திங்கள், 11 ஆகஸ்ட், 2025

நாணத்தைத் தொலைத்தவர்கள்

 

        

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28  

 

 நீ வெட்கத்தை இழந்துவிட்டால், நீ விரும்பியதைச் செய்துகொள் (புகாரீ: 3483) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். வெட்கம் என்பது ஓர் உயர்பண்பாகும். அது பாவங்களிலிருந்து தடுக்கின்ற கேடயமாகும். அது இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். எனவே அத்தகைய உயர்பண்பை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய மனிதர்கள் பலர் தம் வெட்கத்தை இழந்துவிட்ட காரணத்தால்தான் அசிங்கமான செயல்களையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

 

சமூக ஊடக மோகம்: இன்றைய இளைஞர்களும் இளைஞிகளும் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, தாம் விரும்பியதையெல்லாம் விரும்பியபடி செய்கிறார்கள்.   ஆண்-பெண் இருபாலரும் தம்மை மக்கள் மன்றத்தில் மதிப்பு மிக்கோராகக் காட்டுவதற்காக விதவிதமாகத் தற்படங்கள் (செல்ஃபீ) எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்; பரவவிடுகின்றார்கள். அதன் ‘விருப்ப’ங்களை (லைக்) எண்ணியெண்ணி மகிழ்கிறார்கள்.

 

முஸ்லிம் பெண்பிள்ளைகள் தம் அழகைப் பிற ஆடவர்க்குக் காட்டாமல் அடக்கத்தோடும் ஒடுக்கத்தோடும் இருக்க வேண்டும் என்ற மார்க்க நெறிமுறைகளை மறந்துவிட்டார்கள். தாம் விரும்பியதையெல்லாம் விருப்பப்படி செய்கிறார்கள். பெற்றோரிடம் இது பற்றிக் கேட்டால், “என் மகள் ஒன்றும் சின்னப் பிள்ளை இல்லை; அவளுக்கு எல்லாம் தெரியும்; அவள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்” என்கின்றனர்.

 

அந்தரங்கம் எதுவும் இல்லை: சில வீடுகளில் திருமண நிகழ்வு மாபெரும் திருவிழாவைப் போன்று நடக்கிறது. ஏராளமான பொருளாதாரம்  வீணடிக்கப்படுகிறது. திருமண மேடைக்கு வரும்போது மணப்பெண் ஆடிக்கொண்டே வருகிறாள். அவளோடு சேர்ந்து மற்ற பெண்களும் ஆடுகின்றார்கள். பின்னர் மணமேடையில் ஆடுகின்றார்கள். இசையும் நடனமும் ஒருங்கே அரங்கேறுகின்றன. திருமண நிகழ்வு தொடங்கியதிலிருந்து முதலிரவு அறைக்குச் செல்கின்ற வரை தம்பதியர் இருவரின் செயல்களையும் வீடியோ பதிவு செய்துகொண்டே இருக்கிறது. மற்றொரு பக்கம் கேமரா படம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. அந்தரங்கம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் படம் போட்டுக் காட்டிவிடுகின்றார்கள்.

 

பாட்டரங்குகளில் சிறுவர்-சிறுமியர்: நம் சமுதாயப் பெண்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறுங்காணொலி வெளியிட வேண்டுமென்பதற்காக நாள்தோறும் தம்மை அலங்கரித்துக்கொண்டு, தம் அழகைப் பொதுவெளியில் விருந்து படைக்கின்றார்கள். பெற்றோர் சிலர் தம் பிள்ளைகளைப் பாட்டரங்குகளில் பாட வைத்து, அதைப் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். அச்சிறுவர்-சிறுமியர் பாடும் பாடல்கள் திரைப்படங்களில் காதலன்-காதலி இணைந்து பாடியவை. காதல் உணர்வுகளைத் தூண்டும் பாடல்களைத் தம்முடைய சிறுவயதுப் பிள்ளை பாடுகிறாளே என்ற எந்தவித வெட்க உணர்வும் இன்றிக் கேட்டு மகிழ்கின்றார்கள். திருக்குர்ஆனைத் தஜ்வீதுடன் ஓத வேண்டிய பிள்ளைகள் இவ்வாறு தடம் மாறிப் போவதற்குப் பெற்றோரே முதற்காரணம்.

 

மட்டமான குணங்களைக் கொண்ட மார்க்க அறிஞர்கள்: மற்றொரு புறம், பெரும் பெரும் பதவிகளில் உள்ளோர்கூடச் சின்னப் பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார்கள். பேச்சாளர்களாகவும் எழுத்தாளர்களாகவும் அறியப்படுகின்ற மார்க்க அறிஞர்கள் சிலர் அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். பிறர் பணியாற்றக்கூடிய இடங்களில் தாம் நுழைந்துகொண்டு அதிகாரம் செலுத்துவது, ஏற்கெனவே அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கின்ற இமாமை நீக்க முயல்வது, தாம் தலைமைப் பொறுப்பை ஏற்க முனைவது, ஒருவனைத் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவனைப் பற்றிய தவறான பிம்பத்தை எல்லோரிடமும் பரப்புவது, சமூக ஊடகங்களில் வெளியிடுவது உள்ளிட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இவையெல்லாம் நாம் பயின்றிருக்கக்கூடிய மார்க்கக் கல்விக்கு எதிரானது என்பதை உணர்வதில்லை.

 

சிலர் பள்ளிவாசல்கள்தோறும் சென்று மத்ரஸா நடத்துவதாகச் சொல்லி வசூல் செய்கின்றார்கள். அதையே அவர்கள் தம் பிழைப்பாக வைத்துள்ளார்கள். “யாருக்காக வசூல் செய்கின்றீர்கள், உங்கள் மத்ரஸா எங்குள்ளது, அதன் நிர்வாகிகள் யார்” என்றெல்லாம் விசாரித்து, உண்மை வெளிப்படும்போது, வெட்கமின்றிக் கடந்து செல்கின்றார்கள். அத்தோடு அச்செயலை நிறுத்துவதில்லை. வேறு ஊருக்குச் சென்று தம் வசூல் வேட்டையைத் தொடர்கின்றார்கள்.

 

பிச்சைத்தொழில் செய்வோர்: கடந்த காலங்களில் பிச்சையெடுப்போர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது பெருநகரங்களில் கோவில், தேவாலயம், பள்ளிவாசல், மக்கள் கூடுமிடங்கள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பிச்சையெடுப்போர் மிகுந்து காணப்படுகின்றார்கள். கை நீட்டிக் கேட்கக் கூச்சப்பட்ட காலம் மாறி, அதிகாரத்தோடு பிச்சை கேட்கும் காலமிது. மூன்று காரணங்களுக்காக மட்டுமே யாசகம் கேட்கலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய செய்தியை ஒவ்வொருவரும் தம் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்:

 

கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “தர்மப் பொருள்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

 

கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரின் ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதை)ப் பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டுச் செல்வங்களை இழந்தவர். அவர் "வாழ்க்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்துகொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன்வந்து "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் 'வாழ்க்கையின் அடிப்படையை அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும்.

 

கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார். (சுனன் அபூதாவூத்: 1397)

 

போலி வசூலர்கள்: பள்ளிவாசல்கள்தோறும் ஐவேளைத் தொழுகையில் பெரும்பாலும் பொருளாதாரத் தேவை-வசூல் குறித்த அறிவிப்பு இல்லாமல் இருப்பதில்லை. திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அறிவிப்புகள் அவ்வப்போது செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொழுகை முடிந்த கையோடு-தாமதமாக வந்தோர் எழுந்து தொழுதுகொண்டிருக்கிறபோது அவர்களின் தொழுகைக்கு இடையூறாக இருக்கும் என்பதைப் பொருட்படுத்தாமல்-  “குமர் காரியமாக வந்துள்ளோம்; தாராளமாக உதவி செய்யுங்கள்” என்று உரத்த குரலில் அறிவிப்புச் செய்வோருக்கு எந்தவிதக் கூச்ச உணர்வும் இருப்பதில்லை. இத்தகைய வசூலர்களுள் பலர் போலியானவர்கள் என்பதே உண்மை.

 

கையூட்டுப் பெறுவோர்: பெரும் பெரும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் உரிய வகையில் ஊதியத்தைப் பெற்றுக்கொள்வதோடு, கடமையை நிறைவேற்ற மக்களிடம் கையூட்டுப் பெறுவது குறித்து சிறிதளவும் நாணம்  இல்லை. ‘சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி’ என்ற போர்வையில் கல்லூரிகளை நடத்துவோர் அரசாங்கத்தில் சலுகையைப் பெற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அக்கல்லூரியில் பேராசிரியராகச் சேரும் ஒவ்வொருவரிடமிருந்தும் பல இலட்சங்கள் கையூட்டாகப் பெற்றுக்கொள்கின்றார்கள். கையூட்டு பெற்று, தடை செய்யப்பட்ட உணவைச் சாப்பிடுகிறோமே என்ற எந்த நெருடலும் அவர்களுக்கு இல்லை. அந்தப் பணத்தில்தான் தன் மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்கிறோம் என்ற உறுத்தலும் அவர்களுக்கு இருப்பதில்லை. மேலும் தன் கணவன் நேர்மையற்ற முறையில், தகாத வழியில் சம்பாதித்த பணத்தில்தான் தனக்கு நகை வாங்கிக் கொடுக்கின்றான் என்ற நெருடலின்றி அதை மகிழ்ச்சியோடு அணிந்துகொள்கின்ற மனைவிக்கு எந்த நாண உணர்வும் இல்லை.

 

மது அருந்துவோர்: அக்கம் பக்கத்து வீட்டார்கள் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்களே என்ற உறுத்தலின்றி நாள்தோறும் மது அருந்திவிட்டுத் தெருவோரம் படுத்து உருண்டுகொண்டிருப்போர் நாணத்தைத் தொலைத்தவர்கள். தம்மால் தம் குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகள், பெற்றோர் உள்பட அனைவரும் மரியாதையை இழக்க வேண்டியுள்ளதே என்ற எந்த உறுத்தலுமின்றி நாள்தோறும் மதுக் கடைக்குச் சென்று வாங்கிக் குடிக்கின்றார்கள். உழைத்துச் சம்பாதித்த பொருளாதாரத்தைக் குடும்பத்திற்காகச் செலவு செய்யாமல் குடித்தே அழிக்கின்ற எத்தனையோ முஸ்லிம் சகோதரர்கள் இந்நிலத்திற்குமேல் உலாவிக்கொண்டிருக்கின்றார்கள்.

 

மேற்கண்ட பற்பல இழிசெயல்களைச் செய்வோர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்றார்கள். சாதி, மதப் பேதமின்றி எல்லாத் தளங்களிலும் இருக்கின்றார்கள். இருப்பினும் இக்காலத்திலும் வெட்க உணர்வோடும் இறையச்சத்தோடும் வாழ்வோர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் பொருட்டே உயர்ந்தோன் அல்லாஹ் இந்நிலத்தில் மழையைப் பொழியச் செய்கின்றான்; புவியில் பயிர்களை விளையச் செய்கின்றான். ‘தொல்லுலகில் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை’ எனும் மூதுரைக்கேற்ப இவ்வுலகு இயங்கிக் கொண்டிருக்கிறது.

 

ஆகவே ‘வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை’ என்ற நபிமொழிக்கேற்ப நாம் வெட்க உணர்வுள்ளவர்களாகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும் இறுதி வரை வாழ இறைவன் அருள்வதோடு, நம் சந்ததிகளையும் அவ்வாறே வாழச் செய்வானாக.

==========================

கருத்துகள் இல்லை: