செவ்வாய், 22 ஜூலை, 2025

கவனக்குறைவு தவிர்ப்போம்!

 

    

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

நம்முள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பில் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பைச் செவ்வனே செய்துவிட்டால் நம்மால் யாருக்கும் எந்தச் சிரமமும் இருக்காது. நம்முள் சிலர் தமது பொறுப்பைச் சீராக நிறைவேற்றாதபோது, அல்லது பொறுப்பில் கவனக்குறைவாக இருக்கும்போது அதனால் பிறருக்கு எவ்வளவு சிரமமும் இழப்பும் ஏற்படுகிறது என்பதை நாம் யோசிப்பதே இல்லை. அதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும் அது மனித இயல்புதானே என்று வாதிடுகிறோம். அலட்சியத்தோடும் கவனக்குறைவோடும் செயல்படும் இன்றைய இளைஞர்களாலும் இளைஞிகளாலும் விலை மதிப்பற்ற எத்தனையோ உயிர்கள் பறிபோகின்றன. அல்லது அவர்களே தம் உயிர்களை இழக்கின்றார்கள்.

 

கவனக்குறைவோடும் அலட்சியத்தோடும் கட்டப்படும் கட்டடங்கள், மேம்பாலங்கள் திறந்துவைக்கப்பட்ட சில நாள்களிலேயே இடிந்து விழுகின்றன. அதனால் பற்பல உயிர்கள் பலியாகின்றன. வாகனங்களை உரிய முறையில் பராமரிக்காததால் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. ஓட்டுநர் மட்டுமின்றி, அதில் பயணம் செய்வோரும், எதிர்வரும் வாகனங்களில் உள்ளோரும் மரணத்தைத் தழுவுகின்றனர். கடந்த ஜூலை 8ஆம் தேதி, இரயில்வே வாயில் காப்பாளரின் (கேட் கீப்பர்) கவனக்குறைவால் பள்ளி வேன்மீது இரயில் மோதி கடலூரில் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். வாயில் காப்பாளர் உரிய நேரத்தில் இரயில் கடவுப்பாதையை மூடாததால், அந்த வேன் தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக வந்த தொடர்வண்டியால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆக ஒருவரின் கவனக்குறைவு பல உயிர்களின் இழப்புக்குக் காரணமாகிவிட்டது.

 

சாலையில் பயணிக்கின்ற இலகுரக வாகனங்கள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி, தொடரி, விமானங்கள் உள்ளிட்டவையும் விபத்துகளைச் சந்திக்கின்றன. தொடரியைப் பொருத்த வரை வெறுமனே ஓட்டுநரின் கவனக்குறைவு மட்டுமின்றி, சிக்னல் கொடுப்பவரின் அலட்சியமும் சேர்ந்துகொள்வதால்தான் விபத்து ஏற்படுகிறது.  விமானத்தைப் பொருத்த வரை அது ஒவ்வொரு தடவை புறப்படுவதற்கு முன்னும் ஏதாவது பழுது இருக்கிறதா என்று கவனிக்கப்படுகிறது. ஆனாலும் யாரோ ஒருவரின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் அடிக்கடி விபத்து  ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

 

அண்மையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங்-787-8 எனும் விமானம் குஜராத்-அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து இலண்டன் நோக்கிப் பறக்கத் தொடங்கிய இரண்டு நிமிடங்களிலேயே அங்குள்ள ஒரு விடுதியில் மோதித் தீப்பற்றி எரிந்துபோனது. அந்த விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், தரையில், விடுதியில் இருந்த 19 பேரும் என 260 பேர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். மிகுதியான பொருள்களை ஏற்றியதால்தான் அது மேலெழுந்து பறக்க முடியாமல் விடுதிக் கட்டடத்தில் மோதியது என்று காரணம் கூறுகின்றனர். அதிலுள்ள கருப்புப்பெட்டி (தகவல் பெட்டி) மூலம் செய்தி வெளிவந்தால்தான் உண்மை உலகுக்குத் தெரியும்.

 

வீடுகளில் அல்லது கடைகளில் எரிவாயு உருளைமூலம் சமைக்கின்றபோது மிகவும் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் இருப்பதால் அல்லது சமையல் அறைக்குள் கைப்பேசியைப் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுகின்றது. சிலர் எரிவாயு கடந்துசெல்லும் குழாயைக் குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதில் அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். அதன் காரணமாகவும் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்படுகிறது. இது போன்ற செய்தியை நாம் அவ்வப்போது படிக்க நேரிடுகிறது.

 

நாம் அடிக்கடி படிக்கக்கூடிய வேதனையான செய்தி என்னவெனில், சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலை வெடித்து 10 பேர் மரணம்; வெடிமருந்துத் தொழிற்சாலை வெடித்து 20 பேர் மரணம் என்பதுதான். மிக மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள் என்று தெரிந்தும் மிக அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுவதால் இத்தகைய விபத்து நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஜூலை 1ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த மேடாக் மாவட்டம் பாசமயிலாரம் என்ற இடத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவை எந்திரம் திடீரென வெடித்துச் சிதறியதில் அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். இதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு (2024) மே 11ஆம் தேதி காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அந்நேரத்தில் அங்கு யாரும் பணியில் இல்லாததால் யாருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ இல்லை. செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இது ஒரு தொடர்கதையாகவே தொடர்கிறது.

    

மேலும் அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் ஒவ்வொரு நாளும் எத்தனையெத்தனை விபத்துகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சரியான முறையில் ஆய்வு செய்யாமல்  பன்னடுக்குக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிவிடுகின்றனர். அவற்றுள் சில கட்டடங்கள் கட்டும்போதே இடிந்துவிழுந்துவிடுகின்றன. கடந்த காலங்களில் நாம் அது போன்று சில விபத்துகளைக் கண்டிருக்கிறோம். அதனால் பற்பல மனித உயிர்கள் பறிபோய்விட்டன; பறிபோகின்றன. சாலைகளைச் சரியாகப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகளின் கவனக்குறைவாலும் மெத்தனப்போக்காலும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்வோர் தவறி விழுந்து எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. 

 

பெரிய பெரிய கட்டட உதிரிப் பாகங்களைக் கிரேன் மூலம் தூக்கும் பணியை மேற்கொள்வோர் மிகுந்த கவனத்தோடும் அக்கறையோடும் செயல்பட வேண்டும். ஆனால் கிரேனை இயக்குபவர்களின் கவனக் குறைவால்  அதில் சங்கிலிகளை இணைக்கக்கூடியோரின் மெத்தனப்போக்கால் எத்தனையோ விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் சென்னை-இராமாவரம் பகுதி மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட விபத்து இதற்கொரு சான்றாகும். கடந்த ஜூன் 12ஆம் தேதி மெட்ரோ பணியின்போது 100 டன் எடைகொண்ட கான்கிரீட் தண்டவாளம் இரண்டு மேலிருந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று ஆங்காங்கே நடைபெறுகின்ற எத்தனையோ விபத்துகள் செய்திகளில் வருவதில்லை.  

 

தற்காலத்தில் மிகுதியான விபத்துகள் செல்போன்களால் நிகழ்கின்றன. செல்போன் தொலைவில் உள்ளவரை எளிதில் தொடர்புகொண்டு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்கு என்ற நிலை மாறி, எல்லாச் செயல்பாடுகளும் செல்போனில்தான் நடைபெறுகின்றன. செல்பேசியின்றி எந்தச் செயலும் இல்லை எனும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். சாப்பாடு ஆர்டர் செய்யவும் செல்போன்தான்; ஆட்டோ தேவையென்றாலும் செல்போன்தான்.  இருப்பினும் சாலையைக் கடக்கும்போதும் இரயில்வே தண்டவாளங்களைக் கடக்கும்போதும் அதில் கவனம் செலுத்தாமல் பேசுவதிலேயே கவனத்தைக் குவிப்பதால், வாகனங்கள்மூலமும், தொடர்வண்டி மூலமும் விபத்துகள் ஏற்பட்டவண்ணமாகவே உள்ளன. அதனால் பற்பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

 

அதுபோலவே செல்போனில் மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்றும்போது பேசக்கூடாது என்று எத்தனை தடவை சொன்னாலும் கேட்பதில்லை. மின்னூட்டம் ஏற்றும்போதே பேசுவதால் அது வெடித்து விபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆங்காங்கே உயிரிழப்பு ஏற்படுகிறது. நடந்து செல்லும்போது செல்போனில் பேசாவிட்டாலும், பாடல்களைக் கேட்டுக்கொண்டே செல்வதால், வாகனங்களின் எச்சரிக்கை ஒலியைக் கேட்க முடியாமல் இளைஞர்கள்-இளைஞிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

 

தாய்-தந்தையரின் கவனக்குறைவால் எத்தனையோ குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மாடிப் படிக்கட்டுகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் குழந்தைகளைத் தனியே விட்டுவிடும் பெற்றோரால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. மேலிருந்து உருண்டு கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துவிடுகின்றார்கள்.  தற்காலத்தில் பெரு நகரங்களில் ஆங்காங்கே உள்ள பேரங்காடிகளில் (மால்கள்) நகரும் படிக்கட்டுகள் உள்ளன.  அவற்றில் பயணம் செய்யும்போது, பிள்ளைகளைத் தனியே விட்டுவிட்ட பெற்றோர்களால் அக்குழந்தைகள் விபத்தில் சிக்கி மாண்டுபோவதை அவ்வப்போது நாம் செய்திகளில் படிக்கிறோம்.

 

எத்தனையோ சிறுவர்கள், மாணவர்கள், தம் கவனக்குறைவால் பெரிய ஏரிகளில், குளங்களில், கடலில் குளிக்கும்போது அவற்றினுள் மூழ்கித் தம் இன்னுயிரை இழக்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி விளையாட்டுத்தனமாக அவர்கள் தம் தோழர்களோடு ஆனந்தமாகக் குளிக்கக் கடலில் அல்லது ஏரியில் குதித்து விடுகின்றனர். ‘ஆழம் அறியாமல் காலை விடாதே’ என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் நீச்சலும் தெரியாமல் அவற்றின் ஆழமும் தெரியாமல் அலட்சியப்போக்கோடு குளிப்பதால் அலையில் சிக்குண்டு அல்லது சகதியில் மாட்டிக்கொண்டு இறந்துவிட நேரிடுகிறது.

 

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்த்த எத்தனையோ தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். கழிவுநீர்த் தொட்டிகளில் உள்ள மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற விஷவாயுக்கள், தொழிலாளர்களின் சுவாசத்தைப் பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. பல்லாண்டுகளாகத் திறக்கப்படாமல் அடைபட்டிருக்கும் பாதாளச் சாக்கடைக்குள் உருவாகியுள்ள நச்சு வாயுக்கள் குறித்த அறிவின்றி, எந்தவித முன்னேற்பாடும் இன்றி, அதனுள் இறங்குவதால் அந்த நச்சு வாயுவைச் சுவாசிக்கிற தொழிலாளர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிடுகிறது. கோவையில் ஒரு நகைப்பட்டறை கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் மூவர் ஜூன் 2019இல் இறந்துபோனார்கள். 

  

இவ்வாறு எத்தனையோ செயல்பாடுகள் மனிதர்களின் கவனக்குறைவால் அன்றாடம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. அதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த கவனத்தோடும் கூர்மதியோடும் செய்வோம். நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் காத்து, விபத்துகளைத் தவிர்த்து வாழ்வோம்.

======================











கருத்துகள் இல்லை: