புதன், 22 மே, 2024
#மாற்றியோசி
வியாழன், 16 மே, 2024
அவசரப்படாதீர்!
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
“மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான்” (21: 37) என்று அல்லாஹ் அருள்மறைக்
குர்ஆனில் கூறுகின்றான். இன்று நாம் அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சுவிட்சைத்
தட்டியதும் மின்விசிறி சுழல்வதைப் போல் எல்லாமே வேக வேகமாக இயங்க வேண்டும் என்று மனிதன்
எதிர்பார்க்கின்றான். அந்த வகையில் உருவானதுதான் துரித உணவு (ஃபாஸ்ட் ஃபுட்), துரிதப் பயணம், துரித முன்னேற்றம் முதலானவை. எல்லாவற்றிலும் அவசர நிலை மனிதனை நோயைப் போலத் தொற்றிக்கொண்டது.
“நிதானம் அல்லாஹ்விடமிருந்து
உள்ளதாகும்; அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ள குணம் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ:
2012/ 1935)
மனிதன் ஏன் அவசரப்படுகின்றான்? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து, அவர்களின் தலைப்பகுதியிலிருந்து
உயிர்க்காற்றை ஊதிக் கொண்டே வந்து, அது இடுப்பை அடைந்தபோது, அவர் எழுந்து அமர்ந்துகொண்டார். அவன் ஊதிய உயிர்க்காற்று இன்னும் அவரினுள் சென்று
முழுமையடையவில்லை. அதற்குள் அவர் அவசரப்பட்டு எழுந்து அமர்ந்துவிட்டார்.
முதல் மனிதர் முழுமையடைவதற்குள் அவசரமாக எழுந்து அமர்ந்துகொண்டதைப்போல்
மனிதன் எல்லாவற்றிலும் அவசரப்படுகின்றான். அவசரப்பட்டு முடிவெடுக்கின்ற ஆண்கள்-பெண்கள், மாணவ-மாணவிகள், தம்பதிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தேர்வில் வெற்றிபெறாததால் அல்லது மதிப்பெண்கள்
குறைவாக எடுத்ததால் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்கின்றார்கள். தேர்வில் தேர்ச்சி பெறவில்லையானால்
அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெற உள்ளது. அதில் நன்றாக எழுதித் தேர்ச்சிபெற்றுக்கொள்ளலாம்
என்ற தீர்வை நோக்கி நகர வேண்டுமே தவிர, அவசரப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது.
கணவன்-மனைவி இடையே பிரச்சனை என்றால், அந்தப் பிரச்சனையைப் பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்; பேசித் தீர்க்க முயலவேண்டும். அதை விட்டுவிட்டு இருவருள் ஒருவரோ, இருவருமோ அவசரப்பட்டுத் தவறான முடிவெடுத்துவிடக் கூடாது. அவசரப்பட்டு, மணமுறிவு வரை சென்றுவிடக் கூடாது. அல்லது தற்கொலை முடிவெடுத்துவிடக்
கூடாது.
பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் இவையே ஒவ்வொரு மனிதனும்
தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும். மாறாக அவசரப்பட்டு முடிவெடுப்பது
ஒருவரை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அதற்கான ஒரு நிகழ்வுதான் புகாரீயில்
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(கைபர் போரின்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (யூத) இணைவைப்பாளர்களிடம்
போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர்
எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நரகவாசிகளுள் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று (குஸ்மான் எனும் அந்த
மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள்
என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான்
என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில்
அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட
விரும்பி, தமது வாளின் (கீழ்ப் பகுதியைப்
பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம்
மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக்
(கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச்
செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளுள்
ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின்
(தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளுள் ஒருவராக இருப்பார்.
இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள். (புகாரீ:
6493)
போர்க்களத்தில் போர்செய்து எதிரிகளை வீழ்த்தியபோதும், சகிப்புத்தன்மையின்றி அவசரப்பட்டு முடிவெடுத்ததால் நரகம் செல்ல
வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இவர் போன்று நாம் அவசரமான முடிவெடுப்பதைவிட்டுத்
தவிர்ந்துகொள்ள வேண்டும்.
உலகு சார்ந்த செயல்களைத் தாண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதிலும்
அது விரைவாகக் கிடைக்கவேண்டும் என்பதிலும் மனிதன் அவசரப்படுகின்றான். ‘எவ்வளவோ துஆ செய்துவிட்டேன்; என்னுடைய துஆ ஒப்புக்கொள்ளப்படவே இல்லை’ என்று மனிதன் புலம்புகின்றான்.
மனிதன் அவசரக்காரன்; இறைவன் நிதானமானவன். அவனுக்கு
எது, எப்போது நன்மையாக அமையுமோ
அதை, அப்போது வழங்குவான். அது
வரை மனிதன் எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டுமே தவிர அவசரப்படக்கூடாது. “நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரை உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ: 6340)
அதுபோலவே தம்பதியர் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, “என்னம்மா விசேஷம் ஏதும் இல்லையா?” என்று அக்கம் பக்கத்துப் பெண்களும் உறவினர்களும் கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஆறு மாதம், ஒரு வருடம் கழிந்துவிட்டால், “என்னம்மா, இன்னும் விசேஷம் ஏதும் இல்லை? டாக்டரைப் பார்த்தீங்களா? என்று கேட்பார்கள்; அவர்களே ஆலோசனைகளையும் கூறுவார்கள்.
இரண்டு வருடங்கள் கழிந்தபின்னும் குழந்தை இல்லையென்றால் கேள்விக் கணைகளைத் தொடுத்து, அப்பெண்ணைப் பாடாய்ப்படுத்திவிடுவார்கள். நிம்மதியாக வாழவிடமாட்டார்கள்.
இதுதான் அவசர மனிதர்களின் நிலைப்பாடு.
குழந்தையில்லாத பெண்களுக்கு ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தமாட்டார்கள். மாறாக எதிர்மறையான பேச்சுகளைப் பேசிப்பேசிச்
சங்கடப்படுத்துவார்கள். குழந்தையைப் பெற்றெடுப்பது ஆண்-பெண் கையில் இல்லை. மேலும் தாம்பத்திய
உறவு கொள்வதில் மட்டும் இல்லை. மாறாக இறைவனின் முடிவில் இருக்கிறது. அது குறித்து
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: அவன் விரும்பியவர்களுக்குப் பெண் சந்ததியை மட்டும்
கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான்.
அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். மேலும் அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற)
மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். (42: 49-50)
தம்பதிகள் குழந்தைக்காகக் காத்திருக்க வேண்டும். அது இறைவனின்
கையில் உள்ளது. அது அவனுடைய அருட்கொடைகளுள் மகத்தானது. அவன் நாடுவோருக்கு நாடிய பொழுதில்
குழந்தையைக் கொடுப்பான். இப்ராஹீம் நபிக்கு
நூறு வயது; அவர்தம் மனைவி சார்ரா அம்மையாருக்கு
தொண்ணூற்று ஏழு வயது. அந்நேரத்தில்தான் அல்லாஹ் அவர்களுக்கு ‘இஸ்ஹாக்’ என்ற குழந்தையைக் கொடுத்தான்.
அவர்கள் (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி
கூறினார்கள். (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (சார்ரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தம் முகத்தில் அறைந்துகொண்டு “(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)” என்று கூறினார். அதற்கவர்கள், “இவ்வாறே உங்கள் இறைவன் கூறுகின்றான். நிச்சயமாக அவன் மிக ஞானமுள்ளவனும், அனைத்தையும் நன்கறிந்தவனும் ஆவான்” என்றார்கள். (51: 28-29)
அதுபோலவே ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமக்கொரு வாரிசின்றி
நீண்டகாலம் காத்திருந்தார்கள். இறுதியில் மன உருக்கத்தோடு அல்லாஹ்விடம் துஆ-பிரார்த்தனை
செய்தார்கள். “இறைவா, என்னை (வாரிசு இல்லாமல்) தனித்தவனாக விட்டுவிடாதே; நீ வாரிசு வழங்குவோருள்
சிறந்தவனாக இருக்கின்றாய் (21: 89). அவர்களின் உருக்கமான பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட
இறைவன் ‘யஹ்யா’ என்ற குழந்தையைப் பிறக்கச்
செய்தான். இதுதான் காத்திருப்பின் பலனாகும்.
எத்தனையோ தம்பதிகள் குழந்தைக்காக நீண்டகாலம் காத்திருந்திருக்கிறார்கள்.
பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகள் கழித்துக்கூட
அவர்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது என்பதைச் சமுதாய மக்கள் உணர்ந்துகொண்டு பொறுமை
காக்க வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளைச் சொற்களால் துன்புறுத்தக்கூடாது.
வியாபாரத்தில் அபிவிருத்தி இல்லை; இலாபம் இல்லை என்று புலம்புவோர் உள்ளனர். மிகத் துரிதமாக அதிகமான
இலாபம் ஈட்ட வேண்டும்; மிகக் குறுகிய காலத்திலேயே
பணக்காரனாகிவிட வேண்டும் என்றெல்லாம் மனிதன் அவசரப்படுகின்றான். எல்லாவற்றுக்கும் இறைவனிடம்
ஒரு குறிப்பிட்ட காலம் உண்டு. அது அது அந்தந்தக் காலத்தில்தான் நடைபெறும்; நாம் அவசரப்படக் கூடாது.
அதேநேரத்தில் அவசரப்பட வேண்டிய சில விஷயங்களை நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். “அலீயே, மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தாதீர்.
1. தொழுகைநேரம் வந்துவிட்டால் (உடனடியாகத்
தொழுதுவிடுதல்), 2. ஜனாஸா வந்துவிட்டால் (உடனடியாகத்
தொழுகை நடத்திவிடுதல்), 3. பருவப்பெண்ணுக்குத் தோதுவான
இணை கிடைத்துவிட்டால் (உடனடியாகத் திருமணம் செய்துவைத்துவிடுதல்). (திர்மிதீ:
1075/ 995)
“ஒவ்வொரு விஷயத்திலும் நிதானமாகச்
செயல்படுவது (நல்லதாகும்) மறுமையுடைய செயல்களில் தவிர” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத்: 4810/ 4176)
ஆக உலகுசார் செயல்பாடுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மறுமைசார்
செயல்பாடுகளில் துரிதம் காட்டுவதும் நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம். எனவே
அதனை நம் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நாம் என்றென்றும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும்
வாழலாம்.
வியாழன், 9 மே, 2024
இறையன்பைப் பெற எளிமையான வழிகள்
-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
இறையன்பையும் திருப்தியையும் பெற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் மனித சமுதாயத்திற்கு எளிமையான வழிமுறைகளைக் கற்றுத்தந்துள்ளார்கள். அவை அனைவராலும்
எளிமையாகப் பின்பற்றத்தக்கவை ஆகும். கோடி கோடியாய் நற்செயல்கள் செய்வதைவிடக் குறைவான
நற்செயல்களாக இருந்தாலும் தொடர்படியாகச் செய்வதே இறைதிருப்தியைப் பெறுவதற்கான வழியாகும்.
இன்று சமூக ஊடகங்களில் அவ்வப்போது காண நேரிடுகிற ஒரு செய்தி, ஒரு கோடி ஸலவாத் அர்ப்பணம்; பத்துக்கோடி ஸலவாத் அர்ப்பணம்; நூறு கோடி ஸலவாத் அர்ப்பணம் என்பதுதான். மேலும் ஒரே இரவில்
முழுக் குர்ஆனையும் ஓதித் தொழுகை நடத்தப்படும் என்ற செய்தியையும் அண்மையில் காண நேரிட்டது.
இதையெல்லாம் அவர்கள் ஏதோ ஒரு முறைதான் செய்ய இயலும். யாரோ
சிலரால்தான் செய்ய இயலும். தொடர்படியாகச் செய்ய இயலாது. ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் தம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியதோ மிக எளிய வழிமுறைகள் ஆகும்.
அது மட்டுமின்றி இது மாதிரி தீனில் மிகையான போக்கைக் கடைப்பிடிக்கின்ற
மனிதர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்திருக்கிறார்கள் என்பதுதான் நாம் கூர்ந்து
கவனிக்க வேண்டியதாகும். அதிகமான நற்செயல்கள்
செய்வது தவறா என்று கேட்போருக்கு, ‘ஆம் தவறுதான்’ என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில் ஒருவர் மிகுதியான நற்செயல்களில் ஈடுபடுகிறபோது
அவருடைய குடும்ப உறுப்பினர்கள், மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள்
என்பது நிதர்சன உண்மை. பின்வரும் நிகழ்வு அதற்குத் தக்க சான்றாகும்.
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: பாரம்பரியமிக்க
ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு
அன்ஹு தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக்
கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.
அப்போது அவள், “அவர் நல்ல மனிதர்தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை'' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, “என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். பிறகு நான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?'' என்று கேட்டார்கள். நான், “நாள்தோறும் நோன்பு நோற்கிறேன்'' என்று சொன்னேன். ("குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்'' என்று கேட்டார்கள்.
நான், “ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவர்கள், “மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும்
(ஒரு தடவை முழுமையாக) ஓதிக்கொள்'' என்று சொன்னார்கள். “நான் இதைவிட அதிகமாக (நோன்பு
நோற்க) ஆற்றல்பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். அவர்கள் “வாரத்தில் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள்'' என்றார்கள். நான் “இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) எனக்கு ஆற்றல் உண்டு'' என்று கூறினேன். “இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!'' என்று சொன்னார்கள். நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) ஆற்றல் பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “(இறைத்தூதர்) தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயர்ந்த நோன்பு
வழக்கப்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள்
நோன்பு நோற்றுக்கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க்கொள்'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழங்கிய இந்தச்
சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது)
தள்ளாமை வயதை அடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். (புகாரீ: 5052)
இந்த நபிமொழியில் நபியவர்கள் முதன்முதலாகச் சொன்னது மக்கள்
அனைவரும் பின்பற்ற எளிதான நடைமுறையாகும். அதாவது ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு
நோற்பதும், ஒவ்வொரு மாதமும் குர்ஆனை
ஓதி முடிப்பதும் ஒவ்வொரு மனிதருக்கும் மிக எளிதான நற்செயல்கள் ஆகும். அதைத்தான் அப்துல்லாஹ்
பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, “நபியவர்கள் கொடுத்த சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; அப்படிச் செய்திருந்தால் அது எனக்கு இந்தத் தள்ளாத வயதில் எளிதாக
இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது எல்லா வயதிலும் செய்ய முடிகிற அளவைத்தான்
நபியவர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ இளமைத் துடிப்பில் தமக்கு ஆற்றல் இருப்பதாகக்
கூற, கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, இறுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்குமாறு நபியவர்கள்
கூறிவிட்டார்கள். அவர்களிடம் செய்வதாக உறுதியளித்து விட்டதால், அந்தச் செயல்பாடுகளை இறுதிவரை தொடர வேண்டிய நிர்ப்பந்த நிலை
அவருக்கு ஏற்பட்டது.
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு தொடர்படியாக நற்செயல்கள்
செய்வதில் ஈடுபட்டதால் அவரால் தம் மனைவியின் தேவையை நிறைவேற்ற முடியவில்லை என்பதை அறிகிறோம்.
இன்றும் இத்தகைய மனிதர்கள் இருக்கவே செய்கின்றார்கள். மிகுந்த நற்செயல்கள் செய்வதில்
ஈடுபடுதல் அல்லது மிகுந்த வேலைப்பளு காரணமாகத் தம் மனைவியின் உரிமைகளை நிறைவேற்ற முடியாமல்
இல்லற வாழ்வில் தோற்றுப்போன இளைஞர்கள் இருக்கின்றார்கள். அத்தகையோர் கவனிக்க வேண்டிய
நபிமொழிதான் இது.
இரவெல்லாம் இறைவனை வணங்குவதும் பகலெல்லாம் நோன்பு நோற்பதும்
தவறா என்றால், தவறில்லை. எனினும் ஒரு சாதாரண
மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதற்கு இதெல்லாம் தடையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். இவையெல்லாம்
எல்லா மனிதர்களாலும் பின்பற்ற இயலாதவை. எனவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய
செயல்களில் ஈடுபடுவோரைத் தடுத்தார்கள்.
ஒரே இரவில் முழுக் குர்ஆனையும் ஓதி முடிப்பது குறித்து யாரும்
குறை சொல்ல முடியாது; அதைத் தவறென்று சொல்ல முடியாது.
ஆனால் அது அவருடைய இல்லற வாழ்வைப் பாதிக்கும். மனைவியின் உரிமையைப் பறிக்கும்; கடைசியில் இல்வாழ்வு முறிந்துபோய்விடும். எனவேதான் நபியவர்கள்
அதற்கு அனுமதி வழங்கவில்லை.
ஒரு தடவை நபியவர்கள் மஸ்ஜிதுந் நபவியின் ஒரு தூணில் கயிறொன்று
கட்டப்பட்டிருந்ததைக் கண்டு, அது குறித்து விசாரித்துவிட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். அது குறித்த
முழுமையான செய்தி இதோ:
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்குள்) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையே
நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. "இந்தக் கயிறு என்ன (ஏன்)?'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது (தங்கள் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா
அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது)
சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்'' என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களுள் ஒருவர் உற்சாகமான
மனநிலையில் இருக்கும்போது (உபரியான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்'' என்று கூறினார்கள். (புகாரீ: 1150)
பொதுவாக மனிதர்கள் யாவரும் பலவீனமானவர்கள். அவர்களுக்குத் தூக்கம்
இன்றியமையாதது. அந்தத் தூக்கத்தோடு இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டாம் என்பதை வலியுறுத்தியே நபியவர்களின் அறிவுரை இருந்தது. தூக்கத்தோடு
ஒருவர் இறைவழிபாட்டில் ஈடுபட்டால், அவர் தொழும்போது கேட்கும் துஆகூட வார்த்தை மாற்றங்களால் தமக்கு எதிராக ஆகிவிடலாம்.
ஆகவே உற்சாக நிலையில் இருக்கும்போது மட்டுமே வழிபாட்டில் ஈடுபட வேண்டும்; தூக்கம் மேலிட்டால் தூங்கிவிட வேண்டும் என்ற எளிய வழிமுறையை
இச்சமுதாயத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டியுள்ளார்கள்.
“இந்த மார்க்கம் எளிதானது.
இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துச் செயல்பாடுகளிலும்) நடுநிலையையே
கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; (கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட) காலையையும் மாலையையும்
இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரீ:
39)
இந்த மார்க்கம் எளிதானது என்றும் இயன்றவற்றைக் கடைப்பிடியுங்கள்
என்றும் காலை, மாலை, இரவு நேரங்களில் இயன்ற அளவிற்கு வழிபாட்டில் ஈடுபடுங்கள் என்றும்
நபியவர்கள் இச்சமுதாய மக்களுக்கு நல்வழிகாட்டியுள்ளார்கள். ஆக நபியவர்கள் காட்டியுள்ள
வழிமுறை அனைவரும் பின்பற்றும் விதத்தில் இருக்கிறது. அதுதான் இம்மார்க்கத்தின் சிறப்பு.
ஆதலால் சமூக ஊடகங்களின் வெளிச்சத்திற்காக நாம் இம்மார்க்கத்தில் சிரமத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.
அது தனிப்பட்ட வழிபாடாக இருந்தாலும் சரி, கூட்டு வழிபாடாக இருந்தாலும் சரி.
கடமையான தொழுகை முடிந்ததும் எவ்வளவு வேண்டுமானாலும் திக்ரு
செய்யலாம்; தஸ்பீஹ் ஓதலாம். அது அவரவர்
விருப்பம். ஆனால் நபியவர்கள் கூறியுள்ள அளவு அனைவரும் பின்பற்றும் விதத்தில் உள்ளது.
அதனால்தான் நபியவர்களை, ‘எளிய வழிகாட்டிய ஏந்தல் நபி’ என்று நாம் போற்றுகின்றோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை
முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர் களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள்.
இதைப் போன்று செய்தால் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்,) நீங்கள் (கடமையான) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்து முறை
"சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், பத்து முறை "அல்ஹம்து லில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும், பத்து முறை "அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறுங்கள்'' எனச் சொன்னார்கள். (புகாரீ: 6329)
தொழுதுவிட்டு அவசரமாக அவசரமாக வெளியே புறப்படுவோரும்கூட இவ்வளவு
குறைவான திக்ரை ஓதாமல் செல்ல மாட்டார். அந்த அளவிற்கு மிகக் குறைவான எண்ணிக்கையை நபியவர்கள்
கூறியுள்ளார்கள். இன்றைய அவசர உலகில் வாழும் பலர், இமாம் கேட்கின்ற துஆவுக்குக்கூட ஆமீன் கூற நேரமில்லாதவர்களாக உள்ளனர். அத்தகையோரையும்
சற்று நிதானமாகச் சிந்திக்க வைக்கின்ற நபிமொழிதான் இது. இவ்வளவு குறைவான எண்ணிக்கையில்
நிறைவான நன்மை உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டால் நிச்சயம் இதை நாள்தோறும் ஓதத்
தொடங்கிவிடுவார்கள்.
அதுபோலவே திருக்குர்ஆனை ஓதி முடிப்பது குறித்து வழிகாட்டுகிறபோது, முதலில் நாற்பது நாள்களுக்கு ஒரு தடவை என்று கூறினார்கள். இது
ஓதலில் ஆர்வமுடையோருக்கு மிகக் குறைந்த அளவுதான். 10 முதல் 15 நிமிடங்களில் ஓதிவிடலாம்.
அதன்பிறகு மிகுதியான ஓய்வுநேரம் உள்ளோருக்காக வழிகாட்டியுள்ளார்கள். அதன்படி முப்பது
நாள்களில் அல்லது இருபது நாள்களில் அல்லது பதினைந்து நாள்களில் அல்லது பத்து நாள்களில்
அல்லது ஒரு வாரத்தில் ஓதி முடிப்பதாக இருந்தாலும் முடிக்கலாம். அது அவரவர் ஓய்வுநேரத்தைப்
பொருத்தது. ஆக முதன்முதலில் அவர்கள் கூறியது அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழியாகும்.
அதன்பின்னர் மனிதர்கள் தத்தம் ஓய்வுநேரத்திற்கேற்ப அதனை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
அது குறித்த நபிமொழி இதோ:
அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்கள் கூறியதாவது: நான் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடம், “எத்தனை நாள்களில் குர்ஆன்
நிறைவாக ஓதி முடிக்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாற்பது நாள்களில் ஒரு முறை” என்றார்கள். பிறகு (நான் “அதைவிடக் குறைவான காலத்தில் ஓதிமுடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது” என்று கூறியபோது) “மாதத்தில் ஒரு முறை” என்றார்கள். பிறகு “(நான் அதைவிடக் குறைவான காலத்தில் ஓதி முடிக்க எனக்கு ஆற்றல் உள்ளது” என்று கூறியபோது) “இருபது நாள்களில் ஒரு முறை” என்றார்கள். பிறகு, “பதினைந்து நாள்களில் ஒரு முறை” என்றார்கள். பிறகு, “பத்து நாள்களில் ஒரு முறை” என்றார்கள். பிறகு, “ஏழு நாள்களில் ஒரு முறை” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைவிடக் குறைவான
காலத்தில் ஓதிமுடிக்க அனுமதிக்கவில்லை. (அபூதாவூத்: 1187)
ஒருவர் ஆர்வத்தோடு ஒரு நாள் அல்லது சில நாள்கள் இரவின் நடுநிசி
நேரத்தில் எழுந்து, எட்டு ரக்அத்கள் தஹஜ்ஜுத்
தொழுகிறார். பின்னர் பல நாள்கள் தொழாமல் விட்டுவிடுகிறார். இவரைவிட, நாள்தோறும் நடுநிசி நேரத்தில் எழுந்து ஆர்வத்தோடு இரண்டு ரக்அத்கள்
மட்டும் தஹஜ்ஜுத் தொழுபவர் மேலானவர். ஏனெனில் “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது” என்று நபியவர்களிடம் கேட்கப்பட்டபோது, “குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்வது” என்று சொன்னார்கள். (புகாரீ:
6465)
ஆக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். ஆனால் மக்களோ அதை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கிக்கொள்கின்றார்கள். மிகக் குறைந்த செலவில் திருமணத்தை மஸ்ஜிதில் நடத்தி, எளிய முறையில் விருந்து ஏற்பாடு செய்து, எளிதாக முடிக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் தம்முடைய கௌரவத்தை
அதில் வெளிப்படுத்த முயன்று, வாழ்நாளெல்லாம் சம்பாதித்த பணத்தை அதிலேயே செலவழித்துவிடுகின்றார்கள்; தமக்குத்தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். எனவே
இனி வரும் காலங்களிலாவது நாம் அனைவரும் மார்க்கத்தின் எல்லாச் செயல்களையும் எளிய முறையில்
செய்து, இந்த மார்க்கம் மிக எளிமையானது
என்பதை இந்தச் சமுதாய மக்களுக்கு உணர்த்தி, இறையன்பைப் பெற்று இன்புற்று வாழ்வோம்.
============================௦
இளைஞர்களே! தாயகம் திரும்புவீர்!
கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி கள்ளக்குறிஞ்சி அருகிலுள்ள மாத்தூர் காட்டுக்கொட்டாயில், தம் கள்ளத்தொடர்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தம் மாமியாரையே
கொன்றுவிட்டனர் இரண்டு மருமகள்கள்.
அதன் விவரமாவது, தவ்லத் (24), மதினா பேகம் (22) இரு பெண்களின் கணவர்களும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். மதினா
பேகத்தின் மாமன் மகனிடம் அந்த இரு பெண்கள் கள்ளத்தொடர்பு (உடலுறவு) வைத்திருந்தனர்.
இதையறிந்த அவர்களின் மாமியார், என் மகனுக்கு நீங்கள் துரோகம் செய்யலாமா? என்று திட்டியிருக்கின்றார். அந்த கள்ளக் காதலனை விரட்டியிருக்கின்றார். இது தம்
கணவர்களுக்குத் தெரிந்து விடலாம் எனும் அச்சத்தில் கள்ளக் காதலன் அப்துல் ரசாக்குடன்
சேர்ந்து இரு மருமகள்களும் தம் மாமியாரைக் கொலை செய்து விட்டனர். (செய்தி: தினத்தந்தி:
23-03-2002)
ஒரு பெண் தன் மாமியாரையே கொலை செய்கிற அளவிற்கு அவளைத் தூண்டியது
எது? முதலில் கள்ளத் தொடர்பு.
அந்தக் கள்ளத் தொடர்புக்கு அவளை ஆட்படுத்தியது அவளின் இளமைதான். ஒரு பெண்ணின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாதவன் ஏன் மணம் செய்து கொள்ள
வேண்டும்?
இளவயதான ஆண் -பெண் தம் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும்
இனிய இல்லறத்தை மேற்கொள்வதற்குமே திருமணம். அதற்காகத்தான் பலர் முன்னிலையில் சட்ட
முறைப்படி ஈருள்ளங்கள் இணைகின்றன. ஆனால் கணவன் தன் மனைவியின் தேவையைப் பூர்த்தி செய்யாமல்
பொருளாதாரத் தேவைக்காக வெளிநாடு சென்றுவிட்டால்
அவளின் காம உணர்வுகளைத் தணிப்பது யார்?
ஓர் ஆண் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து அனுப்பும் பணம் பெண்ணின்
வயிற்றுப்பசியைத்தான் தீர்க்குமே தவிர அவளின் காமப்பசியைத் தீர்க்க முடியுமா?
மட்டுமல்ல, அந்தப் பணத்தின் மூலம் சிலர் களவு முறையில் கலவி புரியவும் தயங்குவதில்லை. ஆடம்பர
வாழ்க்கை வாழவும் தொடங்கி விடுகின்றனர். இத்துணைப் பிரச்சனைகளுக்கும் காரணம் மணமுடித்து
விட்டு வெளிநாடு சென்றுவிடும் இளைஞர்களே எனில் அது மிகையாகாது.
நோன்பு வைத்துக் கொண்டும் இரவு முழுவதும் தொழுது கொண்டும்
இருந்த தோழரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்து, “உன் உடலுக்கு உன்மீது கடமை உண்டு. உன் மனைவிக்கும் உன்மீது கடமை
உண்டு” என உபதேசித்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். (நூல்: புகாரீ) இத்தகைய ஆடவர்
பலரின் காரணத்தால்தான் இன்றைய பெண்டிர் பற்பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.
ஒர் ஆணைவிட வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணுக்குத்தான் ஆசைகளும், உணர்ச்சிகளும் அதிகம் என்பேன். காரணம் ஓர் ஆண் தன் வேலைகளைக்
கவனிப்பதிலும், உழைப்பதிலுமே பொழுதைக் கழித்து
விடுகின்றான், ஆனால் வீட்டில் தங்கியிருக்கும்
ஒரு பெண் தன் சமையல், துணிதுவைத்தல் உள்ளிட்ட வேலைகள்
போக எஞ்சியுள்ள நேரங்களில் தன் கணவனைப் பற்றியும், கலவியைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். இளவயது பெண்களுக்கு இது பற்றிய
சிந்தனை அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
மணமுடிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே வெளிநாடு சென்று விடும்
கணவன் தன் தாயகம் திரும்ப மூன்று அல்லது நான்காண்டுகள் ஆகின்றன. (தற்போது அந்தக் கால
அளவு குறைந்துள்ளது) அதுவரை தன் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஓர் இளமங்கை பூட்டுப்போட
வேண்டும் என நிர்ப்பந்திப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இன்று இவ்விரு பெண்களின் விஷயம் வெளிச்சமாகிவிட்டது. இன்னும்
எத்தனையோ மங்கைகள் இருட்டுக்குள் புலம்புவது யாருக்குத் தெரியும்?
‘என் மனைவி நல்லவள்; தவறேதும் செய்யமாட்டாள்’ என வாதிடுவதை விட்டுவிட்டு நீங்கள் உங்கள் துணைவியரின் தேவைகளைப்
பூர்த்தி செய்வதிலும் அவர்களோடு இணங்கி வாழ்வதிலும் அக்கறை காட்டுங்கள். அதுவே பிரச்சனைகள்
தீர வழிவகுக்கும்.
''ஒவ்வொருவரும் பொறுப்பாளியே
ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு பற்றி கேட்கப்படுவார். ஓர் ஆண் தன் குடும்பத்தினர்
பற்றியும் ஒரு பெண் தன் கணவனின் இல்லம் பற்றியும் அவனின் குழந்தைகள் பற்றியும் கேட்கப்படுவாள்"-
(நூல் : புகாரீ) எனும் நபிமொழியை நெஞ்சில் நிறுத்தி, மணம் முடித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ள இளைஞர்களெல்லாம் உடனே
தம் தாயகம் திரும்புங்கள் எனக் கனிவுடன் அழைக்கின்றேன். வாருங்கள்! நம் துணைவியோடு
இன்பமாய் வாழ்ந்து நம் நாட்டிலேயே தொழில்செய்து சம்பாதிப்போம்; உழைப்போம்! உயர்வடைவோம்!
"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?’
எனும் கவிதை வரிகளை நெஞ்சில் பதித்து மகிழ்வாய் நாம் உழைப்போம்;
நிறைவாய் நாம் வாழ்வோம்! வாரீர்! வாரீரென அன்புடன் அழைக்கின்றேன்.
இப்படிக்கு பாகவியார் - ஆலங்குடி.
அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா ஏப்ரல் 2002
========================================
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை இது. அயல் நாடு
சென்று உழைப்பது தவறில்லை. ஆனால் மனைவியோடு சென்று, இல்வாழ்வில் ஈடுபட்டவாறே உழைக்க வேண்டும். அல்லது நான்கு-ஆறு மாதங்களுக்குள் ஒரு
தடவை தாயகம் வந்து மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்டால்
அயல்நாடு சென்று உழைக்கலாம். அத்தோடு படித்தவர்கள் சென்றால்தான் அங்கு மதிப்பும் அதற்கேற்ற
நல்ல சம்பளமும் கிடைக்கும். படிக்காதவர்கள் சென்றால் அவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
அதற்குப் பதிலாக அவர்கள் உள்நாட்டிலேயே இருந்துவிடலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டால்
தம்மோடு தம் மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம். இதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில்
நிறுத்துவது அவசியமாகும்.
அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி
09 05 2024