வியாழன், 16 மே, 2024

அவசரப்படாதீர்!

 

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 

 

மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான் (21: 37) என்று அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் கூறுகின்றான். இன்று நாம் அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சுவிட்சைத் தட்டியதும் மின்விசிறி சுழல்வதைப் போல் எல்லாமே வேக வேகமாக இயங்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கின்றான். அந்த வகையில் உருவானதுதான் துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்), துரிதப் பயணம், துரித முன்னேற்றம் முதலானவை. எல்லாவற்றிலும் அவசர நிலை மனிதனை நோயைப் போலத் தொற்றிக்கொண்டது. நிதானம் அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும்அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ள குணம் ஆகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 2012/ 1935)

 

 



மனிதன் ஏன் அவசரப்படுகின்றான்? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து, அவர்களின்  தலைப்பகுதியிலிருந்து உயிர்க்காற்றை ஊதிக் கொண்டே வந்து, அது இடுப்பை அடைந்தபோது, அவர் எழுந்து அமர்ந்துகொண்டார். அவன் ஊதிய உயிர்க்காற்று இன்னும் அவரினுள் சென்று முழுமையடையவில்லை. அதற்குள் அவர் அவசரப்பட்டு எழுந்து அமர்ந்துவிட்டார்.

 

 

முதல் மனிதர் முழுமையடைவதற்குள் அவசரமாக எழுந்து அமர்ந்துகொண்டதைப்போல் மனிதன் எல்லாவற்றிலும் அவசரப்படுகின்றான். அவசரப்பட்டு முடிவெடுக்கின்ற ஆண்கள்-பெண்கள், மாணவ-மாணவிகள், தம்பதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தேர்வில் வெற்றிபெறாததால் அல்லது மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்கின்றார்கள். தேர்வில் தேர்ச்சி பெறவில்லையானால் அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெற உள்ளது. அதில் நன்றாக எழுதித் தேர்ச்சிபெற்றுக்கொள்ளலாம் என்ற தீர்வை நோக்கி நகர வேண்டுமே தவிர, அவசரப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது.

 

 

கணவன்-மனைவி இடையே பிரச்சனை என்றால், அந்தப் பிரச்சனையைப் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்; பேசித் தீர்க்க முயலவேண்டும். அதை விட்டுவிட்டு இருவருள் ஒருவரோ, இருவருமோ அவசரப்பட்டுத் தவறான முடிவெடுத்துவிடக் கூடாது. அவசரப்பட்டு, மணமுறிவு வரை சென்றுவிடக் கூடாது. அல்லது தற்கொலை முடிவெடுத்துவிடக் கூடாது.

 

 


பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் இவையே ஒவ்வொரு மனிதனும் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும். மாறாக அவசரப்பட்டு முடிவெடுப்பது ஒருவரை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அதற்கான ஒரு நிகழ்வுதான் புகாரீயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

 

(கைபர் போரின்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நரகவாசிகளுள் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம் என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தமது வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் (கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

 

 

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளுள் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளுள் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்று சொன்னார்கள். (புகாரீ: 6493) 

 

 



போர்க்களத்தில் போர்செய்து எதிரிகளை வீழ்த்தியபோதும், சகிப்புத்தன்மையின்றி அவசரப்பட்டு முடிவெடுத்ததால் நரகம் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இவர் போன்று நாம் அவசரமான முடிவெடுப்பதைவிட்டுத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

 

 

உலகு சார்ந்த செயல்களைத் தாண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதிலும் அது விரைவாகக் கிடைக்கவேண்டும் என்பதிலும் மனிதன் அவசரப்படுகின்றான். எவ்வளவோ துஆ செய்துவிட்டேன்; என்னுடைய  துஆ ஒப்புக்கொள்ளப்படவே இல்லை என்று மனிதன் புலம்புகின்றான். மனிதன் அவசரக்காரன்; இறைவன் நிதானமானவன். அவனுக்கு எது, எப்போது நன்மையாக அமையுமோ அதை, அப்போது வழங்குவான். அது வரை மனிதன் எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டுமே தவிர அவசரப்படக்கூடாது. நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரை உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 6340)

 

 

அதுபோலவே தம்பதியர் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, “என்னம்மா விசேஷம் ஏதும் இல்லையா?” என்று அக்கம் பக்கத்துப் பெண்களும் உறவினர்களும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள். ஆறு மாதம், ஒரு வருடம் கழிந்துவிட்டால், “என்னம்மா, இன்னும் விசேஷம் ஏதும் இல்லை? டாக்டரைப் பார்த்தீங்களா? என்று கேட்பார்கள்; அவர்களே ஆலோசனைகளையும் கூறுவார்கள். இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் குழந்தை இல்லையென்றால் கேள்விக் கணைகளைத் தொடுத்து, அப்பெண்ணைப் பாடாய்ப்படுத்திவிடுவார்கள். நிம்மதியாக வாழவிடமாட்டார்கள். இதுதான் அவசர மனிதர்களின் நிலைப்பாடு.

 

 

குழந்தையில்லாத பெண்களுக்கு ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தமாட்டார்கள். மாறாக எதிர்மறையான பேச்சுகளைப் பேசிப்பேசிச் சங்கடப்படுத்துவார்கள். குழந்தையைப் பெற்றெடுப்பது ஆண்-பெண் கையில் இல்லை. மேலும் தாம்பத்திய உறவு கொள்வதில் மட்டும் இல்லை. மாறாக இறைவனின் முடிவில் இருக்கிறது. அது குறித்து அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். மேலும் அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். (42: 49-50)

 

 


தம்பதிகள் குழந்தைக்காகக் காத்திருக்க வேண்டும். அது இறைவனின் கையில் உள்ளது. அது அவனுடைய அருட்கொடைகளுள் மகத்தானது. அவன் நாடுவோருக்கு நாடிய பொழுதில் குழந்தையைக் கொடுப்பான்.  இப்ராஹீம் நபிக்கு நூறு வயது; அவர்தம் மனைவி சார்ரா அம்மையாருக்கு தொண்ணூற்று ஏழு வயது. அந்நேரத்தில்தான் அல்லாஹ் அவர்களுக்கு இஸ்ஹாக் என்ற குழந்தையைக் கொடுத்தான்.

 

 

அவர்கள் (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள். (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (சார்ரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தம் முகத்தில் அறைந்துகொண்டு “(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?) என்று கூறினார். அதற்கவர்கள், “இவ்வாறே உங்கள் இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான் என்றார்கள். (51: 28-29)

 

 

அதுபோலவே ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்கொரு வாரிசின்றி நீண்டகாலம் காத்திருந்தார்கள். இறுதியில் மன உருக்கத்தோடு அல்லாஹ்விடம் துஆ-பிரார்த்தனை செய்தார்கள். இறைவா, என்னை (வாரிசு இல்லாமல்) தனித்தவனாக விட்டுவிடாதே; நீ வாரிசு வழங்குவோருள்  சிறந்தவனாக இருக்கின்றாய் (21: 89). அவர்களின் உருக்கமான பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட இறைவன் யஹ்யா என்ற குழந்தையைப் பிறக்கச் செய்தான். இதுதான் காத்திருப்பின் பலனாகும்.

 

 

எத்தனையோ தம்பதிகள் குழந்தைக்காக நீண்டகாலம் காத்திருந்திருக்கிறார்கள். பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகள் கழித்துக்கூட அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது என்பதைச் சமுதாய மக்கள் உணர்ந்துகொண்டு பொறுமை காக்க வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளைச் சொற்களால் துன்புறுத்தக்கூடாது.

 

 

வியாபாரத்தில் அபிவிருத்தி இல்லை; இலாபம் இல்லை என்று புலம்புவோர் உள்ளனர். மிகத் துரிதமாக அதிகமான இலாபம் ஈட்ட வேண்டும்; மிகக் குறுகிய காலத்திலேயே பணக்காரனாகிவிட வேண்டும் என்றெல்லாம் மனிதன் அவசரப்படுகின்றான். எல்லாவற்றுக்கும் இறைவனிடம் ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு. அது அது அந்தந்தக் காலத்தில்தான் நடைபெறும்; நாம் அவசரப்படக் கூடாது.

 

 

அதேநேரத்தில் அவசரப்பட வேண்டிய சில விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். அலீயே, மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தாதீர். 1. தொழுகைநேரம் வந்துவிட்டால்  (உடனடியாகத் தொழுதுவிடுதல்), 2. ஜனாஸா வந்துவிட்டால் (உடனடியாகத் தொழுகை நடத்திவிடுதல்), 3. பருவப்பெண்ணுக்குத் தோதுவான இணை கிடைத்துவிட்டால் (உடனடியாகத் திருமணம் செய்துவைத்துவிடுதல்). (திர்மிதீ: 1075/ 995)

 

 

ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாகச் செயல்படுவது (நல்லதாகும்) மறுமையுடைய செயல்களில் தவிர என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்:  4810/ 4176)

 

 

ஆக உலகுசார் செயல்பாடுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மறுமைசார் செயல்பாடுகளில் துரிதம் காட்டுவதும் நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே அதனை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நாம் என்றென்றும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம். 

 ==================

கருத்துகள் இல்லை: