திங்கள், 18 ஆகஸ்ட், 2025

படித்த முதிர்கன்னிகள்

     

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கால் நூற்றாண்டுக்குமுன் இருந்ததைவிடத் தற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் கல்விசார் விழிப்புணர்வு பரவலாகவே உள்ளது. ஆண்கள்-பெண்கள் என இருசாராரும் உயர்கல்வி பயின்று உயர்வடைகிறார்கள். இளங்கலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், இளம்முனைவர், முனைவர் பட்டம் வரை பெறுகின்றார்கள். இது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது. இந்நிலை மேன்மேலும் விரிவடைய வேண்டும். ஆனால் ஒன்றைப் பெறுகின்ற அவர்கள் மற்றொன்றை இழக்கின்றார்களே என்பதை நினைத்துத்தான் நமக்குப் பெருங்கவலையாக இருக்கிறது.

 

நம் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகக் குறுகிய காலமே ஆகும். அதைத் தவற விட்டுவிட்டால் மீண்டும் அதைப் பெற முடியாது. இளைஞர்களும் இளைஞிகளும் ஒரு பக்கம் படிப்பு, படிப்பு என்று முன்னேறுகிறார்கள்; மறுபக்கம் அவர்கள் தம் இல்வாழ்க்கையைத் தொலைக்கின்றார்கள். பெண்களுக்கான திருமண வயது 18 என்று இருக்கும்போது 25 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பு, பணி என்பதிலேயே தம் இளமைக் காலத்தின் ஒரு பகுதியை இழந்துவிடுகின்றார்கள். 25 வயதில் திருமணத்திற்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கும்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பற்பல ஒப்பீடுகள் செய்வதிலேயே 27 வயதை அடைந்துவிடுகின்றார்கள்.

 

பிறகு ஒரு மாப்பிள்ளை வந்தால் வயது பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பின்னர் மற்றொருவரைக் காட்டினால் வேலை பொருத்தமாக இல்லை என்கிறார்கள். பிறகு மற்றொரு மாப்பிள்ளையைக் காட்டினால் சம்பளம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். அதாவது மணப்பெண்  ஒரு பெரும் நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருக்கிறாள். அவள் மாதந்தோறும் வாங்கும் சம்பளத்தைவிட மாப்பிள்ளையின் சம்பளம் குறைவாக உள்ளதால் அந்த மாப்பிள்ளை நிராகரிக்கப்படுகிறார். இப்படியே பொருத்தம் பார்த்து, நிராகரிப்பதிலேயே சில ஆண்டுகள் கழிந்துவிடுகின்றன. இப்போது பெண்ணின் வயது முப்பதை எட்டிவிட்டது. எனக்குத் தெரிந்து, படித்துப் பற்பல பட்டங்களை வாங்கிய பெண்கள் சிலர் 35 வயதை எட்டியும் தகுந்த மணாளர் கிடைக்காததால் இல்வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் தவிக்கின்றார்கள்.

 

பிள்ளைப்பேறு: தாமதமான திருமணத்தால் பிள்ளைப்பேறு எளிதாகக் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் சிலருக்குக் குழந்தைப்பேறு கிடைக்காமலேயே போய்விடுகின்றது. வேறு சிலர் குழந்தை பாக்கியத்திற்காகச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நாடுகின்றார்கள். அவர்களுள் சிலர் தத்தமது கணவரின் அணுக்களை ஊசிமூலம் உட்செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்கின்றார்கள். சிலருக்குக் கணவரின் அணுக்களின் வீரியம் குறைந்துவிடுவதால் அதில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் இல்லாதபோது பிற ஆடவரின் அணுக்களைக் கருப்பைக்குள் செலுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு சிலர் இஸ்லாம் தடைவிதித்துள்ள வழியில் குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் துணிந்துவிடுகின்றார்கள்.

 

மனநிம்மதியின்மை: நம் சமுதாயத்தில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதால் ஆணும் பெண்ணும் படித்து, பணிக்குச் செல்லும் நல்வாய்ப்பைப் பெறுகின்றார்கள். பல்வேறு நிபந்தனைகளுக்குப்பின் இளமை முதிர்ந்த வயதில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்த தம்பதியர் இருவரும் தம்மைப் பற்றி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, மறு வாரத்திலிருந்து தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிடுகின்றார்கள். இவ்வாறு தம்பதியர் இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அவ்விருவருமே நிம்மதியிழக்கின்றார்கள். அதை அவர்களே ஒத்துக்கொள்கின்றார்கள். சிலரின் வீடுகளில் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சென்று ஒரே நேரத்தில் வீடு திரும்புகின்றார்கள். இத்தகையோரின் வீடுகளில் சிக்கல்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் கணவன் ஒரு நேரத்திலும் மனைவி மற்றொரு நேரத்திலும் பணிக்குச் செல்லும் இல்லங்களில் இல்லறச் சிக்கல்கள் மிகுதியாக இருக்கும்.

 

ஓர் ஆண் பகலெல்லாம் பணியாற்றிவிட்டு, ஓய்வெடுப்பதற்காக வீட்டிற்கு வந்தால், அவனை வரவேற்கவோ, அன்பான வார்த்தைகளால் மனதிற்கு இதமாக அவனோடு பேசிக்கொண்டிருக்கவோ, அன்போடு இரவு உணவைப் பரிமாறவோ மனைவி இருப்பதில்லை. மாறாக அவள் சில மணி நேரங்கள் தாமதமாக வருவாள் அல்லது இரவுப் பணிக்குச் சென்றிருப்பாள். இத்தகைய பரிதாபமான சூழ்நிலையும் சிலபல வீடுகளில் இருக்கவே செய்கின்றன.

 

அல்லாஹ் திருக்குர்ஆனில், “நீங்கள் (உங்கள்) மனைவியரிடம் மனஅமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவர்களை உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் அவன் ஏற்படுத்தியிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் அடங்கும்” (30: 21) என்று கூறுகின்றான். பணிக்குச் சென்று பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாகி, மனஅமைதியைத் தேடி வீட்டிற்கு வருகிறபோது, அவனுக்கு மனநிம்மதியைத் தர அங்கு மனைவி இல்லாததால் ஆண் விரக்தியடைகின்றான்; நிம்மதியிழக்கின்றான்.

 

மனைவியைக் காக்கும் பொறுப்பு: ஓர் ஆண் தன் மனைவியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால்தான் அவன் குடும்பத் தலைவனாகிறான். அவன் உழைத்துச் சம்பாதித்து, தன் மனைவி, பிள்ளைகள், வயதான பெற்றோர் ஆகியோரைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான் உண்டு. அதனால்தான், “அப்பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு படி உயர்வு உண்டு” (2: 228) என்று அல்லாஹ் கூறுகின்றான். அதற்கான காரணத்தையும் அல்லாஹ் மற்றொரு வசனத்தில் சொல்கின்றான்: “ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனென்றால் அவர்களுள் ஒருவரைவிட மற்றொருவரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான்; மேலும் அவர்(ஆண்)கள் தம் பொருளாதாரத்திலிருந்து அவர் (பெண்)களுக்குச் செலவுசெய்கின்றார்கள் (4: 36).

 

ஆனால் தற்காலத்தில் மனைவியே சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் கணவனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவளுக்கு இல்லை. அதனால் அவனை உயர்வாக மதிக்க வேண்டிய நிலையிலிருந்து அவள் சற்றே விலகிவிடுகின்றாள். ஆகவே ஒரு பெண் தன் இல்லற வாழ்வில் சில இன்பங்களையும் மகிழ்ச்சிகளையும் இழக்கின்றாள் என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

 

பெண்கள் படித்திருப்பதால் வேலைக்குச் செல்கின்றார்கள். அதில் என்ன தவறு? என்று கேட்கலாம். அதில் தவறேதும் இல்லை. தாராளமாகச் செல்லட்டும். ஆனால் பெண்கள் தம் உடல்நிலைக்கேற்பவும் இல்லற வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கும் விதத்திலும் வேலையை அமைத்துக்கொண்டால் நலமாக இருக்குமே என்றுதான் சொல்கிறோம். பெண்கள் மட்டுமே பணியாற்றக்கூடிய இடங்களிலும், பெண்கள் மட்டுமே செம்மையாகச் செய்ய முடியும் என்பன போன்ற பணிகளையும் தேர்வு செய்துகொண்டால் அது அவர்களுக்குச் சாதகமாக அமையும். மாறாக, படித்திருப்பதால் கால்சென்டர்களிலும் இரவு நேரப் பணிகளிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஏன் வந்தது?

 

இஸ்லாம் பெண்களை இராணிகளைப் போல் வீட்டில் இருந்துகொண்டு நிம்மதியாக வாழ வழிகாட்டுகின்றது; வீட்டினுள் சுதந்திரமாக வாழச் சொல்கிறது; உழைத்துப் பொருளீட்டிக் குடும்பத்தைக் காக்கவேண்டும் என்ற பொறுப்பை-பெரும் சுமையை அவர்கள்மீது சுமத்தவில்லை. எனவே எத்தனையோ பெண்கள் தம் வீடுகளில் இராணியைப் போல் நன்றாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அதை ஏற்றுக்கொள்ளாத படித்த பெண்களே, ஊடகத்தின் வலிமையால் திணிக்கப்பட்ட கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, வீட்டைவிட்டுப் புறப்பட்டுப் பணியிடங்களுக்குச் சென்று, அங்கு இரவு பகலாக வேலைசெய்துவிட்டு, வீட்டிற்கு வந்து, அங்கும் வேலைசெய்துகொண்டு, இரட்டைச் சுமைகளைச் சுமக்கின்றார்கள். அல்லது பணிப்பெண்களை நியமித்துக்கொண்டு, தாம் தம் கணவருக்கு அன்போடு பரிமாற வேண்டிய தருணங்களை அவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிடுகின்றார்கள்.

 

பணிக்குச் சென்று கசப்பான அனுபவங்களைப் பெற்ற பெண்கள் சிலர், தம் மகன்களுக்குத் திருமணம் ஆனதும் தம் மருமகள்களைப் பணிக்குச் செல்ல வேண்டாமெனத் தடுத்து, வீட்டிலேயே தங்கி, வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்ளச் சொல்கின்றார்கள். தாம் பட்ட சிரமங்களைத் தம் மருமகள் பட வேண்டாம் என்ற நல்லெண்ணமும், தம் மகன் தன் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழட்டும் என்ற பாசச் சிந்தனையுமே அதற்கான காரணமாகும்.

 

ஆக பெண்கள் உயர்கல்வி படிப்பதும் பணிக்குச் செல்வதும் ஒரு வகையில் முன்னேற்றமாகத் தெரிந்தாலும் மற்றொரு வகையில் அதனுள் இருசாராருக்குமான இழப்பும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் அத்தகைய பெண்களுள் பெரும்பாலோரின் இல்வாழ்வில் நிம்மதியின்மையும் விரக்தியும் அடங்கியே இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

உயர்படிப்பின் காரணமாகவும் பணியின் காரணமாகவும் பெண்கள் முதிர்கன்னிகளாகக் காலத்தைக் கழித்துவிட்டுத் தாமதமாகவே இல்லற வாழ்க்கைக்குள் நுழைகின்றார்கள். அதன்பின் அதனுள் தம்மை முழுமையாக இணைத்துக்கொள்ள இயலாமல் இல்வாழ்வின் சுகத்தையும் இன்பத்தையும் இழந்து நிம்மதியற்று வாழ்கின்றார்கள் என்பதே பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களின் நிலை.

 

தீர்வு: கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் படித்துப் பட்டம்பெற்று, பணிக்குச் செல்லும் பெண்கள் தமக்குக் கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தம் படிப்போடும் பணியோடும் சம்பளத்தோடும் ஒப்பிட்டு நோக்காமல், மார்க்கப்பற்றுள்ள மணாளர் கிடைத்தால் மனத்திருப்தியோடு மணந்துகொள்ளத் தயாராவது ஒன்றே இதற்கான தீர்வாகும். மேலும் தமக்கு உகந்த பணியாக இருந்தால் மட்டும் அதை ஏற்றுக்கொண்டு பணியாற்றுவது அல்லது இயன்ற வரை இல்லத்தில் இருந்துகொண்டே பணியாற்றுவது என்ற முடிவுக்கு வருவது இல்லையேல் வீட்டுவேலைகளை மட்டும் கவனித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து தம் கணவருக்கும் மனநிம்மதியைக் கொடுப்பதெனத் தீர்மானித்துக்கொள்வதும்தான் இச்சிக்கல்களுக்கான தீர்வாகும். 

 

மேலும் பெண்கள் தம் இளங்கலைப் படிப்பை முடித்த உடனேயே அவர்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அவர்கள் விரும்பினால் திருமணத்திற்குப்பின்  மேற்படிப்பைத் தொடரலாம். பின்னர் தேவைப்பட்டால், தம்பதியர் தமக்குள் முடிவுசெய்துகொண்டு பெண்கள் பணிக்குச் செல்லலாம். அதனால் தம்பதியரிடையே சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஆக இல்லற வாழ்க்கை பாதிக்கப்படாமல் முடிவெடுத்துக்கொள்வது பெண்களின் கையில்தான் உள்ளது. படித்த பெண் பரந்த சிந்தனையோடு எடுக்கும் முடிவு தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கும்  சாதகமாக அமைவதோடு தனக்கும் எவ்விதச் சிரமமும் இல்லாத வகையில் அமைய வேண்டும். அதுவே சமுதாயக் கவலைகொண்டோரின் எதிர்பார்ப்பாகும்.

=============================








கருத்துகள் இல்லை: