ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

இதயம் கெட்டால் எல்லாம் கெட்டது!

  


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

 மனிதனின் உள்ளம் ஒரு திடலில் கிடக்கின்ற இறகு போன்றது. காற்று எத்திசையில் வீசுகிறதோ அத்திசையில் அது பறக்கும்; நகரும். ஆகவே அது ஒரு நிலையில் நீடித்து நில்லாதது. இறைவன்மீது நம்பிக்கைகொண்டிருக்கிற நாம், ஒவ்வொரு நாளும் ஓயாமல் கேட்க வேண்டிய பிரார்த்தனையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குக் கற்றுத்தந்துள்ளதோடு அவர்களும் அடிக்கடி கேட்டுள்ளார்கள்.

 

யாமுகல்லிபல் குலூப், ஸப்பித் கல்பீ அலா தீனிக-உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உன் மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக. (திர்மிதீ: 2140) இதுதான் அந்தப் பிரார்த்தனை. இவ்வாறு ஒரு தடவை நபியவர்கள் பிரார்த்தனை செய்தபோது நபித்தோழர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும் நீங்கள் கொண்டு வந்ததையும் (குர்ஆனையும்) நம்பிக்கை கொண்டுள்ளோம். அப்படியிருக்க, (நாங்கள் உங்களைவிட்டு விலகிவிடுவோம் என்று) நீங்கள் எங்களைக் குறித்து அஞ்சுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “திண்ணமாக (மனித) உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன; அவற்றை அவன் விரும்பியவாறு  திருப்புகிறான்என்று விடையளித்தார்கள்.

 

மனித உள்ளம் நன்மை-தீமைகளின் பிறப்பிடம். நம் உள்ளத்தினுள் இரண்டும் உள்ளன. அது நன்மை  மட்டுமே செய்யும் விதத்தில் அதை மாற்றியமைக்கப் பயிற்சி எடுப்பதுதான் ஆன்மிகப் பயிற்சி எனப்படுகிறது. திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவன் (பாவங்களை விட்டுத் தன் ஆத்மாவைத்) தூய்மையாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நட்டமடைந்துவிட்டான். (91: 7-10)

 

உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டவர் வெற்றியடைந்துவிட்டார்என்று இந்த இறைவசனம் இயம்புகிறது. தீமை செய்தல், காழ்ப்புணர்வு, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, காமம், கோபம் உள்ளிட்ட பல்வேறு அசுத்தங்கள் அந்த ஆன்மாவுக்குள் மண்டிக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் நீக்கி, சுத்தப்படுத்தி, உள்ளத்தை நற்குணங்களால் பக்குவப்படுத்திக்கொள்பவரே வெற்றிபெறுகிறார். அத்தோடு  இறைமறுப்பும் ஓர் அசுத்தமே ஆகும். அதை நீக்கி, இறைநம்பிக்கைகொண்ட உள்ளமே மறுமையில் வெற்றிபெற முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்: கல்வியறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களுள் ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, (நற்குணங்களால்) அவர்களைத் தூய்மையாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (62: 2)

 

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஓர் இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பினான். ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாய மக்களைத் தீமையிலிருந்து விலக்கி, அவர்களிடம் குடிகொண்டிருந்த துர்க்குணங்களை அகற்றி, நற்குணங்களைக் கற்பித்தார்கள். அந்த வகையில் ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாய மக்களைத் தூய்மைப்படுத்துவோராகவே இருந்துள்ளனர். அவர்களைத் தூய்மைப்படுத்தி, நற்குணங்களை அவர்களின் உள்ளங்களில் விதைத்தார்கள். அதுபோலவே இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், துர்க்குணங்களின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அரபியர்களின் உள்ளங்களைப் பக்குவப்படுத்தி, நல்லுரைகளைக் கூறி, நற்குணங்களை விதைத்தார்கள்.


ஒருவனின் உள்ளம் இறைமறுப்பு என்ற அசுத்தத்தால் நிரம்பியிருக்கின்றபோது அவன் நரகம் செல்கின்றான். அதேநேரத்தில் ஒருவன் இறைநம்பிக்கை என்ற ஏகத்துவக் கொள்கையால் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திவிடுகிறபோது, அவன் சொர்க்கம் செல்கின்றான். ஆக ஒருவனின் உள்ளம் தூய்மைபெற அவன் செய்ய வேண்டிய முதல் வேலை, இறைநம்பிக்கை கொள்வதே ஆகும். ஏனெனில் இறையச்சத்தின் தொடக்கமே இறைநம்பிக்கை ஆகும். அந்த இறைநம்பிக்கைமூலமே அவன் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இயலும்; பின்னர் அதன்மூலமே இறைவனை அடைய முடியும்.

 

தீமையிலிருந்து விலகி, இறைவனை மாசற்ற முறையில் நம்பி, அல்லாஹ்வுடன் தொடர்புடைய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, எல்லா நிலைகளிலும் அவனையே சார்ந்திருந்து, அவன் எத்தனையெத்தனை சோதனைகளைக் கொடுத்தாலும் அவற்றைப் பொறுமையோடு சகித்துக்கொண்டு அல்லாஹ்விற்காகவே வாழ்கின்ற உள்ளம் நிச்சயமாக வெற்றிபெறும்; இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு வாழ்க்கை அதற்கு அமையும்.

 

ஒரு மனிதனின் உள்ளம் கெட்டுப் போய்விட்டால் அவனுடைய செயல்கள் யாவும் கெட்டுப்போய்விடும் என்பதை ஆணித்தரமாக இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்: அறிந்துகொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது; அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள், அதுதான் உள்ளம். (புகாரீ: 52)

 

ஆக மனித உடலுக்குள் உள்ள ஒரு சதைத்துண்டுதான் இதயம். அது சீராக இருந்தால் நம் எண்ணங்கள் சீராகும்; சீரான எண்ணங்களுக்கேற்பச் செயல்கள் சீராகும்; சீரான செயல்களுக்கேற்ப நம் வாழ்க்கை சீராகும். அதேநேரத்தில் அந்தச் சதைத்துண்டு சீர்குலைந்துவிட்டால், அதற்கேற்ப நம் எண்ணங்கள் சீர்குலையும்; சீர்குலைந்த எண்ணங்களின்படி செயல்கள் சீர்குலையும்; சீர்குலைந்த செயல்களைச் செய்யத் தொடங்கிவிட்டால் நம் வாழ்க்கையே சீர்குலைந்துபோகும். இம்மையில் மட்டுமின்றி, மறுமையிலும்  சீர்குலைந்துபோகும். எனவே நம் உள்ளத்தைச் சீராக வைத்துக்கொள்வது இன்றியமையாததாகும்.

 

உள்ளத்தில் தோன்றுவதுதான் எண்ணங்கள். அந்த உள்ளம் நல்ல உள்ளமாக இருந்தால் அதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். அது கெட்ட உள்ளமாக இருந்தால் அதில் கெட்ட எண்ணங்களே தோன்றும்.  அதன்பின் நாம் பார்ப்பவை, கேட்பவை, பேசுபவை அனைத்தும் கெட்டவையாகவே இருக்கும். சீரான உள்ளத்தில் உதிக்கின்ற நல்ல எண்ணங்களின் பயனாக, நம் செயல்கள் யாவும் நல்லவையாக இருப்பதோடு நாம் பார்ப்பவை, கேட்பவை யாவும் அல்லாஹ்வால் ஏற்கத்தக்கவையாக ஆகிவிடும். அதை ஒரே வரியில் உணர்த்தும்விதமாக நபியவர்கள் கூறினார்கள்: எண்ணத்திற்கேற்பவே செயல்கள் அமைகின்றன; ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. (புகாரீ: 1)

 

ஒவ்வோராண்டும் செப்டம்பர் 29ஆம் நாள் உலக இதய நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது   இதயம் சீராக இயங்கும் வகையில் அதைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள்  அறிவுறுத்துவார்கள். உடல் சீராக இயங்க வேண்டுமாயின் இதயம் சீராக இயங்க வேண்டும். ஆம்! இதயத்திலிருந்து இரத்தம் உந்தப்பட்டு இரத்த நாளங்கள் வழியாக அது உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. உடலில் உள்ள அனைத்து அசுத்த இரத்தத்தையும் சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதே இதயத்தின் பிரதானப் பணியாகும். இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்கள் அடைபட்டுப்போய்விட்டால் அது உதிரத்தைச் சீராக உந்தித்தள்ள இயலாமல், இதயத்துடிப்பு நின்றுபோய்விடும். அதையே நாம் ஹார்ட் அட்டாக் என்கிறோம். இதயம் செயலிழந்துவிட்டால் மனிதனின் உயிர் நின்றுபோகும். ஆகவே இதயத்தைக் காக்க வேண்டிய அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இந்நாள் மேற்கொள்ளப்படுகிறது.

 

ஆக ஆன்மிக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் உள்ளம் மிக முக்கியமானது என்பதை நாம் உணரலாம்.  ஒரு கணினியில் சிபீயு (Central Processing Unit)  எனும் மையக் கட்டுப்பாட்டு அலகு எவ்வளவு முக்கியமானதோ அந்த இடத்தை வகிக்கிறது மனித உள்ளம். ஒரு மனிதனின் செயல்பாடுகள் சீராக அமையவும் சீரற்ற நிலையில் அமையவும் அதனுள் விதைக்கப்படுகின்ற நல்ல-கெட்ட எண்ணங்களே அடிப்படைக் காரணமாகும். எனவே நாம் நம் உள்ளத்தை உடல்ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் சீராகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள முயல்வோமாக. அதற்காக நம்மைப் படைத்த இறைவனிடம்  இறைஞ்சுவோமாக.

======================





கருத்துகள் இல்லை: