புதன், 7 பிப்ரவரி, 2024

பற்றுக்கோல் இல்லாப் படர்கொடி (சிறுகதை)



           -நூ. அப்துல் ஹாதி பாகவி

 

அது ஒரு கட்டுப்பாடான ஊர். ஓர் அரபுக்கல்லூரியும் அவ்வூரில் உள்ளது. அங்குள்ள ஆலிம்கள் அவ்வூரை இஸ்லாமியக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். பெண்கள் அனைவரும் புர்கா அணிந்துகொண்டுதான் வெளியே  செல்வார்கள். அந்நிய ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் ஆண்கள் ஒன்றுகூடிப் பேசும்போது பெண்கள் குறுக்கிட மாட்டார்கள். குடும்பப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஏதேனும் முடிவெடுத்துவிட்டால் அதை எதிர்த்து, கருத்து ஏதேனும் தெரிவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கட்டுப்பாடான ஊரில் பிறந்தவள்தான் ஷமீமா.

 

ஷமீமாவுக்குப் பதினெட்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களை வளர்த்து ஆளாக்குவதிலேயே தன் இளமைப் பருவம் முழுவதையும் செலவிட்டாள். அவளுக்குத் தன் கணவன்மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. கணவனுக்குத் தன்மீது ஈர்ப்பு இல்லை என்பதே அதற்கான காரணம். இந்த முடிவுக்கு அவள் எப்போது வந்தாள்?

திருமணத்திற்குப்பின் அவளுடைய கணவன் அப்துல் நாசிர் கூட்டுக் குடும்பமாக இருந்த தன்னுடைய வீட்டில் ஷமீமாவைக் குடிவைத்தான். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் தம்பதியர் தாம் விரும்பும் நேரத்தில் எதையும் செய்துவிட முடியாது. இருந்தாலும் தன் அறைக்குள் தன்னோடு சேர்ந்து படுப்பதற்குக்கூட வர இயலாத கணவனின் கையாலாகாத்தனத்தைக் கண்டபோதுதான் அவளுக்கு அவன்மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. அதனால் கணவன்மீது இருந்த சிறிதளவு ஈர்ப்பும் கரைந்துபோனது. ச்சீ... என்று வெறுத்துவிட்டாள். அது மட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் பொய்பேசுவது, கேலி கிண்டல் செய்வது-இவையே அவனது வாடிக்கை. எதையுமே முக்கியமாகக் கருதுவதில்லை. இதுவே காலப்போக்கில் அவள் அவனை வெறுத்தொதுக்குவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

 

அவள் ஈன்றெடுத்த இரண்டு பெண்பிள்ளைகள்தாம் அவளுடைய உலகம். அவர்களையே எப்போதும் அவள் சுற்றிச் சுற்றி வந்தாள். ஆண்பிள்ளை இல்லாதது அவளுக்கு ஒரு குறைதான். இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.

 

ஆதி மனிதர் மண்ணால் படைக்கப்பட்டார் என்பதற்கேற்பத் தன் கணவனும் களிமண்ணால்தான் படைக்கப்பட்டானோ எனக் கருதிக்கொள்வாள். அவனுக்குத் தன் குடும்பம், தன் பிள்ளைகள், தன் மனைவி என்ற எண்ணமே கிடையாது. தன் அண்ணன் எதைச் சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு. தன் பிள்ளைகளின் படிப்பு குறித்தோ, மகிழ்ச்சி குறித்தோ எந்தக் கவலையும் கொண்டதில்லை. அவர்கள்மீது எந்த அக்கறையும் செலுத்தியதில்லை. எனவே ஷமீமாதான் எதற்கெடுத்தாலும் ஆம்பளையைப்போல் ஓட வேண்டும். பிள்ளைகளின் படிப்பிற்காகப் பள்ளிக்கூடம் அழைத்துக்கொண்டு செல்வது, குர்ஆன் வகுப்பிற்காக மத்ரஸா அழைத்துக்கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் இவள்தான் கவனித்தாக வேண்டும். நாளடைவில் அந்த ஊரிலிருந்து தன் தாய்வீடு அமைந்துள்ள ஊருக்கே வந்து, தன் கணவனோடும் பிள்ளைகளோடும் தாய் வீட்டில் ஐக்கியமானாள். அங்கு அவளுடைய இரண்டு அண்ணன்களும் தாய்-தந்தையும் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தாள். தன் அண்ணன்கள் கவனித்து வந்த பலசரக்குக் கடையைக் கவனித்து வந்தான் அவளுடைய கணவன் நாசிர். கூட்டுக் குடும்பமாக இருந்ததால் அவளுடைய குடும்பச் செலவுகளையும் அவளுடைய அண்ணன்களே கவனித்துக்கொண்டார்கள். 

 

ஒரு நாள் தன்னுடைய மூத்த பெண்ணின் திருமணப் பேச்சு வந்தது. அவளுடைய தந்தையின்  முடிவின்படி அவள் தன் மூத்த பெண்ணைத் தன் சின்னம்மா மகன் தாரிக்கிற்குத் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டாள். "தாரிக் மருத்துவம் படிப்பதால் பெண்ணும் மருத்துவம் படித்தால்தான் மதிப்பாக இருக்கும்'' என்று அவளுடைய சின்னம்மா கூற, தன் அண்ணன்களிடம் உதவி கேட்டு அவளை மருத்துவப் படிப்பில் சேர்த்துப் படிக்க வைத்தாள். மகளின் படிப்பு முடிந்ததும் இனிதே திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு அனைத்தையும் அவளுடைய அண்ணன்களே ஏற்றுச் செய்து முடித்தார்கள்.

 

இதை நன்றாக நோட்டமிட்டுக்கொண்டே இருந்த அவளுடைய அண்ணிகள், தக்க தருணம் பார்த்து, ஷமீமாவைக் குத்திப் பேசத் தொடங்கினார்கள். அவளை ஏளனமாகப் பார்ப்பதும் கீழ்த்தரமாக மதிப்பதும் தொடர்ந்துகொண்டே வந்தது. வெடுக்கென ஏற்படுகின்ற சினமும் சுயமரியாதையை விரும்புகின்ற எண்ணமும் அவளுடைய அணிகலன்கள். ஆகவே சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் தன் கணவனையும் மிச்சமிருந்த ஒரு பெண் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு அவளுடைய சொந்த ஊரிலிருந்து சிங்காரச் சென்னையை நோக்கி வந்தாள்.... 

கருத்துகள் இல்லை: