைகள் இல்லாமல் போய்விடுமா? ஒவ்வொரு நாட்டிலும் கோடிக்கணக்கான டன்கள் அளவிற்கு விளையும் நெற்பயிர்கள், கோதுமைப் பயிர்கள் உள்ளிட்ட எத்தனையெத்தனைத் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் இப்புவியில் விளைகின்றன. அவையெல்லாம் தாமாகவே விளைந்துவிடுவதில்லை. எல்லாம் அல்லாஹ்வின் கட்டளைப்படியே விளைகின்றன. அவன் நாடிய நெல்மணியை ஏழு முதல் எழுநூறு மடங்கு வரை முளைக்கச் செய்வான்; அவன் நாடியவற்றைப் பதர்களாக ஆக்கிவிடுவான். எல்லாமே அவனுடைய கட்டளைகளுக்குப் பணிகின்றன; எல்லாம் அவனது கட்டளைப்படியே இயங்குகின்றன.

 

 

இப்புவியில் எத்தனையெத்தனை மரங்களும் செடிகளும் உள்ளன. அவற்றில் எத்தனையோ பூக்கள் பூக்கின்றன. அவை இறைவனின் கட்டளைப்படியே மலர்கின்றன. அவனுடைய கட்டளையில்லாதவை மலர்வதில்லை. பூப்பூத்து, காயாகி, பின்னர் கனியாகும் மரங்கள் ஏராளம் உள்ளன. அவனுடைய கட்டளை உள்ளவை மட்டுமே காய்க்கின்றன. அவனுடைய கட்டளை உள்ளவை மட்டுமே கனிகின்றன. அவனுடைய கட்டளை இல்லாதவை  பூவாகவே மடிந்துபோய்விடுகின்றன. இப்படிச் சிந்திக்கின்றபோது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுவதோடு  அவனுடைய வசனத்திற்கான பொருளும் புரியும்.

 

 

இப்புவியின் நிலப்பரப்பைவிட நீர்ப்பரப்பு நீளமானது. நிலப்பரப்பின் கட்டளைகளே எண்ணற்றவை எனும்போது  நீர்ப்பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு எத்தனையெத்தனைக் கட்டளைகள் இடப்பட வேண்டும் என்பதைச் சிந்தித்தால் சிந்தை அயர்ச்சியாகிவிடும். அதில் வாழும் ஒவ்வொரு மீனின் வாழ்நாள்களும் அது மீனவனின் வலையில் பிடிபடும் காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒன்று மற்றொன்றிற்கு இரையாவதும், தன்னைவிடப் பெரிதுக்கு இரையாவதும் உண்டு. எதுவும் இறைவனின் பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

 

 

ஆழிக்குள் அலைந்து திரியும் எண்ணற்ற வகை மீன்களோடு மனிதன் சாப்பிடுகிற, சாப்பிடக்கூடாத கோடானு கோடி உயிரினங்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் எந்தெந்த நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும் என்பதும், அவை மனிதன் வீசுகிற வலையில் சிக்குதல், அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துத் தம் சந்ததிகளைப் பெருக்குதல் உள்ளிட்ட அத்தனையும் இறைவனின் கட்டளைப்படியே நடைபெறுகின்றன. ஆக அத்தனை உயிரினங்களுக்குமான கட்டளைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், அத்தனையும் எழுதித் தீராக் கட்டளைகள் என்பதை நாம் உய்த்துணர்ந்துகொள்ளலாம். 

 

 

உலகில் உலா வருகின்ற தேனீக்களைக் கவனித்தீர்களா? கோடானு கோடித் தேனீக்கள் உள்ளன. அவை  ஒன்றிணைந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றன. ஒரு கூட்டில் ஒரு படி தேனைச் சேமிக்க அவை எத்தனையெத்தனை மலர்களை நாடிச் செல்கின்றன. ஒவ்வொரு மலராகப் பறந்து சென்று, அதன்மீது சில முறை வட்டமிட்டு, அதன் நுண்ணுணர்வுகளைத் தூண்டியபின் அதிலுள்ள தேனை உறிஞ்சி உட்கொண்டு, அதைத் தேனாகக் கக்கி, கூட்டில் சேர்க்கிறது. தேனீயின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் கட்டளை உள்ளது. அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் பேசுகின்றான்:

 

 

உங்கள் இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். மேலும் "நீ ஒவ்வொரு பூவிலிருந்தும் புசித்து, உன் இறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு.  (16: 68-69)

 

 

மனித உடல் இறைவனின் ஓர் அற்புதமான படைப்பு. அது கோடானு கோடி செல்களால் ஆனது. பிறந்தது முதல் 21 வயது வரை வளர்ச்சியடைந்துகொண்டே செல்கிறான். அதன்பின் ஒவ்வொரு பருவத்திலும் வளர்சிதை மாற்றம் அவனுள் நிகழ்கிறது. அதாவது அவனுடைய பழைய செல்கள் இறந்துபோகின்றன; அவ்விடத்தில் புதிய செல்கள் பிறக்கின்றன. இவ்வாறு அவனது உடலில் பழைய செல்கள் இறப்பதும் புதிய செல்கள் தோன்றுவதும் தொடர்கின்றன. அதனால்தான் அவன் ஒவ்வொரு பருவத்திலும் மாற்றங்களைக் காண்கின்றான். ஆக அல்லாஹ் உயிர்கொடுத்தல், மரணிக்கச் செய்தல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றான். ஒரு மனித உடலுக்கே கோடானு கோடிக் கட்டளைகள் எனும்போது கோடானு கோடி மனிதர்களுக்கு எத்தனையெத்தனைக் கட்டளைகள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வியப்பு மேலிடுகிறது; சிந்தை நிலைகுலைந்து போகிறது.

 

 

மனித உடலின் வளர்ச்சிக்கு இத்தனைக் கட்டளைகள் என்றால், அவனுடைய அன்றாடச் செயல்பாடுகளுக்கு எத்தனையெத்தனை கட்டளைகள் இட வேண்டிவரும்? அவனது செயல்பாடுகள் அனைத்தும் அல்லாஹ்வின் அடக்கியாளும் ஆற்றலுக்குக்கீழ்தான் நடைபெறுகின்றன. ஒருவனின் முயற்சி வெற்றிபெறுவதும் மற்றொருவனின் முயற்சி தோல்வியில் முடிவதும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கின்றன. அவற்றிற்கெல்லாம் எத்தனையெத்தனைக் கட்டளைகள் தேவைப்படும் என்பதை எண்ணிப் பார்க்கும்போது இறைவனின் பேராற்றலை நாம் விளங்கிக்கொள்ளமுடிகிறது.

 

 

நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் அவன் கட்டளையிடுவதில்லை. நிலத்திற்குள் புதையுண்ட மனிதர்களை  எவ்வெப்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நிலத்திற்குக் கட்டளையிடுகின்றான். புதையுண்ட மனிதர்களுள் யாரைத் தின்ன வேண்டும், எவ்வளவு தின்ன வேண்டும், எதைத் தின்னக் கூடாது, யாரைத் தின்னக்கூடாது என்றெல்லாம் இறைவன் கட்டளையிட்டுக்கொண்டே இருக்கின்றான். அது உண்மைதான் என்பதை நாம் காஃப் அத்தியாயத்திலுள்ள ஒரு வசனத்தில் காணலாம். “(மரணித்த) பின் அவர்களின் தேகத்தை மண் தின்று (கொஞ்சம் கொஞ்சமாகக்) குறைத்து (அழித்து)க் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.” (50: 4)

 

 

ஆக அவன் கட்டளையிடாமல் எந்த அணுவும் அசைவதில்லை என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. எனவே மனிதன் தனக்கு நடக்கும் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. எல்லாம் இறைவனின் கட்டளைப்படியே நடைபெறுகின்றன. அவனுடைய அறிவுக்கு அப்பாற்பட்டு எதுவும் நடந்துவிடுவதில்லை. ஆகவே ஏற்படும் சின்னச் சின்ன இழப்புகள் குறித்து வருந்தத் தேவையில்லை. நமக்கு வேண்டியதை இறைவனிடம் கேட்டுக்கொண்டே இருந்தால் அவன் நிச்சயம் நமக்கான தருணம் வரும்போது தந்துவிடுவான். எனவே கேட்பதை விட்டுவிடக் கூடாது.

 

  

என் இறைவன் மறைவானவை அனைத்தையும் அறிந்தவன். அவன் அறியாது வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிடச் சிறியதோ பெரியதோ (ஒவ்வொன்றும் "லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை” (34: 3) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

 

 

ஆகவே அவனுடைய கட்டளையின்றி, அவனுடைய ஞானமின்றி இங்கு எதுவும் அசைந்திட முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நம் அனைவருக்கும் அவன் தருவானாக.

====================