சனி, 31 ஆகஸ்ட், 2024

அனைவரோடும் இணக்கம் கண்டவர்

  

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

வடபழனிஎன்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் அவர்களின் முகம்தான். கடந்த 07 07 2024 அன்று அதிகாலை நேரத்தில் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டு மறுமைப் பயணத்தை மேற்கொண்டார். அவரின் மரணச் செய்தியைக் கேட்ட அவர்தம் நேசர்கள் மிகுந்த திடுக்கமும் பதற்றமும் அடைந்தனர். நேற்றுதானே பேசினேன், போன வாரம் செல்பேசியில் தொடர்புகொண்டு  பேசினேனே என்றெல்லாம்  தம் கவலையை வெளிப்படுத்தினர்.

ஷேக் அப்துல்லாஹ்-கமருன்னிஸா தம்பதியருக்கு ஆறு ஆண்பிள்ளைகள், இரண்டு பெண்பிள்ளைகள். அந்த ஆண்பிள்ளைகளுள் நான்காமவராகப் பிறந்தவர் தர்வேஷ் ஹள்ரத் ஆவார். இவர் 1964ஆம் ஆண்டு பிறந்தார். உள்ளூரில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் யாரேனும் ஒருவராவது மார்க்கக் கல்வி பயின்று ஆலிமாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையில், முதன்முதலாக அவ்வூரிலேயே அமைந்துள்ள மக்தூமிய்யா அரபுக்கல்லூரியில் மார்க்கக் கல்வி பயிலத் தொடங்கினார். பின்னர் திண்டுக்கல் யூசுஃபிய்யா அரபுக் கல்லூரியில் ஓதினார். பிறகு தாவூதிய்யாவில் ஓதி, அங்கிருந்து அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரிக்குச் சென்றார். நான்கு ஆண்டுகள் அங்கே ஓதிய அவர், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி, பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியில் ஓதிப் பட்டம் பெற்றார்.

பட்டம் பெற்ற சில ஆண்டுகளுக்குப்பின் வடபழனி ஜும்ஆ மஸ்ஜிதில் இமாமாகச் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலைத் தொழுகை முடிந்தபின் மஸ்ஜிதிலேயே அமர்ந்து மஹல்லாவின் பல்வேறு செய்திகளை அலசும் ஹள்ரத் அவர்கள், அந்த அமர்வைத் தமது மஹல்லாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தினார். பல்வேறு மனிதர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் சிக்கல்களைத் தீர்க்க உதவினார். தம்மால் இயன்றதைத் தாமே தீர்த்து வைத்தார். தம்மால் இயலாததை அதற்கெனத் தகுதியான ஆளிடம் ஒப்படைத்துத் தீர்த்துவைத்தார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பள்ளிவாசலில் இமாமாகப் பணியாற்றி, மஹல்லா மக்களின் பல்வேறு முன்னேற்றத்திற்குக் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகலாக இருந்த அந்தப் பள்ளிவாசல் அவர்தம் முயற்சியால் விசாலமானதாக மாறியது. உலமாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புகலிடமாக அந்தப் பள்ளி இருந்தது.

கருத்து வேறுபாடுகளாலும் கொள்கைக் கோட்பாடுகளாலும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒரே குடையின்கீழ் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணமே தர்வேஷ் ஹள்ரத் அவர்களின் உள்ளத்தில் இருந்துவந்தது. அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டார் என்றால் அது மிகையில்லை. மார்க்க விளக்கக் கூட்டங்கள், போராட்டக் களங்கள், அரசியல் கூட்டங்கள், சமய நல்லிணக்கக் கூட்டங்கள் உள்ளிட்ட எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தம்முடைய கருத்துகளைப் பளிச்செனத் தெரிவிப்பது ஹள்ரத் அவர்களின் இயல்பு. அதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.

சென்னைக்குப் புதிதாக வருகிற இளம் ஆலிம்கள் பலர், ஹள்ரத் அவர்களைச் சந்தித்து, தம்முடைய வேலை வாய்ப்பிற்காக ஏதேனும் ஓரிடத்தைச் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கான இடத்தைச் சொல்லி, “அங்கு ஒரு மஸ்ஜிதில் இமாம் தேவைப்படுகிறார்; அங்கே ஒரு மத்ரஸாவில் உஸ்தாத் தேவைப்படுகிறார்  என்று சொல்லி அவரவரின் தகுதிக்கேற்ப ஆங்காங்கே அனுப்பிவைப்பார். அல்லது பிறகு வாய்ப்புக் கிடைக்கும்போது உரிய இடத்தைச் சொல்வார். அத்தகைய பொதுநலன் விரும்பியாக இருந்துள்ளார். ஆக அவரின் பணிக்காலத்தில் ஹக்கானி மஸ்ஜித் ஆலிம்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அலுவலகமாகத் திகழ்ந்தது.

ரமளான் மாதத்தில் அந்த மஸ்ஜிதின் கதவுகள் நோன்பாளிகளுக்காகவும் தொழுகையாளிகளுக்காகவும் இருபத்து நான்கு மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் நிர்வாகத்தினரிடம் சொல்லி ஏற்பாடு செய்தார். அந்த மஸ்ஜிதைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் யாரும் எப்போது வேண்டுமானாலும் அங்கு வரலாம் என்ற நிலையை ஏற்படுத்தியமை பாராட்டுக்குரியது. தொழுகை நேரம் தவிர  மற்ற நேரங்களில் பூட்டப்படுகின்ற மற்ற மஸ்ஜிதுகளைப் போன்று அல்லாமல் எல்லா நேரமும் மஸ்ஜித் திறக்கப்பட்டிருக்க வேண்டும்; முஸ்லிம்கள் மஸ்ஜிதை எப்போதும் பயன்படுத்தும் நிலையில் அது இருக்க வேண்டும் என்பதை நிர்வாகத்திற்கு எடுத்துரைத்தவர்.

எல்லோரையும் கவரும் தன்மை உடையவர்; ஆலிம்களைக் கண்ணியப்படுத்துபவர்; இளம் ஆலிம்களானாலும் மரியாதை செய்பவர். நோட்டிஸில் பெயர் போடாவிட்டாலும் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்து, அக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புச் செய்பவர்; சிறியவர் ஆனாலும் நன்றாகப் பேசத் தெரிந்த ஆலிம் என்றால் அவரை மேடையேற்றி முன்னிலைப்படுத்துபவர். பிறரின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்; மனிதர்களின் சூழ்நிலைகளையும் முகக்குறிகளையும் மிகத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் செயல்படுபவர். 

தம்முடைய பிள்ளைகளை மார்க்கக் கல்வி கற்க வைத்து, குர்ஆனுக்கு வாரிசாக்கினார். ஆம்! தம் பிள்ளைகள் இருவரையும் ஹாஃபிழ் ஆக்கி, ஆலிமாக்கவும் முனைந்துள்ளார். தாம் வாழும் காலத்திலேயே, தாம் பணியாற்றி வரும் பள்ளிவாசலில் ரமளான் தராவீஹ் தொழவைக்கும் ஹாஃபிழாக நியமித்து, தம் மகனை முன்னிலைப்படுத்தினார். தந்தை மகற் காற்றும் உதவி அவையத்துள் முந்தி இருப்பச் செயல்எனும் குறளுக்கேற்பத் தாம் வாழும் காலத்திலேயே தம் மகனைச் சபையேற்றியுள்ளார். 

ஹள்ரத் அவர்களின் குடும்பம் பாரம்பரியமிக்க ஒரு குடும்பமாகும். அவர்தம் பாட்டனார் ஷேக் அப்துல் காதர் கேரளாவிலிருந்து பள்ளப்பட்டிக்கு வந்தவர். அவர் மூலம்தான் அந்த ஊரைச் சுற்றியுள்ள பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். ஊரில் தொப்பியில்லாத ஆண்பிள்ளையையும் புர்கா இல்லாத பெண்பிள்ளையையும் காணவே முடியாது. இத்தகைய பேணுதலுக்கான காரணர் ஹள்ரத் அவர்களின் பாட்டனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஊர்மக்கள் எல்லோரும் இங்கே ஒன்றுசேர வேண்டும்; இவ்வூரில் கியாமத் வரை சோறு பொங்கிக்கொண்டே இருக்க வேண்டும்என்று அந்தப் பெரியவர் துஆ செய்தார். அதன் பயனை இன்று வரை அவ்வூர் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். அதன்படி ஹள்ரத் அவர்களும் தாம் இறந்தபின் தம்மைப் பள்ளப்பட்டியில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்னரே வஸிய்யத் (மரண சாசனம்) செய்திருந்தார். அவர்தம் வேண்டுகோளுக்கிணங்க பள்ளப்பட்டியில் அவருடைய குடும்பத்தாருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அவருடைய பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வல்லோன் அல்லாஹ் ஹள்ரத் அவர்களின் பிழைகளை மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக. அவர்தம் சேவைகளை அவன் ஏற்றுக்கொண்டு அதற்கான பிரதிபலன்களை முழுமையாக அவருக்கு வழங்குவானாக. அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.

===========================




சனி, 17 ஆகஸ்ட், 2024

கடன் வாங்காதீர்!

 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

கடந்த காலங்களில் பெரும்பாலானோரிடம் சிறுசேமிப்புப் பழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.  இன்று சேமிப்புப் பழக்கம் குறைந்ததால் கடன் வாங்குவோர் எண்ணிக்கை மிகுந்துள்ளது. கடன் பட்டார் நெஞ்சம்போல்...எனும் முதுமொழிக்கேற்ப, வட்டிக்குக் கடன் பெற்றோர், அதை வசூலிக்க வருபவரைக் கண்டுவிட்டால் அவர்களை அச்சம் கவ்விக்கொள்கிறது; பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஏனெனில் உரிய தவணைக் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வசூலிக்க வந்தவன் கண்டபடி திட்டுவதையும் இகழ்ந்து பேசுவதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அது மட்டுமின்றி, அக்கம் பக்கத்தார் பார்த்துக்கொண்டிருக்க, அவன் திட்டுவதைக் கேட்கும்போது மானம் போகும்; உயிரையே மாய்த்துக்கொள்ளலாமா எனத் தோன்றும்.

 

கடந்த காலங்களில் கடன் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்காலத்தில் கடன்பெறுவது மிகவும் எளிது. ஏன், நாமே கேட்காவிட்டாலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வாங்கிக் கொள்ளுமாறு நம்மைத் தூண்டுகின்றார்கள்; தொடர்படியாகக் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். கடனை வாங்கும் வரை நம்மை அந்தத் தனியார் வங்கிகள் விடுவதில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதை ஓர் உதவியாகச் செய்துவந்தனர். அதனால்தான் அதனைக் கைமாற்றுஎன்று அழைத்துவந்தனர்.

 

ஒருவர் தம்மிடம் உள்ள பணத்தை வேறொருவருக்குக் குறிப்பிட்ட காலத்திற்குக் கொடுத்துவிட்டு, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் கைமாற்று ஆகும். ஆனால் தற்காலத்தில் வட்டிக்குத்தான் கடன் கொடுக்கப்படுகிறது. எனவே அது ஒரு வியாபாரமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் நாமே கேட்காவிட்டாலும் ஒவ்வொரு வங்கியும் நம்மீது வலிந்து கடனைத் திணிக்கப்பார்க்கிறது. அதன்மூலம் நம்மிடமிருந்து வட்டி வாங்கிச் சம்பாதிக்க முனைகிறது. அவர்களிடமிருந்து கடனை வாங்குகிற வரைதான் நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள். கடன் வாங்கிவிட்டால் அவ்வளவுதான். அதன்பின் அவர்களின் பேச்சை நாம் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதுதான் சட்டம்; அவர்கள் போடுவதுதான் வட்டி.

 

வங்கிகளின் வலியுறுத்தல்களால் கடனை வாங்கிய பலர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுகின்றனர். அதைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வருவாய் இல்லை அல்லது அந்தந்த மாதத்திற்கான செலவுகளைச் சமாளிக்கவே பணமெல்லாம் தீர்ந்துபோய்விடுகிறது. பிறகு வாங்கிய கடனை எப்படிச் செலுத்த முடியும்? இத்தகையோர் படும்பாடு சொல்லி மாளாது. எனவே அன்பர்களே, திருப்பிச் செலுத்த இயலாது எனும் நிலையில் உள்ளோர் கடன் வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

 

அண்மையில் ஈரோட்டில் ஒரு குடும்பத்தினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அக்குடும்பத்திலுள்ள பெண்மணி தம் இரண்டு மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார். (தந்தி: 20.07.2024) பெற்ற கடனை மாதந்தோறும்  திருப்பிச் செலுத்த இயலாததால் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது எவ்வளவு பெரிய சோகம்; அத்தோடு இஸ்லாமியப் பார்வையில் இது எவ்வளவு பெரிய பாவம்!

 

முஹம்மது பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பின்னர் தம் உள்ளங்கையைத் தம் நெற்றியில் வைத்தார்கள். பிறகு, சுப்ஹானல்லாஹ், எவ்வளவு கடுமையானது இறக்கப்பட்டுள்ளது? என்று கூறினார்கள். நாங்கள் அமைதியானோம்; திடுக்குற்றோம். மறுநாள் ஆனபோது, “அல்லாஹ்வின் தூதரே! இறக்கப்பட்டுள்ள கடுமையானது என்னவோ?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எவன் கையில் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டாலும் அவர்மீது கடன் இருந்தால் அதை அவர் நிறைவேற்றுகின்ற வரை சொர்க்கத்தில் நுழையமாட்டார்என்று கூறினார்கள். (நஸாயீ: 4684/ 4605)

 

இறைவழியில் தம்முயிரைத் தியாகம் செய்த ஒரு தியாகி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கான பாவம் அவருக்கு மன்னிக்கப்படாது என்றால், சாதாரண மனிதர்களின் நிலை என்னவாகும்? அதிலும் அந்தப் பெண்மணி, தம் இரண்டு பெண்பிள்ளைகளைக் கொலை செய்துள்ளதோடு, தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆக, கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றம், மகள்களைக் கொலைசெய்த கொலைக் குற்றம், தற்கொலை செய்துகொண்ட குற்றம் என மூவகைக் குற்றங்கள் அப்பெண்மீது உள்ளன. இத்தனைக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் கடன்பெற்றதுதான்.

 

பொதுவாகக் கடன்பெற்றவர், உரிய நேரத்தில் அல்லது தவணைக் காலத்தில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால், அந்நேரத்தைச் சமாளிப்பதற்காக எதையாவது சொல்ல நேரிடுகிறது. அதாவது நாளைக்கு வா தருகிறேன்என்பார். ஆனால் அவர் நாளைக்கு வந்தால், எப்படிக் கொடுப்பார் என்று அவருக்கே தெரியாது. எனவே அது பொய்யாகும். இவ்வாறு கடன் பெற்றவர் பேசினால் பொய்பேசுவதும்   வாக்கு மாற்றம் செய்வதும் அன்றாட நிகழ்வுகள். அதனால்தான் கடன்பெறுவதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடினார்கள்.

 

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் துஆ செய்யும்போது, “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்என்று கூறுவார்கள்.  (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!  தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்என்று பதிலளித்தார்கள்.  (புகாரீ: 2397)

 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடிய கடனைப் பெறுவதில் இன்று போட்டா போட்டி நிலவுகிறது. கடனை வாங்கியாவது தம் மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்திவிட வேண்டும் என்று கருதுகிற முஸ்லிம்கள் இருப்பதால்தான் அவர்கள் அதன்பின் சிரமப்படுகின்றார்கள். கடன் வாங்கியாவது வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம் அதனைக் கட்டி முடித்துவிட்டு, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவ்வீட்டையே வேறொருவருக்கு விற்றுவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள். கடன் வாங்கியாவது குறிப்பிட்ட அந்தக் காரை வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள்தாம், கார் வாங்கிய சில மாதங்களில் அல்லது அடுத்த ஆண்டில்  அதற்கான தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால், அந்தக் காரை இழக்கின்றார்கள். எனவே பிறர் ஒரு பொருளை வாங்கிவிட்டதால் அதைப் பார்த்து நாமும் வாங்கிவிட வேண்டும் என்று எண்ணுவது மிகப் பெரும் தவறாகும்.  

 

வாகனங்கள், வீட்டுப் பொருள்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எதை வாங்க வேண்டுமானாலும் அவர்களே முன்வந்து மாதத் தவணையில் கொடுக்கின்றார்கள். மாதந்தோறும் பணம் செலுத்த முடியுமானால் வாங்குவதில் சிக்கல் இல்லை. சில மாதங்கள் கட்டிவிட்டு, பிற மாதங்கள் கட்ட முடியாமல் போனால் அப்பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். இன்று நம்முள் பலர்   மாதத் தவணையில் வீட்டையோ வாகனங்களையோ வாங்கிவிட்டு, அதற்காகக் கணவனும் மனைவியும்  ஓடோடி உழைத்து, அந்தக் கடனைச் செலுத்துகின்றார்கள்.  அதனால் அவ்விருவரும்  நிம்மதியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மாதந்தோறும் (இஎம்ஐ) தவணைத் தொகையைக் கட்ட வேண்டுமே என்ற கவலையும் பதற்றமும் அவர்களை அவ்வாறு ஓட வைக்கின்றன. எனவே வீடு வாங்குவோர், வாகனம் வாங்குவோர் மிகுந்த கவனத்துடன் திட்டமிடுவது அவசியமாகும். ஒரு தடவைக்குப் பல தடவை யோசிக்க வேண்டும். இல்லையேல் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட நேரிடலாம்.

 

கடன் கொடுத்து உதவுங்கள்என்று நாம் பிறருக்கு உபதேசம் செய்யவும் அச்சமாக இருக்கிறது. ஏனெனில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கின்றார்கள். இறைவனை அஞ்சி நம்பிக்கையோடு திருப்பிச் செலுத்துவோர் அரிதிலும் அரிதாகவே   இருக்கின்றார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கம் இல்லாமலும் சிலர் கடன் வாங்குகின்றார்கள். தாம் நலமாக இருந்தால் போதும் என்ற சுயநலக் கொள்கை பலருக்கும் உள்ளது.   பிறர் நலம் பேணுவோரும் பிறரின் உரிமைகளைப் பேணுவோரும் மிக மிகக் குறைவு. அந்த வகையில்  பிறரிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நோக்கமே இல்லாதோர் குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கின்றார்கள்:  கடனை நிறைவேற்றக்கூடாது என்ற முழுமையான எண்ணத்தோடு எந்த மனிதன் கடன் வாங்குகின்றானோ அவன் திருடனாக அல்லாஹ்வைச் சந்திப்பான். (இப்னுமாஜா: 2401)

 

அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகின்றான்: (இறைநம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட)  அடைமானப் பொருள்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்கள் மத்தியில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதியாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். (4: 58)

 

கடன் வாங்காதீர்என்றுதான் சொல்கிறோமே தவிர, ‘பிறருக்குக் கடன் கொடுக்காதீர்என்று சொல்ல வில்லை. பிறர் சிரமப்படும்போது அவர்களுக்குக் கடன் கொடுத்து உதவுவது மிகப்பெரும் நன்மையாகும். அது மட்டுமின்றி கடன் பெற்றவர் அதனைக் குறிப்பிட்ட தவணைக் காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவருக்கு அவகாசம் கொடுப்பதும், சிலநேரங்களில் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்வதும் அடுத்தடுத்துக் கடன் கொடுப்பதும் அறச் செயலாகும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாவது: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரண்டு தடவை கடன் கொடுத்தால் அதில் ஒரு தடவை தர்மமாக ஆகாமல் இருப்பதில்லை. (இப்னுமாஜா: 2421)

 

ஆக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிலிருந்து பாதுகாப்புத் தேடினார்களோ அத்தகைய கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம். கடன் வாங்காமல் நம்மிடம் இருப்பதையே செலவு செய்வோம். சிக்கனமான வாழ்க்கையை மேற்கொள்வதே சீரான, நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அத்தகைய பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கையை வல்லோன் அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

==============


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

பிணக்கம் நீக்கி இணக்கம் காண்போம்!

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28   

------------------

சின்னச் சின்னக் கருத்துவேறுபாடுகளுக்காக உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், ஒத்த கொள்கைவாதிகள் உள்ளிட்டோர் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொண்டு, எதிரெதிராக நிற்கின்றார்கள். ஒன்றுபட்டு, கூட்டாகச் சாதிக்க வேண்டியதைச் சிதறுண்டு இழக்கின்றார்கள். உறவினர்களிடம் பிணக்கம் ஏற்படும்போது இரண்டு பிரிவினர்களாகப் பிரிந்துபோகும் நிலை ஏற்படுகிறது. அதனால் ஒன்றாக, பெரும் குழுவினராக நிற்க வேண்டியவர்கள் தனித்தனியாகப் பிரிந்து நிற்கின்றார்கள். அல்லது குறிப்பிட்ட திருமணத்திற்கு ஒரு குழுவினர் கலந்துகொள்வதும் மற்றொரு குழுவினர் புறக்கணிப்பதும் நிகழ்கிறது. இவை அனைத்திற்கும் தீர்வு பிணக்கம் நீக்கி இணக்கம் காண்பதே ஆகும்.

 

ஓர் ஊரில் மூத்த தலைவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் ஊர் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட குழுவினர்களாகப் பிரிந்துவிடுகின்றனர். இதனால்  அந்த ஊரில் பெரும்பான்மையாக நாம் இருந்தும், ஒரு வார்டு தேர்தலில்கூட நம் இனத்தைச் சார்ந்தோர் வெற்றிபெற முடிவதில்லை. நம் மஹல்லாவிற்குத் தொடர்பில்லாத ஒருவர் நம் வாக்கின்மூலம் வெற்றிபெற்றுப் பதவியை அனுபவிக்கின்றார். ஒரே இறைவனை வணங்கி, ஒரே மறையை ஓதுகின்ற நாம் ஒற்றுமையாக ஓரணியில் நின்றிருந்தால் நம்முள் ஒருவர் அப்பதவியை அடைந்திருக்கலாம் அல்லவா?

 

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று நபிவழியைப் பின்பற்றுகிற அண்ணன்-தம்பி இருவரும் ஒற்றுமையாக ஒரு நிறுவனத்தை அல்லது வியாபாரத்தளத்தை நடத்திவருகின்றனர். திடீரென ஒரு நாள் அவர்களுக்கிடையே சொத்துத் தகராறு அல்லது இலாபப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அதனால் கருத்துவேறுபாடு உண்டாகிறது.  அதனால் அதுவரை சகோதர வாஞ்சையோடு பேசியதும் பழகியதும் கெட்டுப்போய்விடுகிறது. உலகுசார் பொருளுக்காகச் சகோதரப் பாசம் சிதைந்துவிடுகிறது. தொடர்ந்து அவ்விருவரும் கூட்டு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் முறிந்துபோய்விடுகிறது. இத்தகைய பிணக்குகள் ஏற்படுகிறபோது அதைக் குறுகிய நாள்களிலேயே சரிசெய்து இணக்கம் காண்பதே இருவருக்கும் நல்லது. அதுவே இன்றையத் தேவை. அது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. (புகாரீ: 6065)

 

ஒரு மஹல்லா ஒன்றுபட்ட மஹல்லாவாகத் திகழும்போது அங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு சேவைகளைச் செய்யலாம்; புதிய புதிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தலாம்; ஏழை மாணவர்களைப் படிக்க வைக்கலாம்; தொழில் வாய்ப்பு இல்லாதோருக்குச் சுயதொழில் தொடங்கப் பொருளாதார உதவி செய்யலாம்; திருமணம் செய்ய வசதி வாய்ப்பு இல்லாதோருக்குத் திருமணம் செய்துவைக்கலாம்; போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்; பைத்துல்மால் தொடங்கி நலிந்தோருக்கும் கைம்பெண்களுக்கும் உதவி செய்யலாம்; மகளிர்க்குத் தையல் எந்திரம் வழங்கி, தொழில் செய்ய ஊக்குவிக்கலாம்; இன்னும் எண்ணற்ற சேவைகளைச் செய்யலாம். அதேநேரத்தில் கொள்கைக் கோட்பாடுகளாலும் அரசியல் காரணங்களாலும் பிளவுண்டு ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிந்துகிடந்தால் எதுவும் செய்ய இயலாது போய்விடும்.

 

மார்க்க அறிஞர்கள் கொள்கைக் கோட்பாடுகளால் பற்பல குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றார்கள். சிறு சிறு  பிரிவுச் சட்டங்களில் கருத்துவேறுபாடு கொண்டு சிதறுண்டு கிடக்கின்றார்கள்.  கடமையான (ஃபர்ளான) சட்டங்களிலெல்லாம் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிற அவர்கள், உட்பிரிவுச் சட்டங்களில்தான் கருத்து வேறுபாடு கொள்கின்றார்கள். அவர்கள் அனைவரும் கொள்கை வேறுபாடுகளை மறந்து, இணக்கம் கண்டு இணங்கி வர வேண்டும். அவ்வாறு ஆலிம்கள் அனைவரும் இணங்கி வந்துவிட்டால் இச்சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன இருக்கின்றனவோ அவற்றில் கவனம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்தச் சமுதாய மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதனை நோக்கி வழிகாட்டலாம்.

 

ஒரு வீட்டில் இரண்டு மருமகள்கள் ஒன்றாக இருக்க முடியவில்லை. அவர்களுக்குள் ஷைத்தான் ஊடுருவி, தவறான சிந்தனையைத் தூண்டிவிடுகின்றான். அவள் மட்டும் ஓய்வெடுக்கணும், நான் வேலை செய்யணுமா; அவள் சும்மா இருக்க, நான் சமைக்கணுமாஎன்ற தவறான சிந்தனை அவ்விருவருக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுகிறது. ஒன்றுபட்டு ஒரே வீட்டில் வாழ வேண்டிய அவர்கள் இதற்காகவே இரண்டு குடும்பங்களாகப் பிரிகின்றார்கள். இருவரும் தனித்தனி வீட்டில் தம் கணவரோடும் பிள்ளைகளோடும் வசிக்கத் தொடங்குகின்றார்கள்.  பின்னர் இருவரும் தத்தம் வீட்டு வேலைகள் அனைத்தையும் தனித்தனியே அவர்களே செய்கின்றார்கள். அதற்குப் பதிலாக ஒரே வீட்டில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்யத் தொடங்கினால் இருவருக்கும் எவ்வளவோ ஓய்வு கிடைக்கும். ஒரு நாள் இளையவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மூத்தவள் பார்த்துக்கொள்வாள். மூத்தவளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால், இளையவள் பார்த்துக்கொள்வாள்.    அத்தகைய வாய்ப்பு கூட்டுக் குடும்பத்தில்தான் உள்ளது. தனிக் குடும்பமாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லையென்றாலும் அவளேதான் பார்க்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.

 

இத்தகைய பல்வேறு வகையான பிணக்குகள் நமக்கு மத்தியில் உள்ளன. இந்தப் பிணக்குகளெல்லாம் எவ்வளவு காலம் நீடிக்கும். இதனால் அவர்கள் சாதிப்பது என்ன? ஒன்றுமே இல்லை. இப்போதெல்லாம் திடீர் மரணங்கள்தாம் அதிகம். யார் எதுவரை வாழ்வார் என்ற உத்தரவாதம் சொல்ல முடியாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.  காலையில் இருந்தவர் மாலையில் இல்லை. நேற்றிரவு இருந்தவர் இன்று காலை இல்லை. இத்தகைய சூழலில்  பிறரிடம் பிணங்கிக்கொண்டு நாம் எதைச் சாதிக்கப் போகிறோம். இணங்கி வாழ்ந்தால் நம்முடைய நல்ல நினைவுகளை எண்ணிப் பார்த்து, நமக்காக துஆ செய்வார்கள். எந்நேரமும் பிணங்கிக்கொண்டே வாழ்ந்தால் நம் மரணத்தைப் பற்றிக்கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். போய்த் தொலைந்தான்அல்லது போய்த் தொலைந்தாள்என்ற எண்ணமே அவர்களின் மனத்தில் தோன்றும். நமக்காக யாரும் துஆவும் செய்ய மாட்டார்கள்.

 

அது மட்டுமன்றி, நாம் எல்லோருடனும் இணங்கி வாழ்ந்தால் நம் ஆயுள் கூடும்; நம்முடைய வாழ்வாதாரம்  பெருகும். இதற்கு அடிப்படைக் காரணம், நாம் பிறரோடு இணங்கி வாழும்போது நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அதனால் நம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்; ஆகவே நம் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அதை உள்ளடக்கியே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து (இணக்கமாக) வாழட்டும். (புகாரீ: 2067)

 

வாழ்வாதாரம் பெருகும்என்பதன் உட்பொருள் என்னவெனில், கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது எல்லாம் ஒரே செலவாகப் போய்விடும். தனித்தனிக் குடும்பமாகச் செல்லும்போது நாமே ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்க வேண்டும். ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, அதற்கு முன்பணம் கொடுத்தல், மாதந்தோறும் வாடகை கொடுத்தல், மின்கட்டணம் செலுத்துதல், எரிவாயு உருளை வாங்குதல், மளிகைப் பொருள்களை வாங்குதல் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் நாம் ஒருவரே மேற்கொள்ள வேண்டும். நம்முடைய சேமிப்பில் ஒன்றும் இருக்காது என்பதையும் தாண்டி, எதிர்பாராச் செலவுகளுக்காகக் கடன் வாங்க வேண்டிய கட்டாயச் சூழலும் ஏற்படும். இதையெல்லாம் பொதிந்ததுதான் அந்த நபிமொழி. யோசித்துப் பார்த்தால் நபியவர்களின் தூரப்பார்வை நமக்கு நன்றாகவே விளங்கும்.

 

ஆகவே நம் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டினர், பொதுமக்கள், நாம் வேலை செய்யும் அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பிணக்குகள் ஏதுமின்றி நாம் இணக்கமாக வாழ்வதால் பற்பல நன்மைகளை இவ்வுலக வாழ்க்கையில் அனுபவிப்பதோடு, மறுமைக்கும் நன்மையாக அமையும். எனவே யாருடனும் பிணக்கின்றி இணக்கமாக வாழ முயல்வோம்.

=========================================