சென்னை
மாவட்டத்திற்கான காஜியை நியமனம் செய்ய, நியமனத்
தேர்வுக் குழு உறுப்பினர் ஆவதற்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை
ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 26 08 2025
அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்காகப் பலர்
விண்ணப்பித்தனர். பின்னர் நியமனத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் 08 09
2025 அன்று வெளியிடப்பட்டது. அதில், மௌலவி
முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மௌலவி என். அப்துல் காதிர்
சிராஜி, மௌலவி ஏ. முஹம்மது உஸ்மான்
பாஷா சிராஜி, முனைவர் மௌலவி ஏ. ஷாஹுல்
ஹமீது பாகவி, மௌலவி பி.எம். கலீலுர்
ரஹ்மான் மன்பஈ, மௌலவி சையது மஸ்வூத் ஜமாலி, எம்.ஏ.ஜப்பார் (சமூக சேவகர்) ஆகியோர் கொண்ட
குழுவினர் மாவட்ட ஆட்சியரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
பின்னர்
மாவட்ட காஜி பதவிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர்
அலுவலகத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஜி பதவிக்குத்
தகுதியானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மௌலவி முஃப்தி என்.பி. உஸ்மான்
முஹ்யித்தீன் பாகவி ஃபாஸில் மளாஹிரி, மௌலவி
ஷேக் தாவூத் மஹ்ளரி, ஃபாஸில் ஜமாலி, மௌலவி முஃப்தி ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி மழாஹிரி, முஹம்மது அக்பர் பிஎஸ்.சி., ஆகிய நால்வர் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர்
நியமனத் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏழு பேரும்
அழைக்கப்பட்டு, சென்னை ஆட்சியர் திருமதி
ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் 29 09 2025 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம்
நடைபெற்றது. அதில் நியமனக் குழு உறுப்பினர்கள்
ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான மூவரைத் தேர்வுசெய்து கொடுக்குமாறு
ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதன்படி ஒவ்வொருவரும் மூவரைத் தேர்வு
செய்துகொடுத்தனர். இறுதியில் அந்த நால்வருள் மிகத் தகுதியும் அனுபவமும் மிக்க
முஃப்தி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி தமிழக முதல்வரால் 10 10 2025 அன்று
தேர்வு செய்யப்பட்டு, ‘சென்னை மாவட்ட காஜி’யாக
அறிவிப்புச் செய்யப்பட்டார். காஜி பொறுப்பு குறிப்பிட்ட ஒரே குடும்பத்தில்
முடங்கியிருந்ததை மாற்றி, தகுதியும் திறமையும் ஷரீஅத்
சட்டங்களில் அனுபவமும் கொண்ட ஒருவர் தேர்வுசெய்யப்பட்டிருப்பது கண்டு மக்கள்
அனைவரும் ‘வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது’ என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்து
வருகின்றனர்.
நமது
சென்னை மாவட்ட காஜி, வேலூர் அல்பாக்கியாத்துஸ்
ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பேராசிரியராகவும் முதல்வராகவும் 58 ஆண்டுகள்
பணியாற்றியதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாணாக்கரின் பேராசிரியராகத்
திகழ்கிறார். அங்குத் தலைமை முஃப்தியாகப் பணியாற்றியதில் ஆயிரக்கணக்கான மார்க்கத்
தீர்ப்புகளை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாவட்ட காஜிதான் தமிழ்நாட்டின் தலைமை காஜியாக அறியப்படுகிறார் என்பது
எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.
-நூ. அப்துல் ஹாதி பாகவி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக